“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளோடு, ‘விவிபேட்’ இயந்திரத்தில் உள்ள ஒப்புகைச் சீட்டுக்களையும் நூறு சதவீதம் சரிபார்க்க உத்தரவிட வேண்டும்” என்று தொடரப்பட்ட பொதுநல மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது (16.4.2024).
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் பிரசாந்த் பூஷன், சங்கர் நாராயணன் ஆகியோர் தமது வாதத்தில், ‘‘பெரும்பாலான அய்ரோப்பிய நாடுகள் வாக்குச்சீட்டு முறைக்கே திரும்பி விட்டன.
ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை கடந்த 2017இல் இறுதி வடிவத்திற்கு கொண்டு வந்தபோது, அதில் வெளிப்படையாகத் தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அதனை உள்ளிருந்து பல்பு எரிந்தால் மட்டுமே தெரியும் வகையிலான கண்ணாடியாக மாற்றி விட்டார்கள். தற்போது ஒப்புகைச் சீட்டு உள்ளே விழுகிறதா இல்லையா என்பது கூட வாக்காளர்களுக்குத் தெரிவதில்லை. வாக்கு ஒப்புகை சீட்டு மற்றும் வெளிப்படையாகத் தெரியும் கண்ணாடி ஆகியவை நூறு சதவீதம் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘இந்தியாவுடைய வாக்காளர் எண்ணிக்கை 1960களில் 50இல் இருந்து 60 கோடி என்ற அளவில் தான் இருந்தது. ஆனால் தற்போது 97 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கின்றார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள் என்றாலும் கூட, அத்தனை வாக்குகளையும் எப்போது எண்ணி முடிக்க முடியும், அது எவ்வாறு சாத்தியமாகும்?
இருப்பினும் இத்தனை கோடி வாக்குகளையும் எண்ணி முடிக்க 12 நாள்கள் ஆகும் என தேர்தல் ஆணையம் தனது பிரமாண பத்திரத்தில் பதில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பார் கோடு முறை போன்றவற்றை பயன்படுத்த லாம் என வழக்குரைஞர்கள் ஆலோசனை சொன்னபோது ஒவ் வொரு முறையும் இப்படியான முறைகளைக் கொண்டு வருவது மிகப்பெரிய வேலையாக மாறிவிடும்.
அது மட்டுமில்லாமல் மனிதர்களின் தலையீடு எங்கெங் கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஒருதலைப் பட்சம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளும் அங்கு நுழைந்து விடும். அதனால் மனிதர்களின் தலையீடு இல்லாமல் இயந்திரங்கள் செயல்படும் போது அவை பெரும் பாலும் சரியான முறையில் முடிவுகளை கொடுக்கும் என தெரியவருகிறது’’ என்று நீதிபதிகள் கூறினர்.
மனுதாரர் தரப்பு வழக்குரைஞர்கள் அளித்த பதிலில், “உதாரணமாக ஒரு தொகுதியில் 200 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன் படுத்தப்படுகின்றன என்று வைத்துக் கொள்வோம். அதில் வெறும் இரண்டு சதவீத ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் மட்டுமே சரிபார்க்கப் படுகின்றன. மீதமுள்ள அனைத்தும் சரிபார்க்கப்படுவது கிடையாது. அதில் தான் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. நூறு சதவீத ஒப்புகை சீட்டு சரிபார்த்தலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
குறிப்பாக ஒரு தேர்தலை திட்டமிட்டு நடத்துவதற்கு ஆறு வாரத்திற்கு மேல் தேர்தல் ஆணையம் அவகாசம் எடுத்துக் கொள்கிறது. அப்படி இருக்கும்போது ஒப்புகைச்சீட்டு சரி பார்க்க சில மணி நேரங்கள் கூடுதலாக தேர்தல் ஆணையம் செலவிடுவதால் ஒன்றும் குற்றமாகி விடாது. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்க கூடிய நிறுவனங்களின் இயக்குநர்கள் பாஜக கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள். எனவே தான் இந்த இயந்திரத்தின் மீதான நம்பகத்தன்மை பொதுமக்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் தேர்தல் ஆணைய தரவு களை மாநிலம் வாரியாக பகுப்பாய்வு செய்து பார்த்ததில் சுமார் 373 தொகுதிகளில் ஆணையம் வெளியிட்ட வாக்குப்பதிவு விவரங்களுக் கும், மின்னணு இயந்திரங்களில் பதிவாகி இருந்த வாக்குகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருந்துள்ளன. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியதில், ‘‘ஒவ்வொரு இயந்தி ரத்திற்கும் ஒரு வரிசை எண் என்பது உள்ளது. ஒரு குறிப்பிட்ட வாக்கு இயந்திரத்தில் எவ்வளவு வாக்குகள் பதிவாகி இருக்கிறது என்பது தெளிவாக இருக்கும்.
குறிப்பாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் நூறு வாக்குகள் பதிவாகி இருக்கின்றன என்று வாக்குப்பதிவு நாளன்று பதிவாகி இருக்கும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் அதில் 99 என்று வந்தால் அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் சிக்கல் இருக்கிறது என்று பொருள்படும். அதனை வேட்பாளர்கள் தெரிந்து கொள்ள முடியும் தானே. விவிபேட் சீட்டுகளை எண்ண வேட்பாளர் கோரிக்கை விடுக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனர்.
இதற்கு மனுதாரர் தரப்பு அளித்த பதிலில்,‘‘ஒரு வாக்காளர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், தனது வாக்கினை பதிவு செய்கிறார். அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் தான் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என்ற விவரம் தெரியும் வகையில் அதற்கான ஒப்புகைச் சீட்டு அவருக்கு கைகளில் வழங்கப்பட வேண்டும். அதனை சரி பார்த்த பின்னர் அவர் அதனை தனியாக உள்ள பெட்டியில் போட வேண்டும். இதனை செய்வதால் எதுவும் நடந்து விடாது’’ என தெரிவித்தனர்.
இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக் குரைஞர்,‘‘இந்த விவகாரத்தில் வேட்பாளர் ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில் இடையில் சோதனை செய்யப்படும். மேலும் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னும் பின்னும் வாக்குப்பதிவு இயந்திரத்தை பரிசோதனை செய்வது என்பது கட்டாயம் இல்லை’’ என்று தெரிவித்தார்.
வாதங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘‘ஒப்புகைச் சீட்டு மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படும் விதம், அதில் முறைகேடு செய்யாமல் இருக்கும் அளவிற்கு எனென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்பவருக்கு என்ன தண்டனை? ஆகிய அனைத்து விவரங்களும் அடங்கிய விரிவான அறிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்ட, நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தில் முன் வைத்த 3 யோசனைகள்.
* மீண்டும் வாக்குச்சீட்டு மூலம் தேர்தல்.
* ‘விவிபேட்’ ஒப்புகை சீட்டுகளை வாக்காளர் பெற்று, அதை சரிபார்த்து தனி பெட்டியில் போட வேண்டும்.
* ‘விவிபேட்’ கருவியின் கண்ணாடி நிறத்தை மாற்ற வேண்டும்.
இந்த மூன்றும் நியாயமான கோரிக்கைகளே! இதனைத் தேர்தல் ஆணையம் தவிர்க்க முயல்வது ஏன்?
“சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்” என்பது ஒரு பழமொழி!