சுயமரியாதை இயக்கம் – தந்தை பெரியாரின் போர் வாளாம் ‘குடிஅரசு’ இதழ் – இவற்றின் நூற்றாண்டு விழாவை நேற்று (25.4.2024) மாலை சென்னை பெரியார் திடல் – நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார் – சுயமரியாதை இயக்கத்தின் மறுபெயரான திராவிடர் கழகத்தின் தலைவர் – தகைசால் தமிழர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.
நேற்றைய நாள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட்ட கல்வெட்டு!
உலகத்தில் உள்ள எல்லா அகராதிகளையும் கொண்டு வந்து புரட்டிப் பார்த்தாலும் “சுயமரியாதை” என்ற சொல்லுக்கு ஈடானது எதுவுமில்லை என்பார் தந்தை பெரியார்.
இந்த சுயமரியாதை உணர்வு என்பது ‘ராமு’ என்று அழைக்கப்பட்ட சிறுவனாக இருந்த காலந்தொட்டு அவர் சிந்தனையில் உதித்த – உயிர்ப்பித்த உணர்வாகும்.
பள்ளிப்படிப்பு சிறிதே என்றாலும் பெரியார்பற்றி ‘கல்கி’ கிருஷ்ண மூர்த்தி சொன்னாரே – “உலகானுபவம் என்னும் கலா சாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை” என்பதுதான் உண்மை.
அந்த அனுபவத்தில் அவர் கண்டெடுத்த விலை மதிக்க முடியாத – காலத்தை வென்றெடுத்த பேரியக்கம் தான் சுயமரியாதை இயக்கம்!
அவர்தம் சுயமரியாதைக் கருத்துகளை மக்களிடத்திலே கொண்டு சென்ற பேராயுதம்தான் ‘குடிஅரசு’ என்னும் வார இதழ் – அதன் நூற்றாண்டு விழாவின் தொடக்கமும் இதே கால கட்டம் தான்!
அவரின் கொள்கை என்பது குறள் வடிவத்தில் சொல்ல வேண்டுமானால் “பேதமில்லா இடம்தான் மேலான திருப்தியான இடமாகும்” (‘குடிஅரசு’ 11.11.1944) என்பது அவரின் முடிவான கொள்கை.
பேதம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதன் வாலை மட்டு மல்ல – ஆணிவேர், பக்கவேர், சல்லி வேரை எல்லாம் வீழ்த்தும் வீரமும், விவேகமும் கொண்டதால் தான் அவர் பெரியார்!
தான் பெற்றெடுத்த அந்த வரலாற்றுப் பேரியக்கமான சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள் என்ன?
இதோ பெரியார் பேசுகிறார்:
“(1) மக்களுக்குப் பிராணனைவிட மானம் பெரிதென்பது முதலாவது கொள்கையாகும்.
(2) எல்லோரும் பிறவியில் சமம் என்பது இரண்டாவது கொள்கையாகும்.
(3) பெண்களுக்குச் சம உரிமை இருக்க வேண்டும் என்பது மூன்றாவது கொள்கையாகும்.
(4) ஜாதி – மத பேதங்கள் தொலையும் மட்டும் நாட்டில் ஒற்றுமை யையும், எல்லாருடைய நன்மையையும் உத்தேசித்து ஒவ்வொரு ஜாதி – மதத்திற்கும் அரசியலில் சரியான பிரதிநிதித்துவம் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது நான்காவது கொள்கையாகும்.
(5) கண்மூடி வழக்கங்களும், மூடநம்பிக்கையும் தொலைய வேண்டும் என்பது அய்ந்தாவது கொள்கையாகும்.
(6) வேதம், சாஸ்திரம், புராணம் பழக்கம் என்னும் காரணங்களால் மனிதன் பகுத்தறிவைக் கட்டுப்படுத்தக் கூடிய பார்ப்பனீயம் ஒழிந்து, சுயேச்சையும், அறிவும் வளர வேண்டும் என்பது ஆறாவது கொள்கை.
இதுபோன்ற அனேகக் கொள்கைகளை சுயமரியாதை இயக்கம் இன்றைய தினம் தாங்கிக் கொண்டு மூலை முடுக்கு களிலும் பரவியது” (குடிஅரசு 23.5.1928) என்று கூறுகிறார் தந்தை பெரியார்.
ஞானிகள், மகான்கள் ஜெகத் குருக்கள் என்று புகழப்படுப வர்கள் எல்லாம் ‘எழுதியவன் ஏட்டைக் கொடுத்தான்’ என்ற முறையில் உடலைச் சுமந்து வாழ்ந்து மறைந்தவர்களே ஆவர்.
ஆனால், தந்தை பெரியார் தம் சிந்தனையில் தோன்றிய கொள்கைகளை, கோட்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர். மணிக்கணக்கில் மாலை நேரக் கல்லூரிகளாக மக்கள் மத்தியில் கருத்து மழை பொழிந்தவர், மாநாடுகளை நடத்தியவர் – தீர்மானங்களை இயற்றியவர் (இவற்றை பிற்காலத்தில் வந்த அரசுகள் சட்டங்களாக இயற்றியதுண்டு)
தன் கருத்துகள் வெற்றி பெற தேவைப்பட்ட நேரங்களில் களங்கள் – போராட்டங்களைக் கண்டவர். அவற்றிற்கு விலையாக வெஞ்சிறை ஏகியவர். (அவர் கண்ட சிறைவாசம் இக்கால சிறை போன்றதல்ல என்பது நினைவிருக்கட்டும்).
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எந்த அமைப்பாக இயங்கினாலும் தந்தை பெரியார் கருத்துகளைப் புறந்தள்ளவே முடியாது. அவர் மறைந்து அரை நூற்றாண்டானாலும் அவர் கொள்கைகள் தத்துவங்களாகப் பரிணாமம் பெற்று உலகம் தழுவிய அளவில் பூத்து மணங் கமழ்கிறது.
“மண்டைச் சுரப்பை உலகு தொழும்” என்று புரட்சிக் கவிஞர் பாடியது எத்தகைய தொலைநோக்கு!
மக்களைச் செழுமைப்படுத்தினால்தான் – அதன் மீது கட்டப்படும் எந்தக் கட்டுமானங்களும் உறுதியாக நிற்கும்.
தந்தை பெரியார் தம் கருத்துகள் காலம் கடந்தாலும் – அது வெற்றியின் முகட்டை தொடாது தொடை நடுங்கிக் கீழே வீழாது.
திராவிடர் மாடல் அரசான தி.மு.க. ஆட்சி தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாகக் கொண்டாடுவதும், அரசுப் பணியாளர்களை உறுதிமொழிகளை எடுக்கச் செய்திருப்பதும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் தந்தை பெரியார் கருத்துகளை மேடைகளில் முழங்குவதும் – இன்றைய போராட்டம் என்பது பெரியாருக்கும் பாசிசத்துக்குமிடையே நடைபெறும் போராட்டம் என்று கூறுவதும் எதைக் காட்டுகிறது?
வடபுலத்தில் தந்தை பெரியாரின் கருத்துகள் பரவும் காலம் பழுத்து விட்டது. அவர்கண்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டில் இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லுவோம்! அதன் தொடக்கத்தை திராவிடர் கழகத் தலைவர் தொடங்கிக் கொடுத்து விட்டார்! மே 2ஆம் தேதி முதல் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டையொட்டி தமிழ் நாட்டின் பட்டி தொட்டிகளில் எல்லாம் நூறு கூட்டங்கள் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.
எங்கும் கருத்துமழை பொழியட்டும்! இளைஞர் பட்டாளம் திரளட்டும் – இனிவரும் உலகம் பெரியார் மாட்டே!
விஞ்ஞானம் வளர்ச்சி அடையும் – தந்தை பெரியாரின் கருத்துகளும் மேலும் மேலும் வளர்ச்சி அடையும் – மானுடத்தின் மகத்துவத்தின் முழு நிலவை உலகம் காணட்டும் – மகிழ்ச்சியில் திளைக்கட்டும்!
குடிஅரசு ஏட்டின் தொடர்ச்சியில், அதன் பணிகளையும் அதற்கு மேலாகவும் இக்கால கட்டத்தின் சவால்களைச் சந்திக்கவுமான நமக்குக் கிடைத்திட்ட 89ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் விடுதலை நாளேட்டையும் வீட்டுக்கு வீடு கொண்டு சேர்ப்போம்!
வெல்க சுயமரியாதை இயக்கம்!