சென்னை, ஏப்.24 நுங்கம்பாக்கம் ஹாடர்ஸ் சாலையில் உள்ள இந்திய உணவு கழகத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விஜய் கண்ணுஜியா(30) என்பவர் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற காவலர் தேர்வில் விடைகுறிப்பு (answer key) போலியாக தயார் செய்து விஜய் கண்ணுஜியா முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சூளைமேட்டில் தங்கி இருந்த விஜய் கண்ணுஜியாவை உ.பி. காவல்துறையினர் கைது செய்து எழும்பூர் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர். இதன் பின் அவரை உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு அழைத்து சென்றனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற காவலர் தேர்வில் போலியான விடைகுறிப்பு தயாரித்து விற்பனை செய்த இந்திய உணவு கழக அதிகாரி சென்னையில் வைத்து கைது செய்யப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.