சென்னை, ஏப்.28 வரும் 1 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் வெப்ப அலைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் கோடைக் காலம் தொடங்கி கடும் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக சேலம், ஈரோடு உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக உள்ளது. இந்த பகுதிகள் அனைத்தும் கந்தக பூமியாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கடும் கோடை தொடங்குவதற்கு முன்னதாக வெயில் கடுமையாக உள்ளது. கடும் கோடை தொடங்க இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், இப்போதே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருவதைக் காண முடிகிறது. இந்நிலையில் தமிழ்£ட்டில் வரும் 1 ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் என்று வானிலை ஆய்வு மய்யம் அறிவித்து இருக்கிறது. அதா வது, வட உள்மாவட்டங்களில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் (9 பாரன்ஹீட்) வரை வெப்பம் அதிகரித்துக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 1 ஆம் தேதி வரை மேற்சொன்ன மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்த இடங்களில் காலை 8 மணியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் உயர்ந்து பிற்பகல் 2 மணியளவில் வெயில் உக்கிரமாக இருக்கும். சில இடங்களில் அதிகபட்சமாக 108 டிகிரி வரையும், அதனைத் தாண்டியும் வெப்பம் பதிவாகலாம் என வானிலை ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது.