சென்னை, ஏப்.19 சென்னை அடுத்த பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் வீட்டில் குவாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. பல்லாவரம் பெருமாள் நகர் பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜ். இவர் அதிமுக பிரமுகராகவும், ஜல்லி, எம் சாண்ட், மணல் போன்ற பொருட்களை குவாரிகள் மூலமாக பெற்று மறு விற்பனை செய்யும் மய்யம் நடத்திவருகிறார். இந்நிலையில் அவரது அலுவலகம் மற்றும் வீட்டில் நள்ளிரவு வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் வருமானவரித்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.அந்த வகையில் அதிமுக பிரமுகர் வீட்டில் நேற்று (18.4.2024) இரவு சோதனை செய்யப்பட்டது.
பணப்பட்டுவாடா நடைபெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் ரூ.1 கோடிக்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் நடத்திவரும் குவாரியிலும் சோதனை நடத்தியதில் அங்கேயும் ரூ.1கோடியும் பதுக்கி வைக்கப்பட் டிருந்தது.
இதனை அடுத்து மொத்தம் ரூ.2.85 கோடியை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில் இது தொடர்பாக ஆவணங்களை கொண்டுவருமாறு கூறி சென்றனர். இதே போல் ஒரே நேரத்தில் ரூ.2.85 கோடி அதிமுக பிரமுகரிடம் கைப்பற்றப்பட்டது பெறும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.