உத்தரப்பிரதேசம் “வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலையில்” மருந்தியல் பயின்ற 4 மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் ‘ஜெய் சிறீ ராம்’என எழுதி 56% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றதாக புகார் எழுந்தது.
மாணவர்களின் விடைத்தாள் நகலை எடுத்துப் பார்த்தபோது, ‘ஜெய் சிறீ ராம்’ எனவும் ரோஹித் சர்மா, விராட் கோலி எனவும் கிரிக்கெட் வீரர்களின் பெயர் களையும் எழுதி பக்கத்தை நிரப்பியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற் பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் ‘பி-பார்ம்’ பயின்ற மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ‘ஜெய் சிறீ ராம்’ என்றும், ‘ஜெய் ஹனுமான்’ என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத் தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.
இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்தச் சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள் களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப் பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் சிறீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆதாரம்: www.deccanherald.com 25.4.2024)
மற்றும் livemint.com
உத்தரப்பிரதேச மாடல் என்றும், குஜராத் மாடல் என்றும் பிஜேபியினர் பிதற்றித் திரிகின்றனரே – அந்த யோக்கியதை எத்தனைக் கேவலமானது – கீழிறக்க மானது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒன்று போதாதா? மாணவர்கள் மத்தியிலும்கூட ‘ஜெய் சிறீராம்!’ என்ற மதப் போதையை ஏற்றியது மன்னிக்கத்தக்கது தானா?
உத்தரப்பிரதேச அலுவலகக் கட்டடங்களில் காவி வண்ணம் பூசியதோடு யோகி ஆதித்யநாத் சாமியார் ஆட்சி நிற்கவில்லை; கல்வியிலும் தேர்வுத்தாளிலும்கூட பச்சையான தனது ஆர்.எஸ்.எஸ். புத்தியின் காவி சாயத்தைக் காட்டியிருக்கிறது.
பிரதமரின் படிப்பே கேள்விக் குறியாகப் பேசப்படும் நாட்டில் எதுதான் நடக்காது?