தூத்துக்குடி செப்.16 தூத்துக்குடி மகாலட்சுமி மகளிர்கல்லூரி பொன்விழா, வ.உ.சி. கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய விண்வெளி ஆய்வு மய்ய (இஸ்ரோ) மேனாள் தலைவர் கே.சிவன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இஸ்ரோ சார்பில் ராக்கெட்டுகளை விண்ணுக்கு செலுத்தும் திட்டத்தில் பல தனியார் நிறுவனங்கள் ஈடுபட உள்ளன. இதற்காக இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மய்யம் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும்.
செயற்கைக்கோள் செலுத்தக்கூடிய நிறுவனத்தின் நோக்கம், என்ன பணிக்காக செயற்கைக்கோளை செலுத்துகின்றனர் போன்ற விவரங்களை தெரிந்துகொண்டு, பின்னரே அங்கீகாரம் அளிக்கப்படும். இதுவரை 140-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் செயற்கைக்கோள் செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளன. குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக 2,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலம் இந்த ஆண்டு நவம்பருக்குள் கையகப்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.