கட்டுரை ஆசிரியர்:
பேராசிரியர் இரவிசங்கர் கண்ணபிரான்,
இணைப் பேராசிரியர்,
பாரிஸ் பல்கலைக்கழகம், பிரான்ஸ்
தமிழாக்கம்: செல்வ. மீனாட்சி சுந்தரம்
மாநிலச் செயலாளர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
திராவிடப் பொழில் அக்டோபர்-டிசம்பர் 2023 ஆய்விதழில் “Names of the Nation – A Comparative Study” என்னும் தலைப்பில் வெளிவந்த பேராசிரியர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வழிச்சுருக்கம்.
முன்னுரை:
“இந்தியக் குடியரசு” என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியான அதிகாரப்பூர்வப் பெயரானாலும், உள் நாட்டிலும் உலகளவிலும் பொதுமக்களால் இந்தியா என்றே அழைக்கப்படுகிறது. இந்தியா விடுதலை பெறுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியா என்னும் பெயர் வரலாற்றின் பக்கங்களில் காணக் கிடைக்கிறது.
ஆனால், பல்லாண்டு காலமாகப் ‘பாரத்’ என்னும் பெயரும் – இந்திய நாட்டின் பெயராக அழைக்கும் வழக்கம் உலக அளவில் இல்லையென்றாலும் உள்ளூர் அளவில் அவ்வாறும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
இந்தியா என்னும் பெயர்ச்சொல் அயற்சொல் என்றும், அந்தப் பெயர் காலனியாதிக்கத்தால் நம்மீது திணிக்கப்பட்ட பெயர் என்றும் ஒரு புரிதலற்ற தவறான கருத்து சிலரின் சிந்தையிலே தேங்கியுள்ளது.
இந்தக் கட்டுரை ‘இந்தியா’ மற்றும் ‘பாரத்’ ஆகிய இரண்டு பெயர்களையும் ஆய்ந் திடும் நோக்கில் வரலாறு, மொழியியல், தொன்மவியல், நிலவியல், இலக்கியங்கள், கல்வெட்டுகள், மதப் புராணங்கள் போன்ற பலதரப்பட்ட மூலங்களிலிருந்து அறிவுப் பூர்வமாகத் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆய்வை மேற்கொண்டு உண்மை நிலையை உணர்த்த முயல்கின்றது.
இந்தியா என்னும் பெயர்ச்சொல்லின் பின்புலம்
இந்திய அரசமைப்புச்சட்டம் நமது இந்திய ஒன்றியத்தின் உச்ச உயர்நிலைச் சட்டம் ஆகும். இந்த அரசமைப்புச் சட்டத்தின் விதி 1இன் படி இந்திய ஒன்றியத்தால் ஆளப்படுகின்ற நிலப் பரப்பின் பெயர் இந்தியா என்று அறிவிக்கப்படுகின்றது. அதன்படி நமது நாடு இறையாண்மை கொண்ட இந்தியக் குடியரசாக அறிவிக்கப்பட்டது.
India that is Bharat, பாரத் என்றும் அறியப்படும் இந்தியா என்று விதி ஒன்றில் (Clausel) நாட்டின் பெயர் சுட்டப்படுகின்றது. இந்த இடத்தைத் தவிர அரசமைப்புச் சட்டத்தின் மற்ற எல்லா இடங்களிலும் நாட்டின் பெயர் இந்தியா என்றே சுட்டப்படுகின்றது.
இவ்வாறு அரசமைப்புச் சட்டம் ஏற்பட்ட காலம் தொட்டு இந்தியா என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அறியப்பட்டிருந்தாலும் இந்த இந்தியா என்னும் சொல்லாடல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே உலக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.
அகவழக்கு – புறவழக்கு (Endonym & Exonym) மொழியியல் கோட்பாடுகள்:
அக வழக்கு (Endonym)
ஒரு சமூகம் தனது ஆளுகைக்கு உட்பட்ட கூறுகளை எந்தப் பெயரால் எப்படி சொல்லி அழைக்கும் என்பது அகவழக்காகும்.
புற வழக்கு (Exonym)
ஒரு சமூகம் பிற சமூகத்தின் ஆளு கைக்கு உட்பட்ட நிலப்பரப்பின் அக வழக்கின் படி அழைக்கப்படும் பெயரை எப்படி வேறுபட்ட உச்சரிப்பால் அழைப் பார்கள் என்பது புற வழக்கு ஆகும்.
உலகத்தில் பல மொழிகளும் தனக்கே உரித்தான சிறப்பு ஒலியியல் கொள்கைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன. ஒரு இனக் குழுவினர் தங்கள் மொழியின் ஒரு சொல்லை உச்சரிக்கும் முறையே ஒலியியல் கொள்கை ஆகும். அதே சொல்லைப் பிற மொழி பேசுவோர் உச்சரிக்கும் போது அந்த உச்சரிப்பில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே. தமிழர்கள் அன்றி வேறு எவரும் தமிழின் சிறப்பு ‘ழ’கரத்தை உச்சரிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது.
இந்த உச்சரிப்பு வேறுபாட்டின் காரணமாக அகவழக்கிலே அறியப்படுகின்ற ஒரு சொல் பிற இனக்குழுவினரால் சற்றொப்ப ஒத்து வருகின்ற வேறொரு உச்சரிப்பைக் கொண்ட சொல்லால் அறியப்படும். இந்த உச்சரிப்பு இடர்ப்பாடே அகவழக்கு புற வழக்கு (Endonym & Exonym) என்னும் மொழியியல் கொள்கையின் தோற்றுவாயாகும்.
சில எடுத்துக்காட்டுகளை இங்கு பார்க்கலாம்:
அகவழக்கு – புறவழக்கு
சூங்வா-சைனா
பார்சி – பெர்சியன்
அய்யோனியன் (கிரேக்கம்) – யவனம்
கேடா-கடாரம்
ஜாவ் (ஜாவா) -சாவகம்
நக்கவரம்-நிகோபார்
மாலத்தீவு – மால்தீவ்ஸ்
தமிழ் – திரமிடம், திராவிடம்
இப்படி உலகின் பல மொழிகளும் பிற மொழிச் சொற்களை தங்களின் உச்சரிப் புக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்கின்றன.
இந்தியா என்னும் சொல்லாடல் இந்திய மரபில் வந்ததா?
இந்தியா என்னும் பெயர்ச் சொல் பழைய கிரேக்கத்தின் இவ்டியா (Ivdia) என்ற சொல்லிலிருந்து வந்திருந்தாலும் அது ‘சிந்து’ என்னும் இந்திய மரபுச் சொல்லின் புறவழக்காகும். அதாவது இந்திய அகவழக்கிலே வழங்கப்பட்ட சிந்து என்னும் பெயர்ச் சொல்தான் புறவழக்கிலே இந்தியா என்று திரிந்து வந்துள்ளது.
சிந்து என்னும் இந்திய அக வழக்குச் சொல் கிரேக்கத்திற்குச் செல்வதற்கு முன்பாக அதன் பயணத்திலே இந்தோ ஆரியன், இந்தோ ஈரானியன் ஆகிய மொழிக் குடும்பங்களின் ஊடாகப் பரவிப் பின்னரே அந்தச் சொல் கிரேக்கத்தைச் சென்றடைகின்றது.
பழைய பாரசீக மொழியும் அவெஸ்டன் மொழியும் சொல்லாட லிலும் இலக்கணத்திலும் வேதகால சமஸ் கிருதத்தோடு பெரிதும் ஒத்திருக்கின்றன என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.
சிந்து என்னும் சொல் பொதுவாக நீர் நிலைகளைக் குறித்தாலும் ஒரு நதியின் பெயராக பழைய வேத காலத்தில் ரிக் வேதத்தில் (மண்டலம் 10, சூக்தா 75, ரிக்ஸ் 1&2) குறிப்பிடப்படுகின்றது. பின்னர் அந்தச் சொல்லே சிந்து நதிக்கு அப்பால் உள்ள நிலப்பரப்பைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகவும் பிறப்பெடுக்கின்றது
சிந்து என்று பழைய வேதகால சமஸ் கிருதத்தில் உச்சரிக்கப்படும் சொல்லானது ஹிந்து என்று பழைய பாரசிக மொழியிலே உச்சரிக்கப்படுகின்றது. சமஸ்கிருதத்தின் ‘ச’கரம் பாரசீகத்தில் ‘ஹ’கரமாகத் திரிகிறது. இந்த உச்சரிப்பு மாறுபாடானது கி.மு. 850-600 காலத்தில் தோன்றியது என்பது தமிழ் சமஸ்கிருத அறிஞர் அஸ்கோபார்போலாவின் கருத்தாகும்.
கி.மு.ஆறாம் நூற்றாண்டில் வடிக்கப் பட்ட பாரசீக மன்னன் டாரியஸ் – 1 (DARIUS-1) அவர்களின் சிலைப் பீடத்திலே முதன்முதலாக ஹிந்து என்னும் சொல்கண்டறியப்படுகின்றது. இன்றும் இந்தச் சிலை ஈரானின் டெக்ரான் நகர அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப் பட்டுள்ளது.
இப்படியாகச் சிந்து நதி என்பது ஹிந்து நதி என்று இந்தோ ஈரானிய மொழியில் மாற்றம் பெறுகின்றது.
சிந்து நிலப்பகுதி என்பது வேதத்தில் ‘சப்த சிந்து’ என்று அறியப்படுகின்றது. அதுவே ‘ஹப்த ஹிந்து’ என்று ‘ஜெண்ட் அவஸ்தாவில்’ (Zend Avesta) அறியப் படுகிறது.
கிரேக்கக் கடலோடி சைலாக் (Scylax) என்பார் டேரியஸ் மன்னனின் ஆணைப்படி சிந்து நதியைக் கடந்து சென்றார் என்னும் செய்தியைக் கிரேக்க வரலாற்று ஆசிரியர் ஹீரோடாட்டஸ் (Herodotus) பதிவு செய்துள் ளார். ஆக, சிந்து நிலப்பரப்பு என்பது கிரேக்கத்திலும் பாரசீகத்தின் வாயிலாக அறியப்பட்டுள்ளது.
சிந்து என்பது பாரசீகத்தில் ஹிந்துவாக மாறிப் பின்பு அது கிரேக்கத்தில் இண்டோஸ் ஆக மாறுகிறது. ஏனென்றால் கிரேக்கத்தில் H என்னும் ஒலியை கிரேக்கர்கள் ஒலிப்ப தில்லை. எனவே, ஹிந்து என்பதை இண்டோஸ் என மாற்றி கிரேக்கத்தில் ஒலித் திருக்கிறார்கள்.
(SINDU – HINDU – INDU – INDOS)
பின்னர் இந்தச் சொல் லத்தீனிலும் கொய்ன் கிரேக்கத்திலும் (Koine Greek) இந்தியா என்றும், பிரெஞ்சு மொழியில் இண்டே என்றும், ண்டி என்று பழைய ஆங்கிலத்திலும் தற்கால ஆங்கிலத்திலும் இந்தப் பெயர்ச் சொல் இந்தியா என்று மாறி ஒலிக்கின்றது.
இந்தச் சொற்களை ஒப்பு நோக்கி உணருங்கால் இவை அனைத்தும் வேதத்தில் குறிப்பிடப்பட்ட சிந்து நிலப் பகுதியையே குறிக்கின்றது என்பது புலனாகும். உச்சரிப்பு வேறுபாட்டால் பிற சொற்களால் வேற்று மொழியில் வழங்கப்படுகின்ற அந்தச் சொற்கள் அந்தச் சொல்லின் வேத மூலத்தை மாற்ற இயலாது அதே பொருளைக் குறிக்கவே பயன் பட்டது. எனவே ரிக் வேதத்தில் தனது வேர்ச்சொல்லைக் கொண்டுள்ள இந்தியா என்னும் சொல் இந்திய மரபின் சொல்லே! அது அயலவர் சொல் இல்லை என்பது திண்ணம்.
பாரதம் என்னும் பெயர்ச்சொல்லின் பின்புலம்:
பாரத் அல்லது பாரதம் என்னும் பெயர்ச் சொல்லின் சமஸ்கிருத வேர்ச்சொல் பர், பாரா (bhr,bhara) என்பதாகும். இந்த வேர்ச் சொல்லின் பொருள் சுமத்தல் அல்லது தாங்குதல் ( To carry or To Bear) என்பதாகும். தமிழில் கூடப் பாரம் என்னும் சொல் புழக் கத்தில் இருந்தாலும் அதன் தமிழ்ச் சொல் சுமை என்பதாகும்.
யாகத்தில் வார்க்கப்படுகின்ற பொருட்களை எல்லாம் யாகத் தீயானது வானுலகில் வாழும் தேவர்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஊடகமாகச் செயல் புரிவதால் நெருப்பிற்குப் ‘பரதா’ bharatah – bharata என்னும் பெயர் வழங்கப்படுகிறது.
அக்னி பகவானை ‘ஹவ்ய வாகனா’ என்ற பெயராலும் அழைக்கும் வழக்கம் உள்ளது. யாகத்தில் பெய்யப்படுகின்ற நெய்யை யாக நெருப்பானது தேவர்களிடம் கொண்டு சேர்ப்பதால் அது ‘ஹவ்ய வாகனா’ என்று அழைக்கப்பட்டது.
ஆதிசங்கரரும் தனது ‘சங்கர பிரக தாரன்யகா பாஷ்யா’ என்னும் நூலில் ‘அக்னி பரதா’ (agnir bharata) என்று நெருப்பினை அழைப்பார்.
ஆக, பரதா என்னும் சமஸ்கிருதச் சொல் சுமத்தலையும் தூக்கிச் செல்வதையும் குறிப்பிடும் சொல் என்பது தெளிவாகின்றது.
பாரதி என்பது பரதா என்னும் சொல்லின் பெண்பாற் பெயர் என்று தனது ரிக் வேத சம்ஹிதாவில் சயனாச்சாரியார் அவர்கள் குறிப்பிடுவார்கள். நெருப்பில் நெருப்பில் தோன்றும் ஒளியைச் சுமப்பவர் பாரதி என்று பின்னாளில் பாரதி என்ற சொல்லுக்கு ஒளி என்னும் பொருளும் வந்து சேர்ந்தது.
பாரத் என்னும் சொல் இந்திய மரபுச் சொல்லா?
பாரத் என்னும் சொல்லை ஒரு சமஸ்கிருத சொல்லாகக் குறிப்பிட்டாலும் அந்தச் சொல் பிராகிருத மொழியிலும் அதே பொருளை உணர்த்தும் சொல்லாக கையாளப்படுவது ஒப்பு நோக்கத்தக்கது.
மேலும் அய்ரோப்பிய ஈரானிய மொழிகளிலும் இதே பரா பரதா என்னும் சொல் சுமத்தலையும் தாங்குதலையும் குறிக்கின்ற ஒரு சொல்லாக வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த வகையில் இந்தோ ஈரானியன் இந்தோ ஆரியன் குடும்பத்தின் பல மொழிகளும் தங்களுக்கு இடையே மொழிக் கட்டமைப்பில் ஒரு பொதுமையைக் கொண்டுள்ளன. இந்த மொழிகளின் அகர முதலியின்படி ‘பரதா’ என்னும் வார்த்தை எவ்வாறு கையாளப்படுகிறது என்பதைக் கீழே பார்ப்போம்:
புரோட்டோ இந்தோ ஈரானியத்தில் பரதா என்பது பாரதி என்றும்
புரோட்டோ இண்டோ அய்ரோப் பியத்தில் அது பேரெதி என்றும்
வேதகால சமஸ்கிருதத்தோடு நெருங்கிய தொடர்புடைய பழைய ஈரானிய அவஸ்தன் மொழியில் பாரைதி என்றும்
பாரசீக மொழியில் பர்தன் என்றும்
அராபிய மொழியில் பரடா என்றும்
அழிந்து பட்ட ஜெர்மானிய கோத்திக் மொழியில் பாய்ரன் என்றும்
லத்தீன் மொழியில் பெரோ போர்ட்டோ என்றும்
ஜெர்மனிய மொழியில் ஜிபாரென் என்றும்
ஆங்கிலத்தில் பியர், பர்டன் என்றும் வழங்கப்படுகிறது.
எனவே, பாரத் என்னும் சமஸ்கிருதச் சொல்லானது அதேபொருள் படும்படி இந்தோ ஆரியன் இந்தோ ஈரானியன் இந்தோ அய்ரோப்பிய மொழிக் குடும்பங்களில் பல மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே பாரத் என்னும் சொல் இந்திய மரபுக்கு அதாவது சமஸ்கிருத மரபுக்கு மட்டுமே சொந்தமான ஒரு சொல் என்று கூறுவது ஒரு தவறான புரிதலால் சொல்லப்படும் கூற்றே ஆகும்.
ஆனாலும், பாரத் என்னும் சொல் ஒரு அயற்சொல் என்று நாம் கூறி விடவும் இயலாது.
பாரத் என்னும் சொல் ஒரு வேர்ச்சொல். இந்த வேர்ச் சொல்லானது தொடர்புடைய அத்தனை மொழிக் குடும்பங்களிலும் அதே பொருளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதே உண்மை. பிற மொழிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருவதால் இது இந்திய சமஸ்கிருத மரபுக்கு சொந்தமில்லாத சொல் என்றும் கூறி விட இயலாது.
அதேபோல் இந்தியா என்னும் சொல்லும் இந்திய சமஸ்கிருத மரபின் வழி வந்த சிந்து எனும் அகவழக்குச் சொல்லின் கிரேக்க மொழியில் வழங்கும் புறவழக்குச் சொல் ஆகும்.
பரதப் பழங்குடியினர்
முந்தைய வேத காலத்தில் பரதர் என்னும் பழங்குடியினர் சரஸ்வதி எனும் புராண நதிக்கரையில் வசித்து வந்துள்ளனர். அந்த இடம் தற்காலத்தில் ஹரக்ஸ்வதி நதி அல்லது ஹெல்மான்ட்-அர்கன்டாப் என்னும் ஆப்கானிஸ்தானத்தின் நதிப் பகுதியாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
இந்தப் பழங்குடியினர் பற்றிய பல குறிப்புகள் ரிக் வேதத்தின் முதல் மண்டலத்தில் பல இடங்களில் காணப் படுகின்றன. இந்தப் பழங்குடியினர் ஹிந்து குஷ் மலையில் அமைந்துள்ள கைபர் கண வாயையும் அய்ந்து நதிகள் பாய்கின்ற பஞ்சாப் பகுதியையும் கடந்து வந்து இறுதி யாகக் கங்கைச்சமவெளிப் பகுதியில் குடியேறி யுள்ளார்கள்.
பரதா என்பது சுமந்து செல்லும் ஊடகம் என்பதை நாம் முன்னரே கண்டுள்ளபடி இந்த பரதப் பழங்குடியினர் இந்தோ ஆரியப் பண்பாட்டை மேற்கிலிருந்து கிழக்கிற்குச் சுமந்து வந்ததால் பரதப் பழங்குடியினர் எனப் பெயர் பெற்றனர்.
இந்த பழங்குடியினர் பற்றிய நுணுக்க மான பல குறிப்புகளும் இவர்களின் இடப்பெயர்வுகளும் இவர்கள் பங்கேற்ற பல போர்களைப் பற்றிய குறிப்புகளும் ரிக் வேதத்தின் மூன்று மற்றும் ஏழாவது மண்டலங்களில் குறிப்பிடப்படுகின்றது.
இந்தப் பழங்குடியின் தலைவர்களாக திவோதாசா மற்றும் சுதாஸ் ஆகியோரின் பெயர்களும் இவர்களுக்கு உதவி செய்தவர் களாக பரத்வாஜா, விசுவாமித்ரா, வசிஷ்டா ஆகியோரின் பெயர்களும் ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலத்தில் வருகின்ற காயத்ரி மந்திரத்தில் குறிப்பிடப்படுகிறது. இடம்பெயர்ந்து யமுனை நதிக்கரைக்கு வந்து சேர்ந்த இந்த பரதப் பழங்குடியினர் அந்தப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த பேடா மன்னனைத் தோற்கடித்துப் புரு இனத்தவரோடு சேர்ந்து குரு ராஜ்யத்தை நிறுவுகின்றனர்.
மகாபாரத் இதிகாசம் இந்தக் குரு வம்சாவளியினரைப் பற்றிக் குறிப்பிடுகையில் சகுந்தலை-துஷ்யந்தன் ஆகியோருக்குப் பிறந்த பரதன் என்பான் மன்னனாக நாடாண்டதைக் குறிப்பிடுகின்றது.
சந்திர வம்சத்தைச் சேர்ந்த இந்த பரத மன்னனின் பெயராலேயே இந்த நாடு பாரத நாடு என்று அழைக்கப்படுகின்றது என்றும் நம்பப்படுகிறது. ஆனால், இந்தப் பரத மன்னன் சந்திர வம்சத்தைத் தோற்று வித்தவன் அல்லன். சந்திர வம்சாவளியிலே இடையில் வந்த ஒரு மன்னன். அவன் பெயரால் நாடு அழைக்கப்படுவது என்பது ஏற்புடைத்தன்று.
இந்தப் பரத மன்னன் ஒரு வரலாற்று மாந்தர் அல்ல. அதற்கு மாறாக மகாபாரதம் என்னும் இதிகாசக் கதையின் பாத்திரம். அந்தக் கதையின்படி பரத மன்னன் 27,000 ஆண்டுகள் நாட்டை ஆண்டான் என்றும் இந்த பூமியில் அமைந்திருந்த எல்லா நாட் டையும் தோற்கடித்துக் கைப்பற்றினான் என்றும் அறிவியலுக்கும் வரலாற்றுக்கும் பொருந்தாத கட்டுக்கதைகளால் வடிவமைக் கப்பட்ட கதாபாத்திரமே பரத மன்னன் என்னும் மகாபாரதப் பாத்திரம் ஆகும்.
மகாபாரதத்தின் பீஷ்ம பார்வதத்தின் ஜம்பு கண்ட நிர்மாணப் பகுதி ஒன்பதில் பரதா என்னும் சொல் கையாளப்படுகின்றது. ஆனால், அது பரத மன்னனைக் குறிக்க வில்லை அது பரதப் பழங்குடியைக் குறித்தது.
திருதராஷ்டிரனை ‘ஓ பரதா’ என்று சஞ்சயன் அழைப்பதாக ஒரு இடம் வருகின்றது. இது பரதப் பழங்குடியினரைப் பரதா என்றழைக்கும் பழக்கம் இருந்துள்ளதைக் காட்டுகின்றது. எனவே, பரத கண்டம் பரத வர்ஷா என்பது பரதப் பழங்குடியினர் ஆண்டிருந்த நிலப்பகுதியைக் குறித்தது எனலாம்.
பரதநாடு என்பது வட இந்தியா மட்டுமா? தென்னிந்தியா அந்த நாட்டின் ஒரு பகுதி இல்லையா?
பரதநாடு என்பது மகாபாரதக் கதையின்படி பரத இனக் குழுவினர் ஆண்ட வட இந்தியாவை உள்ளடக்கிய ஒரு பகுதியே ஆகும். அதில் தென்னிந்திய நிலப்பரப்பு இணையவில்லை என்பதும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கங்கைச் சமவெளி முடிவுக்கு வரும் இடமே பரத நாட்டின் எல்லையாக மகாபாரதத்தில் காட்டப்பட்டுள்ளது.
விந்திய மலைக்குத் தெற்கே அமைந்த நிலப்பகுதியை ஆண்டு கொண்டிருந்த மன்னர்களாகத் திராவிடர்களையும், கேரளர்களையும், கர்நாடகர்களையும், சோழர்களையும் மற்றும் பல மன்னர் களையும் மகாபாரதம் சுட்டிக்காட்டி அவர் களும் அந்தக் குருச்சேத்திரப் போரிலே பங்கேற்றதாகக் குறிக்கின்றது.
மனுஸ்மிருதியில் ((Manu 2-6-23) தென்னிந்திய நிலப்பரப்பு’பரத வர்ஷா நாட்டின் பகுதியாகச் சுட்டிக் காட்டப்படவில்லை. அதற்கும் மேலாக இந்தத் தென்னிந்திய நாட்டினரை ‘மிலேச்ச தேசத்தினர் அதாவது காட்டுமிராண்டிகள், கீழ்நிலை ஜாதியினர், சமஸ்கிருதம் அறியாத அயலவர்கள் என்று குறிப்பிடுகின்றது.
மகாபாரதத்தின் அனுசாசன பருவா (Book 13, Sec 35) உயர் ஜாதிப் பார்ப்பனர்களின் வெறுப்பைச் சம்பாதித்த கீழ் ஜாதி சூத்திரர் களாகத் தென்னிந்திய மக்களையும் மன்னர்களையும் குறிப்பிடுகின்றது.
மேகலா, திராமிடா என்னும் சொற்கள் இந்தப் பகுதியிலே குறிப்பிடப்படுகின்றது.
புராணங்களில் பரதவர்ஷா
பாகவத புராணம், வாயுபுராணம், அக்னி புராணம், மார்க்கண்டேய புராணம், ஸ்கந்த புராணம் ஆகிய புராணங்களில் பரதவர்ஷத்தைப் பற்றிய கற்பனைக் கதைகள் அள்ளிவிடப்பட்டிருக்கின்றன.
வாயு புராணத்தில் பாரத வருஷத்தில் ஒன்பது தீவுகள் இருந்தன என்றும், அவற்றிற்கு இடையே கடல் இருந்தது என்றும், ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்கு யாரும் போக முடியாது என்றும் கதை சொல்லப்பட்டிருக்கின்றது.
பரதவர்ஷத்தைச் சுற்றி ஏழு கடல்கள் இருந்ததாக இந்த புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அவை:
உப்புக்கடல்
கரும்புச் சாற்றுக் கடல்
மதுக்கடல்
வெண்ணை நெய்க் கடல்
தயிர்க்கடல்
பாற்கடல்
நன்னீர்க் கடல்
பரதவர்ஷத்தின் நிலப்பரப்பைக் குறிப்பிடும் மேற்கண்ட குறிப்புகள் எல்லாம் கற்பனையில் விளைந்த கதைகளே என் பதைச் சொல்லத் தேவையில்லை.
ஹத்திக்கும்பா கல்வெட்டு சொல்வதென்ன?
இன்றைய ஒடிசா மாநிலத்தின் உதயகிரி மலைப்பகுதியில் பிராக்ருதி மொழியில் பிராமி எழுத்துருவால் வெட்டப்பட்டுள்ள ஹத்திகும்பாக் கல்வெட்டு அந்தப் பகுதி யைக் காரவேல் மன்னன்
கி.மு. முதலாம் நூற்றாண்டில் ஆண்ட வரலாற்றுச் செய்தியைப் பதிவு செய்கின்றது.
17 அடிகள் கொண்ட அந்தக் கல்வெட் டிலே பத்தாவது அடியிலே ‘பாரத வாஸா’ என்ற சொற்றொடர் வருகின்றது. காரவேல் மன்னன் பார்த் வர்ஷா நாட்டின் மீது படை எடுத்துச் சென்ற செய்தியை இந்தக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. காரவேல் மன்னன் ‘கலிங்காதிபதி’ என்றும், ‘கலிங்க ராஜ வம்ச’ என்றும், ‘கலிங்க நகரி’ என்றும், காரவேல மன்னன் கலிங்க சாம்ராஜ்யத்தின் குடிமகனாகவே இந்தக் கல்வெட்டில் பதிவுசெய்யப் பட்டிருக்கின்றார் என்பதும் பாரதவர்ஷத்தில் கலிங்க நாடு சேர்ந்து இருக்கவில்லை என்பதும் இந்தக் கல்வெட்டு அறிவிக்கும் செய்திகளாகும்.
இந்த காரவேல் மன்னனை, 113 ஆண்டு களாகக் கலிங்கப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த திராவிட மன்னர்களின் கூட்டமைப்பை முறியடித்தவனாகவும், பாண்டிய மன்னர்களிடம் இருந்து முத்துக் களைப் பரிசாகப் பெற்றவனாகவும் இந்தக் கல்வெட்டுக் காட்சிப்படுத்துகின்றது.
இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய செய்திகளாக இந்த கல்வெட்டு அறிவிக்கும் முக்கியமான மூன்று முடிவுகளாவன:
1. கி.மு. முதலாம் நூற்றாண்டிலேயே பரதவர்ஷா நாடு அமைந்திருந்தது.
2. பரதவர்ஷா நாடு என்பது வட இந்தி யாவின் கங்கைச் சமவெளிப் பகுதி மட்டுமே.
3. அந்தக் காலக்கட்டத்தில் கலிங்கப் பகுதியும் தென்னிந்தியப் பகுதியும் பரதவர்ஷா நாட்டின் பகுதிகளாக இருக்க வில்லை.
சமண மதத்தின் பரத மன்னன்
பரதவர்ஷா என்பது பார்ப்பனிய மதத்தின் சொல்லாடல் மட்டும் அன்று. அந்தச் சொல் லாடல் சமணத்திலும் பவுத்தத்திலும் கூடப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பாரத் என்னும் சொல் மத ரீதியான சொல் லாடல் இல்லை. அது பல பண்பாடுகளை தன்னுள்ளே கொண்ட மானுடவியலின் ஒரு சொல்லாடலாகும்.
சமண மதக் குறிப்புகளின்படி முதலாம் தீர்த்தங்கரர் ரிஷப தேவரின் நூறு மகன் களில் ஒருவன்தான் பரதன் ரிஷப தேவரின் மகளின் பெயர் பிராமி என்றும், அது அன்றைக்கு வழக்கத்திலிருந்த எழுத் துருவுக்குப் பெயராகக் (பிராமி எழுத்து) கொள்ளப்பட்டது என்பதும் கூடுதல் செய்தி.
கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த சமண இலக்கியமான ஆதி புராணத்தின்படி ரிஷப தேவர் தனது நாட்டை 100 மகன் களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்து ஆட்சி செய்ய வைத்துள்ளார். ஆனால் பரதன் மற்ற 98 சகோதரர்களையும் போரில் தோற்கடித்து அவர்களுடைய பகுதியையும் கைப்பற்றிக் கொள்கின்றான்.
இறுதியாக ஒரே ஒரு சகோதரன் பாகுபலி மட்டும் இன்னும் தனது நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றான். பாகுபலியுடன் பரதன் செய்த போரிலே பரதன் தோற்றுப் போய் விடுகின்றான். ஆனால் பாகுபலி சகோதர பாசத்தால் தனது நாட்டை பரதனுக்கு அளித்துவிட்டுத் தான் ஒரு சமணத் துறவியாகப் போய் விடுகின்றான் என்று ஆதி புராணம் சொல்கின்றது.
இன்றைக்கும் கர்நாடகத்தின் சரவண பெலகுலா சமணக் கோயிலிலே மிக உயர்ந்த பாகுபலியின் சிலைக்கு அருகிலே பரத மன்னனின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது என்பது இந்தக் கதையை உறுதி செய்வதாக உள்ளது.
மேலும் இந்த சமணமதக் கதையைப் பார்ப்பனிய விஷ்ணு புராணமும் சிறீமத் பாகவதமும் உறுதி செய்கின்றன. ரிஷப தேவரின் மூத்த மகனான பரதனின் பெயராலேயே இந்த நாடு பாரதவர்ஷா என்று அழைக்கப்படுவதாக சிறீமத் பாகவதம் (5-49) அறுதியிட்டுச் சொல்கின்றது.
மேலே சுட்டப்பட்ட வேதிய இந்து மதப் புராணங்களின்படியும் சமண மத ஆதி புராணத்தின்படியும் முதலாம் தீர்த்தங்கரர் ரிஷப தேவனின் மகனான பரதனே இந்த நாட்டை பேரரசனாக ஆண்ட சக்கரவர்த்தி என அறிய முடிகின்றது.
அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் விவாதங்கள்
பாரத் என்று அறியப்படும் இந்தியா
அரசமைப்புச் சட்டத்தின் முதல் விதியில் நாட்டின் பெயர்
அறிவிக்கப்படுகின்றது. அதில் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம்
என்று வரையறுக்கப்பட்டது.
இந்த முதல் விதியின் மீது நடந்த விவாதத்தில் ஒரு சிலரின் கருத்துக்களை கீழே பார்ப்போம்.
திரு. அனந்த சயனம் அய்யங்கார்: இந்தியா என்ற சொல்லுக்கு பதிலாக பாரத், பாரத் வர்ஷா அல்லது ஹிந்துஸ்தான் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்கிறார்.
திரு. லோக்நாத் மிஸ்ரா அவர்களும் பாரத் வர்ஷா என்ற பெயரை ஆதரிக்கிறார்.
திரு.சிபன்லால் சக்சேனா அவர்கள் இந்தியா என்ற வார்த்தையைக் கூடாது என்றும், பாரத் என்ற வார்த்தை மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், இந்திய நாட்டின் தேசிய மொழியாக ஹிந்தி அறிவிக் கப்பட வேண்டும் என்றும் வந்தே மாதரம் நாட்டின் தேசிய கீதமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் வாதிடுகின்றார்.
திரு.எச்.வி.காமத் என்பவர் மாநிலங்கள் என்ற வார்த்தையை மாற்றிப் பிரதேசங்கள் என்னும் ஹிந்தி வார்த்தையை பயன்படுத்தப் பரிந்துரைக்கின்றார்.
இந்த வேளையில் குறுக்கிட்ட பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாடு,பல மொழிகளைக் கொண்ட ஒரு நாடு. எனவே, ஒரு மொழியை மட்டும் தேசிய மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கூறுவது சரியான முடிவு அல்ல என்று தனது கருத்தை முன்வைத்து உறுப்பினர்கள் தங்களின் சக்தியை அதி முக்கியத்துவம் வாய்ந்த அரசமைப்புச் சட்டத்தின் பிற பிரிவுகளில் செலவழிக்க வேண்டுமென்றும் இதுபோன்ற முக்கியத்துவம் இல்லாத பிரச்சினைகளில் அதிக நேரம் செலவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பண்டித நேரு அவர்களின் கருத்துக்கு ஒத்திசைவு தந்து பிறர் கொண்டு வந்த திருத்தங்கள் அனைத்தையும் எதிர்க்கின்றார்.
பின்னர் ஒரு சமரசத் தீர்வாக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பாரத் என்று அறியப் படும் இந்தியா India that is Bharat என்னும் திருத்தத்தை முன் வைக்கிறார்.
திரு.எச்.வி.காமத் அவர்களும் திரு. சேத் கோவிந்த் தாஸ் அவர்களும், பாரத் அல்லது ஹிந்து என்னும் சொல் முதலில் வரவேண்டும் இந்தியா என்னும் சொல் பின்னால் வரவேண்டும் என்னும் திருத்தத்தை முன்வைக்கின்றார்கள்.
திரு. கலா வெங்கட் ராவ் அவர்கள், ஹிந்த் & இந்தியா என்ற சொற்கள் அயற் சொற்கள் என்னும் கருத்தியலால் இந்தி மொழியின் பெயரையே பாரதி என்று மாற்ற வேண்டும் என வேண்டினார்.
திரு.கமலபதி திரிபாதி அவர்கள் மேலுலகத்தில் வசிக்கின்ற கடவுள்கள் பாரத் என்றே இந்த நாட்டின் பெயரை நினைவில் வைத்துள்ளார்கள் என்று சொல்கின்றார்.
இந்த நிலையிலே அண்ணல் அம் பேத்கர் அவர்கள் குறுக்கிட்டு, “இந்த விவா தங்கள் எல்லாம் தேவையா இன்னும் முக்கியமான வேலை நிறைய இருக்கின்றது” என்று அவையின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.
பின்னர் திருத்தங்கள் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டு அண்ணல் அம்பேத்கரின் திருத்தமே அரசமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது அதன்படி India that is Bharat இந்தியா எனும் பாரத் என்னும் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
முடிவுரை:
இந்தக் கட்டுரையில் வரலாற்றின் அடிப் படையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா மற்றும் பாரத் ஆகிய சொல்லாடல்களைப் பற்றி ஆராய்ந்தபின் இந்த நாட்டின் பெயராக அந்தச் சொற்கள் எப்படி நிறுவப்பட்டன என்பதை ஆய்ந்த பின்னே நாம் கீழ்க்கண்ட முடிவுகளை எளிதாக எட்டலாம்.
1. இந்தியா மற்றும் பாரத் ஆகிய இரண்டு பெயர்களுமே காலனி ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போரில் மக்களுக்கு உந்துதல் தந்தது.
2. பல நூற்றாண்டுகளாக இந்த நிலப் பரப்பு இந்தியா என்னும் பெயராலும் அறியப்பட்டிருந்தது.
3. பாரத் என்னும் பெயரும் வெகு கால மாக இங்கு புழக்கத்தில் இருந்து வந்துள்ளது.
4. இந்தியா என்னும் பெயர் காலனியாதிக்கம் நம் நாட்டின் மீது திணித்த பெயர் என்று கருதுவது தவறாகும். ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிந்து என்னும் சொல்லாடலின் அகவழக்கின் புறவழக்கே (ணிஜ்ஷீஸீஹ்னீ ஷீயீ ணிஸீபீஷீஸீஹ்னீ) இந்தியா என்னும் சொல்லாடலாகும். இந்தியா என்பது அயற்சொல் இல்லை.
5. யாரேனும் இந்தியா என்னும் சொல்லை அயற்சொல்லாகக் கருதி அதன் மீது வெறுப்பை உமிழ்ந்தால், பாரத் என்னும் சொல்லும் ஈரானிய வேர்ச்சொல்லிலிருந்து பிறந்த சொல் என்பதால் அதையும் அயற் சொல்லாகக் கருதி அதன் மீதும் வெறுப்பை உமிழ வேண்டும்.
6. யாக வேள்வியில் வார்க்கப்படுகின்ற காணிக்கைகளை நெருப்பானது மேலுல கில் வாழ்கின்ற தேவர்களிடம் கொண்டு சேர்ப்பதாகக் கருதப்படுவதால் நெருப்புக்கு பரதா என்னும் பெயர் வந்தது. இதனாலேயே நெருப்புக்கு ‘ஹவ்ய வாகனா’ என்ற பெயரும் வந்தது.
7. பரதப் பழங்குடியினர்வடமேற்கிலிருந்து இடம்பெயர்ந்து வந்து கங்கைச் சமவெளியில் குடி அமர்ந்து குரு ராஜ்ஜியத்தை அமைத் தார்கள்.
8. மகாபாரதத்தில் வருகின்ற பரத என்னும் சொல்லாடல் சகுந்தலை துஷ்யந்தன் ஆகியோரின் மகனான பரதனைக் குறிக்கவில்லை. அது பரதப் பழங்குடியினரைக் குறிக்கவே பயன் படுத்தப்பட்டது.
9. சமண மதத்தின் முதலாம் தீர்த்தங்கரர் ரிஷபதேவரின் மகனான பரதச் சக்கரவர்த்தியின் பெயராலேயே இந்த நாடு பரதவர்ஷா என்று அழைக்கப்பட்டது என்பதை சமணத்தின் ஆதி புராணத்தின் வழியாகவும் அதே கருத்தை உறுதி செய்யும் வேதியத்தின் விஷ்ணு புராணம் சிறீமத் பாகவதத்தின் வழியாகவும் நாம் அறிந்தோம்
10. பரதவர்ஷத்தில் தென்னிந்தியப் பகுதிகள் அடங்கி இருக்கவில்லை. மநுவின் ஸ்ருதிகள் இந்தக் கூற்றை உறுதி செய்கின்றன. கங்கைச் சமவெளிப் பகுதி மட்டுமே பரதவர்ஷா நாட்டின் எல்லைப் பரப்பாக அமைந்திருந்தது.
11. மிகப் பழைமையான தொன்மவியல் ஆதாரமான ஹத்திகும்பா கல்வெட்டு கி.மு. முதலாம் நூற்றாண்டிலேயே பரதவர்ஷா இருந்துள்ளதையும் கலிங்கமும் தென்னாடும் பரதவர்ஷத்தில் இணையாமல் தனித்து இருந்ததையும் காட்சிப்படுத்தியது.
12. அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் விவாதங்களில் சில உறுப்பினர்கள் இந்தியா என்னும் சொல் அயற்சொல் என்று கருதி அதை நீக்க முற்பட்டதுடன் ஹிந்தி மொழியின் மேல் கொண்ட அபி மானத்தாலும் இந்து மதத்தின் பால் கொண்ட அபிமானத்தாலும் பாரத் என்ற சொல்லே நம் நாட்டின் பெயராக இருக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
13. அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் தலைவராக இருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ‘இந்தியா என்னும் பாரத்’ என்னும் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து வரலாற்றின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா பாரத் ஆகிய இரண்டு பெயர்களையும் அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெறச் செய்தார்.
14. மானுடவியலின் அடிப்படையிலும் வரலாற்றின் அடிப்படையிலும் மேற்கொள் ளப்பட்ட இந்த ஆய்வு என்பது இந்த இரண்டு சொற்களின் உண்மைத் தன்மையை உணர வைக்கின்றது.