தமிழ்நாடு அரசின் காலைச் சிற்றுண்டியைத் தவிர்க்கச் சொல்வது தீண்டாமை வன்கொடுமை சட்டப்படி குற்றம்!
மாணவர்களிடையே பரப்பும் ஜாதி பேதக் கிருமியை அழித்து –
கல்விக் கண் பெறுவதைக் கண்காணிக்கவேண்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
தமிழ்நாடு அரசின் காலைச் சிற்றுண்டியைத் தவிர்க்கச் சொல்வது தீண்டாமை வன்கொடுமை சட்டப்படி குற்றம்! மாணவர்களிடையே பரப்பும் ஜாதி பேதக் கிருமியை அழித்து – கல்விக் கண் பெறு வதைக் கண்காணிக்கவேண்டும்; தமிழ்நாடு அரசும், கல்வித் துறையும் இதில் முக்கிய கவனம் செலுத்தட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
இந்தியாவே போற்றக்கூடிய தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ ஆட்சியின் காலை உணவுத் திட்டத்தால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வருகை மிகக் கணிசமாகப் பெருகிவருகிறது.
வேதனையும், வெட்கமும் அடைகிறோம்!
முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டம் கூலி வேலை முதல் அரசுப் பணிவரை செய்யும் மகளிருக்குக் காலைச் சிற்றுண்டியைச் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு அனுப்பிடவேண்டிய குழந்தைகளோடு போராடும், மல்லுக்கட்டும் சுமை பெரிதும் குறைந்துள்ளது. ஆசிரி யைப் பெருமக்கள் வகுப்பறையில் பாடம் நடத்தும்போது, பசி மயக்கம் காரணமாக மாணவர்கள் மயங்கி விழுந்து பாடங்களில் ஆழ்ந்து மனதைச் செலுத்த இயலாத நிலை எல்லாம் மாறி, ஒரு புதிய மறுமலர்ச்சி இளைய சமு தாயத்திடம் உருவாகி, அனைவரும் மகிழும் நிலையில், ஒரு நிகழ்வு – அந்தக் காலை உணவைப் புறந்தள்ளும் மனப்போக்கு ஜாதி உணர்வு காரணமாக என்பதை அறிய நாம் வேதனையும், வெட்கமும் அடைகிறோம்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள உசிலம்பட்டி என்ற கிராமப் பள்ளியில் சிலர் தங்கள் பிள்ளைகளை காலைச் சிற்றுண்டி சாப்பிடுவதைத் தவிர்க்குமாறு செய்துள்ளனர்; அதற்குக் காரணம், சமையல் பொறுப்பில் உள்ளவர் ஒரு ஆதிதிராவிட சகோதரி என்பதே என்று செய்தி வந்துள்ளது!
உடனடியாக அம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் திருமதி கீதாஜீவன் அவர்களும், கல்வி அதிகாரிகளும் அப்பள்ளிக்குச் சென்று, ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களைச் சந்தித்து – கலந்துரையாடித் திரும்பினர் என்பது ஆறுதலான செய்தி என்றாலும், ஜாதி – தீண் டாமை என்ற கிருமிகள் எப்படி நமது ஒடுக்கப்பட்டோரின் மண்டையையும் குடைந்து உள்ளே சென்று ஆதிக்கம் செய்கின்றன என்கிற வேதனை ஏற்படுகிறது!
பிஞ்சுக் குழந்தைகள் நெஞ்சில்
ஜாதி நஞ்சை விதைக்கலாமா?
அந்த ஜாதி மனநோய்க்கு ஆளான பெற்றோர்களே, படிக்கும் உங்கள் பிஞ்சுக் குழந்தைகள் நெஞ்சில் இப்படி ஜாதி நஞ்சை விதைக்கலாமா? கீழ்ஜாதிக்காரர்களுக்குப் படிப்பைத் தரவே கூடாது என்று தடுத்திருந்த மனுநீதி – சனாதனம் ஆண்ட மண்ணில் கல்விக் கண்ணை திராவிடர் இயக்கமும், கல்வி வள்ளல் காமராசர் போன்ற சமூகப் புரட்சி ஆட்சியாளர்களும், அறிஞர் அண்ணா, கலைஞர், இன்றைய முதலமைச்சர்வரை போராடி இந்த உரிமையை உங்கள் பிள்ளைகளுக்குப் பெற்றுத் தந்துள்ளனர். எதிர்காலத்தில் அவர்கள் கலெக்டர்களாக, அதைவிட பெரிய அதிகாரிகளாக, வழக்குரைஞர்களாக, நீதிபதிகளாக, பொறியாளர்களாக, அய்.பி.எஸ்., அதிகாரி களாக ஆவதற்கு முயற்சித்து, களம் அமைத்துப் போராடும் நிலையில், இப்படி காலை உணவைத் தவி ருங்கள் என்பது (உண்மையான செய்தியாக இருந்தால்) எவ்வகையில் நியாயம்? ஜாதிக்கு அறிவியல் அடை யாளம் உண்டா?
தீண்டாமை வன்கொடுமை சட்டப்படி
மோசமான குற்றம்!
நீங்கள் அடிபட்டு மருத்துவமனைக்குப் போனால், ‘‘எங்களுக்கு, எங்கள் ஜாதி டாக்டர், எங்கள் ஜாதி நர்ஸ்தான் வைத்தியம் பார்க்கவேண்டும்; இல்லை யானால், மருத்துவம் பார்த்துக் கொள்ளாமலேயே வீடு திரும்புவோம்” என்று கூறுவீர்களா?
பள்ளியில் வகுப்பெடுக்கும் ஆசிரியர் எங்கள் ஜாதி அல்லது உயர்ஜாதி ஆசிரியராக இருக்கவேண்டும் என்பீர்களா? இந்த மனப்பான்மை விஷ வித்து அல்லவா?
இது தீண்டாமை வன்கொடுமை சட்டப்படி எவ்வளவு மோசமான குற்றம் – அறியமாட்டீர்களா?
ஓட்டலில் சென்று உணவு உண்ணும்போது, அங்கே சமையல் அறைக்குச் சென்று விசாரணைக்குப் பிறகு தானா சாப்பிடுகிறீர்கள்?
உரிய கடும் நடவடிக்கை எடுத்திடவும்
தயங்கக் கூடாது!
உங்களை ‘கிட்டே வராதே’ என்று கூறி ஒதுக்கி வைக்கும் உயர்ஜாதி பார்ப்பனர் மற்றும் பார்ப்பனியம் உங்கள் தலைமேல் ஏறி நிற்பதையே மறந்துவிட்டு, இப்படி ஜாதி போதைக்கோ, வெறிக்கோ ஆளாகி, அந்தப் பிள்ளைகளின் கல்வி எதிர்காலத்தைப் பாழடிக்கலாமா? இதைச் சிந்திக்கும்படி, அவர்களுக்கு எடுத்துச் சொல்லவும், அதே நேரத்தில், உணவு விரும் பாத பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் இருண்டுவிடும் என்ற எச்சரிக்கையுடன் அவர்களின் பிடிவாதம் போக்கி, சட்டம் அதன் கடமையை தயவு தாட்சயண்யமின்றி செய்ய ஆணையிடவும், உரிய கடும் நடவடிக்கை எடுத்திடவும் தயங்கக் கூடாது!
அரசு சட்டம் ‘மவுன சாமியாராக’ இருந்து வேடிக்கைப் பார்க்காது என்பதை கல்வித் துறையும் வற்புறுத்தி, ‘ஜாதி பேதக் கிருமியை’ அழித்து சமத்துவ அலை பாய்ந்து, சகோதரத்துவத்தினர் கல்விக் கண் பெறுவதைக் கண்காணிக்கவேண்டும்.
நீதியரசர் சந்துரு குழு இதுமாதிரி நிகழ்வுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, தக்க தீர்வு – பரிகாரங் களையும் அரசுக்கு – நோய்நாடி நோய் முதல் நாடும் வகையில் தரும் என்று நம்புகிறோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
12.9.2023