வி.சி.வில்வம்
திருமணமான தொடக்கத்தில், “இந்த இயக்கத்திற்கு எனது பங்களிப்பு என்ன? நான் என்ன செய்ய வேண்டும்?”, எனக் கேட்டு இயக்கப் பணி செய்யத் தொடங்கியவர் போடிநாயக்கனூர் பேபி சாந்தா அவர்கள்! இந்த வார ஞாயிறு மலருக்காக, இயற்கை எழில் கொஞ்சும் போடியில், அவரது இல்லத்தில் சந்தித்தோம்!
பெயரிலேயே “பேபி” இருக்கிறதே, என்ன காரணம்?
சிறு வயதில் செல்லமாக “பேபி” என அழைத்தது, இப்போது வரை அது ஒட்டிக் கொண்டது. பிறந்தது 1950, வயது 73 ஆகிறது.
பெரியார் கொள்கை எப்போது அறிமுகம் ஆனது?
திருமணத்திற்குப் பிறகு தான் அறிமுகம் ஆனது! தமிழர் தலைவர், ஆசிரியரின் திருமண நாளான 07.12.1970ஆம் தேதி தான், எங்களுக்கு நிச்சயம் செய்யப்பட்ட நாள். எனவே அந்தத் தேதி எங்களின் வரலாற்றுக் குறிப்பில் பதிந்துவிட்டது!
ஆறு மாதங்களுக்கு முன் நிச்சயம் செய்யப்பட்டதால், இணையர் இரகுநாதன் அவர்கள் மூலம் பெரியார் நூல்களை வாசிக்கத் தொடங்கினேன். அதில் சிறிது மாற்றம் கிடைத்தது. பிறகு தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது! எனினும் சென்னையில் நடைபெற்ற சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் தான் ஒரு உறுதி பிறந்தது!
திருமணம் குறித்துக் கூறுங்கள்?
ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத் தலைவர் வாடிப்பட்டி சுப்பையா, செயலாளர் பெரியகுளம் சா.தே.அழகிரி ஆகியோர் தலைமையில் 1971இல் திருமணம் நடைபெற்றது! சா.தே.அழகிரி அவர்கள் இறுதி வரை திருமணம் செய்யாமல், இயக்கப் பணியாற்றியவர்! பெரியார் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது, அழகிரி அவர்களுக்குக் கை செலவிற்குப் பணம் கொடுப்பார்.
பெற்றோர் குறித்து அறிமுகம் செய்யுங்கள்?
அப்பா பெயர் குட்டி சிகாமணி. தாசில்தாராகப் பணி செய்தவர். அம்மா பெயர் சுருளி அம்மாள். அப்பாவின் சொந்த ஊர் போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம். அந்தக் கிராமத்தில் இருந்து ஏராளமான தமிழாசிரியர்கள், கவிஞர்கள் உருவாகியுள்ளனர். “தமிழன்னை சிலை” அங்குதான் உள்ளது!
பெரியாரை முதன்முதலில் எப்போது சந்தித்தீர்கள்?
திருமணத்திற்குப் பிறகு சந்தித்தேன். அப்போது கைக் குழந்தையாக இருந்த மகள் சசி அறிவுச்செல்வியைத் தூக்கிக் கொண்டு சென்றேன். மழலையைப் பார்த்ததும் கைதட்டி, சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டார் பெரியார்! பெரியாரின் தாடியை என் மகள் பிடித்து இழுக்க, அதைச் சரிசெய்து, குழந்தையுடன் படம் எடுத்துக் கொண்டோம். இயல்பாக அமைந்துவிடுகிற இதுபோன்ற நிகழ்வுகள், வாழ்நாள் முழுவதும் நினைவுகளாகத் தங்கிவிடுகின்றன!
ஆத்திகம், நாத்திகம் இரண்டிலும் பயணம் செய்துள்ளீர்கள். என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்?
ஆத்திகத்தில் சொன்னதை ஏற்றுக் கொள்ள வேண்டும், நாத்திகத்தில் சிந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது! நான் ஆசிரியர் பணி செய்திருந்தாலும், சமூக சிந்தனை வந்தது பெரியார் இயக்கம் மூலம்தான்! திருமணம் ஆன புதிதில், எங்கள் வீட்டில் இயக்க ஆண் தோழர்கள் ஒன்றாகப் பேசுவார்கள். நான் வேடிக்கை மட்டும் பார்ப்பேன்! ஒரு கட்டத்தில், “இந்த இயக்கத்திற்கு எனது பங்களிப்பு என்ன?”, எனக் கேட்டேன்.
அதன் தொடர்ச்சியாக சுவரொட்டி ஒட்ட பசை தயார் செய்ய தொடங்கினேன். பிறகு துண்டறிக்கை சரி பார்ப்பது, இயக்கக் குடுபங்களோடு நெருங்கிப் பழகுவது, இயக்கத் தோழர்கள், பேச்சாளர்கள் வந்தால் மிகச் சிறந்த மரியாதை, விருந்து உபசரிப்பு செய்வது என இயக்கத்தோடு ஒன்றானேன்!
நாத்திகம் உங்களை எந்தளவு உயர்த்தியுள்ளது?
எங்களது கொள்கை ஈடுபாடும், அணுகு முறையும் நெருங்கிய உறவினர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி, அதன் விளைவாக 15க்கும் மேற்பட்டவர்களுக்கு ஜாதி மறுப்பு, சுயமரியாதைத் திருமணத்தைச் செய்து வைத்துள்ளோம்!
இயக்கத்திற்கு நன்கொடை கேட்டால் உடன் பிறந்தோரும், உறவினர்களும், நண்பர்களும் கேள்வியின்றி அள்ளிக் கொடுக்கும் அரவணைப்பைப் பெற்றோம்! “பெரியார் குருதிக் கொடை கழகம்” 25 ஆண்டுகளாகவும், விழிக்கொடை உடற்கொடை இயக்கங்களும் நடத்தி வருகிறோம். இதுவரை ஏராளமான கண்களும், உடற் கொடைகளும் பெற்றுள்ளோம்!
இதர சமூகப் பணிகள் குறித்துக் கூறுங்கள்?
போடியில் 160 பேரை உறுப்பினராகக் கொண்ட அரிமா சங்கத்தில் (Lions Club) முதல் பெண் தலைவராகப் பணியாற்றி யுள்ளேன். ஒரு நாத்திகராக நான் இருந்தாலும், இது வேறொரு களத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. இறந்தவர்கள் வீட்டிற்கே சென்று விழிக் கொடை குறித்தெல்லாம் எடுத்துக் கூறி, கண்களைக் கொடையாகப் பெற்றுள்ளோம்!
உடற்கொடையை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கும், இரத்தக் கொடையை பெரியகுளம் அரசு மருத்துவமனை மற்றும் மதுரை இராஜாஜி மருத்துவமனைக்கும், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு விழிக்கொடையும் கொடுப்போம்!
பணியில் நல்லாசிரியர் விருதைப் பெற்றாலும், அரிமா போன்ற இயக்கங்களில் பணியாற்றினாலும் அடிப்படை அய்யா கொள்கை தான்!
இயக்கத்தில் நீங்கள் வகித்த பொறுப்புகள் குறித்துக் கூறுங்கள்?
மாவட்ட மகளிரணி தலைவர், பொதுக் குழு உறுப்பினராக இருந்துள்ளேன். எனினும் இணையர் இரகுநாதன் அவர்கள் மதுரை மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்தபோது, நானும் மாவட்டம் முழுவதும் பயணம் செய்துள்ளேன்!
பொதுவுடமை தோழர்கள் பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன் ஆகியோர் போடிக்கு வந்தால் என்னையும் அழைத்துச் செல்வார்கள். கம்யூனிச இயக்கத்திற்கு வர வேண்டும் எனவும் விரும்பினார்கள். ஆனால், நான் பெரியார் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்படுவதையும் அவர்கள் அறிவார்கள்! எல்லோரும் விரும்புகிற ஒரு வாழ்க்கையை, இந்தப் பகுத்தறிவுச் சிந்தனை நமக்குக் கொடுத்திருக்கிறது!
ஆசிரியர் அவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்களா?
அதிலென்ன அய்யம்! எங்களின் 3 பிள்ளைகளின் சுயமரியாதைத் திருமணத்தையும் நடத்தி வைத்தவர் ஆசிரியர் தான்! எங்கள் பிள்ளையின் திருமணத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதை மிக அழகாக சரி செய்தவர் எங்கள் ஆசிரியர் தான்! இணையரின் 80ஆவது பிறந்த நாளில் பங்கேற்று, எங்கள் குடும்பத்திற்குச் சிறப்பு செய்தவர் ஆசிரியர்! எங்கள் பேத்திகளுக்கும் ஆசிரியர் தான் தாத்தா!
எங்கள் வீட்டில் சிவகாமி பாட்டி என்ற ஒருவர் இருந்தார். அவர் சட்டை (ஜாக்கெட்) அணிய மாட்டார். ஒருமுறை வீட்டிற்கு வந்த ஆசிரியர் அவர்கள், ஏன் ஜாக்கெட் அணிய தடை இருந்தது? அதன் பின்னணி என்ன? அது மாற்றி அமைக்கப்பட்ட வரலாறு போன்ற தகவல்களை எல்லாம் எடுத்துக் கூறினார்கள்.
இரண்டு நாள்கள் சேர்ந்தார் போல ஆசிரியர் எங்கள் வீட்டில் தங்கி இருக்கிறார்கள். குடும்பத் தலைவர் என்று நாம் சொல்வது, வார்த்தைக்காக அல்ல; அதுதான் நம் வாழ்க்கை முறை!
இயக்கப் பார்வையில் ஆசிரியர் குறித்துக் கூறுங்கள்?
திராவிடர் கழகத் தலைவராக, ஆசிரியர் அவர்களின் பணி மிகச் சிறப்பானது! தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள்! இயக்கத்தின் வேகமும், வளர்ச்சியும் அபரிதமாக இருக்கிறது!
“ஆலோசனை வழங்குதல், அன்பு செலுத்துதல் உள்ளிட்ட அனைத்திலும் ஆசிரியருக்கு இணை ஆசிரியர் தான்! என்றும் அவர் வழி நடப்போம்” என பேபி சாந்தா கூறினார்!