“தேர்தல் நன்கொடை பத்திரத் திட்டம் – ஊழலையும் தாண்டி நாட்டை பா.ஜ.க.வின் ஒரே கொள்கை சார் எதேச்சாதிகாரத்திற்கே கொண்டு செல்லும்”
ஆய்வாளர்கள் அறிக்கையினை விளக்கி தமிழர் தலைவர் காணொலியில் சங்கநாதம்
(அடுத்த கட்ட தேர்தல் பகுதி வாக்காளர்களுக்கான ஆங்கில பரப்புரை –
ஹிந்தி மற்றும் பிறமொழிகளின் பரப்புரை வடிவங்கள் விரைவில் வெளிவரும்)
திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அடுத்த கட்ட தேர்தல் பகுதி வாக்காளர்களுக்கான ஆங்கில மொழியிலான பரப்புரையினை 20.4.2024 அன்று மாலையில் காணொலி நிகழ்வாக வழங்கினார்.
தமிழ்நாட்டிலும் பாண்டிச்சேரியிலும் கடந்த ஏப்ரல் 19ஆம் நாளன்று ஒரே கட்டமாக 18ஆவது மக்களவைக்கான தேர்தலில் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. அடுத்து 6 கட்டங்களாக மற்ற மாநிலங்களின் (தொகுதிகளிலும்) தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்த தமிழர் தலைவர், பிற பகுதி வாக்காளர்களுக்கு ஆங்கில வழி பரப்புரையினை காணொலி வாயிலாக மேற்கொண்டார்.
தொடக்க உரை
நிகழ்ச்சியின் தொடக்க உரையினை திராவிடர் கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி ஆற்றினார்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தேர்தல் காலங்களிலும், ஆட்சிக் காலத்திலும் அளித்த உத்தரவாதங்கள் எதையும் செய்யவில்லை. எடுத்த செயலையும் தொடக்க நிலையிலேயே கைவிட்டது. மேலும் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து ஒற்றை ஆட்சிக்கு கொண்டு செல்கிறது. இப்படிப்பட்ட சூழலில் மோடி அவர்கள் மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்.
முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு தமிழர்தலைவர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து மக்களைச் சந்தித்தார். இன்றைய நிகழ்வு நாட்டின் பிற மாநிலங்களில் உள்ள வாக்காளர்களுக்கான தமிழர் தலைவரின் தேர்தல் பரப்புரையாகும். நாட்டு மக்கள் அனைவரும் நாடு செல்லும் நிலையற்ற தன்மையினை உணர்ந்து தமிழர் தலைவரின் உரைப் பகுதியின் கருத்துகனை உள்வாங்கி வாக்களிக்கும் பணியினை – ஜனநாயகக் கடமையினை ஆற்றிட வேண்டுகிறோம்.
இவ்வாறு கோ. கருணாநிதி பேசினார்.
தமிழர் தலைவரது
ஆங்கில உரையின் சுருக்கம்: தமிழில்
இந்தக் காணொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். உங்களையெல்லாம் இந்த நிகழ்ச்சியின் வாயிலாகத் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு பெற்றமைக்கு மகிழ்ச்சியடை கிறேன்.
இந்திய மக்களவைக்கான தேர்தலின் முதல் கட்டம் – வாக்குப் பதிவு நடந்து முடிந் துள்ளது. மொத்தம் 7 கட்டங் களாக திட்டமிடப்பட்டுள்ள இந்தத் தேர்தலில் பெருமளவில் – பெரும்பரப்பில் உள்ள வாக் காளர்கள் தங்களுடைய வாக் குகளை வரவிருக்கும் கட்டங்களில் பதிவு செய்திட உள் ளார்கள்.
தேர்தல் அல்ல; கருத்தியல் போர்
கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் நரேந்திர மோடி அவர் களுக்கு மீண்டும் போட்டியிடவும், மக்களிடம் வாக்குகள் கேட்கவும் உரிமை உண்டு; கடந்த 10 ஆண்டுகளில் தனது ஆட்சி செய்த சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள், கடந்த தேர்தலில்களின் பொழுது ஆட்சிக்கு வந்தால் செய்து முடிப்பதாகத் தெரிவித்திருந்த உத்தரவாதங்கள் ஆகியவை குறித்து நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க மோடி கடமைப்பட்டவர் ஆகிறார். நாட்டில் உண்மையாக நிலவிடும் நிலையினை – கடந்த பத்தாண்டுகளாக நிலவிடும் நிலையினை சொல்ல முடியாமல், அந்த முகத்தை மாற்றிக் காட்டிக் கொண்டிருக்கிறார் மோடி என்பதே உண்மை நிலை – A decade of facade – இது ஒரு மில்லியன் டாலர் கேள்வியைப் போன்றது. இப்பொழுது நடைபெற்று வரும் மக்களவைக்கான தேர்தல் என்பது கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தலைப் போன்றதல்ல; இந்தத் தேர்தல் கருத்தியல் சார்ந்த தேர்தல்; தமிழ்நாட்டின் முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் மு.க. ஸ்டாலின் இந்த தேர்தலை கருத்தியல் சார்ந்த போர் என்றே சொல்கிறார். இளந் தலைவர் ராகுல்காந்தியும் இந்தத் தேர்தலை தந்தை பெரியாரின் கருத்தியலுக்கும் பா.ஜ.க.வின் கருத்தியல் தாயகமான ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்தியலுக்கும் இடையிலான போட்டி எனச் சொல்லுகிறார்.
2019ஆம் ஆண்டில் மோடி அவர்கள் பிரதமராக இரண்டாம் முறை பதவியேற்ற நிகழ்வினை யாரும் மறந் திருக்க முடியாது. பெரும்பாலான மக்கள் தொலைக்காட்சி வழியாகப் பார்த்திருப்பார்கள்.
“பிரதமர் பதவிக்கான உறுதிமொழியினை வாசித்து ஏற்ற பின்னர், மேடையை விட்டு இறங்கி – மேடையின் ஒரு புறத்தில் செய்து வைக்கப்பட்டிருந்த ‘இந்திய அரசமைப்புச் சட்டப் புத்தகத்தின் பெரிய வடிவமைப்பின் முன் சென்று தனது உடலை பணிவாக (?) வளைத்து கும்பிட்டு மரியாதை செய்த காட்சி அது.
பிரதமர் மோடி அவர்கள் செய்த இந்த மரியாதையைப் பார்த்து ஒவ்வொரு வரும் வியந்தனர். ‘அரசமைப்புச் சட்டத்தின்மீது எவ்வளவு உயர்ந்த மரியாதை?’ என வியக்க வைத்தது. உண்மையில் மோடி அவர்கள் காட்டிய மரியாதை நடைமுறையில் காட்டப்பட்டதா? சட்டத்தின் விதிகள் போற்றிப் பேணப்பட்டனவா? இல்லை; இல்லை; மாறாக அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தி வரும் ஆட்சிக் கூறுகள் அவமதிக்கப்பட்டன. ஆட்சிக் கூறுகளின்படியில்லாமல் அதற்கு எதிரான நிலையில் ஆட்சி நடத்தப்பட்டது.
உண்மையைப் படம் பிடித்த
இரண்டு புத்தகங்கள்
இதோ இரண்டு புத்தகங்கள்; ஒன்று The Crooked Timber of New India – Essays on a Republic in Crisis” (புதிய இந்தியாவின் கோணல் மரம் – நெருக்கடியில் உள்ள ஒரு குடியரசு நாட்டைப் பற்றிய கட்டுரைகள்) இதை எழுதியவர் ஆகஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பொருளாதார படிப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்; தலைசிறந்த பொருளாதார நிபுணர்களுள் ஒருவர். நல்ல அரசியல் திறனாய்வாளர். நாட்டைப் பற்றிய அவதூறு பரப்பிடும் நிலையில் எழுதப்பட்ட புத்தகம் அல்ல இது; நமது நாட்டின் உண்மை நிலையை – அவல நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டிடும் நூல். அந்த அறிஞரின் பெயர் பரகல பிரபாகர். (கூடுதல் செய்தி நூலாசிரியர் ஒன்றிய மோடி அரசில் நிதி அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் அவர்களின் கணவர் ஆவார்) அடுத்தது: Modi’s India: Hindu Nationalism and the Rise of Ethnic Democracy” (மோடியின் இந்தியா: இந்து தேசியமும் இன வழி சார்ந்த மக்களாட்சியின் ஏற்றமும்) இதை எழுதியவர் கிறிஸ்டோப் ஜெப்ராலெட்; பிரஞ்சு நாட்டைச் சார்ந்த சமூக, அரசியல் ஆய்வாளர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர், உலகின் பெரிய மக்களாட்சி நாட்டை ஏதேச்சதிகாரம், சகிப்புத்தன்மை அற்ற நிலைக்கு கொண்டு செல்கிறார். கடந்த 20 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியில் (மாநிலத்திலும் ஒன்றியத்திலும்) நடைபெற்ற மக்களாட்சி இயல்புக்கு மாறான – எதிரான நிலையை நோக்கி நாட்டை கொண்டு சென்ற விதம் குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ள பலவற்றிற்கு இதுநாள் வரை மோடி அவர்களது பக்கமிருந்து எதிர்வினையோ, பதிலோ வழங்கப்படவில்லை.
இப்படிப்பட்ட சூழலில் நாட்டின் மக்களாட்சியைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு மக்களாகிய நம்மிடம்தான் இருக்கிறது. ஏன் மக்களுக்கு பொறுப்பு இருக்கிறது?
நம் இந்திய நாட்டை ஆளும் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டம் இதைத் தயாரித்து ஒருங்கிணைத்தவர்கள் பாபா சாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் உள்பட பலர் ஆனால் இந்த சட்டத்தின் வாசகங்கள் யாருடைய குரலில் தொடங்குகிறது?
We, the People of India, having solemnly resolved to constitute India into a Sovereign, Socialist, Secular, Democratic, Republic and to secure to all its citizens.
“இந்திய மக்களாகிய நாங்கள் எங்களது நாட்டை இறையாண்மை, சமதர்ம, மதச்சார்பற்ற, மக்களாட்சி, குடியரசு ஆகக் கொண்டு செல்ல உறுதியேற்கிறோம்.” உண்மையில் நாட்டின் அதிகாரம் குடியரசுத் தலைவரிடமோ, பிரதமரிடமோ, முதலமைச்சர்கள் வசமோ அல்ல; உண்மையான அதிகாரம், பொறுப்பு நாட்டு மக்களிடம்தான் உள்ளது.
மேலும் அரசமைப்புச் சட்டத்தின் வழியாக மக்கள் பேசுகிறார்கள். இந்த நாட்டு மக்களிடையே எந்தவித பாகுபாடுமின்றி மக்கள் வாழ்வது; கிழக்கோ, மேற்கோ, வடக்கோ, தெற்கோ என்பதல்ல. அனைவரும் சமமாக, சம வாய்ப்புகளை பெறும் வகையில் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதையே மக்கள் சொல்வதாக அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது.
மக்களுக்கு மூன்று விதமான நீதிகள் வழங்கப்பட வேண்டுமென அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.
அனைத்துக் குடிமக்களுக்கும் நீதி – சமூகநீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி கிடைக்க வேண்டும்” என்பதுதான் அது. ஒவ்வொரு நீதியும் மற்றைய நீதிநெறிகளிலிருந்து வேறுபட்டது. அனைத்தும் வழங்கிடுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
மேலும்,
LIBERTY of thought, expression, belief, faith and worship
EQUALITY of states and of opportunity and to promote among them all.
FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation. In our Constituent Assembly this twenty six day of November, 1949 do hereby adopt, enact and give to ourselves this Constitution.
அனைத்து வகை சுதந்திர உரிமை, சமத்துவமும் சம வாய்ப்பும் வழங்கி, சகோதரத்துவத்தை வளர்க்க ஒருவரின் கண்ணியம் உறுதிசெய்யப்பட்டு நாட்டின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் கட்டிக் காக்கப்பட வேண்டும்.
இந்திய மக்களாகிய நாங்கள் இந்திய அரசமைப்பு அவையின் 1949 நவம்பர் 26ஆம் நாளில் இந்த சட்ட வடிவை ஏற்று, சட்டமாக்கி எங்களுக்கே இந்திய அரசமைப்புச் சட்டத்தை வழங்கிக் கொள்கிறோம்”
இதன் உள்ளார்ந்த பொருள் மக்காட்சி நாடாகிய நமது நாட்டில் முழுப் பொறுப்பும் இறையாண்மையும், மக்களிடம்தான் உள்ளது. இந்த மாற்றிட யார் முனைந்தாலும், சட்டத்திற்குப் புறம்பானவர்கள், கண்டிக்கப்பட வேண்டும். தீர்ப்பு சொல்லும் நாள்தான் தேர்தல் நாள். மக்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும்.
எழுப்பப்பட்ட முழக்கங்கள், அடையாளமான செயல்கள்; அப்பட்டமான பொய்கள்!
ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் பொழுதும் – தேர்தல் காலங்களில் மக்களைக் கவர வளர்ச்சி முழக்கங்களை மோடி வழங்கினார். அவர் எழுப்பிய முழக்கங்கள் வெறும் அடையாளமாகத்தான் இருந்தன; முறையாகத் திட்டமிட்டு மக்களிடம் எடுத்துச் செல்லப்படவில்லை.
பல்வேறு உத்தரவாதங்கள் – கியாரண்டிகளை மோடி வழங்கினார்.
‘சப்காசாத்; சப்கா விகாஸ்’ வளர்ச்சியே வரவில்லை. Skill India, Make in India, Digital India, Smart City என முழங்கினார். ஒன்றுகூட முழுமையாகவில்லை. எழுப்பிய முழக்கங்கள் கவர்ச்சியாக இருந்தன. ஆனால் செயல் வடிவம் பெறவில்லை. அனைத்தும் அழுத்தமான பிதற்றொலிகளாகவே (Jargon Juggernaut) அமைந்து விட்டன. ஒவ்வொரு குடி மக்களுக்கும் அரசு செயல்பட்ட விவரங்களைக் கேட்க உரிமையுண்டு.
2014 தேர்தலில் மோடி அளித்த வாக்குறுதி என்ன? ஒரு ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பு தரப்படும். இதுவரை 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். கிடைத்ததா? ஒன்றிய அரசுப் பணியில் 40 லட்சம் இடங்கள் காலியாகவே நிரப்பப்படாமல் வைக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தி கசப்பானதாக இருந்தாலும் அது உண்மைதான்.
நாட்டில் கருப்புப்பணம் ஒழிக்கப்படும்; வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் முடக்கப்பட்டு, இந்த நாட்டிற்கு திரும்பவும் கொண்டு வரப்படும். மீட்கப்பட்ட கருப்புப் பணத்திலிருந்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிற்கும் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என மோடி உறுதியளித்தார். கொடுத்த கியாரண்டியை நிறைவேற்றினாரா? நெருக்கிக் கேட்டால் ‘ஜும்லா’ (அதெல்லாம் சும்மா) என வேடிக்கை காட்டுகிறார்கள்.
சமையல் எரிவாயு விலை உயர்வு
சமையல் எரிவாயு விலையைக் குறைப்போம் என கியாரண்டி கொடுத்தார். 2014இல் சமையல் எரிவாயு விலை. ஒரு உருளை ரூ.440; 2024இல் அதே உருளையின் விலை ரூ.818 – ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில் எரிவாயு விலை அதிகமாக இருந்ததற்கு பன்னாட்டு வெளிச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தது என்றனர். ஆனால் பல்வேறு காலக் கட்டங்களில் வெளிச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையானது கணிசமாக குறைந்துள்ள நிலை; அதன் பிரதிபலிப்பு இந்நாட்டு சமையல் எரிவாயு விலையில் ஏற்படவே இல்லை; மாறாக உள்நாட்டு விலை. கணிசமாக உயர்ந்து ரூ.818 என்ற அளவில் நீடிக்கிறது. விலை உயர்வுக்கு வெளிச் சந்தை விலையினைக் காரணம் காட்டினார்கள். வெளிச் சந்தை விலை குறைந்த பின்னர் அதன் பயனை சமையல் எரிவாயு உருளை விலையில் பகிர்ந்து அளிக்காதது ஏன்?
பி.எம். கேர்ஸ்
கரோனா தொற்றுக் காலத்தின் பொழுது பி.எம்.கேர்ஸ் (PM Cares) என்றொரு தனியார் அறக்கட்டளையை பா.ஜ.க. பொறுப்பாளர்களைக் கொண்டு தொடக்கப்பட்டது. நாட்டில் பிரதம மந்திரி பெயரில் நன்கொடை – கார்ப்பரேட் நிறுவனங்கள் – கணக்கில் காட்டப்படாத பணம் வசூலிக்கப்பட்டதே? அரசின் தணிக்கைக்கு அப்பாற்பட்டது என இந்த அறக்கட்டளையினை அறிவித்தார்களே? இது சரியா? முறையா? வாக்களிக்கும் மக்கள் கேட்க மாட்டார்களா?
மேலும் கரோனா தொற்றுக் காலத்தில் ஒவ்வொரு துறையின் வளர்ச்சியும் முடங்கியது; தொழில்கள் நசிந்தன. வணிகர்கள் வருமானம் எதுவுமின்றி வாடிட நேர்ந்தது. பசி, பட்டினியால் உயிர் இழப்புகள் ஒரு பக்கம்; கரோனா தொற்றுப் பாதிப்பில் உயிர் துறந்தது மறுபக்கம். நாடே, உலகமே முடங்கிப் போன நிலையில் தொற்றுக் காலத்தில் ஒரே ஒரு கார்ப்பரேட் முதலாளியின் வருமானம் அதிகரித்தது. அதிகரிப்பு ஒன்று – இரண்டு மடங்கு அல்ல; பத்து மடங்கு அதிகரித்தது. ஆம் அதானியின் நிறுவனங்களின் வருவாய், சொத்து மதிப்பு அதிகரித்தது. இது எப்படி? மக்கள் கேள்வி கேட்கிறார்கள்; உரிமை படைத்தவர்கள் கணக்கு விவரம் வேண்டுகிறார்கள்.
சமூகநீதியில் எதுவும் செய்திடவில்லை
பிரதமர் மோடிதன்னை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சார்ந்தவர் என தெரியப்படுத்துகிறார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவரது ஆட்சியில் எவற்றை புதிதாக சமூகநீதி தளத்திலே ஏற்படுத்தினார். உண்மையில் சமூகஅநீதியைத்தான் அவரால் வளர்க்க முடிந்தது. ஏற்கெனவே கல்வி வேலை வாய்ப்பில் அவர்களின் மக்கள் தொகைக்கு மேலான இடங்களில் பெற்றிருக்கும் உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை எந்தவித கோரிக்கையும் வைக்கப்படாமல் வழங்கினாரே மோடி. மொத்த மக்கள் தொகையில் 15 விழுக்காடு உள்ள உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு! என்ன நியாயம்? 52 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு மட்டுமே. என்ன அநியாயம்?
பண மதிப்பு நீக்க நடவடிக்கை
திடீரென்று ஒரு நாள் இரவில் அடுத்த மூன்று மணி நேரத்தில் நாட்டில் உள்ள ரூ.500/- ரூ.1000/- நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்தார். காரணம் கருப்புப் பணத்தை மீட்க என்றார். சிறுவணிகர், நடுத்தர ஏழைகள் வைத்திருந்த ரூ.500/- ரூ.1000/- நோட்டை மாற்ற அவர்கள் பட்டபாடு சொல்லி மாளாது. 142 பேர் வங்கிக் கிளையின் முன்பு வெயிலில் கால் கடுக்க காத்திருந்து உயிர் விட்டனர். பணமதிப்பு நீக்கத்தை உடனடியாக தன்னிச்சையாக முடிவு செய்து செயல்படுத்தினார். உரிய நிபுணர்களுடன் கலந்தாலேசிக்கப்படவில்லை. கருப்புப் பணத்தை முடக்க நடவடிக்கை என அறிவித்து விட்டு இது வரை இல்லாத அதிக மதிப்பிலான ரூ.2000/-அய் புழக்கத்தில் விட்டனர். அதிக மதிப்பிலான நோட்டுதாள் கருப்புப் பணமாக முடக்கிட ஏதுவானது. மதிப்பு நீக்கப்பட்ட பணம் – கருப்புப் பணமாக முடங்கி விடும்; வெளியில் வரும் என நினைத்த வேளையில் நோட்டுகள் முழுவதும் வங்கிகளுக்கு வந்து ரிசர்வ் வங்கிக்கு சேர்ந்து விட்டது. வங்கியில் செலுத்தப்பட்ட கருப்புப் பணத்தின் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. மொத்தத்தில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை யாவும் கருப்புப் பணத்தை முடக்குவதற்கு எனச் சொல்லிக் கொண்டு, கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக கொண்டு வந்ததுதான் நடந்தது. யாரைத் திருப்திப்படுத்த இந்த நடவடிக்கை? மக்கள் கேள்வி கேட்கிறார்கள். மோடி ஆட்சிக் காலத்தில் (2014-2024) பன்னாட்டுச் சந்தையில் மதிக்கத்தக்க அமெரிக்க டாலரின் மதிப்பீடோ ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்திய ரூபாயின் மதிப்பு மிக வெகுவாகக் குறைந்து விட்டது.
மக்கள் திரள் இல்லாத ‘ரோடு ஷோ’
கடந்த காலத்தில் அளிக்கப்பட்ட கியாரண்டிகளைப் பற்றிய செய்திகள் எதுவுமில்லாமல் வெறும் ரோடு ஷோ (Road Show) என போகின்ற இடங்களில் நடத்திக் கொண்டிருக்கிறார். சென்னை தியாகராயர் நகரில் அண்மையில் நடத்தப்பட்ட ரோடு ஷோவில் வெறும் வருகை விளம்பரங்கள்தான் தென்பட்டன. மக்கள் திரள் வரவேயில்லை. பாதுகாப்பு காரணங்களைச் சொல்லி கடைகள் அனைத்தையும் காலையிலேயே மூடச் சொல்லி விட்டார்கள். வந்த ஒரு சிலரையும் சோதனை என்ற பெயரில் சங்கடத்திற்கு உள்ளாக்கி உள்ளனர். பல அடுக்கு பாதுகாப்பு என பிரதமருக்கு அளிப்பது முக்கியம்தான். ஆனால் அவர் பார்க்க வருவது மக்களைத்தான். மக்கள் திரள் இல்லாத ரோடு ஷோவாக முடிந்தது.
நீதிக்கட்சி தலைவர்களைத் தாங்கிய பகுதி
ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பிரதமர் மோடி அவர்கள் வலம் வந்த சென்னை பகுதி முழுவதும் திராவிடர் இயக்கத்தின் முன்னோடி அரசியல் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவர்களின் பெயர்களைத் தாங்கி அவர்களது பொது வாழ்வுப் பணிகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் பகுதியாகும்.
கரோனா – புலம் திரும்பிய
தொழிலாளரின் அவலம்
மேலும் கரோனா தொற்று சமயத்தில் மனிதாபிமானமற்ற செயல் நிகழ்ந்ததை நினைவூட்ட வேண்டும். மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையிழப்பு காரணமாக, கையில் பணம் இல்லாமல் சொந்த மாநிலத்திற்கு நடந்தே சென்ற கொடுமைகளும் நிகழ்ந்தன. அந்த இக்கட்டான நேரத்திலும் ஒன்றிய அரசு அவர்களது பயணத்திற்கு ஏற்பாடு எதுவும் செய்யவில்லை. காங்கிரசுத் தலைவர் சோனியா காந்தி அவர்கள் அப்படி புலம் திரும்பும் தொழிலாளர்களுக்கான ரயில் பயணக் கட்டணத்தை காங்கிரசு ஏற்றுக் கொள்வதாக அறிவித்த பின்பும் மோடி அரசு அந்த தொழிலாளர்களுக்கு உதவிட முன் வரவில்லை.
கும்பல் கொலை & பசுப் பாதுகாவலர்
இதுவரை நாட்டில் நடைபெறாத சம்பவங்கள் மோடி ஆட்சியில் நடைபெற்றன. பசு மாமிசம் வைத்திருந்ததாக ஒருவரை கும்பலாகச் சென்று கொல்வதும் இந்த ஆட்சியில்தான் Lynching (கும்பல் கொலை) என ஆங்கில அகராதிக்கு ஒரு சொல்லை அதன் பயன்பாட்டை வழங்கியது மோடி ஆட்சிதான். பசுக்களைக் கடத்துகிறார்கள் என செய்தி ஜோடிக்கப்பட்டு சில வியாபாரிகள் தடுத்து நிறுத்தி கொல்லப் படுகிறார்கள். Cow Vigilantes (பசுப் பாதுகாவலர்கள்) எனும் ஆங்கிலச் சொல்லை மனிதரைக் கொன்று மாட்டை பாதுகாத்திடும் செயலை அரங்கேற்றியதும் மோடி ஆட்சியில்தான்.
வினோதமான நாடாளுமன்ற நடவடிக்கைகள்
நாடாளுமன்றம் என்பதே மக்களுக்கு தேவையானவற்றை அனைவரும் விவாதித்து சட்டமாக்கும் இடம். விவாதம், மாற்றுக் கருத்து ஆகியவற்றிற்கு இடமளிக்காமல், 146 எதிர்க்கட்சி உறுப்பினர்களை நீக்கி, தன்னிச்சையாக ஆளும் தடுப்பில் சட்டங்களை நிறைவேற்றிடுவது எந்த வகை நாடாளுமன்ற நடவடிக்கை? அவை நடவடிக்கைகளிலிருந்து நீக்கம் என்பது அந்தச் சபைத் தொடருக்கு மட்டமல்ல; அடுத்துவரும் தொடர்களுக்கும் என்பது எந்தவகை மக்களாட்சி அவை நடவடிக்கையோ?
2019 முதல் நடைபெற்று வருகின்ற மக்களவைக்கு துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவேயில்லை என்பதும் முன்னெப்போதும் இல்லாதது. துணை சபாநாயகர் பதவி என்பது எதிர்க்கட்சியினைச் சார்ந்த உறுப்பினருக்கு வழங்கப்படுவது. அந்தப் பதவி 5 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பது மோடி அரசு எதிர்க்கட்சிகளுக்கு – அவை நடவடிக்கைகளுக்கு அளித்து வரும் அவமரியாதையைக் காட்டுகிறது.
ஊழல்
மத்திய தலைமை தணிக்கையர் நடத்திய ஆய்வுகளில் – ஒன்றிய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் ரூ.7.5 லட்சம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என அறிக்கை அளித்துள்ளனர். இதுகுறித்து இதுநாள் வரை எந்த நடவடிக்கையையும் மோடி அரசு மேற்கொள்ளவே இல்லை.
தேர்தல் நன்கொடை பத்திரம்:
மோடி அரசு, நிதிநிலை அறிக்கையில் அறிவித்து, சட்டமியற்றி நடைமுறைக்கு வந்த தேர்தல் நன்கொடை பத்திரமானது அரசமைப்புச் சட்டத்திற்கே புறம்பானது என அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் மொத்தமாக வழங்கியுள்ள ரூ.18,000 கோடிக்கு மேலான தேர்தல் நன்கொடை பத்திரங்களில் பாதிக்கும் மேற்பட்டவை பா.ஜ.க.விற்குத்தான் வழங்கப்பட்டுள்ளன. மீதியுள்ளவை மற்ற கட்சிகளுக்குப் பரவலாக அளிக்கப்பட்டுள்ளன. கருப்புப் பணத்தை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தேர்தல் நன்கொடை பத்திரத் திட்டத்தை குறிப்பிட்ட நிறுவனங்களின்மீது ஒன்றிய அரசின் ஏவல் அமைப்புகளாக விளங்கிடும் சி.பி.அய்., அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, ஆய்விற்கு அனுப்பியது. அப்படி அழுத்தத்திற்கு ஆளாகிடும் நிறுவனங்கள் தேர்தல் நன்கொடை பத்திரத்தை வாங்கி பா.ஜ.க.விற்கு அளித்துள்ள செய்திகள் எல்லாம் ஊடகங்களில் ஆய்வு நடத்திய நிறுவனங்களின் அறிக்கைகள், செய்திகள் வழியாக வெளிவரத் தொடங்கியுள்ளன.
அண்மையில் ‘தி இந்து’ ஒரு பதிப்புக் குழுமத்தைச் சார்ந்த ‘பிரண்ட்லைன்’ மாதமிருமுறை ஏட்டில் தேர்தல் நன்கொடை பத்திரத் திட்டம் குறித்து இரு பெரும் ஆய்வாளர்களின் அறிக்கையினை கட்டுரையாக வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட பிரத்யேக செய்தியாவது: தேர்தல் நன்கொடை பத்திர திட்டம் என்பது ஊழல், வணிக முடக்கம் ஆகியவற்றைத் தாண்டி அனைத்து நிறுவனங் களையும் ஒரே சித்தாந்தத்திற்குட்பட்ட சர்வாதிகார நிலைக்கு நாட்டை கொண்டு சொல்லும், தன்மையினை எடுத்து விளக் குவதாக உள்ளது. நாட்டை எதிர் நோக்கியுள்ள ஒரு பேராபத்தை முன்கூட்டியே வெளிப்படுத்தியுள்ளது. அப்படிப் பட்ட அபாயத்தை நோக்கிச் செல்லும் பயணத்தை உச்சநீதி மன்ற தீர்ப்பு மட்டுப்படுத்தியுள்ளது என்றுதான் கருத வேண்டியுள்ளது.
இந்த செய்தி இத்தோடு முடிந்த விடாது. காரணம் பா.ஜ.க.வின் கொள்கைச் சிந்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸின் ஸ்தாபகர்களில் ஒருவரும் பின் கொள்கை கர்த்தாவாகவும் விளங்கிய எம்.எஸ். கோல்வாக்கர் தன் எழுதிய ‘ஞான கங்கை’ (Bunch of Thought) நூலில் குறிப்பிட்டுள்ளார்.
“பாரத தேசத்திற்கு மாநிலங்கள் என்பது தேவையில்லை; மாநிலங்கள் இல்லாத நாடு தழுவிய ஒற்றை ஆட்சி முறைதான் தேவை; ஏற்படுத்தப்பட வேண்டியதும் கூட என தனது நூலில் கோல்வாக்கர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்தக் கொள்கைப் பிரகடனம், பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வரும் மாநில அதிகார உரிமைப் பறிப்பு, மாநில நிதிப் பற்றாக் குறை, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதற்கான குழு அமைத்து, அறிக்கை பெற்று அதனையே பா.ஜ.க. தனது தேர்தல் பிரகடனத்தில் வெளியிட்டுள்ளதை மக்கள் நினைத்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளனர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின்
முதல் கூறு
(Article – 1) இந்தியா என்பது மாநிலங்களின் தொகுப்பு (India that is Bharat, shall be a Union of States) இதைவிட இந்திய கூட்டாட்சி முறை, மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டாட்சி என்பதற்கு விளக்கம் ஏதும் தேவைப்படாது. இந்த நிலையை மறுத்திடும் – கூட்டாட்சியை மறுத்திடும் நிலையை பா.ஜ.க. எடுத்து வருகிறது. செயல் திட்டமாக்கிட முனைகிறது. இது அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் புறம்பானது.
மேலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது நம்பிக்கையில்லாதது. அதன் கொள்கை வார ஏடான ‘ஆர்கனைசர்’ (Organiser) இதழில் 1949-இல் வந்த செய்தி. “இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்த நாட்டிற்கு ஏற்புடையது அல்ல. அதற்குப் பதிலாக ‘மனுஸ்மிருதியை கொண்டு வந்து நடைமுறைப்படுத்திட வேண்டும்” என்பதை தனது தலையங்கத்திலேயே வெளிப்படுத்தியது, இப்பொழுது நடந்திடும் நிகழ்வுகளுடன் நினைவு கூரத்தக்கது.
பா.ஜ.க.வின் கடந்த கால அணுகுமுறையால் மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது என்பது வெற்றியால் கிடைத்தது அல்ல; தோல்வி அடைந்தாலும், வெற்றி பெற்ற மற்றக் கட்சியினரை ‘குதிரை பேரத்தின்’ மூலம் தங்கள் பக்கம் சேர்த்து கணக்கில் கொண்டு ஆட்சி அமைத்த மாநிலங்கள்தான் அதிகம். ஆட்சி செய்கின்ற கட்சியைப் பிளந்து, தனக்குடையதான அணியினரைக் கொண்டும் ஆட்சி அமைத்துள்ளனர். எனவே எந்த வழியிலும் ஆட்சியைத் தக்க வைக்க, உருவாக்கிக் கொள்ளும் அணுகுமுறையில் தேர்ந்தது பா.ஜ.க. அமைப்பு.
இந்த நிலை மக்களாட்சி முறைக்கே பேராபத்து. பல நல்ல, முற்போக்கான நோக்கங்களுடன் வடிவமைக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக நடப்பதை தந்திரமாகச் சட்டரீதியாக செய்யவல்லது பா.ஜ.க. நீதித்துறையின் குறுக்கீடு இல்லாவிட்டால் பா.ஜ.க. நாட்டை சர்வாதிகார ஆட்சி நிலைக்கு முன்னமே எடுத்துச் சென்றிருக்கும்”
எனவே நிறைவாக இந்தத் தேர்தலில் ‘யார் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்’ என்பதை விட யார் ஆட்சி அதிகாரத்திற்கு வரக் கூடாது’ என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டிலும் நாட்டின் பிற பகுதிகளில் சில தொகுதிகளில் முதல் கட்டமாக மக்களவைத் தேர்தல் நிறைவு பெற்றிருக்கிறது. அடுத்து 6 கட்டங்களாக மீதித் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்களிக்கும் மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணம் இது. தவறினால் நாட்டின் எதிர்காலமே பாழாகி விடும். மக்களின் இறையாண்மை அர்த்தம் இல்லாமல் போய்விடும். இந்த தேர்தல் நாட்டின் ஆட்சிப் போக்கையே மாற்றக் கூடிய தேர்தல் என்பதை மீண்டும் நினைவூட்டி, இந்த காணொலியில் பங்கேற்ற தோழர்கள் – அவர்களுக்கு உரிய வகையில் சொல்லப்பட்ட கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனக் கூறி, நன்றி தெரிவித்து நிறைவு செய்கிறேன்.
நன்றி வணக்கம்.
இவ்வாறு தமிழர் தலைவர் காணொலி வாயிலாக உரையாற்றினார்.
நிகழ்ச்சியினை திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்தார். காணொலி நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன் மற்றும் தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் தலைவர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், பொருளாளர் த.கு. திவாகரன், பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் உரையினை கேட்டனர்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் தோழர்கள் பலர் காணொலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் ‘பெரியார் டி.வி.’ யூடியூப் தளத்திலும் ஒளிபரப்பி செய்யப்பட்டதை பலரும் பார்த்துப் பலன் பெற்றனர். பரப்புரைக்கு ஊக்கம் பெற்றனர்.மேற்கண்ட உரை முழுமையும் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையாகும். இதன் முழுமையான ஆங்கில எழுத்து வடிவிலான உரையும், அதன் ஹிந்தி மற்றும் பிற மாநில மொழி பெயர்ப்புகளும் அந்தப் பகுதிகளில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே வெளியிடப்படும். சம்பந்தப்பட்ட மாநிலத் தோழர்களுக்கு உரை வடிவம் அனுப்பி வைக்கப்படும்.
தொகுப்பு:
வீ. குமரேசன்