மத நம்பிக்கைகளில் அரசு குறுக்கிடலாமா?
இலக்குவனார் திருவள்ளுவன்
மத நம்பிக்கைகளில் அரசு குறுக்கிடக் கூடாது எனக் கூக்குரல்கள் எழும்புகின்றன. மூட நம்பிக் கைகளை அறுவடை செய்வோர், தங்கள் அறு வடைக்குக் குந்தகம் விளையுமோ என அஞ்சி இவ்வாறு எதிர்க்கின்றனர்.
உலக நாடுகள் அனைத்திலுமே மூட நம்பிக் கைகளுக்கு எதிரான சீர்திருத்தக் கருத்துகள் அந்தந்த நாட்டு அரசுகளின் மூலம்தான் நிறைவேறியுள்ளன. அதே நேரத்தில் மக்களிடத்திலும் அடிப்படை விழிப் புணர்வு பிரச்சாரம் என்பதும் இன்றியமையாததாம்.
சீர்திருத்தவாதிகள் தங்கள் கருத்துகளைப் பரப்பி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அவற்றிற்குச் சட்ட ஏற்பு கொடுத்து நிலையாக மாற்றுவதற்கு அரசுகளே காரணமாக அமைகின்றன. இந்தியாவிலும் அப்படித்தான்.
1829இல் இராசாராம் மோகன்ராய் துணையுடன் வில்லியம் பெண்டிங்கு, ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறுதலை ஒழிக்க முன்வந்தார்.
மூடநம்பிக்கையாலும் மதவெறியாலும் வழி வழி வழக்கத்தாலும் நிலவிய பலதார மணமுறை. குழந் தைகள் திருமணம் போன்றவற்றைத் தடை செய்யும் சட்டம் – கேசவு சந்திரசென் முயற்சியால் 1872 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இச்சீர்திருத் தங்களுக்குக் காரணம் அரசின் குறுக்கீடுதானே.
தொடர்வண்டியில் கூட ஜாதிப் பாகுபாடு பார்க்கப் பட்டது. சென்னை- ஆற்காடு தொடரி (1856 முதல் இயங்கியது), சென்னை -அரக்கோணம் தொடரி (1871 முதல் இயங்கியது), சென்னை-மேட்டுப்பாளையம் தொடரி (1883 முதல் இயங்கியது) ஆகியவற்றில் மக்கள் அனைவரும் ஒன்றாக மதிக்கப்பட்டுச் சமமாக உட்கார்ந்து பயணம் செய்யத் தொடங்கினர்.
ஆனால், பிராமணர்கள் இதற்கு எதிர்ப்பாக இருந்தனர். அன்னி பெசண்டு அம்மையாரால் தொடங்கப்பெற்றது புதிய இந்தியா நாளிதழ். இதன் 2.11.1914 ஆம் நாளிட்ட இதழில் முன்பதிவு செய்யப்பெற்ற “இருப்பூர்திப் பெட்டிகள் அல்லது தூய மக்கள்” என்னும் கட்டுரை (Reserved Railway Carriage or Clean Peoples, New India daily, dated 2.11.1914) ஒன்று வெளிவந்தது.
இதில் தொடரியில் அனைவரும் சமமாக அமர்ந்து செல்லும் ஏற்பாட்டிற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து எழுதப்பெற்றது. “பிராமணர்கள் மிகவும் தூய்மை யானவர்கள்; அவர்கள் தூய்மையற்ற பிற ஜாதியின ருடன் சமமாக அமர்ந்து பயணம் செய்ய விரும் பாமையால் அவர்களுக்கெனத் தனிப்பெட்டிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடப்பட்டது.
ஆனால், இத்தகைய குப்பை வாதங்களுக்குப் பிரித்தானிய அரசு செவி கொடுக்கவில்லை.(விடுதலை, நாள் 24.09.2022) என்றபோதும் இந்திய விடுதலைக்குப் பின்னரும் தொடர் வண் டிகளில் தீண்டாமை கடைப்பிடிக் கப்பட்டதைப் பழைய திரைப் படங்களில் காணலாம். இக் கொடுமைகளை அரசு தொடராமல் உரிய நீதி வழங்கக் குறுக்கிட்டதால் தான் இப்பொழுது தொடர் வண்டிகளில் ஜாதிக் கொடு மைகள் பின்பற்றப்பட வில்லை.
தீபாவளியன்று வெடி வெடிக்கும் பழக்கம் இடை யில் வந்ததே. சீனர்கள் வெடி வெடித்து ஒலி எழுப்பித் தீய ஆற்றல்களை விரட்டுவதாக நம்பினர். இவர்களிடமிருந்து புத்த சமயத்தின் மூலம் 12 ஆம் நூற்றாண்டு அளவில் இந்தியாவிற்கு அறிமுகமாகியி யிருக்கலாம். ஆனால் இந்தப் பழக்கம் பெரிதாக வளர்ந்து பணம் வீணாவதுடன் காற்று மாசுபாடு களையும் பெருக்கியது.
அண்மைக்காலங்களில் அரசு காற்று மாசினைத் தவிர்ப்பதற்காக வெடிவெடிப்பதற்குப் பல கட்டுப் பாடுகளை விதித்து அதன் மூலம் அப்பழக்கத்தைப் பெருமளவு குறைத்துள்ளது. எனவே, அரசின் குறுக்கீடுகள் நாட்டுநலனிற்கே எனப் புரிந்து கொள்ளலாம்.
பயிர் வளரும் பொழுது உடன் வளரும் களைகளை அகற்றினால் அது பயிருக்கு நன்மை செய்வதா? அல்லது பயிர் வளர்ச்சியில் குறுக்கிடுவதா? அதுபோல்தான் சமூக நீதிக்குக் குறுக்கே வரும் மூட நம்பிக்கைககளையும் அநீதிகளையும் ஒழிக்க அரசு குறுக்கிடுவதுதானே முறையாகும்.
இவ்வாறு மக்களுக்கு அநீதி இழைத்த மூடநம் பிக்கைகள் எல்லாம் அரசுகளின் குறுக்கீடுகளால்தான் அகற்றப்பட்டன. சமநீதி வழங்கப்பட்டது.
இப்பொழுது மக்களின் நம்பிக்கை எனக் கூறப்படுவது வருணாசிரமம் குறித்துத்தான். எனவே வருணாசிரம அடிப்படையிலேயே கட்டுரையைத் தொடருவோம்.
“நீதித்தலங்களில் பிரமாணம் செய்யவேண்டிய பிராமணனைச் சத்தியமாகச் சொல்லுகிறேன் என்று சொல்லச் செய்யவேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனைப் பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணர வேண்டும்.” (மனு, அத்தியாயம் 8, சுலோகம் 113-115.) என்கிறது வருணாசிரமம். ஆனால் அரசால், நீதி மன்றங்களில் வாக்குமூலம் அளிப்பவர்கள், எவ்வகை ஜாதிப் பாகுபாடுமின்றித் தாங்கள் நம்பும் கடவுள் அல்லது அறநூல் அல்லது சமய நூல் அல்லது மனச்சான்றின்படி உறுதி தெரிவிக்கலாமே தவிர, அவரவர் ஜாதிக்கேற்ப வாக்குமூலம் அளிக்க வேண்டியதில்லை. அரசின் குறுக்கீடு இல்லாவிட்டால் வருணாசிரமம் சொல்லும் வன்முறையே நிலவி யிருக்கும்.
“சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட் கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்.” (மனு, .8 சு.281.) என்பது வருணாசிரமம். இதனால்தான் சங்கராச் சாரியார்கள் ஆசனத்தில் அல்லது உயர் பீடத்தில் உட்கார்ந்து கொண்டு குடியரசுத்தலைவர் போன்ற உயர் பதவியில் இருந்தாலும், கீழான இடத்தில் உட்கார வைக்கிறார்கள். இதில் அரசு குறுக்கிட் டால்தான் நீதி கிடைக்கும். ஆனால் உயர் நீதிபதிகளும் உயர் அதிகாரிகளும் அமைச்சர் பெருமக்களும் வருணாசிரம அடிமையாக இருப்பதால்தான் இதில் மாற்றமில்லா அவல நிலை நீடிக்கிறது. இந்த நிலை மாற அரசின் குறுக்கீடு தேவைதானே.
பிராமணக் குலத்தில் பிறந்தவன் ஆசார மில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது. (மனு, அ. 8, சு. 20) என்கிறது வருணாசிரமம். சூத்திரன் என்று யாரை வருணாசிரமம் ஒடுக்கி ஒதுக்குகிறதோ அப்படிச் சொல்லப்படுபவனைச் சட்டம் நீதிபதி பதவியில் அமர்த்தி அழகு பார்க்கிறது. சட்டத்தின்படியும் சட்டத்தின்படியான அனைவருக் குமான கல்வியுரிமை, வேலை வாய்ப்புரிமை போன்றவற் றாலும் சட்டம் வழங்கும் இட ஒதுக்கீட்டாலும் தகுதி யுடைய யாரும் நீதிபதி யாகலாம்.
“அரசன் சூத்திரனைப் பிராமணர் முதலிய உயர்ந்த ஜாதிக்குப் பணிவிடை செய்யும்படிக் கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத் தால் அவனைத் தண்டிக்க வேண்டும்.”(மனு,அ.8.சு.410.) என்பது வருணாசிரமம். இப் போது அரசனோ அரசுப் பொறுப்பாளர்களோ அவ்வாறு செய்தால் அத்தகைய பாகுபாட்டாளா ரைத்தான் சட்டம் தண்டிக்கும்.
“பிராமணன் மூடனானாலும் அவனே மேலான தெய்வம்.” (மனு- அ.9 சு. 317), “பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூசிக்கத் தக்கவர்கள் ஆவார்கள்.” (மனு- அ. 9 சு.319.). என்பன வருணாசிரமம். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் வள்ளுவத்தின்படி உயர்வு தாழ்வு கற்பிக் காமல் அனைவரையும் இணையாகக் கருதுவதே சட்டம்.
வருணாசிரமம் குறித்து சந்திரசேகரேந்திர சரசுவதி சொன்ன பொன்மொழி எனப்படும் புண்மொழிகள் எண்ணற்றன. அவற்றுள் சில .:
“மெய்யாகவே அவரவருக்கும் தங்கள் ஜாதியில் இருந்து கொண்டு, அதற்கான தொழிலைச் செய்து கொண்டு, அதற்கென்று ஏற்பட்டுள்ள தனிச் சடங் குகள், விதிகள், ஆசாரங்கள், தருமங்களைப் பின் பற்றிக் கொண்டிருப்பதில் சந்துசுட்டியும் (மகிழ்ச்சியும்) பெருமிதமும் (pride) இருந்தன.” “சீர்திருத்தக் காரர்களால் நம் குறைகளுக்கெல்லாம் இருப்பிட மானது என்று நினைக்கிற வருண தருமம் என்ற தனியம்சம் இருக்கிற நம் தேசம்தான் மற்ற எல்லாத் தேசங்களையும்விட தத்துவத்தில், குண சீலத்தில், கலைகளில், அறிவில் எல்லாவற்றிலுமே நிறைந்து தலைசிறந்து நிற்கிறது.”
“அதாவது, செத்தாலும் சுயதர்மத்தை விடக் கூடாது. இப்போது மட்டும் சாகாமல் இருக்கப் போகி றோமோ என்ன?” எந்தத் தொழிலையுமே அந்தப் பரம்பரையில் வந்தவன் மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும்.”
Òபிராமணப் பெண்கள் தட்சணை தர முடியாமல் அதற்காக இன்னொரு ஜாதிக்காரனைத் திருமணம் செய்து கொள்வது சரியல்ல. பெற்றோர்கள் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் வாழை மரத்திற்கு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்து விடுங்கள். பிறகு அந்த வாழை மரத்தை வெட்டி விடுங்கள். இப்போது அந்தப் பெண் விதவையாக ஆகி விட்டாள் என்று விதவைக் கோலம் கொடுத்து விடுங்கள். அந்த நோன்பை வாழ்நாள் முழுமையும் இருந்து கன்னியாகவே அவள் நம் தருமத்தைக் காப்பாற்ற வேண்டும்!”
வருணாசிரமத்தை விளக்கும் செயேந்திர சரசுவதி,” நால்வருணப்பிரிவுகளில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர் சமைத்ததை மற்றொரு பிரிவினர் சாப்பிடக்கூடாது. ஒருத்தரோடு ஒருத்தர் கல்யாணம் பண்ணிக் கொள்ளக்கூடாது. ஒருவர் செய்யும் காரியத்தை மற்றொருவர் செய்யக்கூடாது” என்று இப்படி எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்கின்றன என்று கூறியுள்ளார்.
“தலித்து மக்களெல்லாம் குளித்து விட்டுக் கோயிலுக்குப் போகவேண்டும்” “தலித்துகள் அனைவரும் குளித்திருந்தால் அங்கே சாமி ஊர்வலம் செல்லலாம்.” Òவேலைக்குச் செல்கிற பெண்கள் எல்லாம் விபச் சாரிகள்” “விதவைப் பெண்கள் தரிசு நிலங்கள்” என்றெல்லாம் செயேந்திரர் சொன்னது வருணா சிரமத்தை நிலை நாட்டவே.
பிராமணர்கள் உணவு விடுதி, பிராமணர்கள் சாப்பிடுமிடம் என்றெல்லாம் இருந்தவை மறைந்த காரணம் அரசின் குறுக்கீட்டால்தான். தெருக்களில் உள்ள ஜாதிப் பெயர்கள் அகற்றப்பட்டதன் காரணமும் அரசின் குறுக்கீடுகளே.
இவ்வாறெல்லாம் மக்களிடையே நச்சு விதைக்கப்படுவதால்தான் குலக்கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நல்ல வேளையாக அது விரட்டப்பட்டது. இப்பொழுது வேறு முறைகளில் புதிய கல்விக்கொள்கை மூலம் நுழையப் பார்க்கிறது. இவற்றை யெல்லாம் புரியாமல் ஆட்டு நாயகர்கள் உளறுவது அவர்களுக்கும் வரும் தலைமுறையினக்கும் பெருங்கேடு என்பதை உணர வேண்டும்.
இன்றும் கல்விநிலையங்களில் அலுவலகங்களில் பொது இடங்களில் பேருந்துகளில் தொடர் வண்டி களில் தீண்டாமை இருப்பதன் காரணம் வருணாசிரமப் பாதிப்பே. அரசு தீண்டாமை உறுதி மொழி எடுத்தால் மட்டும் போதாது.
குறுக்கிட்டுக் கடுமையான நடவடிக்கையைத் துணிவுடன் எடுத்து அவற்றை நிறுத்த வேண்டும். வருணாசிரமம் குறித்த பரப்புரைகளும் செயல் திட் டங்களும் இருக்கும் வரை அதற்கான எதிர்க் குரல்களும் எழுப்பப்படத்தான் செய்ய வேண்டும்.
அரசுகளும் குறுக்கிடத்தான் வேண்டும். மக்கள் நீதிக்கு எதிரானவை முற்றிலும் அகற்றப்பட்டால்தான் நாடு நலம் பெறும் மக்கள் வளம் உறுவர்
“ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்” (குறள் 848)