சென்னை, ஏப். 27- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சென்னையில் இருக்கும் நவீன விளையாட்டு அரங்கங்களில் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டுக்களில் 2024க்கான ‘கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்’ வருகிற 29ஆம் தேதி முதல் மே 13ஆம் தேதி வரை காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் நடைபெற உள்ளது.
இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றிட சென்னை தலைநகரில் ரூ.500ம், பிற மாவட்ட தலைநகரங்களுக்கு ரூ.200ம் பயிற்சி கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முகாமில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். இதில் பங்கேற்பதற்கு அந்தந்த மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்கள் மற்றும் விளையாட்டரங்க அலுவலர்களை நேரில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயன்பெறலாம்.
அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சென்னை நவீன விளையாட்டரங்கங்களில் கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற உள்ள விளையாட்டுக் களின் விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.