* ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியில் சாதனைகள் ஏதுமில்லை!
* அமைச்சர் உதயநிதி சொல்லாததைத் திரிபு செய்வது அறிவு நாணயமா?
கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் சாதனைகள் என்று கூறிட ஒன்றுமில்லை; அதனால் அபவாதம், அண்டப் புளுகு, ஆகாசப் புளுகுகளை அவிழ்த்துக் கொட்டுகிறார்கள். வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இதுவேதான் கடைசி தேர்தலாக முடியும், எச்சரிக்கை என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
மத்தியில் ஆட்சி அமைத்து கடந்த 9 ஆண்டுகளுக்கு மேல் வெறும் வாக்குறுதிகள், வாய்ச்சவடால், வாய்ச் சாலங்கள், வம்படி திசை திருப்பல்கள்மூலமே ஆட்சியை வெறும் ‘‘காட்சி”யாகவே நடத்திவரும் மோடி தலைமை யிலான பா.ஜ.க. ஆட்சியின் ஒப்பனை அரசியல் அரி தாரம் – நாளும் கலைந்து கரைந்து அதன் உண்மையான கோரம் மிகுந்த ஆரிய முகத்தை வாக்காளர்கள் அப்பட்டமாகப் புரிந்துகொண்டு, நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் எப்பொழுது வந்தாலும், பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஆட்சிக்கு விடை கொடுத்தனுப்பும் முடிவுக்கு வந்துவிட்டனர்!
பா.ஜ.க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன
ஒன்றியத்தின் பா.ஜ.க. (ஆர்.எஸ்.எஸ்.) ஆட்சியின் நாட்கள் வெகுவாக எண்ணப்பட்டு வருகின்றன. கவுண்ட் டவுன் (Count Down) தொடங்கிவிட்டது!
இதுவரை தாங்கள் கூறிய தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் வெற்று ஏமாற்றுப் பொய் வாக்குறுதிகள் என்பதை வாக்காளர்களான மக்கள், குறிப்பாக மாணவர் கள், இளைஞர்கள், தாய்மார்கள் நன்றாகப் புரிந்து கொண்டு விட்டனர்!
ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்புத் தருவோம் என்றீர்களே, வேலை வாய்ப்பு எங்களுக்கு ஏன் கிட்டவில்லை? என்று கேட்காமல் கேட்டு, ஒப்பனையை அவர்தம் வழியும் கண்ணீரால் நாளும் அழிந்து போகச் செய்கின்றனர்!
பி.ஜே.பி. ஆட்சியில் ஊழல்கள் –
விலைவாசி உயர்வு போன்ற அவலங்கள்!
கருப்புப் பணத்தை மீட்டெடுத்து உங்கள் ஒவ்வொரு வர் வங்கிக் கணக்கிலும் நபருக்கு 15 லட்சம் ரூபாய் வந்து ‘பொத்’தென்று விழும் என்று நாக்கில் தேன் தடவி, நம்பிக்கை மழை பொழிய வைத்து, நாடாள வந்த நயவஞ்சகர்களே, எங்கே எங்களுக்கு அத்தொகை என்ற கேள்வி கேட்டுத் துளைத்துக் களைத்துச் சளைத்து விட்டனர்!
விலைவாசிகளின் ஏற்றம் விண்ணை முட்டுகிறது; வேலையில்லாத் திண்டாட்டமோ நாளும் கூடுதலாகி வேலைகிட்டாதோர் பட்டியல் விம்மிப் பெருகுகிறது ஒவ்வொரு நாளும்.
மணிப்பூர் பற்றி எரிகிறது – கடந்த 4 மாதங்களாக! அதை அணைக்கவேண்டிய ஆளுங்கட்சியோ, உயர் ஜாதி ஆதரவினைப் பெற ஒடுக்கப்பட்ட சமூகப் பெண் கள் மானபங்கப்படுத்தப்படுவதைக்கூட கண்டும், தடுப் பும், தண்டனைகளும் தர ஏற்பாடுகள் எதுவும் இல்லை.
உலகம் சுற்றி, சர்வதேசப் புகழ் நாடும் பிரதமர், மணிப்பூர் மண்ணில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போதிய ஆறுதல் கூறி, புதிய நம்பிக்கையை அவர் தரத் தயாராக இல்லை – மாறாக, கண்டுகொள்ளாத இப்படி ஒரு ‘‘கருணையிலா ஆட்சியா?” என்று மக்கள் மனம் வெந்து பேசுகிறார்கள்.
நடக்கவிருக்கும் தேர்தலில் பி.ஜே.பி. வெற்றி பெற்றால், இதுவே கடைசி தேர்தலாக இருக்கும், எச்சரிக்கை!
முந்தைய தேர்தல்களில் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான ஆட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததுகூட வெறும் 37 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுத்தான்! அதுவும் பல கட்சிகள் தனித் தனியே நின்று, ஓட்டுகளைப் பிரித்ததனால்தான்.
இப்போது அவர்கள் பலரும் ‘இந்தியா’ கூட்டணியில் ஒருங்கிணைந்து, ‘‘யார் வரக்கூடாது?” என்று மக்கள் விரும்புகிறார்களோ, அவ்வாசையை – குறிக்கோளை நிறைவேற்ற ஒன்றுபட்டு களத்தில் நிற்கின்றனர்.
எது அவர்களைப் பிரிக்கிறது என்பதைத் தள்ளி வைத்துவிட்டு, ஒரே இலக்கு – பா.ஜ.க. மோடி அரசு மீண்டும் அரியணை ஏற்றப்படக்கூடாது; ஏற்றப்பட்டால் நடைபெறவிருக்கும் தேர்தலே நாட்டின் கடைசிப் பொதுத் தேர்தலாகிவிடும் – பாசிச வரலாறு தொடங்கி விடும் அபாயம் உள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்தி, நாடு தழுவிய திட்டங்களை ஒன்றுபட்டு அரசியல் வியூகமாகி வருகிறது!
சாதனையல்ல – எல்லாம் வேதனைதான்!
தென்மாநிலங்களில் காவிக்கு இடமில்லாது பா.ஜ.க. வுக்கு விடை கொடுத்தனுப்பியதுபோலவே, வரும் தேர்தல்களில் மேலும் வடக்கு, மேற்கு, கிழக்கு ஆகிய மூன்று திசை மாநிலங்களிலும் மக்கள் பா.ஜ.க.வின் மக்கள் விரோத, ஜனநாயகத்தை, இந்திய அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமல், மிதிக்கின்ற ஆட்சிக்கு விடை கொடுத்து அனுப்பிட ஆயத்தமாகிவிட்டார்கள்.
சாதனைகளுக்குப் பதில் மிஞ்சியது வேதனைகளே! பிற மாநிலங்களில் வேலைக்குச் சென்ற எளிய மக்கள் பசி, பட்டினியோடு, கால்நடைகளாகி, வழியில் சுருண்டு விழுந்து உயிர் விட்ட கோவிட் தொற்று காலத்துக் கோரங்கள், பாதிக்கப்பட்ட மக்களிடம் பசுமையாக இன்னமும் நினைவில் உள்ளனவே!
பி.ஜே.பி. ஆட்சியில்
ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல்!
மோடி ஆட்சியில், சி.ஏ.ஜி. என்ற அரசு தணிக்கையின் ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் பட்டியலே நாட்டில் பேசு பொருளாகி உலா வருகிறது.
அவற்றை மறைக்கவும், திசை திருப்பவுமே இப்போது தமிழ்நாட்டில் நடைபெற்ற ஸநாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசிய பேச்சை திசை திருப்பி, சொல்லாத கருத்தைச் சொருகி, அது ஏதோ ‘இந்தியா’ கூட்டணியின் தீர்மானம் அல்லது வேலைத் திட்டம் போல அப்பாவி பாமர வாக்காளர்களை ஏமாற்றிட, பிரதமரே – தன் அமைச்சர் பட்டாளத்தின் பேச்சுகள் எடுபடவில்லை என்பதால்தான் பேசுகிறார்!
அது திசை திருப்பல் என்பதால், வடக்கேயும் போணியாகாது என்பது போகப் போக புரியும்!
அபவாதம் – அண்டப் புளுகு – ஆகாசப் புளுகின் அடையாளம்தான் பி.ஜே.பி.!
வடக்கே இராமர் கோவிலைக் காட்டி மீண்டும் பதவிக்கு வருவதே சந்தேகம் என்பதால், இப்படி ஒரு கீழிறக்கம், பேச்சின் மடை மாற்றத் தில்லுமுல்லு திருகு தாளங்களில் நாட்டின் உச்சத் தலைமையே ஈடுபடுவது அறிவு நாணயமாகுமா? அச்சத்தின் உச்சமா?
‘இந்தியா’ கூட்டணியே ஸநாதன ஒழிப்புக் கட்சி என்று பிரதமர் மோடி பேசுகிறார். அப்படி ஏதாவது தீர்மானத்தை – வேலைத் திட்டத்தை மூன்றுமுறை நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி கூட்டங்களில் நிறை வேற்றி உள்ளதா? பின் ஏன் இந்த அபவாதம் – அண்டப்புளுகு – ஆகாசப் புளுகு -பொய்ப் பிரச்சாரம்!
சாதனைகளைக் கூற வழியில்லை!
வேறு சாதனை சரக்கு இல்லை அவர்களுக்கு; எனவே, இந்த வெற்று ஊதிப் பெருக்கும் பலூன் – அது போகப் போக, தானே வெடித்து, உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்பது உறுதி!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
15.9.2023