சமூக நீதிக்கு எதிரான கொள்கை திட்டங்களை ஒன்றிய அரசு புதுவையில் தொடர்ந்து நடைமுறைப்படுத்திக் கொண்டே வருகின்றது. ஏழை, எளிய, நடுத்தர, ஒடுக்கப் பட்ட, விளிம்பு நிலை மாணவர்களின் கனவை சிதைக்கும் வகையில் தற்போது செவிலியர் படிப்புகளுக்கு நீட்டைப்போன்று நுழைவுத் தேர்வை கொண்டு வந்திருக்கிறது ஒன்றிய அரசு. புதுவை அரசும் அதற்கு அனுமதி வழங்கி இருக்கிறது.
நீட் நுழைவுத் தேர்வின் மூலம் மருத்து வர்களாக முடியாதவர்கள் துணை மருத்துவப் படிப்பான செவிலியர் படிப்பை தற்போது அதிக அளவில் தேர்வு செய்து கட் ஆஃப் மார்க் அடிப்படையில் செண்டாக் மூலம் படித்து வருகின் றனர். அந்த செவிலியர் படிப்பையும் சீர்குலைக்கும் வகையில் செவிலியர் படிப்பிற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை சேர்த்திட புதுவை யின் துணைநிலை ஆளுநராக பொறுப்பு வகிக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் ஒப்புதல் வழங்கி இருக்கின்றார்.
அதனால் 2024-2025 கல்வியாண்டில் நுழைவுத்தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.
மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொள்ளாமல் மாநில அரசு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இசைவு தெரிவித்து இருக்கிறது . மற்ற மாநிலங்களில் ஆளுகின்ற அரசுகள் இதனை ஏற்காத போது எந்த திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தாலும் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் மாநில நலனின் மீதும் மக்களின் நலனின் மீதும் அக்கறை இல்லாமல் ஏற்றுக் கொண்டு புதுவை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஒன்றிய அரசிற்கு தலையாட்டும் பொம்மையாக மாநில அரசு இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தாத ணி.கீ.ஷி. சின் 10 சதவிகித இட ஒதிக்கீட்டை புதுவையில் நடைமுறைப்படுத்தி மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக விட்டுக் கொடுத்துக் கொண்டே வருகிறது.
சென்ற முறையே செவிலியர் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு கொண்டு வந்த என். ஆர். காங்கிரஸ் – பி.ஜே.பி. கூட்டணி அரசிற்கு எதிர்க்கட்சிகள் சமூக மற்றும் பொதுநல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த ஒரு ஆண்டு மட்டும் தள்ளி வைத்துவிட்டு இந்த ஆண்டு அதுவும் தேர்தல் பணியாற்றிக் கொண்டிருந்த இந்த நேரத்தில் சத்தமில்லாமல் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. மாணவர்களின் மனநிலை எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்பு களின் எதிர்ப்புகள் இவைகளை எல்லாம் கவனத்தில் கொண்டு ஒன்றிய அரசிடம் பேசி நுழைவுத்தேர்வுக்குத் தடை பெறாமல் மாநில அரசும் சத்தம் இல்லாமல் நுழைவுத் தேர்விற்கு அனுமதி வழங்கி இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
மாணவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மற்ற மாநிலங்கள் இந்த நுழைவு தேர்வை ஏற்காத வரை புதுச்சேரி அரசும் இந்த நுழைவுத் தேர்வை ஏற்கக்கூடாது. ஒன்றிய அரசோடு பேசி மாணவர்களின் நலனுக்காக புதுச்சேரி அரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
– பொன். பன்னீர்செல்வம்
மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்
காரைக்கால்