♦ ‘‘எதிர்க்கட்சிகள், வெளிநாட்டுச் சக்திகளுடன் சேர்ந்துகொண்டு
சதி செய்கின்றன” என்று பொறுப்பு வாய்ந்த பிரதமர் ஒருவர் பேசலாமா?
♦ இதை அலட்சியப்படுத்தாமல் கடுமையான குற்றச்சாட்டாகக் கருதவேண்டும்!
எதிர்க்கட்சிகள் இதன்மீது மக்கள் மன்றத்திற்கும்- நீதிமன்றத்திற்கும் கொண்டு செல்லவேண்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
‘‘எதிர்க்கட்சிகள், வெளிநாட்டுச் சக்திகளுடன் சேர்ந்துகொண்டு சதி செய்கின்றன” என்று பொறுப்பு வாய்ந்த பிரதமர் ஒருவர் பேசலாமா? இதை அலட்சியப்படுத்தாமல் கடுமையான குற்றச்சாட்டாகக் கருதவேண்டும்! எதிர்க்கட்சிகள் இதன்மீது நீதிமன்றத்திற்கும் – மக்கள் மன்றத்திற்கும் கொண்டு செல்லவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு
2024 ஆம் ஆண்டாகிய இந்த ஆண்டு, இந்திய நாடான நம் நாடு 18 ஆவது பொதுத் தேர்தலை எதிர் கொள்கிறது.
முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி 102 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது!
கருநாடக மாநிலத்தில் எதிர்க்கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம்!
இரண்டாவது கட்டம் ஏப்ரல் 26 ஆம் தேதி நடை பெறவிருக்கும் நிலையில், பிரதமர் மோடி கருநாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, இதற்கு முன் சந்திக்காத எதிர்ப்பை – நேரிலேயே காங்கிரஸ் கட்சியினர் + பாதிக்கப்பட்டவர்கள் மாநில நிதிப் பகிர்வு பங்கீட்டில் ஓரவஞ்சனை செய்யும் – திட்டமிட்ட நிதி நெருக்கடியை அம்மாநிலத்திற்குத் தருவதை எதிர்த்து விளக்கும் வகையில், ‘சொம்பு’ ஏந்தி நடத்திய ஆர்ப் பாட்டத்தையும், சொம்பு விளம்பரத்தையும் அக் கூட்டணியில் உள்ள மேனாள் பிரதமர் தேவகவுடா, பிரதமர் மோடியிடம் காட்டியதைப் பார்த்த பிறகு, மோடி காட்டமாக எதிர்க்கட்சிகளைக் குறிப்பாக ‘இந்தியா கூட்டணி’யினரை விமர்சித்துள்ளார், நிலை தடுமாறிப் பேசுகிறார்.
அவருடைய முக்கிய குறியாக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே காங்கிரசும், தி.மு.க. போன்ற இந்தியா கூட் டணி கட்சிகளுமே உள்ளன என்பதை அவரது பரப்புரை மூலம் நாடு அறியும்.
‘‘எதிர்க்கட்சிகள், வெளிநாட்டுச் சக்திகளுடன் சேர்ந்துகொண்டு சதி செய்கின்றன”: மோடி!
ஆனால், கருநாடகத்தில் அவர் பேசும்போது, எதிர்க் கட்சிகள்மீது அதிர்ச்சியூட்டக் கூடிய, மிகமிகக் கடுமை யான, கொடுமையான குற்றச்சாட்டினை – ‘‘எனது ஆட்சி வராமல் தடுக்க, எதிர்க்கட்சிகள், வெளிநாட்டுச் சக்தி களுடன் சேர்ந்துகொண்டு சதி செய்கின்றன” என்று கூறியுள்ளார்!
மற்ற குற்றச்சாட்டுகளைப் போன்றதல்ல – இக்குற்றச் சாட்டு; எளிதில் அலட்சியப்படுத்திட முடியாத தேர்தல் பரப்புரை அல்ல இது!
பிரதமர் மோடி உடனடியாக குற்றச்சாட்டிற்குரிய ஆதாரங்களை, சான்றாவணங்களைத் தரவேண்டும்!
மிகவும் கூர்ந்து மக்களுக்கு, குறிப்பாக தேர்தலில் வாக்களிக்கவிருக்கும் நமது வாக்காளப் பெருமக்களுக் கும், பொதுவானவர்களுக்கும் மிகப்பெரும் கவலை யோடு கூடிய பொறுப்பு கலந்த இந்தக் குற்றச்சாட்டை – ‘‘வாய்ப்புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ” என்று தள்ளிவிடக் கூடாத குற்றச்சாட்டு ஆனபடியால் – பிரதமர் மோடி உடனடியாக அதற்கான உரிய ஆதாரங் களை, சான்றாவணங்களை மக்கள் மன்றத்திற்குமுன் வைத்து பகிரங்கப்படுத்த முன்வரவேண்டும்.
அத்தகைய குற்றச்சாட்டின் ஆதாரங்களும் நம்பகத் தன்மையுள்ளவைகளாக மக்களாலும், நாட்டுப் பொது நிலையாளர்களாலும் ஏற்கப்படக் கூடியதாக இருக்க வேண்டும்!
இடியாப்ப சிக்கலிலிருந்து மீள முடியாத பா.ஜ.க.!
இந்தத் தேர்தல் தொடங்குமுன்பு இருந்த 400 தொகுதிகள் என்ற பேச்சு, நாளும் பனிபோல் கரைந்து வருவதை நாடும், ஏடும் கண்டு வருகின்றன!
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் பா.ஜ.க., ‘புலிவாலைப் பிடித்த நாயர்’ என்ற பழைய பழமொழிக்கொப்ப, ‘இடியாப்ப சிக்கலில்’ இருந்து மீள
முடியாதபடி உள்ளது. ராஜபுத்திரர் – பட்டிதார் ஜாதிப் பிரச்சினை!
வட கிழக்கில் இரண்டு மாநிலங்களில் பா.ஜ.க. களம் இறங்கவே அஞ்சி ஒதுங்கிய நிலை கண்கூடு.
மிகவும் ஆபத்தான ‘திராவக வீச்சு’ போன்ற கொடுமையான குற்றச்சாட்டு!
இப்படி நாளும் கீழிறக்கமாகும் ஏழு கட்ட தேர்தல் நிலவரத்தால், பிரதமர் மோடிக்கும், பா.ஜ.க.விற்கும் பயமும், கோபமும் போட்டிப் போட்டுக் கொண்டு வெடிக்கும் நிலையில், தன் பதவி நிலை துறந்து அல்லது மறந்து, நாளும் ஒவ்வொரு புதுப்புது குற்றச்சாட்டுகளை, எதிர்க்கட்சிகள்மீது குறிப்பாக இந்தியா கூட்டணி கட்சிகள்மீது வாரி, வாரி இறைக்கிறார் என்றாலும், கருநாடகத்தில் அவர் கூறிய, ‘‘தனது ஆட்சி ஒன்றியத்தில் வரக்கூடாது என்பதற்காக வெளிநாட்டுச் சக்திகளுடன் சேர்ந்துகொண்டு எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன” என்ற குற்றச்சாட்டு என்பது மிகவும் ஆபத்தான ‘திராவக வீச்சு’ போன்ற கொடுமையான குற்றச்சாட்டு ஆகும்.
உடனடியாக தொடர் நடவடிக்கைகளை, பிரச்சாரத்தை நடத்திடுவது அவசியம், அவசரம்!
ஆகையால், எதிர்க்கட்சிகள் இதுபற்றிய நியாயமான, தேவையான ஆதாரங்களை பிரதமர் மோடி தரவேண்டி, மக்கள் மன்றத்திலும், உச்சநீதிமன்றம் போன்ற நீதியமைப் புகளையும் நாடி – குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்களைத் தராமல் இப்படி தனக்குள்ள அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திடுவது முறையல்ல என்பதை விளக்கி, விரைந்து, காலதாமதமின்றி – கவனச்சிதறலுக்கு இடமின்றி உடனடியாக தொடர் நடவடிக்கைகளை, பிரச்சாரத்தை நடத்திடுவது அவசியம், அவசரமும்கூட!
குற்றம் சுமத்துபவர் யாரோ ஒருவர் அல்ல; பொறுப் புள்ள பதவியில் பிரதமராக 10 ஆண்டுகளாக இருந்தவர்! மீண்டும் வர பகீரதப் பிரயத்தனம் செய்கிறவர்!
அரசியல் விபரீத விளையாட்டு தொடருவது யாருக்கும் நல்லதல்ல!
முன்பு ‘பெகாசஸ்’மூலம் வேவு பார்த்த கதை முழுவதும் – தேர்தல் பத்திர ஊழல் முழுவதும் வெளியே வரும்வரை கேள்விகளை, உண்மைகளை உலாவரச் செய்யவேண்டும்!
பிரதமர் மோடியின், இந்த அரசியல் விபரீத விளையாட்டு தொடருவது யாருக்கும் நல்லதல்ல.
எதிர்க்கட்சித் தலைவர்களே,
உதவாதினி தாமதம் –
உடனடியாக செயல்படுங்கள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
22-4-2024