அருந்தொண்டர், ஆற்றலாளர், பண்பாளர், சிறந்த மாமனிதர் என்கிற பெருமைக்குரிய அருமை அய்யா மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் குறள் நெறியாளர் கு.பரசுராமன்!
அவருடைய நினைவைப் போற்றி, அறிவுச் சுடர், அறிவுத் தேக்கம், பேரொளி, ஊரணி – படிப்பகம் அமைத்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது
தஞ்சை, ஏப்.29 அருந்தொண்டர், ஆற்றலாளர், பண்பாளர், சிறந்த மாமனிதர் என்கிற பெருமைக்குரிய மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந் திருக்கக்கூடிய அருமை அய்யா மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், குறள் நெறியாளர் கு.பரசுராமன் – இந்தப் பகுதியை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்த நீலகிரி ஊராட்சி மன்றத்தினுடைய நீண்ட காலத் தலைவர், எல்லோருடைய உள்ளத்திலும் உள்ள ஒருவர் – அப்படிப்பட்ட ஒருவருடைய பெயராலே, அவருடைய நினைவைப் போற்றி, இங்கே ஓர் அறிவுச் சுடர், அறிவுத் தேக்கம், பேரொளி, ஊரணி அமைத்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
குறள் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி நூலகம் திறப்பு விழா
கடந்த 24.4.2024 அன்று மாலை 5 மணியளவில், தஞ்சாவூர், இராசாசி நகர், நீலகிரி ஊராட்சியில், குறள் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகத் தைத் திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
மிகக் குறுகிய காலத்தில், சில நாள்களுக்கு முன்பு என்னிடத்தில் அனுமதி கேட்டார், தோழர் குணசேகரன் அவர்கள்.
ஏற்கெனவே, பெரியார் நூற்றாண்டு பாலிடெக் னிக்கின் நீண்ட கால முதல்வர், பேராசிரியர், டாக்டர் மல்லிகா அவர்களின் இல்ல மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் கட்டாயம் நான் கலந்துகொள்ளவேண்டும் என்பதற்காக, பல பணிகளையெல்லாம் ஒதுக்கி, இந்தத் தேதியைக் கொடுத்தேன். அதைப் பயன்படுத்தி, இன்று நீங்கள் இங்கே வரவேண்டும் என்று கேட்டார்கள்.
அருமைச் சகோதரர் பரசுராமனை
நாம் இழந்தோம் என்பது எளிதில் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று!
தோழர் அருமைச் சகோதரர் பரசுராமன் அவர்கள் ஒரு தொண்டறச் செம்மல். ஒப்பீடு காட்ட முடியாத அள விற்கு, அவருடைய தொண்டு ஒரு வளர் தொண்டாகும். இங்கே பேசிய நண்பர்கள், குறுகிய காலத்தில் கூடி யிருக்கின்ற தோழர்கள், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, கட்சிகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், கொள் கைகளுக்கு அப்பாற்பட்டு, தொண்டு மனப்பான்மை – அந்தத் தூயவரை எப்படியெல்லாம் ஆட்கொண்டது என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில், அவரை நாம் இழந்தோம் என்பது எளிதில் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
நீலகிரி ஊராட்சி மன்றத்தினுடைய நீண்ட காலத் தலைவர், எல்லோருடைய உள்ளத்திலும் உள்ள ஒருவர்!
அப்படிப்பட்ட அருந்தொண்டர், ஆற்றலாளர், பண்பாளர், சிறந்த மாமனிதர் என்கிற பெருமைக்குரிய மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக் கக்கூடிய அருமை அய்யா மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், இந்தப் பகுதியை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்த நீலகிரி ஊராட்சி மன்றத்தினுடைய நீண்ட காலத் தலைவர், எல்லோருடைய உள்ளத்திலும் உள்ள ஒருவர் – அப்படிப்பட்ட ஒருவருடைய பெய ராலே, அவருடைய நினைவைப் போற்றி, இங்கே ஓர் அறிவுச் சுடர், அறிவுத் தேக்கம், பேரொளி, ஊரணி அமைத்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.
சிறப்பான இந்நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய கீர்த்தனா மருத்துவமனையின் சிறந்த மருத்துவர் அடக்கமும், அன்பும், பண்பும் நிறைந்த மருத்துவர் அய்யா மா.செல்வராசு அவர்களே,
சமூகக் கேள்விக்கான பதில்!
வரவேற்புரையாற்றிய புலவர் வீ.பொற்கோவன் அவர்களே, இந்நிகழ்ச்சியில் எவ்வளவு கடுந்துயரத் தையும் தாண்டி, எப்படிப் பக்குவப்படுத்தி இருக்கிறார் குறள் நெறியாளர் பரசுராமன் தன்னுடைய இல்லத்தை என்பதற்கு அடையாளம் அருமைச் சகோதரியார் விஜயலட்சுமி பரசுராமன் அவர்கள், துணிச்சலாக இந்த மேடையில் வந்து, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்ப தாகும்.
திராவிட இயக்கம் என்ன செய்தது?
தந்தை பெரியார் என்ன செய்தார்? என்ற ஒரு சமூகக் கேள்விக்கு, இதுவே ஒரு பதில்.
நான்கூட, அம்மையார் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்ற வாய்ப்பையெல்லாம் நினைக்கின்ற பொழுது, அவர் வரப் போகிறார் என்று சொன்னவுடன், வருவாரா? என்கிற சந்தேகத்தோடுதான் நான் இருந்தேன்.
ஏனென்றால், நம்முடைய தாய்மார்களுக்கு சடங்கு, சம்பிரதாயம் என்கிற சுமையினால், ஓராண்டு வெளியில் போகக்கூடாது, அங்கே – இங்கே போகக்கூடாது என்று அவர்களை சங்கடப்படுத்துவார்கள்.
அதையெல்லாம் உடைத்து, மக்களுக்குத் தொண்டு செய்வதில் பரசுராமன் அவர்கள் எந்த இடத்தில் விட்டாரோ, அந்த இடத்திலிருந்து அந்தத் தொண்டை இந்தக் குடும்பத்தவர் தொடங்கவிருக்கிறோம் என்பதற் காகத்தான் இங்கே இருபுறமும் அவர் குடும்பத்தினர் இருக்கிறார்கள்.
பரசுராமன் அவர்களுடைய அருமை மகனாரும், வாழ்விணையராக இருக்கக்கூடிய அருமைச் சகோதரி யாரும் இங்கே உள்ளனர். மற்றும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடிய அருமை நண்பர்களே!
அய்யா இராம.பாஸ்கரன்!
அதுபோலவே, நம்முடைய அருமை அய்யா இராம.பாஸ்கரன் அவர்கள், மிக உணர்ச்சிபூர்வமாக இங்கே உரையாற்றினார். அதேபோன்று, பி.எஸ்.ஆர்.மாதவராஜ் அவர்களும். இவரை நான் மாணவப் பருவத்திலிருந்து அறிவேன். படிக்கின்ற காலத்தில், அவருடைய தந்தையார், அன்னையார், எங்களை ஒரே குடும்பமாகக் கருதியவர்கள்.
குறள் நெறியாளர்
அய்யா கு.பரசுராமனின் தொண்டறம்
இவ்வளவு குறுகிய காலத்தில், இந்நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய ஆதரவு வந்திருக்கின்றது என்றால், அதற்கு என்ன அடையாளம்?
பரசுராமன் அவர்கள் எவ்வளவு நல்ல மனிதர் என்பதற்கும், அவருடைய தொண்டறம் எப்படி, எல்லோ ருடைய உள்ளத்திலும் ஒளியைப் பாய்ச்சி இருக்கிறது என்பதுதான் அதன் அடையாளமாகும். அந்த நிலையில், அவருடைய இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
தந்தை பெரியார் அவர்கள் ஒருவரியில் சொல்லுவார், ‘‘இயற்கையின் கோணல்புத்தி” என்று.
எடுத்துக்காட்டான நட்பு,
மற்றவர்கள் பின்பற்றவேண்டிய ஒரு நட்பு!
அய்யா இராம.பாஸ்கரன் அவர்கள், பரசுராமன் அவர்களோடு பழகியவர். எத்தனையோ பேர் நட்போடு இருப்பார்கள்; ஒருவர் மறைந்துவிட்டால், அதைப்பற்றி கவலைப்படாமல் இருப்பார்கள். ஆனால், உண்மையான நட்பு, உண்மையான தொண்டிற்கு அடையாளம் என்னவென்றால், ஒருவர் இருக்கும்பொழுது காட்டிய அன்பைவிட, அவர் உடலால் இல்லாதபொழுது, உணர்வால் நிறைந்திருக்கும்பொழுது, அந்த நட்புரிமை இன் னும் பல மடங்கு பெருகினால்தான், அந்த நட்பு ஒரு தூய நட்பு, எடுத்துக்காட்டான நட்பு, மற்றவர் கள் பின்பற்றவேண்டிய ஒரு நட்பாக அமையும்.
அய்யா இராம.பாஸ்கரன் அவர்கள் சொன்னார், ‘‘நான் எல்லாவற்றிலும் துணையாக இருக்கிறேன்” என்று.
‘ப’ னாவுக்கு அடுத்து ‘பா’வன்னாதான்.
அதேபோன்று, பரசுராமன் என்றால், அதற் கடுத்து பாஸ்கரன் என்று சொல்லக்கூடிய அள விற்கு, நட்போடு இருந்தவர்கள்.
இப்பொழுதுதான் தேர்தல் வெப்பம் குறைந்திருக் கிறது. அது இன்னும் குறைந்துவிடும்; ஏனென்றால், இன்னும் 50 நாள்கள் இருக்கிறது; வேட்பாளரே மறந்துவிடுவார்கள். அதுபோன்று தேர்தல் அமைப்பு இருக்கிறது.
அரசியல் குளிர்ச்சி ஏற்படக்கூடிய
ஓர் அற்புதமான நிகழ்ச்சி!
நீலகிரிக்கு எப்பொழுது செல்வார்கள் என்றால், குளிர்ச்சிக்காகப் போவார்கள். இந்த நீலகிரியில் வெப்ப மாக இருந்தாலும்கூட, இது அரசியல் குளிர்ச்சி ஏற்படக்கூடிய ஓர் அற்புதமான நிகழ்ச்சியாகும்.
இதில் கட்சியில்லை, ஜாதியில்லை, மதமில்லை; மனிதநேயம் இருக்கிறது; பண்பாடு இருக்கிறது; நயத்தக்க நாகரிகம் இருக்கிறது.
தந்தை பெரியார் சொன்ன வாக்கியங்கள் எல்லாம் அனுபவ வாக்கியங்களாகும்.
இந்தப் படிப்பகம் ஒரு ஊரணி. ஊரணி என்றால், குடிநீருக்காகப் பயன்படுத்தக் கூடியது. பரசுராமன் அவர்கள் நீலகிரி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த காலத்திலேயே எனக்கு அறிமுகமானவர்.
அரசியலில் அவர் எந்த நிலைப்பாடு எடுத்தாலும், அதற்கும், எங்கள் நட்புக்கும் எந்தவித சம்பந்தமும் இருக்காது!
அவர் என்னை சந்திக்கும்பொழுது, திருக்குறள் புத்தகம்தான் கொடுப்பார். பண்பாளர் அவர். அரசியலில் அவர் எந்த நிலைப்பாடு எடுத்தாலும், அதற்கும், எங்கள் நட்புக்கும் எந்தவித சம்பந்தமும் இருக்காது.
நல்ல நண்பர், தொண்டறச் செம்மல், நல்ல பண்பாளர். எல்லோருக்கும் உதவக்கூடிய ஓர் அற்புதமான மாமனிதர்; எடுத்துக்காட்டனவர். பல விஷயங்களில் அவர் மிகவும் அடக்கமாக நடந்துகொள்வார்.
எதையும் கேட்பதற்குக்கூட யோசனை செய்து, ‘‘இப்படி ஒரு முடிவெடுக்கலாமா?” என்று வினவுவார்.
இந்தக் குடும்பம் ஒரு தொண்டறக் குடும்பம். அப்படிப்பட்ட இந்தக் குடும்பத்தில், அய்யா பரசுராமன் அவர்கள், நீண்ட நாள்கள் வாழ்ந்திருக்கவேண்டியவர்.
மருத்துவம் இன்றைக்கு எவ்வளவோ அற்புதங்களை யெல்லாம் செய்கிறது. அப்படி இருந்தாலும் சில நேரங் களில் அந்த வாய்ப்புகள் குறைவாகி விடுகிறது. அதை நினைக்கும்பொழுது நமக்கு வேதனையாக இருக்கிறது.
துயரத்தை மறக்கக்கூடிய
மிகப்பெரிய அளவுகோல்!
அவருடைய தொண்டு ஒரு தொடர்ச்சி என்று சொல்லக்கூடிய அளவில், நம்முடைய சகோதரியார் விஜயலட்சுமி அவர்களும், அதேபோன்று அவருடைய மகன் வழக்குரைஞர் பவித்திரன் பரசுராமன் அவர்களும், இந்தக் குடும்பத்தவர்களும் இந்தப் பணியை செய்யக் கூடிய அதே பாதையில் வருவது என்பது இருக்கிறதே, அதுதான் இந்தத் துயரத்தை மறக்கக்கூடிய மிகப்பெரிய அளவுகோலாகும்.
‘‘அந்தத் துயரத்தை மறந்துவிடுங்கள்; அதை செய் யுங்கள், இதை செய்யுங்கள்; உங்களுக்கு ஆறுதலாக நாங்கள் இருக்கிறோம்” என்று நாம் சொல்லலாம். ஆனால், காலம் மட்டும்தான் அந்தத் துயரத்தை மாற்ற முடியும்.
துயரத்தைத் தொண்டாக
மாற்றவேண்டும்!
காலங்கூட சில நேரங்களில் தோற்றுவரக்கூடிய நேரத்தில், அந்தத் துயரத்தைத் தொண்டாக மாற்ற வேண்டும். அவர் இருந்திருந்தால், என்ன செய்திருப்பார்? அதை நாம் செய்வோம்; அப்பொழுது அவர் வாழுகிறார் என்று அர்த்தமே தவிர, அவர் மறைந்துவிட்டார் என்று ஒருபோதும் கருதக்கூடிய அவசியம் இல்லை.
ஆகவே, அந்த வகையில், இந்த முயற்சி என்பது அற்புதமான முயற்சியாகும். பெரியார் அவர்களுடைய பெயரால் ஒரு படிப்பகம்; அதிலும் குறள்நெறியாளர் பரசுராமன் அவர்களுடைய நினைவைப் போற்ற அந்தப் படிப்பகம்; அதுவும் எங்கே அமைந்திருக்கிறது என்றால், நீலகிரி ஊராட்சி மன்றத்தில்; அதிலும் இந்தப் பகுதிக்கு என்ன பெயர் என்று பார்த்தால், இராசாசி நகர்.
அதாவது, நான் ‘விடுதலை’க்குப் பொறுப்பேற்றவுடன், தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மலர் போட்டோம்; அதற்காக இராஜகோபாலாச்சாரியார் அவர்களிடம் நேரில் சென்று, வாழ்த்துச் செய்தி கேட்டேன்.
தந்தை பெரியாரோடு பழகியவர்; கவர்னர் ஜெனரலாக இருந்தவர்; நான் ஒரு சாதாரண மாணவன் நிலையிலிருந்து, வழக்குரைஞரானவன்; அய்யா சொன்னார் என்பதற்காக, ‘விடுதலை’ ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டு, வாழ்த்துச் செய்தி வேண்டும் என்கிற கடிதத்தை இராஜாஜி அவர்களிடம் கொடுத்தேன்.
‘‘விடுதலையும், பெரியாரும் என் அன்பார்ந்த எதிரிகள்!, வாழ்க!’’ – இராஜாஜி
இராஜாஜி அவர்கள் என்னைப் பார்த்து, ‘‘ஓகோ, நீங்கள்தான் இப்பொழுது ‘விடுதலை’ ஆசிரியரா?” என்றார். ஏனென்றால், பழைய ஆசிரியர் குருசாமி அவர்களை நன்றாகத் தெரியும்.
‘‘சரி, வாழ்த்துச் செய்தியை உங்களுக்கு அனுப்பு கிறேன்” என்று சொன்னார்.
அதேபோன்று, ஒரு கார்டில், அவருடைய கைப்பட எழுதியனுப்பினார்.
‘‘விடுதலையும், பெரியாரும் என் அன்பார்ந்த எதிரிகள்!, வாழ்க!” என்று எழுதியிருந்தார்.
அவருடைய கொள்கையை விட்டுக் கொடுக்க வில்லை. நட்புறவு என்பது ஒரு பக்கத்தில். பண்பு, கொள்கை என்பது இன்னொரு பக்கத்தில். எதற் காகவும், எதையும் சமரசம் செய்துகொள்ளக்கூடாது என்கிற முறைக்கு ஓர் எடுத்துக்காட்டானவர்.
பரசுராமன் அவர்கள் எந்த இடத்திலும் யாரையும் கோபித்துக் கொண்டது கிடையாது!
அதேபோன்று வாழ்ந்தவர்தான் பரசுராமன் அவர் களும். அவர் எந்த இடத்திலும், கட்சி அடிப்படையில் யாரையும் கோபித்துக் கொண்டது கிடையாது. மற்ற கட்சிக்காரர்களும், அவரிடத்தில் கோபித்துக் கொண்டது கிடையாது. தப்பித் தவறி யாராவது அப்படி நடந்து கொண்டிருந்தால். அது அவர்களுடைய சுயநலம் குறுக்கிட்டு இருந்திருக்குமே தவிர, அது அரசியல் காரணமாக இருக்க முடியாது.
மாற்ற முடிந்தால், மாற்றினால் மிகச் சிறப்பாக இருக்கும், எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்!
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான மாமனிதர் பெய ராலே பெரியார் படிப்பகம் அமைந்திருக்கிறது. இன் னுங்கேட்டால், நூலகத்தைக்கூட அவருடைய பெயரால் அமைத்திருக்கலாம். அதுதான் பொருத்தமாக இருந் திருக்கும்; என்னுடைய பெயரில் நூலகம் வைக்க வேண்டிய அவசியமில்லை. முடிந்தால், மாற்ற முடிந்தால், மாற்றினால் மிகச் சிறப்பாக இருக்கும், எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.
படிப்பகம் என்பது, அது இந்தப் பகுதியில், ஒரு அறிவு விதை போன்று இன்றைக்குப் போட்டிருக்கிறீர்கள். அறிவுப் பண்ணைக்கு ஒரு விதை போட்டிருக்கிறீர்கள். அந்த விதை முளைத்துக் கிளம்பினால், மிகப்பெரிய அளவிற்கு எவ்வளவு தூரம் போகும் என்று சொல்லவே முடியாது.
(தொடரும்)