சென்னை,ஏப்.28- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 10 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியில் அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது. நாம் கேட்ட நிவாரண நிதி ரூ.38 ஆயிரம் கோடி. ஆனால், மாநில பேரிடர் நிவாரண நிதியில் ஏற்கெனவே இருந்த ரூ.406.57 கோடியை விடுவித்து, பின்னர் ரூ.276.10 கோடியை தான் தமிழகத்திற்கு நிவாரண நிதியாக ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.
தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதியை ஒதுக்காமல் மாநில பேரிடர் நிவாரண நிதியாக ஏற்கனவே இருக்கிற தொகையை கழித்து விட்டு மீதி தொகையை உள்துறைஅமைச்சகம் ஒதுக்கி யிருப்பது பா.ஜனதா அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. இந்த ஒதுக்கீடு யானைப் பசிக்கு சோளப் பொரி போட்டது போல் இருக்கிறது. தமிழக மக்கள் மீதோ, தமிழக மக்கள் வாழ்வாதாரத்தின் மீதோ கொஞ்சம் கூட கருணை காட்டாத அணுகுமுறையை தான் பிரதமர் மோடி கையாண்டு வருகிறார் என்பதற்கு உள்துறை அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீடு மேலும் உறுதி செய்கிறது. மத்திய பா.ஜனதா அரசின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.