ஊனென்றாய்! உயிரென்றாய்!! தமிழை நீதான்
உள்ளிருக்கும் மூச்சென்றாய்! மலரில் ஊறும்
தேனென்றாய்! கனியென்றாய்!! களத்தில் வீரம்
தெறிக்கின்ற வாளென்றாய்!! உயிர்வ ளர்க்க
வானென்ற தாய்தந்த அமிழ்து மென்றாய்!!
வாழ்விற்கு வழிகாட்டும் ஒளியு மென்றாய்!!
நானென்றே இழித்துரைக்க வந்தார் தம்மின்
நாக்கறுத்துப் பொசுக்குகின்ற தீயா மென்றாய்!!
தூக்கத்தில் சாய்ந்தபோது தோளில் ஏறித்
துள்ளியவர் சிண்டறுக்க வாளெ டுத்தாய்!
ஏக்கத்தில் கிடந்தபெண்டிர் வாழ்வ மைக்க
ஏட்டினிலே போர்தொடுத்து மாற்றம் கண்டாய்!!
தீக்கதிராய் மூடத்தின் தோலு ரித்தே
திசையெங்கும் பறைமுழக்கம் செய்தாய் நீயே!
தாக்கவந்த துன்பத்தைத் தள்ளி வைக்கத்
தமிழ்ப்பாட்டை யாழ்சேர்த்துத் தந்தாய் நீயே!!
தாலாட்டும் போர்ப்பாட்டாய்த் தந்த அன்னை
தமிழுலகம் காணாத அறிவின் சந்தை
நூலாட்டம் காட்டிவந்த கயவர் கூட்டம்
நுடமாக்க முழங்கிநின்ற தமிழர் சேனை!
கோலாட்டும் கொற்றவர்க்கும் பாடம் சொல்லக்
கொதித்தெழுந்த பாவேந்தன் நீயே அன்றோ!
வாலாட்டும் ஆரியத்தின் கதைமு டிக்க
வகுத்தாயே வழிநின்று வெற்றி காண்போம்!!
– சுப.முருகானந்தம். மாநிலச் செயலாளர்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு.