முத்தமிழறிஞர் கலைஞர்
‘பாறையிலே பயிர் செய்து, பயன் காண முடியுமா?’ என்று பலரும் கேட்ட நேரத்திலே அவர், ‘முடியும்’ என்ற கூறி – ‘விதை தூவி விளைவித்து’ வெற்றி அறுவடையும் செய்து காட்டினார்.
‘வானவில்லில் நாணேற்றிக் கணை தொடுக்க முடியும்’ என்று யாராவது எண்ணுவார்களா? ஆனால், அவரோ, வானவில்லைப் பூமிக்குக் கொண்டு வந்து வளைத்து நாணேற்றிச் சுடுசரங்களைப் பொழிந்து காட்டினார்.
‘பொங்கி வழிந்து வெள்ளமெனப் பெருக்கெடுத்தோடும் எரிமலைக் குழம்பில் நீச்சல் அடித்து எதிர்க்கரைக்குச் செல்வோம்’ என்று எவராவது துணிந்ததுண்டா? ஆனால், அவர் அதில் நீச்சல் அடிப்பதையே விரும்பினார். வென்று காட்டினார் எதிர்க்கரைக்குச் சென்று காட்டினார்.
பாறையிலே பயிர் செய்வதை விடக் கடுமையான பணியாகத் தானிருந்து, பத்தாம் பசலிகளாக்கப்பட்டு விட்ட தமிழ்ச் சமுதாயத்தைப் பகுத்தறிவு புரியினராக ஆக்குவது!
நெற்றியில் பிறந்த வானவில் மனிதர்கள்!
வெகு உயரத்தில் இருக்கிறோம்; காரணம் நாங்கள் கடவுளின் நெற்றியில் பிறந்தவர்கள் என்று வேத புராணங்களைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்த வானவில் மனிதர்களைக் கீழே இழுத்து வளைத்து நாணேற்றி வேத புராணங்களின் மீது சுடு சரங்களை வீசிய துணிவும் ஆற்றலும் அவரைத் தவிர தமிழ்நாட்டில் வேறு யாருக்கு முதன்முதலாக ஏற்பட்டது?
எரிமலை எதிர்ப்புகள்!
வைதீக ஏற்பாடுகளைத் தகர்ப்பதா? அய்தீகங்களின் தலையில் கை வைப்பதா? இதிகாச புராணங்களை எதிர்த்துப் பேசுவதா? ஆண்டான் அடிமை என்பது ஆண்டவன் கட்டளையன்றோ; அந்த அடித்தளத்தையே அழிக்க முனைவதா? ஜாதிகள், சாத்திரங்களால் ஒப்புக் கொள்ளப்பட்டவை! அதனை மறுத்துச் சமநீதி வேண்டு மென்பது சாத்திரத்தையே தூளாக்கும் முயற்சியாகும். இதனை விட்டுக் கொண்டிருப்பதா என்று எரிமலையின் நெருப்புக் குழம்பெனப் பேரெதிர்ப்பு கிளம்பியபோது அதனைத் தாங்கி நிற்கும் மன உறுதியினை அவரன்றோ பெற்றிருந்தார். சற்றொப்ப ஒரு நூற்றாண்டில் அரை நூற்றாண்டுக்கு மேலாக பொது வாழ்வுக்கே தன்னை ஆட்படுத்திக் கொண்டு ஓயாமல் உழைத்து ஒரு பெரும் சமுதாயத்தை விழிப்படையச் செய்து தலைநிமிர்ந்து தன்மான மிக்கோராகப் பீடுநடை போடச் செய்த பெருமைக் குரியவரன்றோ அவர்.
‘தார்’ போட்ட சாலையில் போவோர் சிந்திக்கட்டும்!
இன்று தார் போடப்பட்ட சாலைகளில் வாகனங்களில் போகும்போது அந்தச் சாலையின் முந்தைய நிலை கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் கருத்தினில் பதிய வேண்டும். கல்லும் முள்ளுமாக சேறும் சகதியுமாக மேடும் பள்ளமுமாக இருந்த நிலையகற்றி வழுவழுப்பானதும் வாகானதுமான சாலையினை அமைத்திட்ட அந்த இடைக்காலத்து வரலாறு இன்றைக்கிருக்கும் பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான்.
அந்தப் போர்க்கள வரலாறு!
‘சூத்திரப் பட்டம்’ இருந்தது இந்தச் சமுதாயத்தில் பெரும் பகுதியினர்க்கு! இன்று அந்தச் சொல்லைக் கேட்பவனும் பொறுத்துக் கொள்ள மாட்டான். அந்தச் சொல்லை ஆணவத்தோடு உச்சரித்தவர்களும் இன்று தங்களைத் திருத்திக் கொண்டனர். இந்த இடைக்காலத்திலேதான் அவர் நடத்திய போர்க்கள வரலாறு அடங்கிக் கிடக்கின்றது.
வளைந்த தடியைப் போல் தலைகுனிய வைத்தவர்!
தொட்டால் தீட்டு! பார்த்தால் பாபம்! என்று மற்றவர்களைப் போலவே பத்து மாதத்தில் பிறந்த குறிப்பிட்ட ஒரு பிரிவினரைக் கடவுளின் பெரால் கடைநிலையினும் இழிந்த கீழ்நிலைக்குத் தள்ளி வைத்திருந்த தருக்கு மிகுந்தோரைத் தன் கைத்தடியின் வளைந்த பிடியைப் போல் தலைகுனிய வைத்து சமத்துவத்தை அரியணையின் மீது அமர்த்துவதற்கு அவர் பூண்ட போர்க்கோலம் புரட்சிக் கோலமன்றோ? எளிதில் மறைத்திட இயலுமோ அவர் பணியை சரித்திரத்தின் ஏடுகளில்?
உழைத்த நாட்கள் எத்தனை! விழித்த இரவுகள் எத்தனை!!
பிணம் புதைக்கக் குழிதோண்டிக் கொண்டிருந்த கிராமத்துச் சேரிவாழ் பிறவியின் பிள்ளை இன்று நீதிபதியாய், நிர்வாகத் துறைத் தலைவனாய், மாவட்ட ஆட்சித் தலைவராய், மாண்புமிகு பதவிக்கு உரியோனாய் ஆக முடிகிறதென்றால் அதற்காக அவர் உழைத்த நாட்கள் எத்தனை? விழித்த இரவுகள் கொஞ்சமா? இன்று மிகச் சுலபமாகத் தெரிகிற காரியங்கள் படிப்படியாக நிறைவேறத் தொண்டாற்றிய தூயதோர் இயக்கத்தின் தலைவராகத் திகழ்ந்த பெரியாரின் பேராண்மையால் விளைந்தவையல்லவா?
இயக்கம் பட்ட பாடு!
பொன்னணி பூண்டு பொற்றுகில் உடுத்தி நின்றிடும் பெண்ணுக்கு – அந்தப் பொன் இருந்த இடமோ, அதை வெட்டி எடுக்க ஆயிரமாயிரம் அடிகளுக்குக் கீழே உயிருக்குத் துணிந்து சென்ற உழைப்பாளியின் வியர்வையோ, கல்லும் மண்ணுமாகச் சேர்ந்து கிடைத்த பொன்னைப் பிரித்தளிக்க எடுத்தக்கொண்ட சிரமமோ நினைவுக்கு வருவதில்லை. வராதது இயல்புங்கூட!
அதுபோலத்தான் இன்றைக்கு இந்த அளவு எழுச்சி பெற்று, ஏற்றம் பெற்று விளங்குகின்ற சமுதாயத்தை உருவாக்கப் பெரியாரும் அவர் தலைமையேற்றிருந்த இயக்கமும் பட்ட பாடுகள் சிலருக்கு நினைவில் இருக்காது.
‘மாலை’ மனிதர்களுக்குத் தெரியுமா – மலர் வந்த விதம்?
மாலையைத் தோளிலே தாங்கி மந்தகாசப் புன்னகை கொட்டுகிறவனுக்கு, அந்த மாலை தொடுக்க மலர் பறிக்கப் போன சிறுவன் பூங்காவில் உள்ள புற்றருகே இருந்த நச்சுப் பாம்பினால் கடிபட்டுத் தப்பிப் பிழைத்தான் என்ற தகவல் எட்டுவதற்கு நியாயமில்லைதான்.
மறைத்திட விடோம்!
இன்று இந்தச் சமுதாயம் இந்த அளவு மானத்தோடு வாழ்வதற்கு; உரிய காரணங்களை பயன்பெற்ற சமுதாயத்தினர் மறந்திடினும் வரலாறு மறுத்திடாது! மறைத்திடாது! மறைத்திட விட மாட்டோம்!
நினைவு கூர்வோம்!
அந்த வீரமுழக்கச் சிங்கத்தை – வெண்தாடி வேந்தரை – அறிவுக் களஞ்சியமாம் நமது அண்ணனுக்குத் தலைவரை – இன்று மட்டுமல்ல; என்றென்றும் நினைவு கூர்வோம்!
( தந்தை பெரியார் 99ஆம் ஆண்டு பிறந்த நாள் மலருக்கு கலைஞர் எழுதிய கட்டுரையிலிருந்து…)