கடந்த 12ஆம் தேதி சென்னைப் பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 11ஆம் தீர்மானம் கவனிக்கத்தக்கது.
“ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க. தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு – இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சம தர்ம – மதச்சார்பற்ற தன்மைகளை முற்றிலும் புறக் கணித்து வருகிறது.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு என்று கூறி, இந்தி யாவில் உள்ள மாநிலங்களின் உரிமைகளையும், தனித் தன்மைகளையும், மாநில இன மக்களின் பண்பாடு களையும் முற்றிலும் ஒழித்து, ஹிந்து ராஜ்ஜியம் அமைப்போம் என்று வெளிப்படையாகவே கூறி, மீண்டும் பார்ப்பன வல்லாண்மை ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் போக்கில் ஒன்றிய அரசு உறுதியாகவே செயல் பட்டு வருகின்றது. இந்நாட்டின் பெரும்பான்மையின மக்களான பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறு பான்மையினர்களின் உரிமைகளையும், வளர்ச்சியையும் முற்றிலும் ஒழிக்கும் மாபெரும் சதித் திட்டத்துடன் 2024 ஆம் ஆண்டு மக் களவைத் தேர்தலைச் சந்திக்கிறது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இந்நாட்டின் பெரும்பான்மை மக்களான பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்கள் ஓரணியில் உறுதியாக நின்று, ‘‘இண்டியா’’ என்னும் எதிர்க்ணீகட்சிகளின் கூட்டணியைப் பெருமளவில் வெற்றி பெறச் செய்து, பாசிச பா.ஜ.க. (ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் வடிவம்) கூட்டணிக்கு மிகப்பெரிய தோல் வியைக் கொடுக்க முன்வரவேண்டும் என்று வாக்காளப் பெருமக்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
2024 மக்களவைத் தேர்தலில் மீண்டும் பி.ஜே.பி. தலைமையிலான ஆட்சி ஒன்றியத்தில் அமையுமானால், அதைவிட நாட்டு மக்களுக்குத் தற்கொலை வேறு ஒன்றும் இருக்க முடியாது என்றும் இச்செயற்குழு எச்சரிக்கிறது. இந்த நிலையில், திராவிடர் கழகம் – நடக்கவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் பெரும் பணியில் ஈடுபட்டு, மதவாத பி.ஜே.பி. ஆதிக்க சக்தியை வீழ்த்திட அல்லும் பகலும் அயராது திட்டமிட்ட வகையில் பணியாற்றிட வேண்டியது இந்தக் காலகட்டத்தில் திராவிடர் கழகத்தின் மகத்தான கடமை என்பதையும் – இச்செயற்குழு துல்லிய மான தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து செயல்படுவது என்று தீர்மானிக்கிறது.”
இந்தக் கால கட்டத்தில் இத்தீர்மானம் மிகவும் இன்றியமையாதது என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எங்குமே சொல்லப்படாதது – இந்தியா ஒரே நாடு என்பதாகும். இந்தியா என்பது ‘யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்” என்று தான் திட்டவட்டமாக அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது. மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா என்று அரசமைப்புச் சட்டம் தெளிவாக வரையறுத்துக் கூறியிருக்கிறது. இந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது சத்தியப் பிரமாணம் செய்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர்கள், ஒரே நாடு என்று முழங்குவது – பிரச்சாரம் செய்வது அரசமைப்புச் சட்டத்திற்கே எதிரானது அல்லவா!
பொது நல வழக்கை யாரேனும் நீதிமன்றத்தில் தொடர்ந்தால், பிஜேபி ஆட்டம் கண்டு விடும். மாநிலங்களே கூடாது என்பதுதான் ஆர்.எஸ்.எஸின் கொள்கை.
1954ஆம் ஆண்டு மாநிலங்கள் புனரமைப்பு ஆணையத் தின் பரிந்துரைகளை எதிர்த்தவர்கள் இவர்கள். ஆர்.எஸ்.எஸின் குருநாதர் எம்.எஸ். கோல்வால்கர் என்ன கூறுகிறார்?
“மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டால் நாடே சிதறுண்டுப் போகும். ஒரே நாடாகத் தான் இருக்க வேண்டும்” என்று சொன்ன வர்கள்தானே இவர்கள். இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதமே என்று கூறுகிறார் கோல்வால்கர் (நூல்: ஞான கங்கை)
ஒரே நாடு, ஒரே மொழி என்று ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களும், பிஜேபியும் இன்று முன் வைப்பது என்பது புதிய கோரிக்கை மனு அல்ல. இப்பொழுது ஆட்சி அதிகாரத்தில் அவர்கள் வந்து விட்டதால் அவர்களின் தாய் நிறுவனமான ஆர்.எஸ்.எஸின் கொள்கையை சட்டமாக்கிட ‘இதுதான் சரியான சந்தர்ப்பம்!’ என்று வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.
மத்திய அரசு என்று தான் கூற வேண்டும்; ஒன்றிய அரசு என்று கூறக் கூடாது – அது பிரிவினைவாதம் என்று பசப்புவது எல்லாம்
70 ஆண்டுகளுக்கு முன்பே ஆர்.எஸ்.எஸ். எடுத்த முடிவின் அடிப்படையில் தான் என்பது நினைவில் இருக்கட்டும்.
புதிய கல்விக் கொள்கை என்று திட்டத்தைத் தீட்டுவதும், அதில் ஹிந்தி சமஸ்கிருதத்தைத் திணிப்பதும் ஆர்.எஸ்.எஸின் மூலக் கொள்கையும் – திட்டமும்தான் என்பதை மறந்து விடக் கூடாது.
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தீட்டிய தீர்மானம் எத்தகைய ஆழமானது – ஆரிய பார்ப்பனீய வல்லாண்மையை நிலை நிறுத்தும் போக்கில் ஒன்றிய அரசு உறுதியாக இருக்கிறது என்ற தீர்மான வரிகள் தீர்க்கமானவை – தொலை நோக்குடையவை என்பதைப் புரிந்து கொண்டால் 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிஜேபி தலைமையிலான ஆட்சி ஏற்படுமேயானால், கண்டிப்பாக மாநிலங்கள், மாநில மொழிகள், மாநிலத்தில் வாழும் மக்களின் இன ரீதியான பண்பாடுகள் எல்லாம் காயடிக்கப்பட்டு, சனாதன பார்ப்பனீய சாம்ராஜ்ஜியம் கோலோச்சும் என்பதை மனதில் வையுங்கள்.
ஏதோ அய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் பொதுவான தேர்தல் தானே என்று மேம்போக்காக அலட்சியமாக எண்ணாமல் – வாழ்வா சாவா என்ற கண்ணோட்டத்தில் பிஜேபியையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும், 2024 மக்களவைத் தேர்தலில் அடையாளம் தெரியாமல் ஆணிவேரோடு வீழ்த்திட வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் நோக்கம் இல்லாத சமூக மாற்றத்திற்கான மக்கள் இயக்கமான திராவிடர் கழகம் முன் வைத்துள்ளது.
திராவிடர் கழகத் தோழர்கள் இலட்சியக் கண்ணோட்டத்தில் இப்பொழுது முதற்கொண்டே திண்ணைப் பிரச்சாரத்தையும், வீதிப் பிரச்சாரத்தையும் – உற்றார் உறவினர்களைச் சந்திக்கும் இடங்களில் எல்லாம், அமைதியாக கோபதாபங்களுக்கு இடம் அளிக்காமல், அவர்கள் உண்மையை உணரும் வண்ணம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
நடக்க இருக்கும் தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல; இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான தேர்தல்.
சனாதனத்துக்கும் – சமத்துவத்திற்கும் இடையிலான தேர்தல் என்பதை மனதிற்கொண்டு இப்பொழுது முதற் கொண்டே செயல்படுவீர் தோழர்களே!