கொல்கத்தா,ஏப்.24- மேற்கு வங்காள மாநில முதலமைச் சர் மம்தா, தன் மீதும், தன் மருமகன் அபிஷேக்மீதும் பாரதீய ஜனதா குறி வைத் திருப்பதாக அண்மையில் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, அபி ஷேக்கின் வீட்டையும், அலுவலகத்தையும் உளவு பார்த்ததாக, மும்பையைச் சேர்ந்த ராஜாராம் ரிஜ் என்பவரை கொல்கத்தா காவல் துறையினர் 22-4-2024 அன்று கைது செய்தனர். அவர், மும்பை தாக்குதல் குற்றவாளி டேவிட் ஹெட்லியை ஏற்கெனவே சந்தித்தவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தை சுட்டிக்காட்டி, மம்தா பேசினார். ஹசன் நகரில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “பாரதீய ஜனதா தனக்கு எதிராக பேசுபவர்களை கொலை செய்யவோ அல்லது சிறையில் அடைக்கவோ விரும்பு கிறது. அவர்களை இந்த உலகத்தை விட்டே அப்புறப்படுத்த நினைக்கிறது. தேர்தலில் வெற்றி பெறப்போவதாக உறுதியாக நம்பினால், பிறகு ஏன் எதிர்க்கட்சித் தலைவர் களை அச்சுறுத்துகிறீர்கள்?.
ஒரு பாரதீய ஜனதா தலைவர், குண்டு வெடிக்கும் என்கிறார். உங்களுக்கு மம்தா மீது கோபம் இருந்தால், என்னைக் கொல்லுங்கள். ஆனால், அபிஷேக்கைக் கொல்ல திட்டமிடுகிறீர்கள். அந்தத் திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விட்டோம்.
அவர் அபிஷேக்கின் வீட்டை உளவு பார்த்துள்ளார். சமூக வலைத்தளத்தில் தொடர்பு கொண்டு, நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளார். அபிஷேக் நேரம் கொடுத்திருந்தால், அவரை கொலை செய்திருக்கக்கூடும்” என்று அவர் பேசினார்.
3 நாள்களுக்குப் பிறகு மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் ராகுல் காந்தி
புதுடில்லி, ஏப்.24 காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 3 நாள்களுக்குப் பின்னர் இன்று (24-4-2024) முதல் மீண்டும் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. இறுதி மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக் கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 19-4-2024 அன்று நடைபெற்றது.
இதையடுத்து, இரண்டாம் கட்டத் தேர்தல் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால், அப்பகுதிகளில் உள்ள அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் 3 நாள்களாக ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. இது தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ தளத்தில் நேற்று (23-4-2024) பதிவிட்டிருந்தார். அந்த பதிவில்,
“மகாராட்டிராவில் தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்க உள்ளார். அங்குள்ள அமராவதி தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பிற்பகல் 12.30 மணிக்கும், சோலாபூர் தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பிற்பகல் 3.30 மணிக்கும் அவர் பேச உள்ளார்.”
இவ்வாறு அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட் டிருந்தார்.