தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் ஆளும்கட்சி எதிர்க்கட்சிகளையும், எதிர்க்கட்சிகள் ஆளுங் கட்சியையும் பார்த்து அனைத்து தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் கேட்கும் ஒரு கேள்வி வேலை வாய்ப்பை பெருக்க என்ன திட்டம் வைத்திருக் கிறீர்கள்? என்பதுதான். இன்றைய இளைய சமுதாயத் திடம் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துவது வேலை வாய்ப்புதான். படித்து முடித்தவர்கள் அனைவரும் எதிர்பார்ப்பது உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான். அந்த வகையில் இளைஞர்கள், இளம்பெண்களின் முதல் ஆசை, கனவு எப்படியாவது சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி வெற்றி பெறவேண்டும் என்பதுதான்.
அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ், அய்.எப்.எஸ், அய்.ஆர்.எஸ் உள்பட 24 உயர் பதவிகளுக்கான தேர்வுதான் இந்த சிவில் சர்வீசஸ் தேர்வு. இந்த வேலைகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, இறுதியாக நேர்முகத்தேர்வு மூலம் தகுதியுள்ளவர்களை தேர்ந்தெடுப்பார்கள். இந்த பணிகளுக்கு அடிப்படைக் கல்வித்தகுதி பட்டப் படிப்புதான். 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆண்டுதோறும் ஒவ்வொரு மாநிலத்திலும் தேவைப் படும் இடங்களை பொறுத்து, இந்த சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான மொத்த இடங்கள் முடிவு செய்யப்படுகின்றன.
அந்த வகையில் கடந்த 2023-ஆம் ஆண்டுக்கான தேர்வு 1,143 பேர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடந்தது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏறத்தாழ 13 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். தமிழ்நாட்டில் இருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்ற 14,624 பேர் முதன்மை தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அதில் வெற்றி பெற்ற 2,844 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் தேர்வான 1,016 தகுதியானோர் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில் அய்.ஏ.எஸ். பணிக்கு 180 பேரும், அய்.எப்.எஸ். பணிக்கு 37 பேரும், அய்.பி.எஸ். பணிக்கு 200 பேரும் பயிற்சிக்கு அனுப்பப்பட இருக்கிறார்கள். இவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு அவர்கள் சொந்த மாநி லத்தில் பணிபுரிய விருப்ப வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் 1,000 மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத்திட்டமான ‘நான் முதல்வன் திட்டத்தின்’ கீழ் மாதாந்திர உதவிதொகையாக ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. இதில் பயன்பெற்றவர்களில் 450 தேர்வர்கள் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு மேலும் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் முதன்மைத் தேர்வுக்கு தயார்செய்ய ரூ.25,000 உதவித் தொகையாக வழங்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் இருந்து தகுதியானோர் பட்டியலில் இடம்பெற்று இருக்கும் 42 பேரில், 37 பேர் நான் முதல்வன் திட்டத் தின்கீழ் உதவி பெற்றவர்கள் என்பது மிகவும் சிறப்புக் குரியது.
இதற்கு முந்தைய தேர்வில் முதல் 100 இடங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இல்லை என்பது பெரிய குறையாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 5 பேர் அந்த பட்டியலில் இடம்பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த 5 பேரில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயனடைந்த ஒருவரும் இருக்கிறார். கடந்த ஆண்டு 39 பேர் தேர்வு பெற்ற நிலையில், தற்போது 42 பேர் வெற்றி பெற்றிருக் கின்றனர். இதுவே 2014-இல் 1,126 இடங்களுக்கு நடந்த தேர்வில், தமிழ்நாட்டில் இருந்து 119 பேர் தேர்வு பெற்றார்கள் என்பதை பார்க்கும் போது, நமது இளைய சமுதாயம் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகமாகவே இருக்கிறது.
நன்றி: ‘தினத்தந்தி’ தலையங்கம் (27.4.2024)