கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
கைவல்ய சாமியார் போன்றே சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை விளக்கக் கருத்தியல்களில் முன் வரிசையில் இடம் கொண்டவர் நாகர்கோயில் வழக்குரைஞர் பி.சிதம்பரம் பிள்ளையாவார். மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் உறவுக்காரர். உயர் சைவ வகுப்பில் பிறந்திருந் தாலும் சுயமரியாதைச் சாட்டையாக தனது பேனாவைச் சொடுக்கிய சட்டமேதை! தந்தை பெரியார் மதித்த அறிஞர் பெருமக்களில் அவரும் ஒருவர்.
அவர் அக்காலத்தில் பச்சை அட்டை ‘குடிஅரசு’ ஏட்டில் வாரந்தோறும் எழுதி வந்த கருத்துகளைக் கொள்கைக் கருவூலங்களில் ஒன்று எனலாம்.
“Right of Temple Entry”என்ற தலைப்பில் அவர் எழுதிய ஆங்கில நூலை அவரே “ஆலயப் பிரவேச உரிமை” என்ற தலைப்பில் தமிழிலும் எழுதி வெளியிட்டு அந்நூல் ஒரு பெரிய ஆவணமானது. வட்டமேஜை மாநாட் டுக்குச் சென்ற அக்காலத்திலேயே டாக்டர் பி.ஆர்.அம்பேத் கரால் மிகவும் புகழப்பட்ட ஓர் அரிய சான்றாவணம் ஆகும்.
அந்நூலின் முதற் பாகத்திற்கு 1935இல் தந்தை பெரியார் எழுதிய ‘முகவுரை’ வெகு சிறப்பானது மட்டுமல்ல, வழக்குரைஞரும், அந்நாளில் திருவிதாங்கூர் சட்டமன்ற உறுப்பினராகவும் (M.L.A.) இருந்த பி.சிதம்பரம் பிள்ளை அவர்களைப் பற்றிய அந்த அறிமுகம் என்பது சிறப்புப் பாயிரம் போன்றது. முகவுரை – அப்படியே இதோ கீழே தருகிறோம்.
முகவுரை
‘Right of Temple Entry’ (ஆலயப் பிரவேச உரிமை) என்னும் ஆங்கில நூலுக்கு ஈரோடு தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் வரைந்துள்ள முகவுரை வருமாறு:-
சுயமரியாதை இயக்கப் பிரமுகர்களில் ஒருவரும், நம் இயக்கத்துக்கே தூண்போல் பொலிபவருள் ஒருவருமான தோழர், பி.சிதம்பரம் பி.ஏ. பி.எல்., (திருவிதாங்கூர்) அவர்கள் “கோவில் நுழைவு உரிமை” (Right of Temple Entry) என்னும் ஓர் அரிய ஆங்கில நூலை நம் பார்வைக்கு அனுப்பியுள்ளார். அது சுமார் 300 பக்கங்கள் கொண்டதோர் நூல். தோழர் சிதம்பரம் அவர்களைப் பற்றியும். அவரது ஆங்கில அறிவு. ஆராய்ச்சி, சட்ட நூல் தேர்ச்சி முதலியவற்றைப் பற்றியும் நம் நேயர்கள் சிறப்பாகவும், தமிழ்நாடு முழுவதும் பொதுவாகவும் உணர்ந்திருக்கும் காரணத்தால், அவற்றைப் பற்றி நாம் அதிகம் கூற வேண்டிய அவசியம் இருக்காது. இவ்வரிய நூல் இனிமேல் நம் தோழரவர்களது ஆராய்ச்சித் திறனையும், அறிவின் நுட்பத்தையும், எழுத்தின் திறனையும். நம் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமன்றி, இந்திய தேசம் முழுவதும் மெச்சும்படியான விதமாகப் பரப்பும் என்பதில் சிறிதும் சந்தேகமே கிடையாது.
மேற்படி அரிய நூலின் முதற்பாகமாகிய பல அதிகாரங்கள் முன்பு நம்நாட்டில் உலவி வந்த (Revolt) ‘ரிவோல்ட்’ என்னும் ஆங்கில வாரப் பத்திரிகையில் வாரந்தோறும் வெளி வந்தவையே ஆகும். அவற்றின் அபூர்வ குணங்களைக் கண்ட அறிஞர்களும், வாசகர்களும் அவற்றை முடித்து ஒரு புத்தக வடிவமாக்கி வெளியிடுமாறு வேண்டினர். அதன்மேல் நம் ஆசிரியர் அவற்றுக்கு மேல் அதிகமாகப் பல இன்னும் அரிய பெரிய விஷயங்களைச் சேர்த்தும் பெருக்கியும் இப்போது நம் முன்பாக உள்ள அழகிய உயரிய நூலாக அமைத்து, நம் தமிழ் மக்களுக்கு மட்டுமேயன்றி ஆங்கில உலகம் முழுவதுக்கும் பரிவோடு அளித்துள்ளார். இந்நூல் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு ஓர் அரிய விருந்தே என்று கூறின்.
அது ஒருக்காலும் மிகையாகாது. கடல் போன்ற பெரிய விஷயங்களை அணுபோன்ற சிறிய அதிகாரங்களில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கும் ஆசிரியரது திறமை அளவிடற்கரி தாகும். கூர்ந்து தாக்கும் கொடுஞ் சொற்களும், நகையாடி நகைப்பிக்கும் கேலிக் கூற்றும், உணர்ச்சியை ஊட்டும் உன்னத வார்த்தைகளும். பற்பல எண்ணறிந்த பெரியார்களின் விலை மதிப்பில்லாத மேற்கோள்களும் இந்நூலில் ஆதியிலிருந்து இறுதிவரை அழகாய் பொலிந்து வாசிப்பவர்களுக்கு இன்பம் பயந்து வருகின்றன. சுருக்கமாகக் கூற வேண்டின். இந்நூலின் ஆணித்தரமான தர்க்க முறையையும். மேற்கோளோடும். சட்டமுறையின் படியும், சரித்திர சாட்சியத்தோடும் நம் தோழர் சிதம்பரம் அவர்கள் இந்தியாவிலுள்ள கோவில்களுக்குள் நுழைய எல்லா மக்களுக்கும் மறுத்தற்கியலாத உரிமை உண்டு என்று கூறியிருத்தலை அறிவுடைய எம்மனிதனும் நியாயம் என்பதைக் கொண்டு எதிர்த்துப் பதில் கூற முடியாது என்பது முக்காலும் நிச்சயம்.
இந்நூலுக்கு இந்நூலே சமம்; ஆதலால், இதில் கிடைக்கும் மதிக்க முடியாத பொக்கிஷத்தை அவரவரே வாங்கிப் படித்தாலொழிய அதை முழுதும் எடுத்துக் கூறிவிடுதல் முடியாத காரியமேயாகும். எனினும் இந்நூல் முழுதும் ஓடிக் கொண்டிருக்கும் நூல் போன்ற கருத்துத் தொடர்ச்சியையும், தர்க்க முறையையும் மட்டும் சுருக்கமாக நம் நேயர்களுக்குச் சொல்லலாமென நினைக்கிறோம். இந்நூலின் முக்கிய கருத்துப் பின் வருமாறு:-
ஒவ்வோர் இந்துவும். தீண்டப்படுபவனாயினும், தீண்டப்படாத வனாயினும், ஜாதியுள்ளவனாயினும், ஜாதிக்குப் புறம்பானவனாயினும் எந்தவிதமானதொரு பொதுக் கோவிலுக்குள்ளும் நுழைந்து அங்குள்ள விக்ரகத்தை ஆராதிக்கும் பிறப்புரிமை உடையவனாகவே இருக்கிறான். பிரத்தியேகமாகவும், தனிமையான முறை யிலும் ஒரு தனி மனிதனுக்கோ அல்லது ஒரு தனிப்பட்ட ஜாதிக்கோ கட்டப்பட்டுள்ள கோவில்களைப் பற்றிப் பேச்சே கிடையாது.
அவற்றில் நுழைவு உரிமை அவற்றை ஏற்படுத் தியவர்களது இஷ்டத்தையும், விதியையும் பொறுத்ததாகும். ஆனால். பொதுவாக இந்துக்களுக்கென்று ஏற்படுத்தப்பட்ட கோவில்களில் இந்து எனக் கூடியவன் ஒவ்வொருவனும் பிறருக்கு இடர் விளைவிக்காத முறையில் எங்கு வேண்டினும் செல்லலாம். இதுதான் உண்மையான சட்டம். ஆனால், பொதுக் கோவில்களில் தீண்டப்படாதவர்களுக்கு நுழைவு உரிமை அளிக்கும் விஷயத்தில் பொதுவாக நீதி ஸ்தலங்களிலும், மற்ற இடங்களிலும் எழும் கூக்குரல் என்னவெனில், “பண்டைக் கால வழக்கம்” (Immemorial usage) என்பதாகும். மற்றொன்று ஏற்படுத்தியவர்களது கருத்து (Intention of the Donor) என்பதாகும். ஆனால், உண்மையில் நம் தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான கோவில்களை ஏற்படுத்தியவர்கள் யார் என்றும். அவர்களது எண்ணம் என்ன என்றும், ஒருவருக்கும் தெரியவே தெரியாது. அப்படியிருக்கும் போது பண்டைக்கால வழக்கம் என்று கூக்குரல் இடுவது தவறு.
ஆதிகாலத்திலிருந்து இந்துக் கோவில்கள் அரசர்களால் பொது ஜனங்களுடைய பணத்திலிருந்தும், அந்தப் பணத்தைப் பெருக்குவதற்குமே சுட்டப்பட்டன. சந்திரகுப்த மௌரியன் என்னும் வடநாட்டுச் சக்கரவர்த்தியின் பிரதம மந்திரியாகிய சாணக்கியன் என்பவரது “அர்த்தசாஸ்திரம்” என்னும் நூலில் மக்களுடைய மடமையையும், மூட நம்பிக்கையையும் உபயோகப்படுத்தி பேய் பிசாசுகள், தெய்வங்கள் இருப்பதாகப் பாவனை செய்து பல இடங்களில் கோவில்களைக் கட்டி அங்கு வரும் கோடிக்கணக்கான மக்கள் அளிக்கும் காணிக்கைகளைத்தான் கைப்பற்றி அரசியல் விஷயங்களுக்குச் செலவழிக்கும் கடமையைப் பற்றியும், முறைமையைப் பற்றியும் வெகு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தக் கோவில்களெல்லாம் அரசனின் கஜானாவுக்குப் பணம் கொண்டு வரும், ஒரு வருவாய் தரும் டிப்பார்ட்மென்டாகவே கருதப்பட்டு வந்தன.
எவ்வளவுக் கெவ்வளவு அதிகமான மக்கள் கோவிலுக்குச் செல்லு கின்றார்களோ, அவ்வளவுக்கவ்வளவு மன்னனுக்கு வருவாய் அதிகம். இவ்வாறு ஏராளமான மக்களை இழுக்கும் பொருட்டு அக்காலத்தில் மேளதாளம், நாட்டியம். தாசிப் பெண்கள் முதலியவர்களையும் கோவிலில் வைத்தார்கள். அதுமட்டுமன்றி அக்காலத்தில் யாரேனும், காணிக்கை போடக் கூடியவரைக் கோவிலுக்குள் செல்லக் கூடாதெனத் தடுத்தால் அவனுக்குத் தண்டனை விதிக்கப்படும்.
இது மட்டுமல்ல. கோவில் அர்ச்சனைக்குச் சென்ற ஜாதியார்கள் அவர்கள் பிராமணர்கள் என்பது சந்தேகம்) விக்கிரக ஆராதனை செய்யும் காரணத்தாலும், கோவில் மான்யத்தினின்று வயிறு வளர்க்கும் காரணத்தாலும் வெகு இழிவானவர்களாகப் பார்ப்பனர்களால் கருதப்பட்டு வந்தனர்.
கோவில் சென்று வணங்கும் பார்ப்பனர்களே ஜாதியை இழந்தவர்கள் ஆகின்றார்கள். அவர்கள் தீண்டப் படாதவரைக் காட்டிலும் ஒருவிதத்திலும் உயர்ந்தவர்கள் அல்லர்; ஆதலால் ஆசிரியர் பி. சிதம்பரம் அவர்கள் கூறு கின்றார்கள்:- “கோவில் செல்லும் பார்ப்பனன் பறையனிலும் உயர்ந்தவன் அல்லன். ஆதலால், எந்த எந்தக் கோவிலில் ஒரு பார்ப்பான் செல்லுகின்றானோ அந்தக் கோவிலில் நிச்சயமாகத் தீண்டப்படாதவர்கள் நுழையலாம்.” வேதம். சாஸ்திரம் இவை கோவில் ஆராதனையை அங்கீகரிப்பவை அல்ல.
அவற்றை அனுஷ்டிக்கும் ஸ்மார்த்தப் பிராணமர் களும் கோவிலுக்குள் போகக் கூடாது. போனால் ஜாதியை இழந்தவர்கள் ஆவார்கள். எனவே, கோவில் நுழைவு முதலிய விஷயங்களைப் பற்றி விதிக்கும் நூல், சாஸ்திரங்கள் ஒருபோதும் ஆகா. அவை ஆகமங்களேயாகும். இதை அய்க்கோர்ட்டிலும் பிரிவி கவுன்சிலிலும் அங்கீகரித்து உள்ளார்கள்.
வேத சாஸ்திரங்கள் இரு பிறப்பாளருக்குத்தான் உரியன. ஆகமங்களோ ஜாதி வித்தியாசம் பாராட்டாமல் இந்துக்கள் அனைவருக்கும் உரியவை. ஆகமங்களின்படி தீண்டப் படாதவர்களும் கூட சிவ தீட்சை பெறும் மாத்திரத்தில் எந்தக் கோவிலுக்குள்ளும் நுழையலாம், எனவே, ஆகமங்கள் விதிப்படி நம் கோவில் களில் இந்து என்பவன் யாராயினும் நுழையலாம்.”
இவ்விடத்தில் “இந்து” என்பவனுக்கு இலக்கணம் என்ன என்று ஆசிரியர் ஆராய்கின்றார். ஆனால், நிரந்தரமான, நிச்சயமான தொன்றும் இல்லாததால், அவர் முகமதியனாயும், கிறிஸ்துவனாயும். பவுத்தனாயும் இல்லாத இந்தியன் “இந்து” என்று ஒருவாறு இலக்கணம் கூறியுள்ளார்.
மற்றும் கோவில்களின் பரிபாலனம் முழுவதும் 1863-வது ஆண்டு வரையில் இந்து, முகமதிய, கிறிஸ்தவ அரசாங்கத்தின் கையிற்றான். ஆதியிலிருந்து முறையே இருந்து வந்துள்ளது. 1817-வது வருடச் சட்டப்படி பிரிட்டிஷ் அரசாங்கம் தனது பார்வையில் ரிவின்யு போர்டார் மூலம் எல்லாக் கோவில்களையும் நடத்தி வந்தது மன்னியில் சுமார் இரண்டு கோடி ரூபாய் வருடா வருடம் அவற்றின் மூலம் வருமானம் பெற்று அதைப் பொதுச் செலவும் செய்து வந்து உள்ளது.
அதன்பின் கிறிஸ்தவப் பாதிரிகளின் கிளர்ச்சிக்கு இணங்கி அரசாங்கம் 1863-வது வருடம் அந்தந்த மதக்காரரிடம் அவ்வவ்க்கோவிலை ஒப்படைத்து விட்டது. அரசாங்கம் அப்போது “டிரஸ்டி”க்கு அளித்த அதிகாரம் கோவில் நிர்வாகத்தைப் பற்றி மட்டுமேத் தவிர, யாரை விடுவது, யாரை விலக்குவது என்பது ஒன்றைப் பற்றியும் இல்லவே இல்லை. மீண்டும் வேண்டும்போது அரசாங்கம் இதில் தலையிடலும் நியாயத்தோடு நில்லாமல் சட்டப் படிக்கும் “பண்டைய வழக்கப்” படிக்கும் ஒத்ததாகும். இவ் விஷயத்தோடு ஆகமங்களின் விதியையும் ஒத்துப் பார்த் தால் இந்து மக்கள் யாவருக்கும் எந்தப் பொதுக் கோவிலிலும் செல்ல உரிமையுண்டு என்பது விளங்காமல் போகாது.
மற்றும், திருவனந்தபுரத்தில் நடந்த பல ஜாதிச் சண்டை களைப் பற்றியும், விவகாரங்களைப் பற்றியும் இன்னும் பல அரிய ருசிகரமான விஷயங்களைப் பற்றியும் தோழர் பி. சிதம்பரம் அவர்கள் அழகாகவும், விரிவாகவும் எழுதி யுள்ளார். அவற்றில் சில பாகம் சட்டப் பயிற்சியில்லாத சாதா ரண மனிதர்களுக்கு சற்று ருசியற்றதாய் தோன்றினாலும். அவற்றோடு கலந்து விளங்கும் அபே டூபாய்ஸ் முதலிய அய்ரோப்பியர்களுடைய மேற்கோள்கள் வெகு ருசிகரமாக இருக்கும் என்பதிற் சந்தேகமே இல்லை.
கோவிலைப் பற்றியே கவலை கொள்ளாத நம் போன்ற சுயமரியாதைக்காரர்களுக்கு ஆசிரியர் எடுத்துக் கொண்ட பிரயாசை அவ்வளவும் வீண் என்று தோன்றினாலும் தோன்றலாம். ஆனால், இவ்வளவு ஆராய்ச்சியையும் படித்த எந்த அரசாங்க அதிகாரியும், அகங்காரப் பார்ப்பன வழக்கறிஞனும், எந்த ஜாதிக் கர்வக்காரனும், கோவில் நுழைவின் உரிமையைப் பற்றிக் கிஞ்சிற்றும் சந்தேகம் என்பதே கொள்ள மாட்டான். காந்திகள் பலர் இதற்காகப் பட்டினி கிடந்தனர்; பலர் சத்தியாக்கிரகம் செய்தனர்; பலர் வாதாடினர்; பலர் சட்டசபைக்குச் சென்றனர்; ஒரு மசோதாவும் இப்பொழுது அங்கு இருக்கிறது. அதைப் பற்றி மக்களின் அபிப்பிராயத்தைத் தெரிய அரசாங்கம் பல சங்கங்களுக்கும்.
பிரமுகர்களுக்கும் வேண்டுகோள் அனுப்பியுள்ளது. இத்தருவாயில் இத்தகைய ஓர் ஆராய்ச்சிக் களஞ்சியமும், தர்க்க விருந்தும் ஆன நூல் அவர்கள் கையில் கிடைக்குமேல் அறிவுள்ள மக்கள் அனைவரும் கோவில் நுழைவிற்குச் சாதகமாக அபிப்பிராயம் அளிப்பர் என்று நிச்சயமாகச் சொல்லலாம். ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஒவ்வொருவருமேயன்றி அரசாங்கத்தாரும், சட்டசபை களின் அங்கத்தினர் ஒவ்வொருவரும். வழக்கறிஞர் ஒவ் வொருவரும். சீர்திருத்தக்காரர் ஒவ்வொருவரும், இன்னும் கூறவேண்டுமானால் இந்தியர் ஒவ்வொருவரும் தோழர் சிதம்பரம் அவர்கள் இயற்றியுள்ள இந்த நூலைக் கட்டாயம் வாங்கிப் படிப்பதன்னியில் தம் கையிலும், வீட்டிலும் வைத்திருத்தல் மிகவும் அவசியம் என நம்புகிறோம். தற்காலம் நமது தேசம் முழுவதும் நடந்து வரும் கோவில் நுழைவுப் போரில் பலர் தம் பலம் முழுவதும் கொண்டு சண்டை செய்த போதிலும், நம் தோழர் சிதம்பரம் அவர் களது ஆயுதமே மிகவும் சக்தியுடையதும், வெற்றியளிப்பதும் ஆகும். இறுதியாக இந்த நூலின் ஆராய்ச்சியையும், ருசி ததும்பும் விஷயங்களையும் தமிழ் மக்களும் படித்துத் தழைக்கும் பொருட்டு இது தமிழில் மொழி பெயர்க்கப்படின் அது ஒரு பேருபகாரமாக இருக்கும் என்று அபிப்பிராயப் படுகிறோம்.
– ஈ.வெ. ராமசாமி
பி.சிதம்பரம் பிள்ளை என்ற பெயரை அப்படியே வெளி யிடுவது அவரது அடையாளம் மாறாமல் இருப்பதற்கே; மற்றபடி ஜாதி ஒழிப்பு வீரரைக் கொச்சைப்படுத்த அல்ல, (பல சிதம்பரங்கள் உண்டு, தனித்துவப்படுத்திக் காட்டவே. இது தவிக்க இயலாத தீமை, இளைஞர்களே, இதற்காக எம்மை இடிக்காதீர்கள்!).
நாஞ்சில் நாட்டின் குமரி மாவட்டத்தில் நாகர்கோயில் நகரில் (அன்றையத் திருவிதாங்கூர் சமஸ்தான அரசுக்குட் பட்ட நகரில்) 7.2.1887இல் பிறந்து 30.3.1951இல் காலமானவர். 64 ஆண்டுகள் வாழ்ந்தவர்.
அந்நாள்களில் ஈழவ சமுதாயத்தினரை ஏனைய மக்கள் ஒதுக்கி – ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று ஒதுக்கி வைத்த கொடுமையை எதிர்த்து வெகுண்டெழுந்து, அவர்களை தனது (உயர் ஜாதி) இல்லத்திற்கு அழைத்து விருந்தூட்டி பெருமைப்படுத்தி எழுத்தாலும் பேச்சாலும் செயலாலும் உயர்ந்து எடுத்துக்காட்டானவர் எங்கள் செம்மல் சிதம்பரம்.
தமது நூலின் முன்னுரையில் ஆசிரியர் பி.சிதம்பரம் பிள்ளை அவர்கள் கூறும் ஓர் அரிய தகவல், அகிலம் அறிய வேண்டிய ஓர் அருமையான தகவல்!
“இந்நூல் ஆங்கிலத்தில் வெளியானதுபோது, இந்தியாவி லுள்ள பல பத்திரிக்கைகளுக்கும், பெரியார்களுக்கும் பரிசீலனை (Review) செய்வதற்காக அனுப்பிக் கொடுத் தேன். இதில் ஒருவராவது மாறுபட்ட அபிப்பிராயம் கூற வில்லை. ஆனால் ‘ஹிந்து’ப் பத்திரிகையில் கனம் டி.ஆர்.வெங்கட்ராம சாஸ்திரியார் அவர்கள் நீண்டதோர் வியாசம் எழுதிக் கண்டனம் செய்தார்கள்; கோபித்தார்கள்.
“மாப்பிள்ளை அடித்தான் என்பதற்காக கோபப்பட வில்லை; ஆனால் மாமியார் பார்த்துச் சிரித்தாள்” என்பதற் காகக் கோபித்ததுபோல், சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவன் எழுதினான் என்பதே அவர்களது கோபம்.
பம்பாய் நகரில், உண்மைக் காங்கிரஸ் பத்திரிகையாக நிலவி வரும், ‘பம்பாய் கிராணிக்கிள்’ (Bombay Chronicle) என்ற பத்திரிகை இப்புத்தகத்தைக் குறித்து நீண்டதோர் மதிப்புரை வரைந்து அடியில் வருமாறு புகழ்ந்திருக்கிறது:-
இந்நூல் அறிவுக்கும் பெரு விருந்து என்பதில் சந்தேக மில்லை.
பெரிய ஆராய்ச்சித் திறன் இதற்குச் சிறப்பளிக் கின்றது. இனிய முறையில் போதனை யளிக்கத்தக்கதாக. ஒவ்வோர் அத்தியாயத்திலும் பல முக்கியமான, ஆராய்ச் சிக்குரியதான விஷயங்கள் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கப்பட்டிருக்கின்றன.. …………………………. பொதுவாக ஹரிஜன முன்னேற்றத்துக்காகவும், சிறப்பாக, இந்திய சட்டசபை முன்னிருக்கும் ஆலயப் பிரவேச மசோதா குறித்துள்ள பொதுஜன அபிப்பிராயத்தை அறியவும். அவ்விஷயத்தில் பொதுஜனங்களுக்கு வழிகாட்டவும். மகாத்மா காந்தி அவர்கள் இப்பொழுதும் தென்னிந்தியாவில் சுற்றுப் பிரயாணஞ் செய்து கொண்டிருப்பதால். இப் புத்தகம் தக்க சமயத்திலேயே வெளி வந்திருக்கின்றது.
பொது ஸ்தாபனங் களுடையவும், பொதுஜனத் தலைவர்களுடையவும் அபிப் பிராயங்களைத் தெரிவிக்குமாறு அரசாங்கத்தார் கேட்டிருக் கின்றார்கள். அறிவுக் களஞ்சியமாகவும். தர்க்க சாஸ்திர விருந்தாகவும் விளங்கும் இந்நூல். ஆலயப் பிரவேச மசோதா சம்பந்தமாகத் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களைத் தெரிவிக்க விரும்புபவர்களுக்கும். இந்திய அரசாங்கத் துக்கும். பேருதவியளிக்குமென்பதில் அய்யமில்லை. முக் கியமாக அரசாங்க உத்தியோகஸ்தர்கள் ஒவ்வொருவரிடமும் இப் புத்தகம் இருக்க வேண்டியது அவசியமாகும். ……………………………………… மிக்க கவனமாகவும். சாமர்த்தியமாகவும் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. (பம்பாய் கிராணிக்கிள் 14-1-1934)
கல்கத்தா சர். பி.சி. ராய் அவர்கள் இந்நூலைப் படித்து விட்டு அடியில் வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்:-
”சட்ட விஷயங்கள் சம்பந்தமாகவும், சாஸ்திர விதிகள் சம்பந்தமாகவும் இந்நூலாசிரியர் அடைந்துள்ள அபிரிமிதமான ஞானம் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கின்றது. இந்நூல் தக்க சமயத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. முன்னேறிச் செல்லும் கருத்துகளைக் கல்வியறிவு பெற்ற எந்த மனிதனும் எவ்வாறு எதிர்க்க முடியுமென்பது பற்றி நான் அதிசயிக்கின்றேன். இந்த நூலின் மூலம் ஒவ்வோர் இந்துவுக்கும் ஆலயப் பிரவேச உரிமை உண்டு என்பதை நீங்கள் நிலை நிறுத்தியிருக்கின்றீர்கள்.”
தாழ்த்தப்பட்ட வகுப்பாரின் பிரதிநிதியாக வட்டமேஜை மகாநாட்டிற்குச் சென்றிருந்த பம்பாய் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்நூலைக் குறித்து அடியிற்கண்ட அபிப்பிராயம் தெரிவித்துள்ளார்கள்.
“உங்களுடைய நூல் மிகவும் ருசிகரமானதாக இருக் கிறது. ஆலய வணக்கம் எவ்வாறு, எப்பொழுது ஏற்பட்டது என்பதைப் பற்றிக் குறிப்பிடும் பாகங்கள் மிகவும் போத னையளிப்பதாக இருக்கின்றன……………………….. இந்தியர்களை ஒற்றுமைப்படுத்தல் என்ற பிரச்சினையையோ. தீண்டா மையை ஒழிக்கும் பிரச்சினையையோ, ஆலய நுழைவு தீர்க்கும் என நான் கருதவில்லை. ஆனால். மேற்குறித்த பிரச்சினைகளை அது தீர்க்கும் எனக் கருதுகிறவர்களுக்கு உங்களுடைய ஆராய்ச்சி மிகவும் பயன்படுமென நான் நம்புகிறேன்.”
நான் சைவர்களைப் பற்றிப் பல இடங்களிலும் கண்டித் திருக்கின்றேன். அங்ஙனமிருந்தும், சுவாமி வேதாசலம் அவர்களுக்கும். திரு. கே.சுப்பிரமணிய பிள்ளை அவர் களுக்கும் இந்நூலை அனுப்பினேன். தமிழுலகில் இவ்விரு வரைவிட சைவப் பற்றிலும், ஆராய்ச்சியிலும் மேம்பட்டவர் மிகச் சிலரே, மிகச் சிலரும் உண்டோவென்பது எனக்குச் சந்தேகந்தான்.
சுவாமி வேதாசலம் (மறைமலை அடிகளார்) அவர்கள் இந்நூலைப்பற்றி அடியிற்கண்டவாறு எழுதியனுப்பினார் கள்:-
“இந்நூல் காலத்தின் தேவைக்கேற்ற நூலாகும்……………… இந்த முக்கிய நூலைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடக் கூடாதா?”
திரு. கே. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் பார்ப்பன வழக்கறிஞர்கள் மலிந்து கிடக்கும் சென்னை மாகாணத்திலிருந்து முதன் முதலாகத் தெரிந்தெடுக்கப்பட்ட தாகூர் சட்ட விரிவுரையாளராகும். இந்நூலைக் குறித்துள்ள அவர்களது அபிப்பிராயம் அடியில் வருமாறு
“ஆலயப் பிரவேச உரிமை பற்றிய திரு. பி. சிதம்பரம் பிள்ளை அவர்களது நூல்,ஆலய நுழைவுப் பிரச்சினை சம்பந்தமாக அழியாப் புகழ்பெறும் நூலாகும். சரித்திர ரீதியாகவும், சட்டரீதியாகவும் இவ்விஷயம் மிக விரிவாக இந்நூலில் விவாதிக்கப்பட்டிருக்கிறது…………………….. மத விஷயத்தில் இந்நூலாசிரியருக்குள்ள அசிரத்தையும், ஜாதிப் பெருமைகளிலுள்ள வெறுப்பையும் சிலர் உணரக் கூடும். ஆனால் அவர்கள் தமது ஆராய்ச்சி களின் முடிபுகளைத் தொகுத்து இந்நூலில் பயன்படுத்தியிருப்பதற்கு இந்து சமூகம் அவர்களுக்குப் பெரிதுங் கடமைப்பட்டிருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.”
இவ்வாறு பல அறிஞர்களால் பாராட்டிப் புகழப்பட்டுள்ள இந்நூலை, ஒரு பார்ப்பன வக்கீல். ஒரு பார்ப்பனப் பத்திரிகையில் கண்டனம் செய்தது ஏன் என்று அறிய ஆசையுடையவர்கள் இப்புத்தகத்தை வாசித்து நான் குறிப்பிட்டிருப்பது சரியல்லவென்று தெரியப்படுத்தினால், அதைச் சந்தோஷத்துடன் வரவேற்று இனியொரு பதிப்பு ஏற்படுமாகில் அதில் சரிப்படுத்திக் கொள்ளத் தயாராயிருக்கிறேன். ஏதோ சுயமரியாதைக்காரன் எழுதிவிட்டான் என்று கனம் சாஸ்திரியார் அவர்களைப் போல தள்ளி விடாது, உண்மையை அனைவரும் அறிய வேண்டும் என்ற ஆவலுடன் எழுதியிருக்கின்றேன் என்ற உயரிய நோக்கத் தோடு இப்புத்தகத்தைப் பார்வையிடும்படி மிக வணக்கத் துடன் கேட்டுக் கொள்கின்றேன்.”
பி.சிதம்பரம் பிள்ளையவர்களின் மேற்கண்ட தகவல்கள் அகிலம் அறிந்திட வேண்டிய அரியவைதானே!