செல்வ மீனாட்சி சுந்தரம்,
தலைவர்,
புதுமை இலக்கியத் தென்றல்
பெரியார் – உரிமைதந்த உயிலானார் சூத்திரர்க்கு!
நூற்றாண்டாய் இருள்படிந்தே ஒளியைத் தேடும்
நோக்கழிந்த விழியிரண்டை முகம்சு மந்தோம்!
ஆற்றோடும் நீர்வளம்நாம் கரையொ டுங்கி
ஆரியத்தின் அடிமையென உருண்டி ருந்தோம்!
காற்றகன்ற பிணமாகக் கல்வி யின்றிக்
கடையரெனப் படிநிலையில் தாழ்ந்தி ருந்தோம்!
கீற்றொளிரும் கிழக்காகக் கிளர்ந்தெ ழுந்து
கேள்விகொண்டு கேடறுக்கப் பெரியார் வந்தார்!
பெருஞ்செல்வம் பேர்பதவிப் பற்ற றுத்துப்
பிறழாத தொண்டறத்தில் தனைவி தைத்தார்!
அருஞ்செல்வம் மானமுடன் வாழ்வ தென்றே
அடிமைநிலை மறுதலித்த தன்மா னத்தார்!
விருந்துயர்ந்த நிலையமர்ந்து ஆண்டி ருக்க
வீடிருந்தார் தாழ்ந்தழுந்தி இழிதல் கண்டு
பொருந்தாத ஜாதிமதப் புரட்ட ழிக்கப்
புறப்பட்ட போர்ப்படையாய்ப் பெரியார் வந்தார்!
புரட்டர்களின் பொய்முகத்தைக் கிழித்துக் காட்டிப்
பொழுதெல்லாம் பேசிவென்ற போர்வாள் நாக்கு!
கரவுநெஞ்சர் கயமைநஞ்சைக் கருக்கித் தீய்க்கக்
கந்தகமைக் கையெழுத்தைக் கசிந்த ஊற்று!
பரந்ததொரு பார்வைகொண்டு மனித நேயம்
பனிப்பொழிவாய்ச் சுரந்தொளிர்ந்த விழியின் நோக்கு!
திரண்டெழும்பும் முடைநாற்ற ஜாதிவன்மம்
சநாதனத்தின் பங்களிப்பாய் மோந்த மூக்கு!
நாய்கொண்ட உரிமைபெற்றுத் தெரு நடக்க
நரித்தனத்தார் தடைமறுத்து நடந்த கால்கள்!
தாய்நெஞ்சும் சிறுத்தொடுங்கப் புடைத்தெ ழுந்து
தமிழர்களைத் தாங்குதற்காய் விரிந்த தோள்கள்!
தேய்நிலவாய் நோய்வதையால் நலமி ழந்தும்
தேங்காது வலம்வந்த திராவி டத்தேர்!
ஓய்வில்லாச் சூரியனாய் உழைத்த செம்மல்!
ஒப்பில்லா ஈகைகொண்ட எட்டாம் வள்ளல்!
பதவிநாடும் வேட்கையில்லாத் துறவு பூண்டு
பாமரரின் துயர்களையத் துடித்த நெஞ்சு!
உதவிடற்காய்ப் பிறப்பெடுத்த கருணை ஊற்று!
ஊமைகளின் குரலாக ஒலித்த சங்கு!
இதமறியா தியங்குதொண்டு! தொடரு ழைப்பு!
இழிவகற்றத் துயில்மறந்த இனப்பொ றுப்பு!
முதலீடாய் முனைப்பூக்கும் மொழிப்பெ ருக்கு!
முகமாகத் திராவிடர்கள் கொள்செ ருக்கு!
குழந்தைபெறும் இயந்திரமாய்க் குறுக வைத்துக்
கொடுஞ்சிறையாம் அடுக்களையில் அடைத்து வைத்து
நலங்கூட்டும் நற்கல்வி மறுத லித்து
நங்கையரை அறிவிலியாய்த் தாழ்த்தி வைத்துச்
சுழலுலகில் உயிர்ச்சுழற்சி காக்கும் பெண்ணைத்
துயர்ச்சுழலில் வதைத்தழிக்கும் அவலம் கண்டு
பழமரபின் பெண்ணடிமைக் கொள்கை தாக்கிப்
பாவையரின் தனியுரிமை மீட்ட தந்தை!
இந்திப்போர் முன்னெடுத்துத் திணிப்ப கற்றி
இமயத்தைப் பணியவைத்த மறத்தின் தேக்கம்!
முந்தைகொண்ட தமிழெழுத்தைச் சீர்தி ருத்தி
மூப்பின்றித் தமிழியங்க வைத்த ஆக்கம்!
சிந்தையிலே பகுத்தறிவைச் செழிக்க வைத்துச்
செம்மையுறத் தமிழருக்கு கிடைத்த ஊக்கம்!
எந்தையவர் தத்துவமாய் நெஞ்சி ருக்க
எமையாளும் அவர்கொடுத்த அறிவின் தாக்கம்!
மயங்காமல் முடங்காமல் தொடர்ந்தி யங்க
மணியம்மை எனுந்திறத்தைத் தந்து சென்றார்!
வியன்திறனார் வீரமணி அருமை கண்டு
விடுதலையின் ஆசிரியப் பொறுப்ப ளித்தார்!
துயர்நிகழ்வாய் மணியம்மை மறைந்த பின்னர்
தூணாகி ஆசிரியர் தலைமை தந்தார்!
பெயல்கருணைப் பெரியாரின் வழியில் சென்றே
புத்துலகைப் படைப்போம்நாம் மனிதம் வெல்ல!
பெயலானார் பயிரெமக்கு! பகைய ழிக்கும்
புயலானார் புல்லருக்கு! இயங்க வைக்கும்
உயிரானார் உடலெமக்கு! உண்மை சுட்டும்
ஒளியானார் விழியெமக்கு! விடியல் தந்த
வெயிலானார் தமிழருக்கு! ஊட்ட முட்டும்
வேரானார் தழைப்பதற்கு! உரிமை தந்த
உயிலானார் சூத்திரர்க்கு! மனித நேய
ஊற்றானார் எம்பெரியார் உள்ளத் தாலே!
தன்மானக் காப்பான தகையே வாழி!
தாழாத தலைதாங்கும் தடந்தோள் வாழி!
பெண்களுக்கு விடியல்தந்த கிழக்கே வாழி!
பேதமையை நீக்கிவென்ற அறிவே வாழி!
மன்பதையின் மாண்புரைத்த மதியே வாழி!
மடிந்தாலும் வழிகாட்டும் ஒளியே வாழி!
தன்னலத்தைப் போற்றாத நெஞ்சே வாழி!
தமிழருற்ற நற்பேறெம் பெரியார் வாழி!