விரலை வெட்டி வேண்டுதலாம்! ஊடகங்களின் உருட்டல்கள்!
பாணன்
மக்களின் நம்பிக்கையை மய்யமாக வைத்து மிகவும் ஆபத்தான வகையில் போலிகளைப் பரப்பும் பாஜக மேலிடத்தின் கட்டளைக்கு முன்னணி ஊடகங்களில் சிலவும் விலை போயுள்ளன. இதனால் நாடு மிகவும் மோசமான ஒரு சூழலைநோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறது.
கருநாடகாவில் கடந்த 6.04.2024 அன்று தவறுதலாக விரலை வெட்டிக்கொண்டவரை மோடி பிரதமராக வேண்டி காளிக்கு தனது விரலை காணிக்கையாக்கிய நபர் என்று போலி செய்தி வெளியிட்டது அம்பலமாகி உள்ளது.
இந்தியாவின் அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் 08.04.2024 அன்று மோடி மீண்டும் பிரதமராக வேண்டி தனது விரலை காளிக்கு காணிக்கையாக கொடுத்தவர் என்ற செய்தி வெளிவந்தது.
இந்தச் செய்தி ‘தினமணி’யிலும் வெளியானது. அதை அப்படியே இங்கு கொடுத்துள்ளோம்.
‘தினமணி’ – 08.04.2024: மோடி மீண்டும் பிரதமராக வேண்டி கை விரலை வெட்டிக்கொண்ட பாஜக தொண்டர்
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெற வேண்டி கருநாடகத்தைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர் தனது கை விரலை வெட்டி காளி தேவிக்கு காணிக்கையாக செலுத்தியுள்ளார். கருநாடக மாநிலம், சோனார்வாடாவைச் சேர்ந்தவர் அருண் வெர்னேகர்(50).
தீவிர பாஜக தொண் டரான இவர் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு காளி தெய்வத்துக்கு ரத்தக் காணிக்கை அளிக்க நினைத்துள்ளார். இந்த நிலையில் அருண் வெர்னேகர் திடீரென தனது ஆள்காட்டி விரலை வெட்டி காளி தேவிக்கு காணிக்கையாக செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறு கையில், “மோடி மீண்டும் பிரதமராகத் தேர்ந் தெடுக்கப்படுவதற்காக காளி மாதாவை வேண்டிக் கொண்டேன்.
மேலும் எனது ஆள்காட்டி விரலை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினேன். மோடி என் தலைவர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் அவரது விரலை மீண்டும் ஒட்டவைக்க முடியாதென மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனிடையே இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என மக்களுக்கு பாஜக தலைவர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
– இதுதான் செய்தி!
ஆனால், உண்மை செய்தியானது அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் மூலமாக வெளியாகி உள்ளது.
அவரது கைவிரல் கனமான வெட்டுக் கத்தி அல்லது அரிவாள் ஏதாவது கொண்டு வெட்டியிருந்தால் அது துண்டாகி இருக்கும். ஆனால், அங்கு நடந்தது அவரது இடதுகை ஆள்காட்டி விரலில் முன்னால் உள்ள மடங்கும் பகுதி ஆழமாக வெட்டுப்பட்டு உள்ளது, மேலும் எலும்பு சேதமடைந்துள்ளதே தவிர அது முழுமையாக வெட்டுப்படவில்லை. இந்த நிலையில் விரலின் முன்பகுதி ஆகையால் மிகவும் நுண்ணிய ரத்தநாளங்கள் விரல் நுனி நோக்கிச் செல்கின்றன. ஆகவே, வெட்டுப்பட்ட பகுதியில் உள்ள ரத்த நாளங்களை ஒன்றிணைக்க முடியாத காரணத்தால் விரலினை ஒட்டவைக்க இயலாமல் போகவே பாதி வெட்டி தொங்கிய நிலையில் இருந்த விரலை அகற்றினோம்” என்று கூறியிருந்ததாக கருநாடக நாளிதழ் செய்தி வெளியிட்டது.
7.4.2024 அன்று பெங்களூரு “இந்து” நாளிதழில் வெளிவந்த செய்தியில் அருண் வெர்னேகர் உண்மையில் சிறிது ரத்ததை எடுத்து காளியின் சிலைமீது தெளிக்க மூயற்சி செய்தார்.
இதற்காக அவர் அலை பேசியை சரியான கோணத்தில் வைத்து பிளாஸ்டிக்கை வெட்டும் கட்டர் எனப்படும் பிளேட் மூலம் ஆள் காட்டி விரலை சிறிது வெட்டி ரத்ததை தெளிக்கும் திட்டம். ஆனால், அவர் அலைபேசி காமிராவைப் பார்த்து சிறிது அழுத்தம் கொடுத்து விரலை வெட்டியுள்ளார். பிளாஸ்டிக் வெட்டும் கத்தி கட்டர் எனப்படும் மிகவும் கூர்மையான கத்தி ஆகும். அது லேசாக அழுத்தம் கொடுத்தாலே ஆழமாக வெட்டி விடும். பிளாஸ்டிக்கையே ஆழமாக வெட்டும் தன்மை கொண்ட கட்டர் பிளேட் மிகவும் மென்மையான விரலை எளிதாக வெட்டி விட்டது, இவரும் இதனை எதிர் பார்க்கவில்லை.
ஆகையால் தான் உடனடியாக மருத்துவமனைக்கு ஓடிச்சென்று விரலை ஒட்டவையுங்கள் என்று மன்றாடியுள்ளார்.
ஆனால் மெல்லிய ரத்தநாளம் சிதை வுற்றதால் தொங்கிகொண்டு இருந்த விரலையும் வெட்டி எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதாவது ஒருவரின் நாடகத்தை இந்தியாவின் அனைத்து முன்னணி நாளிதழ்களும் எந்த ஒரு கேள்வியுமின்றி மோடி மீண்டும் பிரதமர் வருவதற்காக விரலை காணிக்கையாக கொடுத்தார் என்று கொஞ்சமும் ஊடக அறமில்லாமல் எழுதி மோடிக்கு பி.ஆர்.ஓ. வேலை பார்த் துள்ளனர்.
மருத்துவர் மூலம் உண்மை வெளிவந்த பிறகு அருண் ‘இந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டி ஆங்கிலத்தில்,
“I wanted to collect some blood, but the force was stronger than I thought and I chopped off a part of my finger. Now, I will consider it as an offering to the Goddess,’‘
“அதாவது நான் சில துளி ரத்ததை காளியின் படத்தின் மீது தெளிக்க விரலை லேசாக வெட்டினேன். ஆனால் கத்தி கூர் மையாக இருந்தால் விரலின் முன்பக்கம் ஆழமாக வெட்டியதால் நான் விரலில் பாதியை இழந்தேன்” என்று கூறியுள்ளார்.
இந்தச்செய்தி 7.04.2023 அன்று ஆங்கில இந்து நாளிதழில் வெளிவந்தது.
ஆனால், 8.04.2024 அன்று தினமணி பொய் செய்தியை வெளியிட்டுள்ளது.
இதுவரை இந்தியா முழுவதும் மோடிக்கு ஆதரவாக விரலை வெட்டிகொண்டார்கள் என்று 5 செய்திகள் வெளியாகி உள்ளன. இதில் உஜ்ஜைனி நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கோவில் ஒன்றில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். அப்போது கம்பிகளை வெட்டும் கருவியில் வேலை பார்க்கும்போது தவறுதலாக அந்த கம்பி வெட்டும் கருவி அவரது விரலை வெட்டி விட்டது.
ஆனால் இந்த செய்தியை அந்தப் பணியை மேற்கொண்ட பாஜக பிரமுகரான ஒப்பந்ததாரர் மோடி பிரதமராக வேண்டி தொண்டர் தனது விரலை வெட்டிக் கொண்டார் என்று வதந்தியைப் பரப்பி விட்டார். இது செய்தியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால், விரலை இழந்த நபரே வாட்ஸ் அப்பில் அந்த கட்டர் மிசின் பழுதாகி இருந்தது, அதனை சரிசெய்து கொடுக்க பல முறை கேட்டிருந்தோம் ஆனால் சரி செய்யவில்லை. இந்த நிலையில் அந்த மிஷினை எடுக்க முற்பட்டபோது அது தானாகவே இயங்கி எனது விரலை வெட்டிவிட்டது, எங்கள் ஒப்பந்ததாரர் அவரது தவறை மறைக்க என்னைப் பயன்படுத்தி உள்ளார், மேலும் எனது பெயரைச் சொல்லி பா.ஜ.க. பிரமுகர்களிடம் பணமும் வாங்கி உள்ளார் ஆனால், விரலை இழந்த எனக்கு வெறும் 150 ரூபாய் கொடுத்து வேலையில் இருந்து நீக்கிவிட்டார் என்று கூறி பதிவிட்டிருந்தார்.
இந்த உண்மையை எந்த நாளிதழும் வெளியிடவில்லை.
அதே போல் 18.4.2024 அன்று தமிழ் நாட்டு நாளிதழ்களில் ஒரு செய்தி பளிச்சிட்டது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை வெற்றிக்காக ராமலிங்கம் என்ற கடலூரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர் 18.04.2024 அன்று மாலை கோவை அவினாசி சாலையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்த போது அவர் திடீரென தனது விரலை வெட்டிக்கொண்டார் என்றும், அவர் அண்ணாமலையின் வெற்றிக்காக தனது விரலை காணிக்கையாக கொடுத்தார் என்றும் செய்திகள் வெளியானது.
இந்த செய்தியில் பெரும் அய்யம் நிலவுகிறது.
தேர்தல் முடிந்த பிறகு அந்தச் தொகுதியைச் சேராத அனைவரும் வெளியேறவேண்டும் என்று காவல் துறையும் தேர்தல் ஆணையமும் உத்தரவிட்ட பிறகும் கடலூரில் இருந்து பா.ஜ.க.வின் பரப்புரைக்காக சென்றவர் ஏன் கோவையிலேயே தங்கவேண்டும்? மேலும் காணிக்கை கொடுப்பது என்றால் கோவிலிலோ அல்லது பூஜை அறையிலோ கொடுக்க வேண்டும் என்றுதான் நாம் படித்திருக்கிறோம். அது போன்றுதான் செய்வார்கள். ஆனால், இவர் நண்பர்களோடு உட்கார்ந்திருக்கும் போது உடனடியாக தனது விரலை வெட்டிக்கொண்டார் என்று தான் மருத்துவமனையில் சேர்க்கும் போது அவரது நண்பர்கள் கூறியுள்ளார்கள்.
இங்கு தேர்தல் பரப்புரை முடிந்து அனைவரையும் வெளியேறச் சொன்ன பிறகு கடலூர் பிரமுகருக்கு கோவையில் என்ன வேலை?
மேலும் நண்பர்களோடு ஒன்றாக இருந்தார் எனும் போது அவர்கள் மதுபோதையில் இருந்தார்களோ? அவர் களுக்குள் எழுந்த பிரச்சினையில் விரல் வெட்டப்பட்டதா என்ற கேள்விகள் எழும்? ஆனால், இந்த கேள்விக்கு அவருக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவமனையும், அவர் மருத்துவமனைக்கு வந்த பிறகு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்து வரும்தான் விளக்கம் தரவேண்டும்
ஆனால் அந்த மருத்துவமனையும் ஹிந்துத்துவ ஆதரவாளர் ஒருவரால் நடத்தப்படும் மருத்துவமனை ஆகும்.
இதை ஹிந்துத்துவ இதழான ‘த ஆர்கனைசரே’ செய்தியாக வெளியிட் டுள்ளது. இதன்படி இங்கும் உண்மை மறைக்கப்பட்டுள்ளது.
இதே போல் பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரிலும் விரலை வெட்டிய செய்திகள் உள்ளன. மேலே கூறிய மூன்று எடுத்துக்காட்டுகளைப் பார்த்தால் பாஜக சார்பாக வெளியிட்ட செய்தியாகவே உள்ளன. அதாவது போலிச்செய்திகள்.
இதற்கு முக்கிய எடுத்துக்காட்டு கேரளா பாஜக பிரமுகர் வலதுகண் காயம்பட்ட செய்தி.
அங்கும் அண்ணாமலை தனது புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டார்.
கேரள மாநில கொல்லம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிடும் நடிகர் கிருஷ்ணகுமார் பரப்புரையின் போது எதிர்க்கட்சியினர் குறிப்பாக சி.பி.எம் நிர்வாகி கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் தனது கண்ணில் காயம் ஏற்பட்டதாகவும், குண்டறா அருகே உள்ள கண் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பியதாகவும் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
கிருஷ்ணகுமாரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “அண்ணன் கிருஷ்ண குமாரை பாருங்கள். அவர் மக்களிடம் பிரச்சாரம் செய்யும் போது யாரோ ஓர் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டு தன்னுடைய கண் சேதம் அடைந்து பிளாஸ்டர் போட்டு இருக்கிறார்.
இருட்டாகவே கண்ணை வைத்திருக்க வேண்டும், எந்த காரணத்தைக் கொண்டும் வெளிச்சத்துக்கு வர வேண்டாம் என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தனர். அதனால் நீங்கள் பிரச்சாரத்துக்கு வர வேண்டாம் என்று சொன்னேன். அதற்கு அவர், என்னுடைய கண்ணே போனாலும் பரவாயில்லை நான் கொல்லம் மக்களுக்காக நிற்பேன், வேட்பாளராக பிரச்சாரத்தை தொடரப் போகிறேன் என்று என்னுடன் வந்திருக்கிறார். எந்த அளவுக்கு கொல்லம் மக்கள் மீது அவர் அன்பும், நம்பிக்கையும் வைத்திருக்கிறார் என்று பார்த்துக் கொள்ளுங்கள்” என பேசியிருந்தார்.
இந்த நிலையில் கிருஷ்ணகுமாரின் கண்ணில் காயம் ஏற்படுத்தியதாக குண்டறா பஞ்சாயத்து பா.ஜ.க பொதுச்செயலாளர் சனல் புத்தன்விளா(50) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது கையில் இருந்த பைக் சாவி தெரியாமல் கிருஷ்ணகுமாரின் கண்ணில் பட்டதாக சனல் புத்தன்விளா தனது வாக்குமூலத்தில் தெரிவித்ததாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.
மேலே கூறிய நிகழ்வுகளே பாஜக எவ்வளவு பெரிய மோசடியில் ஈடுபடும் என்பதற்கும், அதற்காக முன்னணி ஊடகங்களும் துணை போகின்றன என்பதற்கும் சிறந்த எடுத்துக்காட்டுகள்.