கவிஞர் கலி.பூங்குன்றன்
“மனிதன் அறிவு பெறவும், சமத்துவம் அடைய வும், சுதந்திரம் பெறவும் சுயமரியாதை இயக்கம் பாடுபடுகின்றது. இவற்றிற்கு எதிராகவும், தடை யாகவும் இருக்கும் எதையும் அடி யோடு ஒழிக்கத் தைரியம் கொள்கிறது”
(குடிஅரசு’ 20.9.1931)
தன்மான இயக்கம், சுயமரியாதை இயக்கம் என்று வரலாற்றில் நின்ற இந்த இயக்கத்தின் ஆணி வேர் எதை நோக்கி? அதை ஈட்ட அது எதையும் சந்திக்கவும், தடைகளைத் தகர்க்கவும் தோள் தூக்கி எழுதுவது என்று ‘தீர்மானித்துவிட்டது.
அந்தத் தடைகள் (1) கடவுள், (2) மதம், (3) சாஸ்திரம் (4) காந்தி (5) பார்ப்பான் வடிவங்களாலும், சிந்தனை ஓட்டத்தாலும் ஆணி வேர்வரை இங்கு பதிந்துள்ளன என்பதை அறுதியிட்டுத் தெரிந்து கொண்ட தந்தை பெரியார் இவை அய்ந்தும் ஒழிக என்கிற முழக்கத்தோடு தன் மான இயக்கத்தைத் துவக்கினார்.
‘இந்த அய்ந்தும் சமுதாயத்தில் எவ்வளவுப் பலமாக வேரூன்றி நின்றன – எந்த மக்களுக்காகப் பாடுபடப் போகிறோமோ, எந்த மக்களின் நன் மைக்காக இவற்றை எதிர்க்கப் போகிறோமோ அந்த மக்களே தம் பணிக்கு எதிர்ப்பாக முரட்டுத் தனத்துடன் கிளம்புவார்கள் – அந்த அளவுக்கு அந்த மக்களின் சிந்தனை சீழ் பிடித்துப் போயிருக் கிறது; அவர்களின் மூளைக்கு இந்தப் பிற்போக்குச் சக்திகள் விலங்கிட்டு விட்டன என்பதை உணர்ந்த நிலையில்தான் யாரும் செய்ய முன் வராத பணியைத் தந்தை பெரியார் அவர்கள் தன் தோளில் போட்டுக் கொண்டு செய்ய தானே முன் வந்தார்.
அதனால்தான் தம் மக்களாலேயே கடும் எதிர்ப்பும், கொடும் தொல்லைகளும் மூர்க்கப் புயலாகக் கிளம்பியபோதும், அது இயல்பானது தான் என்று எடுத்துக் கொண்டார்களே தவிர, அவர்களை வெறுக்கவோ, வீண் வம்பு – தும்பு களில் ஈடுபடவோ எண்ணினார்கள் இல்லை. அவர்களின் மயக்கத்தை, மதியீனத்தை மாற்றுவது தான் அதற்குச் சரியான மா மருந்து என்று எண்ணி அறிவுத் துறையில் தன் பணியைத் துவக்கினார்கள்.
‘சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கும் போது கூட நம்மையே நாம் பொறுப்பாளியாகவும், உதவியாளனாகவும், நம்பியுமேதான் இக்காரியத் தில் இறங்கினோம். இவ்விஷயத் தில் நமக்குள்ள உறுதிதான் இவ்வியக்கத்துக்குச் சொத்தும், அஸ்திவாரமுமேயொழிய வேறு ஒன்றுமில்லை” (‘குடிஅரசு’ 10.2.1930) என்று கூறுகிறார். இதில் உள்ள துணிவும், தீர்க்கமும் தீயில் அழுக்கு இல்லை என்பதுபோன்ற தெளிவைத் தீர்க்கமாக வெளிப் படுத்துகின்றன.
கடைசி மூச்சு அடங்கும்வரை இந்தத் தூய்மையை, தன்மையை தந்தை பெரியாரிடம் காணலாம்.
இந்தச் சுயமரியாதை உணர்வு என்பது சின்னஞ் சிறு வயதிலேயே தந்தை பெரியாரைப் பற்றிக் கொண்டதுதான்! அந்த உணர்வின் ஊட்டமே, பிற்காலத்தில் அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலுமே ஒளிவிட்டது! எந்தச் சுற்றுச் சார்பும் அவரைப் பலி கொள்ளவில்லை.
தாம் எடுத்துக் கொண்ட பணி எத்தகையது என்பதை 1933-ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் கூறுகிறார்:
மனித சமூகத்திற்கு தீங்கை இழைத்து வரும் விஷயம் கடவுள் சொன்னதானாலும், மதம் சொன்னதானாலும் அல்லது கடவுளும், மதமும், அரசாங்கமும் சொன்னதானாலும் அவைகளை அழிக்கத் தைரியம் கொள்ள வேண்டும். நாம் எல்லோரும் வெகு காலமாகவே முன்னோர் காலந்தொட்டு மதச் சீர்திருத்தவாதிகளாகவும், கடவுள் சீர்திருத்த வாதிகளாகவும், ஒழுக்கச் சீர் திருத்தவாதிகளாகவும், அரசு சீர்திருத்தவாதிகளா கவும் இருந்து பார்த்தாய் விட்டது. நமது முன் னோர்கள் காலம்தொட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் சீர்திருத்தவாதிகளாய் இருந்தும் பார்த்தாய் விட்டது. எந்தத் துறையில் சீர்திருத்த மடைந்திருக்கிறோம்? ஏழை “சீர் திருத்தமடைந்து” நாளுக்கு நாள் பட்டினியும், நோயும், இழிவும் அடைந்து கொண்டே போகிறான். பணக்காரனும், சோம்பேறியும் சீர்திருத்தமடைந்து, நாளுக்கு நாள் பெரும் பணக்காரனாகி, பிரபுவாகி, ஜமீனாகி, ராஜா வாகி, தலைமுறை தலைமுறை ஜமீனும், ராஜாவு மாய் ஆகிக் கொண்டே போகிறான்.
சீர்திருத்தத்தின் பலனைக் காண்பதற்கு இன்னும் வேறு என்ன உதாரணம் வேண்டும்? ஆகவே, ஏழைத் தன்மை, பணக்காரத் தன்மை என்கின்ற இரண்டு தன்மை யும் உலகில் இருக்கக் கூடாது என்று அவைகளை அடி யோடு அழிப்பது நல்ல வேலையா? அல்லது அத்தன்மைகள் எந்த ரூபத்திலாவது என்றும் இருக்கும்படி சீர்திருத்தம் செய்வது நல்ல வேலையா? என்று யோசித்துப் பாருங்கள். அழிவு வேலைக்கு எதிர்ப்புதான் சீர்திருத்த வேலை என்பது. தீமைகளுக்கு காவல்தான் சீர்திருத்தம் என்பது. ஆகவே, தீமைகளை அழிக்க வேண்டு மானால் அவற்றின் காவல்களையும், காப்பு களையும் முதலில் நிர்த் தூளியாக்க வேண்டும்.
அரசனையானாலும், மதத்தையானாலும், கடவுளையானாலும் நாம் எதிர்ப்பதும், அழிக்க முற்படுவதுமான காரணமெல்லாம் இவை தீமைக்கு காவலாய் இருக்கின்றன என்கின்ற ஒரே நோக்கமேயல்லாமல் அவைகளிடம் நமக்கு பொறாமையோ, துவேஷமோ ஏற்பட்டதால் அல்ல. ஏழ்மைக் கஷ்டமில்லாமலும், பணக்கார கொடுமை இல்லாமலும், பார்ப்பன உயர் ஜாதி இல்லாமலும் – பறையன் தாழ்ந்த ஜாதியல்லாமலும் – முதலாளி ஆதிக்கமில்லாமலும் – கூலி அடிமைத் தன்மை இல்லாமலுமிருப்பதற்கு ஆதாரமான மதம், கடவுள், அரசன், சட்டம், நீதி, தர்மம் ஆகிய வைகளை நாம் அழிப்பதில்லை. அவைகளைப்பற்றி நமக்கு கவலையேயில்லை.
இவர்கள் விஷயத்தில் நாம் மதத்துரோகியோ, கடவுள் துரோகியோ, ராஜத் துரோகியோ, சட்டம் மறுக்கவோ, அதர்மக்கா ரனாகவோ இருக்க நாம் சிறிதும் விரும்பவில்லை.
ஏழை – பணக்காரத் தன்மையையும், கீழ்-மேல் ஜாதியையும், முதலாளி, அடிமையையும் கொண்ட தான நிலைமைகள் நடைபெற ஆதரவாயிருக்கும் கடவுள், மதம், அரசன், தர்மம், சட்டம் ஒழிந்தே ஆக வேண்டும். ஆதரவாயிருக்கும் கடவுள், மதம், அரசன் என்பவைகள் மாத்திரமல்ல இவைகளை அனுமதித்துக் கொண்டிருக்கும் அரசாங்கமும், நீதி, ஒழுக்கம், பழக்கம், வழக்கம் முதலியன என்பவைகளையும், நாங்கள் அழித்தே தீருவோம். ராஜத் துரோகி, கடவுள் துரோகி, மதத் துரோகி பூச்சாண்டிகள் இனி சுயமரியாதைக்காரர்களிடம் செல்லாது.
சுயமரியாதைக்காரர்களிடம் மாத்திரமல்ல, வெகு சீக்கிரத்தில் உலகத்திலேயே அவை களுக்கு இடமில்லாமல் போகப்போகின்றது. இதுகால வரையும் கஷ்டப்படும் மக்கள் தங்கள் தலை விதியின்மீதும், கடவுள் மீதும் பழி போட்டுக் கொண்டு தலைவிதியை மாற்றவும், கடவுள் தயவு பெறவும் என்று மேலும் மேலும் கஷ்டப்பட்டுக் கொண்டே இருந்து வந்தார்கள். ஆனால், இப்போது சுயமரியாதைக் காரர்களால் – நாத்திகர் களால் – கடவுள், மதத் துரோகிகளால் ஜனங்கள் உண்மையை உணர்ந்துகொண்டார்கள். இவைகள் சோம்பேறிகளும், பணக்கார முதலாளிகளும் செய்யும் சூழ்ச்சியும், பித்தலாட்டமுமே யொழிய வேறல்ல என்று கடவுளும், மதமும் இந்தப் பித்தலாட்டக்காரர் கற்பனைகளேதவிர வேறு யில்லை என்றும் உணர்ந்து கொண்டார்கள். நன்றாய் உணர்ந்து கொண்டார்கள். இப்பொழுது இவைகளை எப்படி ஒழிப்பது? என்பதில்தான் கவலையாய் இருக்கிறார்கள்.
வேகமாய்ப் போக வேண்டி – போவதற்குத் தயாராய் இருக்கிற மோட்டார்காருக்கு முன்னால் பனை மரத்தைக் கொண்டுவந்து போட்டதுபோல், இன்று கடவுளும், மதமும், அரசாங்கமும் குறுக்கே கொண்டு வந்து போடப்பட்டு இருக்கின்றன. இவை வெகு நாளைய கடவுளாய் இருந்தாலென்ன? அவதாரப் புருடர்களால் உண்டாக்கப்பட்ட மதமாய் இருந்தாலென்ன? சட்டப்படி அமைக்கப் பட்ட அரசாங்கமாய் இருந்தா லென்ன? ஒழிய வேண்டும் என்று முடிவுக்கு வந்தபின் அவை தானாக ஏற்பட்டால் என்ன? சட்டப்படி ஏற்பட்டால் என்ன? சும்மா ஏற்பட்டால் என்ன? ஒழிய வேண்டுமா? வேண்டாமா? என்பதுதானே முக்கிய விஷயம்.
(‘குடிஅரசு’ – 5.2.1933)
91 ஆண்டுகளுக்குமுன் அய்யா அவர்களால் அளிக்கப்பட்ட இந்தப் பிரகடனம் – இன்றைய தினம் உலக மானுடத்தையே தழுவிக் கொள் ளும் அளவுக்கு அது உயர்ந்து நிற்கிறது! அது தேவைப் பட்டு இருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
தந்தை பெரியார் அமைப்பு ரீதியாகப் பணி யாற்றத் தொடங்கியது காங்கிரசில்தான் என்றாலும், வைதீகம் தலைவிரித்து நின்ற அந்த அமைப்பில் இருந்தேகூட தனக்கென்று இருந்த உணர்வுகளை வெளிப்படுத்தத் தவறியதே கிடையாது.
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் வலியுறுத்தி வந்த வகுப்புரிமையைக் காங்கிரசில் இருந்து கொண்டே ஆதரித்து முழக்கமிட்டு வந்தார்.
1922 ஆம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற 28 ஆவது தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாட்டி லேயே இராமாயணத்தையும், மனுதர்ம சாஸ்திரத் தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்றார். காங் கிரசின் அன்றைய நிலை – மக்கள் சமுதாயத் தின் போக்கு அந்தக் காலகட்டத்தில் எந்தத் திசையில், இருந்திருக்கும் என்பதை எண் ணினால், தந்தை பெரியாரின் அந்தக் கர்ச்சனை எவ்வளவுப் பெரிய புரட்சியானதாக இருந்திருக்க முடியும்?
வைக்கம் போராட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் தலைமை தாங்கி நடத்தி, அதனை வெற்றி முகட்டுக்குக் கொண்டு சென்றதேகூட – தந்தை பெரியார் காங்கிரசில் இருந்த கால கட்டத்தில் தான்! அதுபோலவே சேரன்மாதேவியில் குருகுலம் என்ற பெயரால் வருணாசிரமக் கொடியேற்றப்பட்டபோது, போர்க்கொடி தூக்கி, அதற்கொரு முடிவை ஏற்படுத்தியதும் காங்கிரசில் இருந்தபோதுதான்!
சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவிப்ப தற்கு முன்னரேயே தந்தை பெரியார் அவர்களை அந்தக் கொள்கைகள் ஆட் கொண்டிருந்தன என்பதற்கு இவை எடுத்துக் காட்டுகளாகும்.
காங்கிரசுக்கு அவரை இழுத்தது கூட வெறும் அரசியல் கொள்கையல்ல; தீண்டாமை ஒழிப்புப் போன்ற காந்தியாரின் நிர்மாணத் திட்டங்களே!
காங்கிரசை விட்டு அவர் வெளியேற நேர்ந் ததும் சமூகநீதிக் கொள்கைக்காகத்தான். தமிழ் நாட்டுக் காங்கிரஸ் தலைவராக, செயலாளராக தன் மனைவி நாகம்மையார் உள்பட அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்த அந்தக் கால கட் டத்தில், வைக்கம் வீரர் என்று வரலாறு மகுடம் சூட்டி உச்சி மோந்த அந்தத் தருணத்தில், செல்வாக்கு, புகழ் என்பவை உச்சக்கட்டமாக இருந்த நேரத்தில், தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார் என்றால், கொள்கைக்கு முன் அவை எல்லாம் குப்புறத் தள்ளப்பட வேண்டி யவை என்கிற இலட்சிய நோக்குத்தான்! மனித சுபாவத்தில் சாதாரணமாக இதனை எவரிடமும் எதிர்பார்க் கவே முடியாது! அதனால்தான் உலகி லேயே யாருக்கும் கிடைக்காத “பெரியார்” என்ற பட்டம் அவர்களுக்குக் கிடைத்தது என்றே நினைக்கத் தோன்றுகிறது!
‘குடிஅரசு’ என்ற இதழை – போர்வாளை தந்தை பெரியார் துவக்கியதேகூட காங்கிரசில் இருந்தபோதுதான் (2.5.1925) அது செய்த மகத்தான புரட்சியை மண்ணும், மலையும் உள்ளவரை மக்கள் சமுத்திரம் மறந்துவிடாது.
‘குடிஅரசு’ இதழ் மக்களிடையே ஏற்படுத்திய புரட்சி மகத்தானது. தந்தை பெரியார் கையில் சுழன்ற போராயுதமாக அது மின்னியது!
ஜாதி, மதம், கடவுள், சாத்திரம், புராணம், இதிகாசம், மூடநம்பிக்கைகள், பெண்ணடிமை இவற்றைச் சக்கைச் சக்கையாகக் கழித்தது.
சிந்தனையாளர் மா. சிங்காரவேலர், சுவாமி கைவல்யம், சந்திரசேகர பாவலர் என்ற படை வரிசை இருந்தது. அவர்களின் எழுத்தாணிகள் எதிரிகளின் குடலைக் கிழித்து மாலையாகப் போட்டன!
தந்தை பெரியாரின் அந்தக் கைவாள் மலேசிய மண்ணிலும் கால் பதித்தது. அது சென்ற இடங்களில் எல்லாம் விவாதப் புயலைத் தட்டி எழுப்பியது! தேநீர்க் கடைகளிலும், முடி திருத்தும் நிலையங் களிலும், திருமண வீடுகளிலும், கருமாதித் துறைகளிலும் கூட விவாதத் தலைப்பின் மய்யப் புள்ளியாக ‘குடிஅரசு’ தான் நிமிர்ந்திருந்தது.
சமுதாயத்தின் அவலங்களையெல்லாம் சற்றும் மறைக்காமல் பிறந்த மேனியாக வெளிப்படுத்தியது!
எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகளை எடுத்துக் கூற முடியும். 1936 மே மாதம் 25-ஆம் நாளிட்ட (பக்கம் 10) ‘குடிஅரசு’ ஒரு தக வலைக் கூறுகிறது.
சென்னை ஜார்ஜ் டவுனிலும், மவுண்ட் ரோட்டிலும் பஞ்சமர்களும், நாய்களும், பெரு வியாதியஸ்தர்களும் பிரவேசிக்கக் கூடாது உணவு விடுதிகளில். சில இடங்களில் மகமதியர்களும் பிரவேசிக்கக் கூடாது; மேட்டுப் பாளையம் ரயில்வே ஓட்டலில் பிராமணர்க்கு என்றும், சூத்திரர்க்கு என்றும் போர்டு போட்டு இருந்தது. சென்னை நகரம் முழுவதும் “வீடு காலி – பிராமணர்க்கு மாத்திரம்” என்று இருந்தது என்கிற தகவலை ‘குடிஅரசு’ வெளியிட்டி ருந்தது.
* 1935-இல் கும்பகோணம் நகராட்சியில் அக்கிர காரத்துக்குக் கக்கூஸ் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்கக் கூடாது -அதற்குப் பதிலாக சூத்திரர்களை ஏற்பாடு செய்யவேண்டும் என்று தீர்மானம் போட்ட தையும் ‘குடிஅரசு’ தெரிவிக்கிறது. (6.10.1935)
* உத்தமபாளையம் வட்டம் சீலையம்பட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களை ஜாதியைக் காரணம் காட்டி கீழே உட்கார வைத்தார்கள் (‘குடிஅரசு’ 27.1.1929)
திருப்புவனம் ஆவியூர் பெரிய கருப்பக்குடும்பன் என்னும் தாழ்த்தப்பட்ட தோழர் – அவர் தொழில் குப்பை வாருதல்; குப்பை வண்டியின். மேலே உட்கார்ந்து வந்தார் என்பதற்காக உயர் ஜாதிக்காரர்கள் அத்தோழரைக் கீழே தள்ளி அடித்தார்கள். தோழரின் பயிர் பச்சைகளை ஆடு, மாடுகளை விட்டு மேய்த்தார்கள். வீட்டிற் கும் தீ வைத்தார்கள் (‘குடிஅரசு’ 24.11.1929)
பல்லாவரம் கொளத்துமேட்டு வீதிவாசியான ஆதி திராவிடக் கிறித்தவர் அந்தோணிராஜ் அக்கிரகாரத்தில் குடியிருந்த பார்ப்பன ஆசிரி யரிடம் பாடம் படித்துக் கொண்டிருந்தபோது, அதே வீதி ரெங்கசாமி அய்யர், பார்ப்பனத் தெருவுக்குள் எப்படி நுழையலாம் என்று கூறி செருப்பாலேயே அடித்திருக்கிறார். (‘குடிஅரசு’ 3.5.1936)
இதுபோன்ற எத்தனை எத்தனையோ சமூகக் கொடுமைகளை ‘குடிஅரசு’ என்னும் தன்மான இயக்கப் போர்வாள் தட்டிக் கேட்டுக் குரலும் கொடுத்திருக்கிறது.
தன்மான இயக்கத்தின் இத்தகைய பணிகளால், ஆட்சி பீடத்தில் இருந்த நீதிக் கட்சி பல சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்குச் சட்ட வடிவம் அளித்து வந்தது. மக்கள் மன்றத்தில் தந்தை பெரியாரின் தன்மான இயக்கமும் ஆட்சி மன்றத்தில் பார்ப்பனரல்லா தார் இயக்கமான தென்னிந்திய நலவுரிமைச் சங்கமும் உண்மையிலேயே – இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகச் செயல்பட்டன.
தாழ்த்தப்பட்டோர் பொது வீதிகளில் நடத் தல், பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுத்தல், பள்ளிகளில் ஆதி திராவிட மாணவர்களுக்குக் கட்டாய இடம், ஆதி திராவிடர் தோழர்களைப் பயணம் செய்ய அனுமதிக்காத பேருந்து களுக்கு உரிமம் ரத்து, வகுப்புரிமைச் சட்டம், தேவதாசி ஒழிப்புச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, இந்து அறநிலையத்துறை பாதுகாப்புச் சட்டம் இன்னோரன்ன முற் போக்குத் திட்டங்களும், சட்டங்களும் தமிழ் மண்ணிலே’ அரங்கேறி – புது மறுமலர்ச்சிக்கு வித்திட்டன.
தந்தை பெரியாரின் பிரச்சாரமும், ‘குடிஅரசின்’ எழுத்துகளும் சாதாரண மக்கள் மத்தியிலேகூட புதுத் தெம்பையும், புது நம்பிக் கையையும் ஊட்டின. கைகள் இருப்பது சதா வேலை செய்வதற்கும், முதுகு இருப்பது ஆண்களின் அடியைக் குனிந்து வாங்கிக் கொள்வதற்குமே பெண்களுக்கு உள்ளது என்பதை ஒரு தர்மமாகவே பேசப்பட்ட காலம் அது. ஆகா, பத்தினியென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று அதனைப் பெண்களே போற்றவும் செய்வார்கள்.
இந்த அடக்கு முறைகளை ஏற்பதைத் தவிர வேறுவழியே இல்லை என்றிருந்த கால கட்டத்தில் சுயமரியாதை இயக்கமும், தந்தை பெரியாரும், ‘குடிஅரசு’ம் அவர்களுக்குச் சரணாலயங்களாக இருந்திருக்கின்றன.
“மணமகன் தேவை” என்ற தலைப்பில் ‘குடிஅரசு’ இதழில் (12.3.1929 பக்கம் 1) வெளிவந்த ஒரு விளம்பரம் கண்களைக் குளமாக்கும். இதோ அந்த விளம்பரம்!
மணமகன் தேவை
நான் ஒரு ஆதிதிராவிடப் பெண் – வயது 22. என் பெயர் சின்னராமாயி. என் ஊர் திண்டுக்கல் தாலுகாவில் வத்திலைத் தோப்பம்பட்டி கிராமம் கோவில்பட்டி எனக்கு சுமார் 3 வருஷத்திற்கு முன் ‘சிலுவத்தூரில் என் தாய் மாமனுக்கு கல்யாணம் ஆயிற்று. அவருக்கு முதலில் இரண்டு பெண் ஜாதிகள் உண்டு. அவர் 50 வயதானவர். அவரை மணக்க நான் எவ்வளவோ மறுத்தும் பயன்படாமல் போய்விட்டதால் அவருடன் வாழ இஷ்டமில்லாமல் தாய்வீட்டில் வாழ்ந்து வந்தேன். இப்போது என்னை எப்படியாவது எங்கிருந்து கொண்டாவது வேறு யாருக் காவது ஒரு குழந்தையைப் பெற்றுத் தங்களுக்குக் கொடுத்துவிட்டு பிறகு எப்படியோ போகும்படி தாய் வீட்டாரும், புருஷன் வீட்டாரும் சொல்லுகிறார்கள். இதன் மத்தியில் என்னை விபசார முறையில் பெண்டாள பல பேர் பலவித துன்பத்துக்குள்ளாக்கினார்கள், சிலவற்றில் என்வீட்டாரும் உடந்தையாயும் இருந்தார்கள். இவை ஒன்றுக்கும் இதுவரை இசையாத நான் இப்போது சுயமரியாதை கொள்கைப்படி வேறு யாரையாவது கல் யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று கருதி யாருக்கும் தெரியாமல் ஈரோட்டிற்கு வந்து தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் சத்திரத்தில் வசிக்கிறேன். எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. வீட்டுவேலை, தோட்ட வேலை செய்ய சக்தியும், அனுபவமும் உண்டு. நல்ல குணமும் சுயமரியாதை கொள்கையும் உடைய வாலிபர் ஒருவர் யாராயிருந்தாலும் அவரை வாழ்க்கைத் துணையாகக் கொண்டு வாழ்க்கை நடத்தத் தயாராய் இருக்கிறேன். ஆகையால் என்னை மணக்க இஷ்டமுள்ளவர்கள் உடனே கீழ்க்கண்ட விலாசத்துக்கு தெரியப் படுத்த கோருகிறேன்.
தற்குறி
சின்னராமாயம்மாள்
விலாசம்:
சின்னராமாயி,
Clo ‘குடிஅரசு’ ஈரோடு
(‘குடிஅரசு’ 12.3.1929)
இது அந்தக் கால நிலவரத்தைக் காட்டும் நிலைக் கண்ணாடி மட்டுமல்ல; தந்தை’ பெரியாரின் ‘குடிஅரசு’ குருகுலம் எதற்கெல்லாம் அரணாகச் செயல்பட்டது என்பதை விளக்கும் ஆவணமும் ஆகும்.
இது ஒரு தனி நபர் பிரச்சினை என்றால், ஒரு கிராம மக்களே சுயமரியாதை இயக்கத்தை நோக்கி அபயம் கேட்கும் ஒரு தகவலை ‘குடிஅரசு’ தெரிவிக்கிறது.
இதோ அந்தக் குரல்!
எங்களின் கதி இதே கதிதானா?
சுயமரியாதை வீரர்காள், எங்களைக் காப்பாற்ற வந்த பெரியீர்காள்!
ராமநாதபுரம் ஜில்லா, திருவாடானைப் போஸ்டு, அஞ்சுகோட்டை கிராமவாசிகளாகிய தாழ்த்தப்பட்ட நாங்கள் படும்பாட்டை கவனித்தும் இன்னும் உங்களுக்கு மனம் வரவில்லையோ! எங்கள் தலைமைக்காரர்களாகிய பத்திரிகை படிக்கத் தெரியாத தலைமைக் காரர்கள் அவர்கள் நினைத்ததே சட் டமென வைத்துக் கொண்டு எங்களைப் படுத்தும் கொடுமைகளை சொல்லவும் வேண்டுமோ! ஏதோ எங்கள் முன்னோர்கள் சம்பாதித்து வைத்த பொருள்களைக்கூட நாங்கள் அனுபவிக்க முடியாமல் மலாய் நாடு சென்று ஒழிந்து கிடக்கின்றோமே! தாய் நாடு திரும்ப பயமாயிருக்கிறதே, அப்படி ஒருவர் இருவர் (தலை மயிர் கிராப் வைத்துள்ளவர், அல்லது கொஞ்சம் பணம் உள்ளவர்) திரும்பினாலும் அவர் அங்கு பனை மரத்தில் கட்டப்பட்டு வாங்கும் சவுக்கடி எங்களை மலாய் நாட்டை தாய் நாடாய் வைத்துக் கொள்ள செய்து விடுகிறதே! இதைக் கவனிப் பதற்கொருவருமில்லையே. இவைகள் இத்துடனிருக்க காருண்யம் நிறைந்த கவர்ன்மெண்டாரால் பொட்டக் கோட்டை என்னும் ஊரில் ஒரு இலவசப் பாடசாலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் நடக்கும் கொடு மைகளையாவது அக்கிராம கல்வி இலாகா ஆபீசர் கவனிப்பதாக தெரியவில்லை. ஆகையால், சுயமரி யாதை வீரர்காள்! எங்களின் கதி இதே கதி தானா அல்லது நாங்கள் எங்கள் தாய் நாட்டை அடைந்து எங்களுடைய ஆஸ்திகளை அனுபவிக்கும்படியாய், (எங்களைக் காப்பாற்ற வந்தவர்களா கிய) நீங்கள் எங்களுக்கு விமோசனம் அளிப்பீர்களா?
இங்ஙனம்,
“பயந்தோடி”
(‘குடிஅரசு’ 26.4.1931)
‘குடிஅரசு’க்கு வாழ்த்து!
போர் முகத்தில் அணிவகுக்க இன்றழைத்தாய்! பொதுவுடைமை முரசறையக் கோலெடுத்தாய்! ஓர் முகத்தில் சந்தோசம் ஒன்றில் வாட்டம் உண்டாக்கும் அரசியலை விழி நெறித்தே ஊர் முகத்தில் நிற்காதே என முழக்க ஒன்பதாம் ஆண்டிலேயே உயர்ந்தாய்!
இந்நாள் பார் முகத்தைச் சமப்படுத்த ஓகோகோ கோ பறந்தேறுகின்றாய் நீ வாழி நன்றே!
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
‘குடிஅரசு’ இதழின் 9-ஆம் ஆண்டையொட்டி
வந்த பாடல்
(ஆதாரம்: குடிஅரசு’ 30.4.1933)
நான் எதனால் வாலிபன்?
காலஞ்சென்ற நடராசன், பன்னீர் செல்வம், மணி ஆகிய மூன்று தோழர்களும் இந்தத் தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்தவர்கள். அம் மூவரும் இயக்கத்திற்கும், எனக்கும் நிரம்ப வேண்டியவர்கள். மணி உண்மையான நண்ப ராய், துணைவராய் இருந்தவர். அவரைப்போல என் சொந்த நலனைப்பற்றி கவலை எடுத்துக் கொண்டவர்களை இன்றும் ஒருவரையுங் காண முடியவில்லை. இயக்கத்தின் உறுதியான தொண்டராய், அவர்தம் உயிர்போகும் வரை யிலும் என்னைப் பற்றித்தான் பேசி இருக்கிறார். என்னுடன் பல சமயங்களில் அவர் சுற்றுப் பிரயாணம் செய்திருக்கிறார். அக்காலங்களி லெல்லாம் அவர் தமக்கு ஒரு வீடென்றும், குடும்பமென்றும், ஊரென்றும் இருப்பதாக நினைத்ததுகூட இல்லை. அவற்றைப் பற்றி பேச நேர்ந்தாலும், எவ்வளவு சுருக்கமாக முடித்துக் கொள்ள வேண்டுமோ அவ்வளவு சுருக்கமாக முடித்துக்கொள்ளுவார்.
மணி இறக்கும்போது நாற்பது ஆண்டுக ளுக்கு மேற்பட்ட வயதினராயினும் வாலிபரா கவே இருந்தாரென்பது என் கருத்து. நான் ஒருவரை வாலிபரென்று சொல்வது அன்னாரு டைய வயதைப் பொறுத்து அல்ல. என்னைப் பொறுத்தமட்டில் எனக்கு இயக்கப் பொறுப்பைத் தவிர வேறு பொறுப்பு இல்லை. எனவேதான் என்னை நான் ஒரு வாலிபன் என்று கருதிக் கொண்டிருக்கின்றேன். இறுதிவரை வாலிபனா கவே இருந்து தொண்டாற்ற எனக்கு இயற்கை வசதி அளித்திருக்கிறது.
ஆனால், மணி, பொறுப்பு இல்லாத என்னைப்போன்ற தனி ஆள் என்று நினைத்து விடாதீர்கள். அவருக்கு மனைவி, மக்கள் உண்டு. பல தொல்லைகள் உண்டு. என்றாலும் அவற்றைப்பற்றிக் கவலை இல்லாமல் வாலிப ராகவே அவர் விளங்கி வந்ததானது, அவரின்றி வோறோர் உண்மைத் தொண்டரால்’ அவர் மறைவுக்குப் பின் இன்றுவரை இருக்கமுடியாத தாக ஆகிவிட்டது.
தந்தை பெரியார்
(“குடிஅரசு” – 18.3.1844)