19.4.2024 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ்., வார இதழான ‘விஜய பாரதத்தில் (பக்கம் 12) கீழ்க்கண்ட தகவல் வெளி வந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் நடத்திய வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டு விழா
“வைக்கம் (கேரளா) மகாதேவர் கோயில் வளாகத்தில் தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்படுபவர்களுக்கு சாலையை திறக்க 100 ஆண்டுகளுக்கு முன் சத்தியாகிரகம் நடந்தது. 1924 மார்ச் 30 அன்று தொடங்கிய சத்தியாகிரகம் 600 நாட்களுக்குப் பிறகு 1925 நவம்பர் 23 அன்று முடிவுக்கு வந்தது. தீண்டாமைக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயமும் ஒன்று திரண்டு போராடி வெற்றி பெற்றது. அதன் நூற்றாண்டு விழாவில், கோட்டயம் கோட்ட ஆர்.எஸ்.எஸ். அன்பர்கள் 2023 அக்டோபர் 6 அன்று முழுச் சீருடை அணிந்து ‘சாங்கிக்’ ஏற்பாடு செய்தனர். ஆர். எஸ்.எஸ். அகில பாரத பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபாலே, ஆர்.எஸ்.எஸ் தென்பாரத் தலைவர் வன்னியராஜன், கேரளா மாநில தலைவர் கே.கே.பலராம், கோட்டத் தலைவர் பி.பி.கோபி . ஆகியோர் கலந்து கொண்டனர். 643 இடங்களுக்கும் பாலக் நியமிக்கப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ். கோட்டத் தலைவர் எழுதிய கடிதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது, அதில் சத்தியாகிரகத்தின் முக்கியத்துவம் விவரிக்கப்பட்டது. மொத்தம் 1,865 காட்நாயகர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஷாகா பைட்டக், உபஸ்திதி தினம், மண்டல், கண்ட பைட்டக் நடைபெற்றன. தொடர்ந்து 10 நாட்கள் ஒரே இடத்தில் தங்கி பணிபுரியும் 500 கார்யகர்த்தாக்கள் நியமிக்கப்பட்டனர். 582 இடங்களில் 8,453 சீருடைகள் தயாராயின. சாங்கிக்கில் 5,722 ஸ்வயம்சேவகர்கள் கலந்து கொண்டனர். கேரளாவின் சமூக மாற்றம், கலாச்சார சிறப்புகளை விவரிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிக்காக உருவாக்கப்பட்ட பாடலை அனைவரும் ஒன்றாகப் பாடினர். பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் நிகழ்ச்சி நிறைவடைந்தது. கோட்டயம் கோட்டத்தைச் சேர்ந்த 100 பிரமுகர்கள், வைக்கம் சத்தியாக்கிரகிகளின் வழித்தோன்றல்கள் ஆகியோர் சிறப்பாக அழைக்கப்பட்டிருந்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் அவர்களோடு கலந்துரையாடினார்.
ஆர்.எஸ்.எஸின் வார இதழான ‘விஜயபாரதத்தில்’ (19.4.2024) இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அறிவு நாணயத்துக்கும் இந்த சங்பரி வார்களுக்கும் வெகு தூரம் என்பதற்கு இது ஒன்றே போதுமானது.
2023ஆம் ஆண்டில் இப்படித்தான் வைக்கம் நூற்றாண்டுத் தொடக்கத்திற்கு ஓராண்டுக்கு முன்பே ஆர்.எஸ்.எஸ். வைக்கம் நூற்றாண்டு விழா ஒன்றை நடத்தவிருப்பதாக செய்தி வெளியானது. அந்தத் தருணத்திலேயே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ‘விடுதலை’யில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் (18.01.2023)
“ஜாதி வர்ணதருமம் தீண்டாமை என்பது முன் ஜென்மம் கர்ம வினைப்பயன் என்று அதற்கு நியாயம் கற்பித்து எழுதியும், பேசியும் வரும் ஹிந்துத்துவ சாஸ்திரங்கள், இதிகாசங்கள், புராணங்களைத் தலையில் சுமந்து, “சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்” “நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்” என்று பேசி ‘சூத்திரர்களும், பெண்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்’ என்றும் (அத்தியாயம் – 4) கூறும் பகவத் கீதையைப் பாடப் புத்தகமாக்கிடும் கல்விக் கொள்கையாளர்களான ஆர்.எஸ்.எசுக்கு வைக்கம் நூற்றாண்டு விழாவை நடத்த உண்மையான கொள்கைத் தகுதியோ தார்மிக உரிமையோ உண்டா?
இப்போது இப்படித் திட்டமிட்டு ஓராண்டுக்கு முன்பே 1001 பேரை கேரளத்தில் கமிட்டி அமைத்து நடத்தும் ‘வியூகம்’ வித்தைகள்’ எதனை நோக்கி? தேர்தலில் ஒடுக்கப்பட்டோரின் வாக்கு வங்கியை நோக்கித் தானே? அல்லது தந்தை பெரியார் பெயரை இருட்டடித்து, புதுக்கதை கட்டி மற்ற வரலாறுகளைத் திருத்தி எழுதுவது போல, வைக்கம் சத்தியாக்கிரகத்தையும் கொச்சைப்படுத்தவா?
வைக்கம் போராட்டம் நடந்தது 1924 – அப்போது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பிறக்கவே இல்லை. அதனால் என்ன? என்று சிலர் கேட்கலாம்.
கொண்டாடலாம், எப்பொழுது அதற்கு அந்தத் தகுதி வரும்?
ஜாதி – தீண்டாமைபற்றி ஆர்.எஸ்.எஸ். கொள்கைக் கர்த்தாவான கோல்வால்கரின் “ஞானகங்கை” நூல் (Bunch of Thoughts) என்ன கூறுகிறது?
“நமது சமுதாயத்தின் மற்றொரு விசேஷ அம்சம் நான்கு வர்ண அமைப்பு ஆகும். இன்று அது ஜாதிவாதம் என்று கூறி கேலி செய்யப்படுகிறது. வர்ண அமைப்பு என்று கூறுவதே கேவலமானது என்று நம் மக்கள் எண்ணுகின்றனர். அந்த நால்வர்ண அமைப்பினை சமூக சமநீதிக்குப் புறம்பானது என்று தவறாக எண்ணுகின்றனர்.”
“சமுதாயம் என்பது இறைவனின் நான்கு வகைத் தோற்றங்கள், அதனை அனைவரும் தத்தம் இயல்புக்கேற்ற முறையில், தமக்கே உரிய முறையில் வழிபட வேண்டும் என்று கூறி வந்தனர்” (‘ஞானகங்கை’ பக்கம் 162).
இக்கருத்தினை ஆர்.எஸ்.எஸ். மாற்றிக் கொண்டதா இன்று?” என்று 18.1.2023 ‘விடுதலை’யில் வெளிவந்த அறிக்கையில் தக்க தரவுகள் மூலம் வினா எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.
இதற்குப் பதில் அளிக்க வக்கில்லாத கூட்டம் இப்பொழுது வைக்கம் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது என்றால் இதன் நோக்கம் என்ன?
வரலாற்றைத் திரிப்பது, தன் வயப்படுத்துவது என்பது ஒன்று. வைக்கம் வெற்றிக்குக் காரணம் பெரியார் என்று ஒப்புக் கொண்டால், அதன் பலன் சுயமரியாதை இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும், பார்ப்பனீய எதிர்ப்புக் கொள்கை உடைய தந்தை பெரியாருக்கும் போய்ச் சேர்ந்த விடுமே – அதன் விளைவு தங்களுக்குப் பாதகமாக முடிந்து விடுமே என்கிற ஆத்திரம்தானே!
வரலாற்றை மறைக்க முயன்றால் பார்ப்பனீயத்தின் புரட்டு எத்தகையது என்கிற உண்மை வெளிப்படவும், பார்ப்பனீய எதிர்ப்பு நெருப்புக்கு நெய் ஊற்றவும்தான் பயன்படும்!
பார்ப்பனர்கள் படித்தவர்களே தவிர, அறிவாளிகள் அல்லர் என்று சொன்ன அண்ணல் அம்பேத்கரின் அறிவு மொழிதான் நினைவிற்கு வருகிறது.