தன்னலமா? பிறர் நலமா? முடிவு செய்திடுக!
ஒரு இயக்கத்தையோ, ஒரு காரியத்தையோ செய்வதினால் ஒருவனுக்கு ஏற்படும் பெருமை அளவே, சிறுமையும் ஏற்படலாம். பெருமையைக் கண்டு சந்தோஷம் அடைபவன், சிறுமையைக் கண்டு துக்கப்பட வேண்டியதுதான். எப்படி இருந்த போதிலும், இவ்விரண்டையும் உத்தேசித்து, உறுதியான கொள்கைகளிலிருந்து பிறழாமல் இருப்பானேயானால், அவன் ஒரு வகையில் காரியசித்தி அடைந்தவனேயாவான். ஒவ்வொரு மனிதனும் தான் செய்யும் காரியம் தனது சொந்த இலாப நஷ்டத்திற்கா அல்லது பிறர் நலத்துக்கா என்பதை யோசித்து, லாப நஷ்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும்.
(தந்தை பெரியார் தரங்கம்பாடியில் 25.3.1931 அன்று ஆற்றிய உரையில்)
மனித சுபாவம் இயற்கையிலேயே இன்பம், புகழ், பாராட்டு, வாழ்த்து, பெருமை – இவை களையே பெரிதும் விரும்புவதும், அவைகள் தானாகவோ அல்லது திட்டமிட்ட ஏற்பாடுகள் மூலமோ அன்றாட வாழ்வில் கிடைக்கும்போது அவற்றை மேலும் மேலும் கிடைக்காதா என்று அவாவுறுதலும் தான் நாம் மானுட உலகில் காணும் தொடர் காட்சிகள்!
அத்தகைய மனப்போக்கு சற்று மாறி, துன்பம் வருவதையும், இகழ்வோரை எதிர் கொள்ளலும், வசவாளர்களின் வசைகள் காது அதிர கேட்பதும், ‘ஒழிக ஒழிக’ முழக்கங்களை சிலர் முற்றாக இடுகின்ற நிலையும் ஏற்படும்போது, மகிழ்ந்த மனம், நெகிழ்ந்த உள்ளம் ஏனோ அதனைச் சமச்சீர் நிலையில் எடுத்துக் கொண்டு, கணியன் பூங்குன்றனார் பாடியபடி –
“தீதும் நன்றும் பிறர்தர வாரா”
என்ற நிலைக்கு வந்து – அவற்றை எதிர் கொள்ளும் மன நிலையில் பெரும்பாலோர் இருப்பதில்லையே – ஏன்?
தந்தை பெரியார் அவர்களது பேருரையி லிருந்து சுட்டிக் காட்டப்பட்ட அந்த அற்புதமான கருத்தை ஏனோ உள்வாங்கி, செரிமானம் செய்து வாழ்க்கையை ஒரு சரிசமமான பாதையாக ஆக்கிக் கொள்ள பலர் முயலுவதில்லை?
பொதுக் கூட்டங்களில் மேற்கண்ட கருத் தையே தந்தை பெரியார், அவரது பேச்சைக் கேட்கும் எளிய மக்களுக்கும் புரியும்படி இப்படிக் கூறுவார்.
“என்னை ‘வாழ்க வாழ்க’ என்று கோஷம் போட்டு வரவேற்றார்கள். இதற்காக நான் பெரிதும் சந்தோஷம் அடைந்தேனானால், மற்றவிடங்களில் இவர்களிலும் அதிகமான பேர்வழிகள் என்னை ‘ஒழிக, ஒழிக’ என்று கூச்சலிடும்போது முன்னால் மகிழ்ந்தவனாகிய நான், அதனையே பெரிதெனக் கருதுவேனேயானால் பின்னால் சிலரின் ‘ஒழிக’ கூச்சல்களைக் கேட்டு பதற்றமடைந்து அஞ்சி, மனச்சோர்வு ஏற்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி விடுபவனாகத்தான் இருக்க முடியும்! அது தேவையா? நல்லதா?
எதிர்ப்பு என்பதெல்லாம் என் கொள்கைக்கு கிடைத்த ஊக்கம் – வயலுக்கு உரம் போடுவது போல” என்ற எளிமையான அவர் தம் கூற்றை கேட்போர் எவரும் “அவர் சொல்வதில் என்ன தவறு?” என்று தானே கேட்பர்.
நீச்சல் போட்டிகளில்கூட ஒருவரை ஒருவர் முந்தி வருவது யார், முதலில் இலக்கைத் தொடும் நபர்யார் என்று கண்டறிந்து பரிசுகளைத் தருவர். அதைக்கூட இனி புதுவகையாக எதிர் நீச்சலில் ஈடுபட்டு வருவோர் யார்? என்று புதிய நீச்சல் போட்டியை வைத்தால் சிறப்பாக இருக்குமே!
வாழ்க்கைச் சக்கரம் என்பதே சுழன்று வருவதுதான். எனவே தோல்வி, துயரம், துன்பம், தொடர் தோல்வி, தொடர் நட்டங்கள் வந்தாலும் அவைபற்றி சற்றும் கலங்காமல் நின்று விழுந்த இடத்திலிருந்து மீண்டும் எழுந்து இலக்கை அடைவது எப்படி என்பதையே யோசியுங்கள்!
‘அவ்வழியே எம் வழி’ என்று முடிவு செய்து, கொள் ளுங்கள்.
மனமுடைந்து கோழைகள் ஆக வாழாதீர்கள்!
துன்பத்தில் வாழ்வதைவிட
கோழையாக வாழ்வது
பிணமாக வாழும் வாழ்க்கை
மறவாதீர் – துணிவுடன்
எதிர்கொண்டு வெல்லுங்கள்!