‘‘சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமைகளில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கக்கூடாது. இரும்பு என்பது சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும். எனவே, இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அன்றைய நாளில் கட்டாயம் வாங்கவே கூடாது. ஆனால், சனிக்கிழமைகளில் இரும்பு பொருட்களை தாராளமாக தானம் செய்யலாம். கோயில்களுக்கு இரும்புப் பொருட்களை வாங்கிக் கொடுப்பது சனிக்கிழமையில் செய்வது உத்தமம்.
சனிக்கிழமைகளில் எண்ணெய் கடைக்குச் சென்று எண்ணெய் வாங்கக் கூடாது. சனி நீராடினால் தோஷங்கள் விலகும். அதாவது சனிக்கிழமையில் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தால் தோஷங்கள் நீங்கும். ஆனால், எண்ணெய் வாங்க சனிக்கிழமை உகந்ததல்ல.
108 பொருட்களில் மகாலட்சுமி வாசம் செய்வதாக அய்தீகம் உள்ளது. அதில் உப்பு முதன்மையானது. உப்பை எப்பொழுதும் வெள்ளிக்கிழமைகளில் வாங்குவது சிறந்த பலன்களைக் கொடுக்கும். தவறியும் சனிக்கிழமையில் வாங்குவதை நிறுத்தி விடுங்கள். வெள்ளிக்கிழமைகளில் உப்பை வாங்கி பூஜை அறையில் வைத்து விட்டு பின் ஜாடியில் போட்டு அதில் அய்ந்து ரூபாய் நாணயத்தை போட்டால் வீட்டில் செல்வம் கொழிக்கும்.”
இப்படி பக்திப் பிரச்சாரம் நடைபெறுகிறது.
மூடத்தனங்களுக்கு அளவே கிடையாதா?
இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது எந்த ஆண்டில்?
சனி பகவான் அதற்குப் பிறகுதான் உதித்தானா?
கிழமைக்கும், உப்பு, எண்ணெய்க்கும் என்ன சம்பந்தம்?
அந்த நாள்களில் மளிகைக் கடைகளை மூடிவிட வேண்டுமா?
யானைக்கு மதம் பிடித்தாலும், மனிதனுக்கு மதம் பிடித்தாலும் ஆபத்தே!
– மயிலாடன்