முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், கல்லக்குறிச்சி மாவட்ட அமைப்பாளருமான எடுத்தவாய்நத்தம் த.பெரியசாமி அவர்களுக்கு வீரவணக்கம்!
முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் மானமிகு எடுத்தவாய் நத்தம் த.பெரியசாமி அவர்கள் (வயது 83) உடல்நலக் குறைவால் நேற்று (20.4.2024) இரவு சுமார் 11 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
த.பெரியசாமி அவர்கள் கழகப் பொருளாளர், சுயமரியாதைச் சுடரொளி கோ.சாமிதுரை அவர்களு டனும், சுயமரியா தைச் சுடரொளிகள் பெரியார்நேசன், வாசு ஆகிய மூத்த முன்னோடிகளுடனும் இணைந்து சுமார் 20 வயதிலிருந்தே கழகப் பணியாற்றியவர். ஒரே இயக்கம், ஒரே கொள்கை, ஒரே தலைமை என்ற அடிப்படையில் கழகத்தின் மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள், பிரச்சாரப் பணிகள் போன்ற அனைத்திலும் தவறாமல் கலந்து கொள்பவர். தன் குடும்பத்தை சுய மரியாதைக் குடும்பமாக வைத்திருந்தவர்.
எனது தேர்தல் பரப்புரைப் பயணத்தில்கூட பெரம்பலூரில் என்னைச் சந்தித்தார். உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன்.
எடுத்தவாய் நத்தம் கிராமம் என்றாலே சுயமரியாதை கிராமம் எனலாம். அந்த அளவுக்கு பகுத்தறிவுக் கொள்கைகளால் வளர்ந்த கிராமம் அது. இன்று மாலை அவரது உடல் கல்லக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொடையாக அளிக்கப்பட்டது.
அவருக்கு கவுதமன், எழிலரசன், பெரியார் செல்வன், தம்பிதுரை என்ற மகன்கள் உண்டு அவரின் இணையர் முத்தாலம்மாள்.
குடும்பத் தலைவரை இழந்து வாடும் இவர்கள் அனைவருக்கும், கழகத் தோழர்களுக்கும், ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
21.4.2024
குறிப்பு: மறைவு செய்தி அறிந்ததும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவரது மகன் எழிலரசனிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.