இன்று உலகப் புத்தக நாள்!
அனைவரும் குறைந்த அளவு நேரத்திலாவது ஒரு புத்தக வாசிப்பைப் படித்துச் சுவைக்க வேண்டிய – சுவைக்கான சுகந்தம் பரப்பும் – மனச் சுமை குறைக்கும் நாள் இது!
இதுவரை அச்சிட்டுப் பரப்பி, அகிலம் பாராட்டும் புத்தகங்களை குறித்துத்தான் எழுதியிருக்கிறோம்; பேசியிருக்கிறோம்; ஆனால் இன்று ஒரு புதுமை!
இனி வாசகப் பெரு மக்களாகிய நீங்கள் படிக்கப் போகும் ஓர் எளியவரின் ஏற்றம் எப்படி, பலருக்கும் ஏணியாக, துன்ப ஆற்றைக் கடக்கும் தோணியாக, பிரிந்து கிடப்பவர்களை ஒன்றாக்கிச் சேர்க்கும் கோணியாக அமைந் துள்ளது என்பதை, படிக்காத மேதையாக – இந்நூல் மூலம் பல்வேறு தடைகளைக் கடந்து பரிசுக் கோப்பை பெறும் போட்டியாளர் போல – அவரது கிராமிய மொழியாகவே, இலக்கணம் எதுவும் பற்றிக் கவலைப்படாமல், எக்கணமும் வாழ்ந்து சிறக்க, வறுமையை அழிக்க, அறியாமையை அகற்ற பகுத்தறிவு எப்படி ஒரு போர்க் கருவியாகி களம் கண்டதில் அவரது விழிகளின் மூலம் குளம் கண்ட கண்ணீர் மகிழ்ச்சி வெள்ளமாக பிற்கால வாழ்வில் மலர்ந்து, காய்த்து, கனிந்தது என்பதை, ஒப்பனை இல்லா ஒய்யாரத் தமிழில் அவர் கூறுவதையே இந்த புத்தகம் பதிவு ஏடாகி பளிச்சிடுகிறது!
மதுரை மாநகர திராவிடர் கழகத் தலைவர் – ‘முரட்டு மீசை’ முனியசாமி தோற்றத்தில்! பண்பில், பேச்சில், பழகுவதில் மிகுந்த கனிவும், மென்மையும், மரியாதையும் உடையவர்.
அவர் சென்ற வாரங்களில் மதுரையில் நான் தங்கியிருந்தபோது என்னிடத்தில், ஆவணம் போன்ற ஒன்றினைத் தந்து, “அய்யா எனது வாழ்க்கை அனுபவத்தினை எழுதியுள்ளேன். இந்தப் புத்தகத்திற்கு ஓர் அணிந்துரை எழுதித் தாருங்கள்” என்று கேட்டுக் கொண்டார்!
கால நெருக்கடியில் எப்போதும் சிக்கிக் கொண்டு உழலும் நான், இடைவெளியில் இளைப்பாறிட இப்படிப்பட்ட நூல் படிப்புகள், எழுத்துகளில் என்னை நனைய வைத்து, மனதை ஈரப்படுத்திக் கொள்வேன்!
அவரது புத்தகத் தலைப்பே எனக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்தது!
“விறகு வண்டி முதல் விமானம் வரை”
சே. முனியசாமி
வெளியீடு: கீழடி பதிப்பகம், சென்னை – 4
“நாடாறு மாசம், காடாறு மாசம்” என்று கூறுவர் சிலர் பற்றி –
இவரது 26 தலைப்பு – பகுதிகளில்
முதல் பகுதி (அத்தியாயம்) தலைப்பே
“இங்கே ஆறு மாதம் அங்கே ஆறுமாதம்” என்று! பழைய இராமநாதபுரம் மாவட்டத்தின் குக்கிராமம் – குப்பைக் காட்டில் ஓர் ஊரில் ஏதுமிலா எளிய குடும்பத்தில் பிறந்து – உழைப்பை மட்டுமே நம்பிப் பிறந்த – அந்த வானமே கூரையாய் பஞ்சத்தோடு பிறந்து, பஞ்சத்திலேயே வறுத்தெடுக் கப்பட்டாலும் நெஞ்சத்தை நெகிழ விடாமல், நெருடல்களை விரட்டியடித்து –
‘உன் இரு தோளும் வானம் வசப்படும்’ என்ற புரட்சிக் கவிஞரின் பொன் வரிகளை மறக்காமல் வாழ்க்கையின் பல்வேறு தீராத் துன்பங்கள், மாறா இடுக்கண்களையும் சந்தித்து, துவளாது, எதிர்கொண்ட இமயம் போன்ற இடர்களை எட்டி உதைத்து, காலால் இடறி தோளால் நிமிர்ந்து, மீசையை முறுக்கி சுயமரியாதை வாழ்வு எப்படி அவரை – விறகு வண்டியை இழுத்து வியாபாரம் செய்தவர் – பல நாடுகளுக்கும் விமானம் மூலம் பயணம் செய்து, படிப்பறிவைவிட பட்டறிவே பயன் தரும் வாழ்வின் வளம் குன்றா பாடநூல் என்பதை நமக்கெல்லாம் தன் வாழ்வு ‘கிராமப் பானைச் சமையல்’ மூலம் பகிர்ந்தளிக்கிறார்!
பாதிதான் படித்து முடித்தேன்.
மீதியை முடிக்குமுன்பே இப்படி உலகப் புத்தக நாளில் – மனதால் அவர் எழுதி, நம் போன்ற ‘விநியோக உரிமையாளர்கள்’, வந்ததை முதலில் பரிமாறிடுவோம் என்ற அடிப்படையில்
விருந்து நீளட்டும் வேகுவது கொதிக்கட்டும்.
சூடான உணவு எப்போதும் சுவையான உணவு என்பதற்கொப்ப இவரது, வழக்கமான வகுப்பறைக் கல்வி என்ற சிறையில் சிக்காத இயற்கைக் காட்டில் இனிதே பழுத்த பழங்களின் சுவையை அருந்திப் பார்ப்போம்!
அடுத்த அவசரப் பணி வந்து அறைக்கதவைத் தட்டுகிறது!
திறக்கிறேன்; எனவே உங்களிடம் பிறகே அவரது அனுபவப் பாடப்புத்தகத்தின் பல பகுதிகளை விரித்துக் காட்ட முயல்கிறேன்.
உங்கள் ஆவலைச் சோதிப்பதற்காக ‘பொறுத் தருள’ ஒரு வேண்டுகோள்!
மீண்டும் மூடிய கதவு திறக்கப்படும். வாடிய வர்கள் மனம் மகிழ்ச்சியடையும் என்பது உறுதி. இல்லையா?
(தொடரவே செய்யும்)