இசைஞானி இளையராஜா சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த ஒரு வழக்கில் எதிர் தரப்பு வழக்குரைஞர் தனது வாதத்தில் ” இளையராஜா எல்லோரையும்விட தான் மட்டுமே மேலானவர் என்று நினைக்கிறார்” என்று சொன்னதற்கு, இளையராஜாவின் வழக்குரைஞர் சதீஷ் பராசரன் “இளையராஜா எல்லோருக்கும் மேலானவர்தான் என்றும் இசை உலகில் அவர் கடவுளுக்கு அடுத்தபடியாக பார்க்கப் படுகிறார்” என்றும் தன் எதிர் வாதத்தில் கூறினார். இதற்கு தங்கள் கருத்துகளைத் தெரிவித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகிய இருவரும், “எங்களைப் பொறுத்த மட்டில் இசை உலகில் மும்மூர்த்திகளான முத்துசாமி தீட்சிதர், தியாகையர், சியாமா சாஸ்திரி ஆகிய மூவர் மட்டுமே அனைவருக்கும் மேலானவர்கள் எனக் கூறிக்கொள்ள முடியும். தவிர, அவர்களைப்போல இளையராஜா கூற முடியாது” என கருத்து தெரிவித்துள்ளனர். (‘இந்து தமிழ்திசை’ நாளிதழ் – (19-04-2024)
இந்த விடயத்தில் தன்னை முழு சங்கியாக்கிக் கொண்ட இளைராஜா குறித்து நாம் கருத்து ஏதும் கூறவிரும்பவில்லை. ஆனால் சங்கீதமும் மூர்த்திகள் மட்டுமே அனைவருக்கும் மேலான வர்கள் என்று எந்த அடிப்படையில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர் என்பது விளங்க வில்லை. இவர்கள் கூறும் மும்மூர்த்திகள் வாழ்ந்த காலம் வருமாறு,
1. முத்துசாமி தீட்சிதர் (கி.பி.1776-1835)
2. தியாகையர் (கி.பி.1767-1847)
3. சியாமா சாஸ்திரி (கி.பி.1762-1827)
இவர்கள் மூவருமே தெலுங்கு மற்றும் வட மொழியில் பாடல்களை இயற்றிப் பாடியவர்கள். பதினான்காம் நூற்றாண்டில் தமிழ்நாட்டைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்த நாயக்கர்கள், அதன் பின் வந்த மராட்டியர்கள் காலத்தில் தமிழ்நாடு வந்து குடியேறியவர்களில் இசையார்வம் கொண்ட மேற்கண்டவர்கள் தமிழிசைப் பண்களை அறிந்து – அவற்றைக் கற்றுக்கொண்டு தெலுங்கில் கீர்த்தனைகளைப் பாடினார்கள். இவர் களுக்கு முன்பே இங்கு வாழ்ந்து தமிழிசையைப் பாடி பரப்பியவர்கள் சீர்காழி தமிழிசை மூவர்கள். இவர்களின் காலம் பின்வருமாறு
1. முத்துத்தாண்டவர் (கி.பி.1525-1625)
2. அருணாசல கவிராயர் (கி.பி.1711-1779)
3. மாரிமுத்தாப்பிள்ளை (கி.பி.1712-1787)
இத்தமிழிசை மூவர்கள் ஈராயிரம் ஆண்டு களுக்கு முன் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட இலக்கணம் கொண்ட தமிழ்ப்பண்கள் அடிப்படையில் பாடல்களை இயற்றியவர்கள். இவர்களைப்போலவே அந்நாட்களில் ஆலயங் களில் இசைப்பணியில் ஈடுபட்டிருந்த நாகசுர, தவில் கலைஞர்கள் தமிழ்ப்பண்களையே தங்கள் கருவிகளில் கையாண்டார்கள். நீதிபதிகள் கூறும் சங்கீத மும்மூர்த்திகள் இந்த நாகசுரக் கலைஞர்களிடம் பண்களைக் கற்றே தங்கள் தாய்மொழியாம் தெலுங்கில் பாடல்களை இயற்றி னார்கள் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதிலொன்றைக் காண்போம்.
“தியாகையர் திருவாரூரில் பிறந்தவர் என்று சொல்கிறார்கள். எப்பேர்ப்பட்ட இடம்! தமிழ்க் கலைகட்கெல்லாம் ராஜதானியல்லவா? அவர் பெயரே திருவாரூரில் அஜபா நடனம் கொண் டருள் கின்ற தியாகேசப் பெருமானின் திருப்பெய ரன்றோ? அவர் திருவையாற்றில் வளர்ந்தார்.
அங்கே ஓடுகின்ற காவேரித் தண்ணீரைத்தான் குடித்தார். அங்கு பயிரான அரிசியில் செய்த திருவையாற்று அன்னத்தைத்தான் புசித்தார். அங்குத் தவழ்ந்து வந்த மெல்லிய தென்ற லைத்தான் அனுபவித்தார். திருவையாறு அப்பருக்குக் கைலாயக் காட்சி அளித்த இடம். அங்கு எந்த நேரமும் ”கோல்வளையார் கூத்தாடு கிறார்கள் – கோயிலிலே வல்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழை என்று அஞ்சிச் சிலமந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கின்ற இடம்” இன்னும் இக்காட்சிகளையும் தியாகையர் கண்டார். ஆனால் அவர் உள்ளத்தை ஆட் கொண்டவன் இராமன். தெய்வம் ஒன்றே. அது பலருக்குப் பல வடிவங்களில் காட்சியளிக்கிறது. இவருக்கு இராமனாகக் காட்சியளித்தது. தமது பக்திப் பெருக்கினால் இராமன் கருணைக்கு பாத்திரமாகி சரஸ்வதியின் கடாட்சமும் பெற்றார். பக்திப் பரவசத்தினால் இராமன் மீது ஏராளமான சாகித்தியங்களைப் பொழிந்தார். ஆனால் அவர் வீட்டில் பேசியது தெலுங்கு. இராமப்பரம்மத்தின் புதல்வன் தெலுங்கு நாட்டுக்குப் போனதில்லை. தெலுங்குப் பாட்டைக் கேட்டதில்லை.
கேட்ட தெல்லாம் தமிழ் நாட்டில் தமிழ்ப்பாட்டு. தமிழ் சங்கீதம். ஆறு காலங்களிலும் கோயில் நாகசுர வாத்திய இசை தேவார இசை அவ்வளவே. அவருக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்த சங்கீத வித்துவான்களின் இசையையும் அவர் கேட்டி ருந்தார் என்பதில் அய்யமில்லை. அவற்றையெல் லாம் தம்முடைய இராம பக்தியோடு சேர்த்துக் குழைத்த போது அது அவருடைய தாய்மொழி யான தெலுங்கில் இசைப்பாட்டாக வெளிவந்தது. பக்தி வெள்ளம் தாய் மொழியாகத்தான் வெளிப்படும். அன்னிய மொழியில் வெளிப்படாது. அவருடைய பக்தி அவருடைய பாட்டுக்களுக்கு ஒப்பற்ற இசை உருவம் கொடுத்தது. (பக்கம் 41-42)
“முத்துசாமி தீட்சிதர் காலம் கிபி.1776-1835. இவர் தணிகை முருகன் அருள் பெற்றவர். இவர் பாடல்கள் எல்லாம் சமஸ்கிருதம் – சில மட்டுமே தெலுங்கு. சைவமும் வைணவமும் பேதமின்றிப் பாடுவார். இவர் சுத்த கருநாடக சங்கீதத்தில் இந்துஸ்தானி இசையையும் மேல்நாட்டு இசை யையும் கலந்துவிட்டார் என்று ஆன்றோர்கள் சொல்லுவார்கள்.
“தீட்சிதர் குறித்த ஒரு செய்தி இங்கு அறியத்தக்கது. அவர் சங்கீதம் கற்றதெல்லாம் கோயில் நாகசுரக்காரர்களிடமே! அவருடைய மாணாக்கர்களும் நாகசுரக்காரரே! அவருடைய கிருதிகள் யாவும் திருப்பாம்புரம் சுவாமிநாதப் பிள்ளையின் தந்தையான திருப்பாம்புரம் நடராசப் பிள்ளையிடமிருந்தே கிடைக்கப்பெற்று வெளி வந்தன. அக்காலத்தில் ஒரு பிராமணர் தீட்சிதர் கிருதிகளை வெளியிட வில்லை. பிள்ளையே வெளியிட்டார். (பக்கம் 47-48)
(“கருநாடக சங்கீதம் தமிழிசை ஆதி மும்மூர்த்திகள்“ மு. அருணாசலம் எழுதிய நூலிலிருந்து)
சங்கீத மும்மூர்த்திகள் தமிழ்நாட்டு நாகசுரக் காரர்கள் இசைத்திருந்த தமிழ்ப்பண்களிலிருந்தே இசையைக் கற்று தெலுங்கில் பாடினார்கள் என்றும் இந்த மூர்த்திகளின் காலத்திற்கு ஈராயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழிசையில் மாதவி போன்றவர்கள் கோலோச்சியிருந்தனர் என்றும் அவ்வழியில் சீர்காழி தமிழிசை மூவர்கள் பாடியிருந்தனர் என்றும் வரலாறு இருக்கும்போது ”முத்துசாமி தீட்சிதரும் தியாகையரும் சியாமா சாஸ்திரியும் மட்டுமே அனைவருக்கும் மேலான வர்கள்” என்று நீதிபதிகள் வரலாறு தெரிந்துதான் கூறினார்களா என்பது அய்யத்திற்கு இட மளிக்கிறது.
போகிற போக்கில் இப்படிச் சொல்லி, தமிழர்தம் வரலாற்றைத் திரித்து எழுத வழி வகுக்கும் இது போன்ற கூற்றுக்களுக்கான காரணம் எதுவென அறிந்து கொள்ள ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால் மட்டுமே தெரியும்.
– ஞான. வள்ளுவன்
வைத்தீசுவரன்கோயில்.
குறிப்பு: சில கருத்துகளில் நமக்கு மாறுபாடு உண்டு. ஆனால் அடிப்படையில் இசை மும் மூர்த்திகள், முத்துத்தாண்டவரும், அருணாசல கவிராயரும், மாரிமுத்தாப் பிள்ளையவர்களுமே என்பதுதான் உண்மை என்பதை இக்கட்டுரை நிறுவியுள்ளது.