சென்னை, செப். 14 – காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுப்பூர்வ மாக செயல்படுகிறார். தமிழ் நாட்டிற்கு வரவேண்டிய தண் ணீர் வந்தே தீரும் என கே.எஸ்.அழகிரி கூறினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து மாவட்டத் தலைவர்கள் மற்றும் அணித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள் உ.பலராமன், பொன்.கிருஷ்ணமூர்த்தி, மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், பொதுச் செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, தளபதி எஸ்.பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, மாநிலச் செயலாளர் ஜி.தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு முன்பு கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவின்படி
காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட கருநாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. மேக தாதுவில் அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கைக்கு ஒன்றிய நீர்வளத்துறை ஒப்புதல் அளித்தது. அப்போது தமிழ்நாடு காங்கிரசும், தி.மு.க.வும் எதிர்த்தன. ஆனால், அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி எதிர்க்காமல் இருந்ததுதான் குற்றம்.
தற்போது காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் பொறுமையாகவும், அறிவுப் பூர்வமாகவும் நடந்து கொள்கிறார். நமக்கு தண்ணீரை எப்படி கொண்டு வருவது என்பதுதான் அவரது நோக்கம்.
கருநாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றாலும், தமிழ்நாடு காங்கிரஸ் தமிழ்நாடு அரசின் பின்னால் நிற்கிறது. ஆனால் தமிழ்நாடு பா.ஜ.க., தமிழ்நாடு அரசின் பின்னால் நிற்கவில்லை. காவிரி ஒழுங்காற்றுக் குழு அறிவித்துள்ள 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு வந்தே தீரும். இவ்வாறு அவர் கூறினார்.