* வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாதவர்கள் திசை திருப்பவே கச்சத்தீவைக் கையில் எடுக்கின்றனர்
* அதேநேரத்தில் பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவைப்பற்றி எதுவும் குறிப்பிடாதது ஏன்?
வெறுப்பு அரசியல் நடத்துவதாக தி.மு.க.வைக் குற்றம்சாட்டும் பிரதமர் மோடி அவர்களே, நாங்கள் நடத்துவது பொறுப்பு அரசியல்!
மயிலாடுதுறை, ஏப்.16 ஆர்.எஸ்.எஸின் கொள்கை வழி ஆட்சி நடத்தும் பிரதமர் மோடி, தி.மு.க. அரசு வெறுப்பு அரசியலை நடத்துவதாகக் கூறலாமா? நாங்கள் நடத் துவது வெறுப்பு அரசியல் அல்ல – பொறுப்பு அரசியல் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வழக்குரைஞர் ஆர்.சுதாவை ஆதரித்துத் தமிழர் தலைவர் ஆசிரியர் தேர்தல் பரப்புரை!
நேற்று (15.4.2024) மாலை 7 மணியளவில் மயிலாடு துறை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வழக்குரைஞர் ஆர்.சுதா அவர்களை ஆதரித்து சின்னக் கடைத் தெருவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
வருகின்ற 19 ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் நடை பெறக்கூடிய இந்திய திருநாட்டின் 18 ஆவது பொதுத் தேர்தல் – அதற்கான தேர்தல் களங்களில் மயிலாடுதுறை தொகுதியில், இந்தியா கூட்டணியின் சார்பாக, வெற்றி வேட்பாளர் வழக்குரைஞர் ஆர்.சுதா போட்டியிடுகிறார்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிந்தனையில், வழிகாட்டுதலிலே – ஒன்றுபட மாட்டார்கள் என்று மோடி போன்றவர்கள் தொடக்கத்தில் ஆசையோடு இருந்த நேரத்தில், அதனைப் பொய்யாக்கி, 28 கட்சிகள் என்ன? இன்னும் 250 கட்சிகளாக இருந்தாலும், ‘‘யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது” என்ப தையே மய்யப்படுத்தி, எங்களால் அந்தக் கூட்டணியை உருவாக்கிக் காட்ட முடியும் என்று காட்டிய பெருமை நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களு டைய ஓர் அற்புதமான கனவை நனவாக்கி உருவாக் கப்பட்டதுதான் ‘இந்தியா கூட்டணி’யாகும்.
நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வகுத்த
அரசியல் வியூகம்!
அந்தக் கூட்டணி தொடக்கத்தில் எப்படி தொடங்கப் பட்டது என்றால், தி.மு.க. கூட்டணிதான் அதற்கு ஆரம் பப் புள்ளியாகும். அந்தப் புள்ளியிலிருந்து மிகப்பெரிய ஒரு அரசியல் பரிமாணம். அசைக்க முடியாத மோடி எனப்பட்டவர், இன்றைக்கு அசைந்து அசைந்து தமிழ்நாட்டைத் தேடித் தேடி, ஓடி ஓடி வருகிறார் என்று சொன்னால், அதற்கு இந்தியா கூட்டணியினுடைய நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் அவர்கள் வகுத்த அரசியல் வியூகமாகும்.
பெரியார் கண்ட புதுமைப் பெண் நம்முடைய வேட்பாளர் வழக்குரைஞர் சுதா!
அப்படிப்பட்ட அற்புதமான இந்தத் தேர்தல் போட் டியில், இந்தியா கூட்டணியினுடைய வேட்பாளராக, தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியின் தலைமையில் இயங்கக் கூடிய சிறப்பான அணியில் நிறுத்தப்பட்டு இருக்கின்றவர்தான் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய துணிச்சல்மிக்க, பெரியார் கண்ட புதுமைப் பெண் எப்படி இருப்பார் என்று பார்க்கவேண்டுமானால், அது நம்முடைய வேட் பாளர் வழக்குரைஞர் சுதா அவர்களைப் பார்த்தாலே தெளிவாகத் தெரியும்.
அதுகுறித்து நம்முடைய கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்கள் மிக சிறப்பாகச் சொன்னார்.
ஆகவே, இந்தத் தொகுதிக்குக் கிடைத்த மிக அற் புதமான வேட்பாளர் அவர். அப்படிப்பட்ட ஒருவரை ஏன் தேர்ந்தெடுக்கவேண்டும்?
மயிலாடுதுறை தொகுதி என்றால், அது திராவிடத் தினுடைய பாசறை என்பது எல்லோருக்கும் மிகத் தெளிவாகத் தெரியும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், எப்பொழுதும், எந்தத் தேர்தலானாலும், நம்முடைய இயக்கத் தோழர்கள் நம்மை அழைக்காமல் இருக்கமாட்டார்கள்.
மயிலாடுதுறைக்கும், திராவிட இயக்கத்திற்கும் ஒரு பெரிய வரலாற்றுப் பின்னணி உண்டு!
அதைவிட ஒருபடி மேலாகச் சென்று கூட்டணித் தோழர்களும் அவசியம் நீங்கள் இங்கே வந்து தேர்தல் பரப்புரை செய்யவேண்டும் என்றனர்.
அதையெல்லாம் தாண்டி, இந்தத் தொகுதியை ஒரு சொந்தத் தொகுதியாகவே கருதுகின்றோம், தஞ்சை மாவட்டத்தைக் கருதுவதைப்போல. மயிலாடுதுறைக்கும், திராவிட இயக்கத்திற்கும் ஒரு நூறாண்டு காலத்திற்கும் மேற்பட்ட ஒரு பெரிய வரலாற்றுப் பின்னணி உண்டு.
எனக்குக் கடந்த சில நாள்களாக பேச முடியாத நிலை. மருத்துவர்கள் சொன்னார்கள், ஓய்வெடுத்துக் கொள்ளும்படி. தேர்தல் பரப்புரையை கடந்த 2 ஆம் தேதி நாங்கள் தொடங்கினோம். இடையில் ஒரு நாள்கூட ஓய்வு கிடையாது. ஒரே ஒரு நாள் சென்னையில் இருந் தோம் அந்த நாளிலும் நம்முடைய தோழர்
பாலு அவர்கள், என்னுடைய தொகுதிக்கு வந்து கட்டாயம் உரையாற்றவேண்டும் என்று, தேர்தல் பரப்புரைக்கு ஏற்பாடு செய்துவிட்டார்.
தொண்டைதான் ஒத்துழைக்க மறுக்கிறதே தவிர, என்னுடைய தொண்டு ஒருபோதும் ஒத்துழைக்க மறுக்காது!
ஆகவே, வேறு வழியில்லை என்றாலும், எனக்கு உற்சாகமாக இருந்தாலும், எல்லா இடங்களிலும் மக்கள் உற்சாகத்தோடு இருந்தாலும், தொண்டை சில நேரங் களில் ஒத்துழைக்க மறுக்கிறது. ஆனால், தொண்டைதான் ஒத்துழைக்க மறுக்கிறதே தவிர, என்னுடைய தொண்டு ஒருபோதும் ஒத்துழைக்க மறுக்காது.
ஆகவே, மக்களைப் பார்க்கும்பொழுது, மருகுகிற குணம் இல்லாமை என்பதோடு, நம்முடைய தோழர் களைச் சந்திக்கின்றபொழுது, அவர்களுடைய உற்சாகத் தைப் பார்க்கும்பொழுது நிச்சயமாக இருக்கும்.
எனவே இந்த நிகழ்ச்சியில் தோழர்களே, தாய்மார் களே ஒரு 30 நிமிடம் அல்லது 40 நிமிடம் நான் பேசக்கூடும். இன்றைக்கு இந்தத் தேர்தல் பரப்புரைக் கூட்டம் முதல் கூட்டமாகும். இரண்டாவது கூட்டத்திற் காக நாகை தொகுதிக்குச் செல்லவேண்டும்.
மாவட்டச் செயலாளர் அவர்களும் இங்கே வந்திருக் கின்றார். அவருடைய ஒத்துழைப்பும், அவருடைய தனி ஆற்றலும் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும்.
நான் பல ஊர்களுக்குத் தேர்தல் பரப்புரைக்காகச் செல்லுகின்ற நேரத்தில், மாவட்டச் செயலாளரோ அல்லது வேட்பாளரோ வரவேண்டும் என்று எதிர்பார்ப் பதேயில்லை. ஏனென்றால், அவர்கள் மிக முக்கியமான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மாலையில் வேட்பாளர் வழக்குரைஞர் சுதா மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் எல்லாம் வந்து என்னை சந்தித்தபொழுதுகூட சொன்னேன், ‘‘நான் உங்களுக்காக மக்களிடம் ஓட்டுக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள், உங்களுடைய பணிகளைப் பாருங்கள்; அங்கே வர வேண்டும் என்கிற அவசியம் இல்லை” என்று சொன்னேன்.
நான்கு சிறிய புத்தகங்கள்
நீண்ட நேரம் உரையாற்ற முடியாது என்பதற்காகத் தான், ஒவ்வொரு தேர்தலிலும் செய்வதுபோன்று, இந்தத் தேர்தலிலும் நான்கு சிறிய புத்தகங்களை அச்சடித்துக் கொண்டு வந்திருக்கின்றோம்.
ஏன் மோடி அரசு வீட்டுக்கு அனுப்பப்படவேண்டும்? கடந்த 10 ஆண்டுகாலங்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கொடுமையான அனலை, வெப்பத்தைப் பார்த்த நமக்கு, ஏன் மீண்டும் மோடி வரக்கூடாது? என்பதை நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிக அழகாக இரண்டே வார்த்தைகளில் சொன்னார். ‘‘வேண்டாம், மோடி!” என்று.
எல்லா பகுதிகளிலும் ‘‘வேண்டாம் மோடி’’ என்ற குரல் ஓங்கி ஒலிக்கத்
தொடங்கியிருக்கிறது!
இது தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒலிக்கிறது என்று நினைக்கவேண்டாம்; காஷ்மீரிலிருந்து தொடங்கி எல்லா பகுதிகளிலும் ‘‘வேண்டாம் மோடி” என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், நாங்கள் வெளியிட் டுள்ள நான்கு புத்தகங்களை நீங்கள் வாங்கிப் படிக்க வேண்டும்; பரப்பவேண்டும்.
மோடியினுடைய பேச்சு, பா.ஜ.க.வினுடைய பேச்சு – மோடியே அப்படி இருக்கிறார் என்றால், தலையே அப்படி இருக்கிறது என்றால், வாலைப்பற்றிய நிலை என்னவாக இருக்கும்?
இப்படிப்பட்ட சூழ்நிலையில், உண்மைகளைத் தோலுரித்துக் காட்டக்கூடிய வகையில் இந்தப் புத்தகம் – ‘‘மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப்போம்!”
‘திராவிட மாடல்’ ஆட்சியின்
சாதனைகள் என்ன?
அதற்கடுத்தது, நம்முடைய கூட்டணிக்கு, திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியை உள்ளடக்கிய இந்தியா கூட்டணிக்கு ஒரு தனி சிறப்பு என்னவென்றால், என்ன செய்தோம்? மூன்றாண்டு கால ஆட்சியாக இருந்தாலும், மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்கின்ற நேரத்தில், ‘‘மீண்டும் நீங்கள் எங்கள் தோழர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புங்கள்; கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் தோழர்களை நீங்கள் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பினீர்கள். என்னென்ன சாதனைகளை செய்திருக்கிறோம்” என்று காட்டக்கூடிய வகையில், சாதனைகளைச் சொல்லி, ‘‘சொன்னதை செய்வோம்; செய்வதையே சொல்வோம்” என்று காட்டக்கூடிய வகையில், அந்தக் கூட்டணியின் சார்பில், நம்முடைய ஒப்பற்ற திராவிட நாயகர் அவர்களுடைய ஆட்சியின் சாதனைகள் என்ன? என்பதை விளக்கு வதற்காகத்தான் இந்தப் புத்தகம்.
‘‘2024 இல் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்ட ணியை (தி.மு.க. அணியை) ஆதரிக்கவேண்டும் ஏன்?”
பேருந்தில் பயணம் செய்யும்பொழுதே இந்த சிறிய புத்தகத்தைப் படித்துவிடலாம். ஏனென்றால், பெரிய புத்தகமாக இருந்தால், நம்முடைய தோழர்கள் வாங்கு வார்கள், படிக்கமாட்டார்கள்.
இரவு தூங்குவதற்குமுன் இந்தப் புத்தகத்தைப் படித் தீர்கள் என்றால், பிறகு தூக்கம் நன்றாக வரும்.
மோடி சொல்கிறார் பாருங்கள், ‘‘தூக்கத்தைத் தொலைத்துவிட்டார்கள், தொலைத்துவிட்டார்கள்” என்று; தொலைத்தவர் நாமல்ல, அவர்தான்.
அதற்கடுத்த புத்தகம், ‘‘பிரதமர் மோடிக்கு கருஞ்சட்டைக்காரனின் திறந்த மடல்!”
மக்கள் விரோத ஆட்சியாக ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது?
கடந்த 10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில், எவ்வளவு கொடுமைகள் நடைபெற்று இருக்கின்றன? மக்கள் விரோத ஆட்சியாக அந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது? ஏன், மீண்டும் வேண்டாம் மோடி என்று சொல்கிறோம் என்று சொன்னால், அது நமக்காக அல்ல.
இரண்டு கூட்டணி போட்டியிடுகிறது என்று சொன் னால், மற்ற கூட்டணிகளைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
தி.மு.க. கூட்டணியை உள்ளடக்கிய இந்தியா கூட் டணியினுடைய நோக்கமே, ஒன்றியத்தில் நல்ல ஆட்சியைத் தருவதுதான்.
10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி, என்னென்ன வாக்குறுதிகளைத் தந்தார்? பிறகு வசதியாக, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார் என்பதை ஆதாரப்பூர்வ மாக இந்தப் புத்தகத்தில் விளக்கியிருக்கின்றோம்.
இதுபோன்ற கடிதங்கள் எல்லாம் அவருக்குப் போய்ச் சேர்ந்தால், அதற்குப் பதில் எழுத மாட்டார். ஏனென்றால், சாதனைகளைச் சொல்லி அவர் வாக்குக் கேட்கவில்லை.
தமிழ்நாட்டிற்கு 8 ஆவது முறையாக இன்றைக்கு மாலையில் நெல்லையில் பேசியிருக்கிறார்.
உலகத்திற்கே ‘‘விஸ்வகுரு’’ –
கேள்வி கேட்டால் ‘மவுனகுரு!’
உலகத்திற்கே ‘‘விஸ்வகுரு” என்பார். நாம் கேட்கின்ற கேள்விகளுக்குப் பதில் என்னவென்று கேட்டால், ‘‘விஸ்வகுரு”, ‘‘மவுனகுருவாகி” விடுவார்.
அதற்கடுத்ததாக, ஊழலை ஒழிப்போம், ஊழலை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவருடைய ஆட்சியில்தான், உலக மகா ஊழல் நடைபெற்றிருக்கிறது.
இதுவரையில், உச்சநீதிமன்றம் இப்படி வெளிப்படை யாக ஒன்றிய ஆட்சியைக் கண்டித்தது கிடையாது.
‘‘பா.ஜ.க.வின் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு ஊழல்கள் தேர்தல் பத்திர முறைகேடுகள்” என்ற ஒரு புத்தகம்.
ஊழலிலேயே ப்ரீபெய்டு ஊழல், போஸ்ட்பெய்டு ஊழல் என்பதைக் கண்டுபிடித்த பெருமை, ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும், மோடி ஆட்சிக்கும்தான் உண்டு.
தவணை முறையில் நன்கொடைகளை வாங்கு கிறார்கள். அப்படிக் கொடுக்கவில்லை என்றால், திரி சூலத்தைக் (அய்.டி., ஈ.டி.,சி.பி.அய்.) காட்டுவோம் – அந்தத் திரிசூலத்தைப் பார்த்து பயந்து நன்கொடை களைக் கொடுக்கவேண்டும். அதையெல்லாம் இந்தப் புத்தகத்தில் விளக்கியிருக்கின்றோம்.
ஆகவே, இந்தப் புத்தகங்களையெல்லாம் வாங்க வேண்டும்; படிக்கவேண்டும்; பரப்பவேண்டும்.
இன்னும் இரண்டு, மூன்று நாள்கள்தான் இருக்கின்றன 19 ஆம் தேதிக்கு. காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை வேட்பாளர் வழக்குரைஞர் ஆர்.சுதாவை ஆதரித்து, கை சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, நடைபெறுகின்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்
கிறேன்.
கவனச்சிதறல்கள் இல்லாமல்,
மக்கள் வாக்களிக்கவேண்டும்!
இதுவரை நடைபெற்ற தேர்தல்களைவிட, இப் பொழுது நடைபெறப் போகின்ற 18 ஆவது பொதுத் தேர்தல் என்பது மிகமிக முக்கியமானதாகும். கவனச் சிதறல்கள் இல்லாமல், மக்கள் வாக்களிக்கவேண்டும். யாரைத் தேர்ந்தெடுத்தால், இந்த நாட்டில் ஜனநாயகம் காப்பாற்றப்படும்? மீண்டும் ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகத்தை மீட்க முடியாது. சர்வாதிகாரம்தான் இருக்கும். இதுபோன்ற கூட்டங்கள் எல்லாம் நடைபெறாது.
மோடியின் ‘ரோடு ஷோ’விற்காக
திரட்டப்படும் மக்கள்!
மோடி, தமிழ்நாட்டிற்கு ஒவ்வொரு முறையும் வரு கிறார்; மக்களைச் சந்திக்கிறார், ‘ரோடு ஷோ’ நடத்துகிறார் என்று சொன்னால், அந்த மக்கள் எப்படிப்பட்டவர்கள்? எப்படி திரட்டப்பட்டவர்கள்? என்றெல்லாம் உங் களுக்குத் தெரியும்.
ஆனால், ஒன்றே ஒன்று, இதுவரையில் வந்தவர்கள், அந்த அணியைச் சேர்ந்தவர்கள், தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரால் இருக்கக்கூடிய அணியைச் சேர்ந்தவர்கள், ‘‘நாங்கள் கடந்த 10 ஆண்டுகளில், இன்னின்ன வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கின்றோம்; 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, ‘‘குஜராத் மாடல், குஜராத் மாடல்” என்று சொல்லி, இளைஞர்களையெல்லாம் நம்ப வைத்து ஆட்சிக்கு வந்தோம். அதற்கடுத்து ஏதேதோ வித்தைகளையெல்லாம் செய்து, 2019 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்தீர்கள்.
ஏற்கெனவே கொடுத்த கேரண்டீகளை நிறைவேற்றினாரா மோடி?
கடந்த 10 ஆண்டுகாலத்தில், இன்னின்ன உறுதி மொழிகளை நிறைவேற்றியிருக்கின்றோம் என்று சொல்ல முடியுமா?
‘‘மோடி கேரண்டீ” என்று சொல்கிறார்; முன்பு சொன்ன குஜராத் மாடலைவிட இது மிக வித்தியாச மானது.
ஏற்கெனவே கொடுத்த கேரண்டீகளை செய்தாரா? என்று கேட்டால், அதற்குப் பதில் சொல்ல மாட்டார்.
ஆனால், ‘‘தி.மு.க.வை ஒழித்துக் கட்டுவோம்” என்றெல்லாம் சொல்வார்.
தமிழ்நாட்டு மக்களுக்கே இதுவரை தெரியாத ஒரு அரிய விஷயத்தை மோடி சொல்லிக் கொடுக்கிறார்; அது என்னவென்றால், ‘‘தமிள் ரொம்ப செம்மையான மொழி” என்று.
‘‘தமிள், ரொம்ப செம்மையான மொழி” என்பதை இப்பொழுதுதான் முதன்முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய அளவிற்கு இருக்கிறோம்.
‘‘இட்லி பிடிக்கும், தோசை பிடிக்கும், தமிள் பிடிக்கும்” என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கக்கூடிய அவரிடம், இதுவரை நீங்கள் உங்களுடைய ஆட்சியில் என்ன செய்தீர்கள்? என்று கேட்டால், அதற்குப் பதில் இல்லை.
ஒரு இன்ஜின் போதாது, டபுள் இன்ஜின் என்றார். டபுள் இன்ஜின் என்று சொன்னீர்களே, என்ன செய்திருக்கிறீர்கள்? என்று கேட்டால், அதற்கும் பதில் இல்லை.
தேர்தலையே, பத்திரத்தை வைத்து நடத்துகிறார்கள் அவர்கள்!
பத்திரம் என்கிற வார்த்தையை இப்பொழுது பயன்படுத்துவதற்குக் கஷ்டமாக இருக்கிறது.
நாமெல்லாம் தேர்தல் பத்திரமாக நடக்கவேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், தேர்தலையே, பத் திரத்தை வைத்து நடத்துகிறார்கள் அவர்கள்.
பத்திரத்தை நம்பியே தேர்தல் நடத்துகிறார்கள் என்று நாங்கள் சொல்லவில்லை, உச்சநீதிமன்றம் அவர்களின் காதைப் பிடித்துத் திருகி சொல்லியிருக்கிறது.
‘‘ஊழலை ஒழிக்கின்ற உத்தமர்கள்!’’
தேர்தல் பத்திரத் திட்டத்தில், யார் யாருக்கு நன் கொடை கொடுக்கப்பட்டு இருக்கின்ற தகவல்களை வெளியிடவேண்டும் என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
‘‘ஊழலை ஒழிக்கின்ற உத்தமர்கள்” உடனே என்ன சொல்லியிருக்கவேண்டும்? எங்கள் மடியில் கனமில்லை, உடனே அந்தத் தகவல்களை அளித்திருக்கவேண்டும் அல்லவா!
ஆனால், அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
மயிலாடுதுறை வழக்குரைஞர் லட்சுமிகாந்தன்!
இங்கே நிறைய வழக்குரைஞர்கள் இருக்கிறோம். இன்றைய இளைஞர்களுக்கு தெரியாத ஒருவர் அடிநாள் வழக்குரைஞர் லட்சுமிகாந்தன். நீதிக்கட்சி காலத்திலி ருந்து. நம்முடைய கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவர்.
சிக்கலான வழக்குகளில் வழக்குரைஞர்கள் என்ன செய்வார்கள் என்றால், ‘‘வாய்தா” வாங்குவார்கள். இந்த வழக்குரைஞரிடம் சென்றால், வாய்தா வாங்கிக் கொடுப்பார் என்று சொல்லியே வருவார்கள்.
அதுபோன்று, ‘‘தேர்தல் பத்திரத் திட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் கொடுத்த காலக்கெடுவிற்குள் கேட்ட தகவல்களைக் கொடுக்க முடியாது. ஆகவே, எங்களுக்கு ஜூன் 30 ஆம் தேதிவரை கால அவகாசம் வேண்டும்” என்று மனு போட்டது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம். ஏனென்றால், அதற்குள் தேர்தல் முடிந்துவிடும் என்பதால்.
தமிழ்நாட்டில்தான் பொதுக்கூட்டம் மூலமாக அறிவு சொல்கின்ற ஒரே ஒரு அமைப்பு!
நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறும் என்று அவர்களுக்கு வசதியாக அறிவித்துவிட்டார்கள். ஏனென்றால், மோடி அவர்கள் ஒரு மாநிலத்தில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, அடுத்த மாநிலத்திற்குச் செல்லவேண்டும் என்பதற்கு வசதியாக. அதிலும், குறிப்பாக தமிழ்நாட்டிற்கு முதலில் தேர்தல் வைத்ததற்கு இரண்டு காரணம். என்னதான் செய்தாலும் தமிழ்நாட்டில் அவர்களுக்கு வாய்ப்பு இல்லை. இன்னொன்று, தமிழ் நாட்டில்தான் பொதுக்கூட்டம் மூலமாக அறிவு சொல்கின்ற ஒரே ஒரு அமைப்பு – பகுத்தறிவால் தந்தை பெரியார் அவர்கள் இந்த மண்ணை பக்குவப்படுத்தியது.
எந்தப் பிரச்சினையானாலும், இதுபோன்று பொதுக் கூட்டங்களில் பேசக்கூடிய பழக்கம், இந்தியாவிலேயே, தமிழ்நாடுதான் மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுத்தது. அதற்கடுத்து, கேரளா.
தேர்தல் நேரங்களில் பெரிய பெரிய கூட்டங்கள் எல்லா மாநிலங்களிலும் நடக்கும் என்பது வேறு. ஆனால், தமிழ்நாட்டில், ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் மக்களைச் சந்திப்பார்கள்.
குறுகிய காலத்தில் தேர்தலை நடத்தினால் மக்களுக்கு விழிப்புணர்வு வராது என்று நினைத்தார்கள்!
ஆகவேதான், குறுகிய காலத்தில், உடனடியாக தேர்தலை தமிழ்நாட்டில் நடத்தினால், மக்களுக்கு விழிப் புணர்வு வராது என்று நினைத்தார்கள். நம்மைவிட அதிகமான தகவல்களை தெரிந்துகொள்ளக்கூடியவர்கள் தமிழ்நாட்டு மக்கள்.
இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்கள் எப்படி நடைபெற்றன என்றால், வேட்பாளர்களுக்கு இடையே போட்டி – இரண்டு கட்சிகளுக்கு இடையே போட்டி இருக்கும்; ஆனால், இந்தத் தேர்தலுக்கு தனித்தன்மை என்னவென்றால், இரண்டு தத்துவங்களுக்கு இடையே போட்டி.
ஒன்று, பெரியார்;
இன்னொன்று ஆர்.எஸ்.எஸ்!
நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கத் திலேயே அதை சொன்னார்; இளந்தலைவர் ராகுல்காந்தி அவர்கள் நெல்லையில் உரையாற்றும்பொழுதும் சொன் னார், கோவையில் உரையாற்றும்பொழுதும் சொன்னார்,
‘‘இரண்டு தத்துவங்களுக்கு இடையேதான் இப் பொழுது போட்டி; ஒன்று, பெரியார்; இன்னொன்று ஆர்.எஸ்.எஸ்.” என்று.
ஒரு தத்துவம், ‘‘அனைவருக்கும் அனைத்தும்” – அதுதான் பெரியார், அதுதான் சமூகநீதி, அதுதான் பகுத்தறிவு, அதுதான் திராவிடம்.
திராவிடம் என்றால் என்ன?
பேதமிலா பெருவாழ்வு – அனைவருக்கும் அனைத் தும், சமூகநீதி.
இன்னொன்று, ‘‘இன்னாருக்கு இதுதான்” – வருணா சிரம தர்மம், மனுநீதி என்று சொல்வது.
ஒரு தத்துவம், மக்களோடு இணைந்த தத்துவம். பெண்கள், ஆண்கள் என்கிற பேதம் கிடையாது. உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி என்கிற பேதம் கிடையாது.
இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதில் மனுதர்மம்தான் அந்த இடத்தில் இருக்கும்!
ஆனால், ஆர்.எஸ்.எஸ். ஆட்சி, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி மீண்டும் வந்தால், இந்திய அரசமைப்புச் சட்டத் திற்குப் பதில் மனுதர்மம்தான் அந்த இடத்தில் இருக்கும்.
மக்கள் வாக்களித்து அவர்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. திடீரென்று வாக்குப் பெட்டி கருவுற்றால் தான் அவர்கள் சொல்வது போன்று நடக்கும். அது அவ்வளவு சுலபமாக நடக்காது. ஏனென்றால், இன் றைக்கு உச்சநீதிமன்றம் மிகவும் விழிப்போடு இருக்கின்ற சூழ்நிலை. அதுவுமில்லாமல், நாளுக்கு நாள் அவர் களுடைய நம்பிக்கை தளர்கிறது. அதனால்தான், கோபம் அதிகமாகிறது. அதனால்தான், வெறுப்பு அரசி யலை மோடி அவர்களே பேசிக்கொண்டிருக்கிறார்.
நான் ஏற்கெனவே சொன்னதுபோன்று, நாம் சொன் னதை செய்துவிட்டு, மக்களை சந்தித்து வாக்கு கேட்கிறோம்.
முதல் தேர்தலிருந்து நடைபெறவிருக்கும் 18ஆவது தேர்தலைப் பார்க்கின்ற வாய்ப்பு!
முதல் தேர்தல் நடைபெற்றதிலிருந்து, வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற 18 ஆவது தேர்தலைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றவன் நான்.
அதற்கு முன்பு பச்சைப் பெட்டி, மஞ்சள் பெட்டி இருந்த காலத்தையும் பார்த்திருக்கிறேன், அன்று நான் மாணவன். ஆனால், எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவிற்கு, இந்தத் தேர்தலில் அவ்வளவு கவனம்.
ஜனநாயகமா? சர்வாதிகாரமா, எதேச்சதிகாரமா?
இதுபோன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கவேண்டுமா? அல்லது இதுவே கடைசி தேர்தலாக நாட்டிற்கு இருக்கவேண்டுமா?
‘ஒரே நாடு’ என்றால்,
மாநிலங்களே கூடாது என்பதுதான்!
‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்று சொல்கிறார்கள் – அதை அவர் எந்தத் திட்டத்தில் சொல்கிறார்?
அவர்கள் என்ன நோக்கத்தில் சொல்கிறார்கள் என்றால், ‘‘எங்களுக்கு வாக்களித்தீர்கள் என்றால், இதுதான் ஒரே தேர்தல்” அதற்குப் பிறகு தேர்தல் கிடையாது என்ற நோக்கத்தில்தான்.
‘ஒரே நாடு’ என்று அவர்கள் சொல்வதற்கு, பதவுரை, கருத்துரை, பொழிப்புரை என்னவென்று தெரியுமா? மாநிலங்களே கூடாது என்பதுதான்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் உள்ள அடிக்கட்டுமானம் என்னவென்றால்,
‘‘பாரதம், பல மாநிலங்களைக் கொண்ட ஒரு கூட் டாட்சி” என்றுதான் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்.
ஆனால், இன்றைக்குக் கூட்டாட்சியே இனிமேல் இருக்கக்கூடாது என்று சொல்வதுதான் ஆர்.எஸ்.எஸ்.
மாநிலங்களைப் பிரித்தது வெள்ளைக்காரர்கள் செய்த தவறு; அம்பேத்கர் செய்த தவறு.
சக்கரவர்த்தி போன்று அவர் அமர்ந்திருப்பார்; மற்றவர்கள் எல்லாம் சிற்றரசர்கள் போன்று எல்லோரும் கப்பம் கட்டிக்கொண்டு, கைகட்டி அமர்ந்திருக்க வேண்டும்.
இப்பொழுதே நடைமுறையில் பார்த்தீர்களேயானால், சிற்றரசர்களிடமிருந்து வசூல் செய்வதுபோன்று, நம்மிடமிருந்து வசூல் செய்வதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு ரூபாய் கொடுத்தால்,
வெறும் 29 காசு கொடுக்கிறார்கள்!
ஒரு ரூபாயை நம் மாநிலம் கொடுத்தால், ஒன்றிய அரசு திருப்பிக் கொடுப்பது வெறும் 29 காசுகள்தான்.
இனிமேல் அதுகூட கிடையாது உங்களுக்கு, நாங்கள் என்ன கொடுக்கிறோமோ அதுதான் என்று சொல்லக் கூடிய அளவில் இன்றைய நிலைமை.
ஆகவேதான், இனிமேல் மாநிலங்களே கூடாது; கல்வி என்பது நாங்கள் நிர்ணயிப்பதுதான், வருணாசிரம கல்விதான் என்று அவர்கள் சொல்வார்கள்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இதில், என்னென்ன செய்தோம்? இனிமேல் என்னென்ன செய்யப் போகிறோம்? என்று தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது.
இன்னொன்று, காங்கிரஸ் பேரியக்கத்தால் வெளி யிடப்பட்டு இருக்கின்ற தேர்தல் அறிக்கை. அகில இந்திய அளவில் இருக்கின்ற கட்சி.
அதேபோன்று கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு இருக்கின்றன.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நாம் என்னென்ன சொல்லியிருக்கின்றோமோ, அவை அத்தனையும் இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சி அமைந்தவுடன் நடைபெறக்கூடிய ஒருங்கிணைந்த சூழ்நிலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இருக்கிறது.
நீட் தேர்வை ஒழிப்போம் என்று சொன்னீர்களே, ஒழித்துவிட்டீர்களா? என்று புரியாமல் சிலர் கேட்கிறார்கள்.
தமிழ்நாடு ஆளுநரின் தலையில்
குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!
நீட் தேர்வினால் 22-க்கும் மேற்பட்ட நம்முடைய பிள்ளைகளின் உயிர்கள் பலியாகியிருக்கின்றன. இங்கே மட்டுமல்ல, மத்தியப் பிரதேசத்தில் நீட் தேர்வினால் நூற்றுக்கணக்கானோர் இறந்து போயிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், தி.மு.க. ஆட்சிப் பொறுப் பேற்றதும், சட்டமன்றத்தில் அதற்குரிய தீர்மானத்தை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அந்த மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருந்தார் அந்த ஆளுநர். இரண்டாவது முறையாக மசோதவை நிறைவேற்றி, ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைத்தது தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ ஆட்சி.
முனைவர் பொன்முடி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்கின்ற வழக்கில், உச்சநீதிமன்றம், தமிழ்நாடு ஆளுநரின் காதைப் பிடித்துத் திருகி, ஒரு நாளில் முடிவெடுக்கவேண்டும் என்று சொல்லியதே!
தி.மு.க. தேர்தல் அறிக்கையில்…!
‘‘நீட் தேர்வுக்கு விதிவிலக்குக் கோருவோம்” என்று தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெளிவாக சொல்லியிருக்கிறது.
ஆம்! ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றியத்தில் அமையப் போகின்ற ஆட்சி, மீண்டும் மோடி தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சியல்ல – மாறாக, இந்தியா கூட்டணி ஆட்சிதான் அமையப் போகிறது.
தமிழ்நாடும், புதுவையும் சேர்த்து 40 இடங்களில் வெற்றி பெற்றால் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துவிட முடியுமா? பெரும்பான்மை வேண்டுமே ஆட்சி அமைக்க என்று சில நண்பர்கள் கேட்கலாம்.
நான், தமிழ்நாட்டைப்பற்றி சொல்லவில்லை. அது முடிவு செய்யப்பட்ட விஷயம்.
‘‘இந்தியா கூட்டணிதான் பிரதமர்!’’
நம்முடைய முதலமைச்சர் அவர்களைப் பார்த்து மிக சாமர்த்தியமாக ஒரு கேள்வியைக் கேட்டார்கள், ‘‘யார் உங்கள் கூட்டணிக்குப் பிரதமர்?” என்று.
மிக சாமர்த்தியமாக கூட்டணியைப் பிரித்துவிடுவதற் கான நோக்கத்தோடு கேள்வியைக் கேட்டார்கள்.
ஆனால், மிக சாமர்த்தியமாக, நம்முடைய முதலமைச்சர் பதிலளித்தார். கலைஞர் அவர்கள் பெரியார் குருகுலத்தில் பயின்றவர்; அவரைப் போன்றே எந்தக் கேள்வி கேட்டாலும், அதற்குப் பதில் சொல்வதற்கு திராவிட இயக்கத் தலைவர்களுக்கு ஈடு இணையே கிடையாது – பட்டென்று பதில் சொல்வார்கள்.
பா.ஜ.க. கூட்டணியில், மோடிதான் பிரதமர் என்று சொல்லிவிட்டார்கள். உங்கள் கூட்டணியில் யார் பிரதமர்? என்று கேட்டார்கள்.
‘‘யார் வரக்கூடாது என்பது முக்கியம்” என்று ஏற் கெனவே சொல்லியிருந்தார் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இப்போது தேர்தல் நெருங்க, நெருங்க, யார் வர வேண்டும் என்ற கேள்விக்கும் பதில் சொல்லியிருக்கிறார்.
அது எங்களால் அல்ல; மக்களால் முடிவாகியிருக்கிறது. அந்த முடிவு என்னவென்று கேட்டால், ‘‘இந்தியா கூட்டணிதான் பிரதமர்” என்று சொன்னார்.
‘‘முதல் தலைமுறை இளைஞர்களே, எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்’’ என்கிறார் மோடி!
ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், உண்மையை என்றும் பேசாத மோடி அவர்கள், இன்றைக்குக் கடைசியாக ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார், ‘‘புதிய தலைமுறை, முதல் தலைமுறை இளைஞர்களே, எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று சொல்லி யிருக்கிறார்.
ஏனென்றால், பழைய ஆள்கள் எல்லாம் கடந்த 10 ஆண்டுகளாக இவர்களைப் புரிந்துகொண்டு விட் டார்கள்.
அந்தக் காலத்தில் சொல்வார்கள், ‘‘இந்தத் தெருவில் முடித்துவிட்டோம்; அடுத்தத் தெருவிற்குப் போவோம்”, ‘‘இந்த ஊரில் முடித்துவிட்டோம், அடுத்த ஊருக்குப் போவோம்” என்பார்கள்.
இளைஞர்கள் ஏமாறத் தயாராக இல்லை!
அதுபோன்று, மோடி வித்தை என்பது இதுதான். அதுபோன்று, ‘‘இளைஞர்களே!” என்று மீண்டும் ஆரம் பித்துவிட்டார். இன்றைய இளைஞர்கள் நம்மைவிட மிக புத்திசாலியாக இருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் ஏமாறப் போவதில்லை.
நேற்றுகூட திருச்சியில் உரையாற்றும்பொழுது சொன்ன செய்தியை, நம்முடைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி அவர் களும், நம்முடைய தோழர்களும் இதுவரையில் நாங்கள் கேட்டதே இல்லை என்று சொன்னார்கள்.
ஆனால், இப்பொழுது உள்ள ஒரு வசதி என்ன வென்றால், பழைய தகவல்களை இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
1941 ஆம் ஆண்டு கலைவாணர் அவர்கள் நடித்த திரைப்படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும். நான் இளைஞனாக, மாணவனாக இருந்தபொழுது பார்த்த ஞாபகம் எனக்கு நன்றாக இருக்கிறது.
கலைவாணரின் ‘சந்திரஅரி’ திரைப்படம்!
கலைவாணர் அவர்கள் பகுத்தறிவாளர். அந்தத் திரைப்படத்தில் சிறப்பு என்னவென்றால், அரிச்சந்தி ரனை எப்படியாவது ஒரு பொய் சொல்ல வைக்க வேண்டும் என்று காட்சிகள் இருக்கும். புராணக் கதைப் படி அரிச்சந்திரன் பொய்யே சொல்லாதவன் என்பார்கள். நடைமுறையில்கூட ‘‘இவர் பெரிய அரிச்சந்திரன்” என்று சொல்வார்கள். ஆனால், கலைவாணர் அவர்கள் அதை அப்படியே திருப்பிப்போட்டார். அந்தத் திரைப்படத் திற்குப் பெயர் ‘‘சந்திர அரி” என்பதாகும். அதில் ஒரு உண்மையைக்கூட அவரிடம் வாங்க முடியாது.
எப்படியாவது ஒரு உண்மையையா£வது பேச வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தாலும், கடைசிவரையில் அவர் பொய்யை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பார். கடைசியாக, அவரை சோதிக்கவேண்டும் என்று நினைத்தவரே, அவருடைய காலில் விழுந்து, ‘‘அய்யா, உங்களை சோதிக்கலாம் என்று நினைத்தேன்; ஆனால், உங்களைப் போன்று பொய் சொல்பவரை உலகத்தில் பார்த்ததே இல்லை. ஆகவே, நீங்கள்தான் வெற்றி பெற்றீர்கள். நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன், உங்களை ஒரு உண்மையைக்கூட சொல்ல வைக்க முடியவில்லை” என்பார்.
அன்றைய சந்திரஅரிதான், கலைவாணருடைய சந்திரஅரிதான் இன்றைய பிரதமர் மோடி என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.
நேற்று நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின்
கேள்வி
‘‘கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் ஒன்றிய பா.ஜ.க. அரசு…
இது அப்பட்டமான பொய்க்கணக்கு!
இதில் இரண்டு கூறுகள் உள்ளன:
ஒன்று, ஒன்றிய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி.
ஒன்றிய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பகிர்வையும், திட்டங்களுக் காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையும் உள்ளடக்கியது இது.
இதன்கீழ் உத்தரப்பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பாஜக அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே!
இரண்டு, ஒன்றிய அரசு ஒரு மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்தக்கூடிய திட்டங் களுக்கான நிதி ஒதுக்கீடு.
இதில் பாஜக காட்டியுள்ள பொய்க் கணக்குகள் என்னென்ன தெரியுமா?
இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு ரூ.1,960 கோடி,
ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ரூ.63,246 கோடி,
‘சாகர்மாலா’ திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடி என்று,
ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது பாஜக அரசு.
இந்தத் திட்டங்களின்கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் செலவழிக்கப் பட்டுள்ள நிதி எவ்வளவு, விடுவிக்கப்பட் டுள்ள நிதி எவ்வளவு என்பதை எந்த பாஜக அமைச்சர்களாவது விளக்க முன்வருவார் களா?
இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல் எடுத்து விடப்பட்டுள்ள அநியாயப் பொய் அடுத்தது!
தம் உழைப்பாலும் தொழில் திறத்தாலும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட் டுள்ள தமிழ்நாட்டின் சிறுதொழில் முனை வோர்கள் வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்த வேண்டிய 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் அனைத்தையும் தாராளமாக நிதி வழங்கியது போல கூறிக்கொள்கிறது ஒன்றிய பாஜக அரசு.
எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்?
எங்கள் காதுகள் பாவமில்லையா!” என்று அந்தக் கேள்வி உள்ளது.
அடுத்ததாக நண்பர்களே, மாநிலங்களுக்கு நிதி கொடுக்கவில்லை; சொன்னதை செய்யவில்லை ஒன்றிய பா.ஜ.க. அரசு.
விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம் என்று சொன்னார்களே, செய்தார்களா?
தலைநகர் டில்லிக்கு அரியானாவிலிருந்தும், பஞ்சாபிலிருந்தும், உத்தரப்பிரதேசத்திலும் விவசாயிகளால் செல்ல முடியவில்லையே, முள்வேலியையும், இரும்பு வேலியையும் தடுப்புக்களாக அமைத்திருக்கிறார்களே!
எதற்காக விவசாயிகள் மீண்டும் டில்லி தலைநருக்கு வருகிறார்கள்?
மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தீர்கள்; அதனைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள விவசாயி கள் டில்லியில் திரண்டு ஓராண்டிற்கு மேலாக வெயில், மழை, குளிரையும் பொருட்படுத்தாமல் போராடினார்கள். பலர் இறந்தனர். வேறு வழியில்லாமல் ஒன்றிய அரசு என்ன சொன்னது, அந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுகிறோம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
‘‘மீண்டும் வருவார் மோடி’’ என்கிறார் ஒருவர்; ‘‘மீண்டு வருவாரா மோடி? என்று மக்கள் கேட்கிறார்கள்!
ஆனால், இங்கே இருக்கின்ற ஒருவர், தலையில்லாமல் வால் ஆடிக்கொண்டிருக்கிறதே, தேர்தல் விதியே எனக்கு இல்லை என்று சொல்லுகின்ற அளவிற்கு, கோயம்புத்தூரில் மாட்டிக் கொண்டிருக்கின்ற வீராதி வீரர், சூராதி சூரர் அண்ணாமலை சொல்கிறார், ‘‘மீண்டும் வருவார் மோடி” என்கிறார். ‘‘மீண்டு வருவாரா மோடி? என்று மக்கள் கேட்கிறார்கள். தேர்தல் விதி எனக்குக் கிடையாது; இரவு 10 மணிக்குமேலும் நான் பிரச்சாரம் செய்வேன் என்று சொல்கிறார்.
பெரியார்தான் சொல்வார்!
நாங்கள் மக்களைப் பற்றி கவலைப்படுகிறவர்கள். பெரியார்தான் சொல்வார், ‘‘மக்கள் வருவார்கள் என்று காத்திருக்கவேண்டாம்; நீ போய் முதலில் உட்கார், மக்கள் தானாக வருவார்கள்’’ என்று.
ஆகவே, அன்று அண்ணாமலை என்ன சொன்னார் தெரியுமா? ‘‘மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறமாட்டோம்” என்று சொன்னார். ஒரு மாநிலத் தலைவர், ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசி போன்று இருக்கக்கூடாது.
விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி!
ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு விவசாயிகளின் எழுச்சியான போராட்டத்தைப் பார்த்து, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதோடு மட்டுமல்லாமல், ‘‘குறைந்தபட்ச ஆதார விலையை வழங்குவோம்; உங்கள்மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவோம்” என்றும் சொன்னது.
ஆனால், சொன்னபடி செய்தார்களா, என்றால் இல்லை!
ஆகவேதான், ‘‘டில்லி சலோ” என்று விவசாயிகள் டில்லிக்குப் படையெடுத்தனர்.
அவர்களைத் தடுப்பதற்காகத்தான் முள்வேலி, இரும்பு வேலி, கண்ணீர்ப் புகை, துப்பாக்கிச் சூடு போன்ற நடவடிக்கைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு எடுத்தது. அதில் விவசாயிகள் உயிர் பலியானது.
விவசாயிகளுடைய கடனை தள்ளுபடி செய்தால், 5 லட்சம் கோடி ரூபாய்தான் என்று நாடாளுமன்றத்தில் புள்ளி விவரம் சொன்னார்கள்.
தொழிலதிபரின் 30.5 லட்சம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு
ஆனால், அதை செய்யாத பா.ஜ.க. மோடி அரசு, பெரிய பெரிய தொழிலதிபர்களின் 30.5 லட்சம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது.
தொழிலதிபர்கள் யார் என்றால், அதானி, அம் பானிக்கு, டாட்டா, பிர்லாக்களுக்கு கடன் தள்ளுபடி.
ஆனால், பிரதமர் மோடி என்ன சொல்கிறார், ‘‘140 கோடி மக்களும் என் குடும்பம்’’ என்று.
இப்படி சொல்லுகின்ற பிரதமர்தான் நமக்கு வேண்டும். ஆனால், பிரதமர் மோடியால் கொடுக்க முடியாது. அதை யார் கொடுக்கப் போகிறார்கள்? ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றியத்தில் அமையப் போகின்ற இந்தியா கூட்டணியின் பிரதமர்தான்.
தி.மு.க. – காங்கிரஸ் சித்தாந்தம் வெறுப்பால் உருவானதாம்: மோடி!
இன்று (15-4-2024) மாலை தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி, ‘‘தி.மு.க. மேலே மக்களுக்கு ஏன் கோபம் இருக்கிறது என்றால், வெறுப்பு அரசியலால்தான். தி.மு.க. – காங்கிரஸ் சித்தாந்தம் வெறுப்பால் உருவானது” என்கிறார்.
என்ன ஒரு புத்திசாலித்தனம் அவருக்கு!
அதனுடைய வரலாறு தெரியுமா அவருக்கு?
தி.மு.க. எப்படி வந்தது என்று தெரியுமா, மோடிக்கு?
காங்கிரஸ் இயக்கம் நூறாண்டைத் தாண்டியது – அதேபோன்று திராவிடர் இயக்கம் நூறாண்டைத் தாண்டியது.
நீதிக்கட்சியின் தொடர்ச்சிதான்
எங்கள் ஆட்சி: அண்ணா
அண்ணா அவர்கள் 1967 இல் வெற்றி பெற்றவுடன், அவரிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள், ‘‘கட்சி தொடங் கிய குறுகிய காலத்தில் வெற்றி பெற்றுவிட்டீர்களே?” என்று.
அதற்காக அண்ணா அவர்கள் மார்தட்டிக் கொள்ளவில்லை; மிக எளிமையாக அந்தக் கேள்விக்குப் பதில் சொன்னார், ‘‘நான் முதலில் வெற்றி பெறவில்லை; என் பாட்டான் நீதிக்கட்சி, அதனுடைய தொடர்ச்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்” என்றார்.
இது நூறாண்டு கால வரலாறாகும்.
ஆனால், மோடி சொல்கிறார், தி.மு.க.- காங்கிரஸ் சித்தாந்தம் வெறுப்பால் வந்தது என்று.
அதேநேரத்தில் உங்களுக்குச் சொல்கிறேன், அர சியல் கட்சியான பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.சினுடைய பரிவார். ஆர்.எஸ்.எஸில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அதில் ஒன்றுதான் பா.ஜ.க.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் கோல்வால்கரின் சித்தாந்தம்!
இன்னுங்கேட்டால், பா.ஜ.க.வினால் சுதந்திரமாக முடிவெடுக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ். என்ன உத்தரவு போடுகிறதோ, அதனைத்தான் செய்யவேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் கோல்வால் கர்தான் அந்த இயக்கத்தின் கொள்கையை வகுத்தவர். ‘‘சிந்தனைக் கொத்து” என்ற தலைப்பில் உள்ள நூலில் என்ன சொல்கிறார் தெரியுமா?
‘‘ஹிந்து மக்களுக்கு ஹிந்துராஷ்டிரம்
ஒரே மதம் – ஹிந்து மதம்
ஒரே நாடு – ஹிந்து நாடு
ஒரே மொழி- சமஸ்கிருத மொழி
ஒரே கலாச்சாரம்- சமஸ்கிருத கலாச்சாரம்” என்று சொல்லிவிட்டு, நமக்கு யார் எதிரிகள் தெரியுமா? என்றும் அந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். இதையாவது மறுத்துச் சொல்லட்டும் பார்க்கலாம்.
‘திராவிட மாடல்’ அரசின் சமூகநீதி நாள் – சமத்துவ நாள் அறிவிப்பு!
ஆனால், திராவிட இயக்கம் பிறந்ததே ‘‘அனை வருக்கும் அனைத்தும்” – ‘‘எல்லோரும் சமம்” என்பதற் காகத்தான்.
நம்முடைய திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் அவர்கள், தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப் டம்பர் 17 ஆம் தேதியை சமூகநீதி நாள் என்று அறிவித்து, எல்லோரையும் உறுதிமொழி எடுக்க வைத்தார்.
அடுத்ததாக, அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதியை ‘‘சமத்துவ நாள்” என்று அறிவித்து, அன்று உறுதிமொழியை எடுக்க வைத்தார்.
சமத்துவம், சமூகநீதிக்காகவே பிறந்த இயக்கம் திராவிடர் இயக்கம், அம்பேத்கர் இயக்கம், சமூகநீதி இயக்கமாகும்.
ஆனால், ஆர்.எஸ்.எஸ். என்ன சொல்கிறது, ‘‘முஸ்லிம்கள் முதல் எதிரிகள்” என்கிறது. அவர்கள் இந்த நாட்டுக்காரர்கள் இல்லையா? முஸ்லிம்கள் சகோதரர்கள் மூன்று, நான்கு தலைமுறைகளுக்கு அவர்கள் யார்? என்பதை நினைத்துப் பார்க்கவேண்டாமா?
வெறுப்பிலே பிறந்தவர்கள் நீங்கள் –
பொறுப்பிலே பிறந்தவர்கள் நாங்கள்!
கிறித்தவர்கள் யார்? மூன்று, நான்கு தலைமுறை களுக்கு அவர்கள் யார்? என்பதை நினைத்துப் பார்க்கவேண்டாமா?
வெறுப்பை விதைப்பவர்கள் யார்?
வெறுப்பிலே பிறந்தவர்கள் நீங்கள் –
பொறுப்பிலே பிறந்தவர்கள் நாங்கள்.
வெறுப்பையும் தாண்டி, பதம்பார்த்த இயக்கம் இந்த இயக்கம். மிசா காலத்தில் சிறைச்சாலையில் இருந்தவர்கள் எங்களுடைய திராவிட இயக்கத்தவர்கள். தியாகங்கள் எங்களுக்கு சாதாரணமானதல்ல.
மாறுவேடம் போட்டு
தலைமறைவாக இருந்தவர் மோடி!
அதேநேரத்தில், காவல்துறையினரிடமிருந்து தப்பிப் பதற்காக சீக்கியர் வேடம், சவுக்கிதார் வேடம் எல்லாம் போட்டு, தலைமறைவாக இருந்து சிறைக்கே போகாத வர்தான் இன்றைய பிரதமர் மோடி அவர்கள்.
ஆகவேதான் நண்பர்களே, உண்மையே பேசாத வர்கள் என்பதற்கு அதுவும் ஓர் அடையாளம்.
நம்முடைய முதலமைச்சர் தொடங்கி, மற்ற எல்லோரும் என்ன சொல்வார்கள்?
பெரியார், அண்ணா, கலைஞர், காமராஜர் என்ற பெயர்களைச் சொல்லித்தான் உரையைத் தொடங்கு வார்கள்.
ஆனால், பா.ஜ.க.வில் அதுபோன்று சொல்வதற்கு யாராவது இருக்கிறார்களா? அப்படியே அவர்கள் யாருடைய பெயரையாவது சொன்னால், மக்களுக்குத் தெரியுமா?
ஆகவே, தமிழ்நாட்டிற்கு பிரதமர் எந்தப் பகுதிக்குப் போகிறாரோ, எழுதிக் கொடுப்பதை அப்படியே சொல் கிறார். திருநெல்வேலிக்குச் சென்றபொழுது, ‘‘வ.உ.சி. பெரிய தியாகம் செய்தவர்’’ என்று சொல்கிறார்.
வ.உ.சி. இழுத்த செக்கைத் தேடிப் பிடித்து,
அவர் இருந்த சிறையில் செக்கை வைத்த பெருமை கலைஞருக்கே!
வ.உ.சி.யைப்பற்றி நமக்குச் சொல்கிறார். வ.உ.சி. எவ்வளவு பெரிய புகழ்பெற்ற ஆள், அதையெல்லாம் தி.மு.க. மறைத்துவிட்டது என்கிறார்.
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்கள், இழுத்த செக்கைத் தேடிப் பிடித்து, அவர் இருந்த சிறையில் செக்கை வைத்த பெருமை, தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதியைப் பெற்றுத் தந்தது ஒப்பற்ற நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் அல்லவா! அதை நினைத்துப் பார்க்கவேண்டாமா?
வ.உ.சி.யினுடைய வரலாறு தெரியுமா, பிரதமர் மோடி அவர்களே! உங்களுக்கும் தெரியாது, உங்களுக்கு எழுதிக் கொடுத்தவருக்கும் தெரியாது.
சமூகநீதியை உயிரோடு குழிதோண்ப் புதைக்கின்ற இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி.
கடைசியாக வ.உ.சி. எதற்காகப் போராடினார் என்று தெரியுமா?
சமூகநீதிக்காகத்தான். அந்த சமூகநீதியை உயிரோடு குழிதோண்டிப் புதைக்கின்ற இயக்கம்தான்
ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி.
பா.ஜ.க. தேர்தல் அறிக்கை ஆங்கிலத்தில் வெளி யிட்டு இருக்கிறதே, அதில், ‘‘மோடி ஜி, கேரண்டீ!” என்று.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணிக்காக கதவைத் திறந்தே வைத்திருந்தது. யாரும் வரவில்லை. கடைசியில், கதவை கழற்றியே வைத்தார்கள். அப்பொழுதும் யாரும் வரவில்லை.
பா.ஜ.க.வின் கனவு பலிக்கவில்லை!
அவர்கள் என்ன நினைத்தார்கள் என்றால், தி.மு.க. கூட்டணியில் இடங்கள் கொடுப்பதில் சிக்கல்கள் வரும். அப்படி இடங்கள் கிடைக்காதவர்கள் பா.ஜ.க. கூட்டணிக்கு வருவார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டார்கள். அவர்களின் கனவு பலிக்கவில்லை!
இது பதவிக் கூட்டணியல்ல – மக்களுக்கான உதவிக் கூட்டணி- கொள்கைக் கூட்டணி!
பா.ஜ.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு உண்டா?
பா.ஜ.க.வினர் ஒரே ஒரு கேள்விக்குப் பதில் சொல் லட்டும்; அல்லது அவர்களுடைய தொண்டரடிப் பொடியாழ்வார்கள்; அல்லது அவரைவிட, ராஜாவை மிஞ்சக்கூடிய ராஜ விசுவாசிகளாக இருப்பவர்கள் – ‘‘புதுசா கட்டிக் கொண்ட ஜோடிதானுங்க” என்று போயிருக்கிறார்களே சிலர், ‘‘சமூகநீதிக்காக திராவிடர் கழகம் ஒன்றும் செய்யவில்லை; தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை; ஸ்டாலின் ஒன்றும் செய்யவில்லை; எங்கள் சமூகத்திற்காக என்ன செய்தார்கள்” என்று சொன்னவர் இருக்கிறாரே, அவர், பிரதமரின் காதோடு காதாக பேசுகிறாரே, ‘மோடி ஜி!’ என்று சொல்கிறாரே, அவரிடம் அன்போடு நான் கேட்கிறேன், ‘‘சமூகநீதிக்காக எங்களைக் குறை சொல்கிறீர்களே, ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று இதோ தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இருக்கிறது; காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் இருக்கிறது. ஆனால், பா.ஜ.க. வெளி யிட்டுள்ள மோடி ஜி கேரண்டீயில், நெகி, நெகி.”
அவர்களுடைய மிகப்பெரிய பொய் பலூனை, நம்முடைய சிறு குண்டூசி வெடிக்கச் செய்துவிடும்.
தேர்தலுக்கு இன்னும் சில நாள்கள் இருக்கின்றன. தயவு செய்து யாராவது பதில் சொல்லட்டும்; சமூகநீதி என்ற வார்த்தை பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இருக்கிறதா? மருத்துவர் அய்யா அவர்கள் தேடித் தேடிப் பார்க்கட்டும்; எங்கேயாவது ஜாதிவாரிக் கணக் கெடுப்பு உண்டா? என்று சொல்லட்டும்.
உள்ளாட்சி தேர்தலில்
50 விழுக்காடு இடத்தினை
பெண்களுக்குக் கொடுத்தது தி.மு.க.!
50 விழுக்காடு பெண்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று பெரியார் அவர்கள் நூறாண்டுகளுக்கு முன்பே சொன்னார். நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 50 விழுக்காடு இடத்தினை பெண்களுக்குக் கொடுத்தார்.
எங்கே பார்த்தாலும் பெண் மேயர், பெண்களுக்கு வாய்ப்பு என்று வந்திருக்கிறது. நல்ல வாய்ப்பாக மயிலாடுதுறை தொகுதியில் முதன்முறையாக நல்ல வீரப்பெண்மணி காங்கிரஸ் கட்சியின் சார்பாக, இந்தியா கூட்டணியின் சார்பாக, திராவிட முன்னேற்றக் கழகத் தின் பேராதரவோடு நிறுத்தப்பட்டு இருக்கிறார்.
நாடே சிறைச்சாலையாக ஆவதற்கு அனுமதிக்கலாமா?
நம்முடைய கவனம் இந்தத் தேர்தலில் சிதறக் கூடாது. இதை எங்களுக்காக சொல்லவில்லை. ஏனென்றால், நாங்கள் வெளியிலும் இருப்போம், சிறைச்சாலையிலும் இருப்போம். ஆனால், இந்த நாடே சிறைச்சாலையாக ஆவதற்கு அனுமதிக்கலாமா?
ஜனநாயகம் இன்றைக்கு மரணப் படுக்கையில் இருக்கிறது; தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது. உரிய சிகிச்சை செய்வதற்கு அந்தத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கக்கூடியவர்கள்தான் இரண்டு பெரிய டாக்டர்கள்.
ஒருவர், நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.
இன்னொருவர், துடிப்புமிகுந்த இளந்தலைவர் ராகுல் காந்தி அவர்கள்.
‘‘நாளை நமதே, வெற்றி நமதே’’ என்று
நாம் சொல்வது வெறும் வசனமோ, வார்த்தையோ அல்ல!
இப்படிப்பட்ட ஓர் அற்புதமான சூழல் உருவாகி இருக்கிறது. ‘‘நாளை நமதே, வெற்றி நமதே” என்று நாம் சொல்வது வெறும் வசனம் அல்ல; வெறும் வார்த் தையல்ல. ஏனென்றால், இந்தியா முழுவதும் எடுத்துப் பார்த்தால், அந்த உண்மை நன்றாக விளங்கும்.
கருத்துக் கணிப்பினால் இதை சொல்கிறேன் என்று யாரும் நினைக்கவேண்டிய அவசியமில்லை. கருத்துக் கணிப்புகள் நமக்கு சாதகமாக வந்தாலும்கூட, அதனை நாங்கள் எடுத்துக்கொள்வதில்லை. ஏனென்றால், அது ஒருவகையான கருத்துத் திணிப்புதான்.
ஆனால், நாங்கள் சொல்வது, ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றியத்தில் அமையப் போவது இந்தியா கூட்டணியினுடைய ஆட்சிதான்.
இதைச் சொல்வதற்குக் காரணம் – ஒன்று, மக்கள் கணிப்பு. இரண்டாவது, அந்தந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய நிலவரத்தை வைத்துத்தான்.
நம்முடைய தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 இடங்களில் வெற்றி என்பது உறுதியான விஷயம்.
இரண்டு பேரும் காணாமல் போய்விடுவார்கள் என்று மக்கள் சொல்கிறார்கள்!
எதிரணிகளுக்குள்ளே பேசிக் கொள்கிறார்கள், தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என்று பா.ஜ.க. சொல்கிறது. பா.ஜ.க. காணாமல் போய் விடும் என்று அ.தி.மு.க. சொல்கிறது. இரண்டு பேரும் காணாமல் போய்விடுவார்கள் என்று மக்கள் சொல்கிறார்கள்.
அ.தி.மு.க. காணாமல் போகக்கூடாது; அவர்கள் இருக்கவேண்டும். ஏனென்றால், எதிர்க்கட்சிகள் என்பது எப்பொழுதும் இருக்கவேண்டும். சட்டப்பேரவையில், வெளிநடப்பு செய்வதற்கு ஒரு கட்சி வேண்டும் அல்லவா!
140 கோடி மக்களில்
மணிப்பூர் மக்கள் இல்லையா?
‘‘140 கோடி மக்களும் என் குடும்பம்” என்று சொல்கிறாரே பிரதமர் மோடி அவர்கள், மணிப்பூரில் உள்ள பழங்குடியின சமூகத்தவர் அந்த 140 கோடி மக்களில் இல்லையா? பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லியிருக்கிறாரா?
அடிக்கடி ‘நாரிசக்தி’ என்று சொல்வார் பிரதமர் மோடி. அப்படிப்பட்ட பெண்கள், பழங்குடியின பெண் கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஓட ஓட விரட்டப்பட் டார்களே, அந்தக் காட்சி அகில உலகம் முழுவதும் சென்றிருக்கிறதே! அப்பொழுது நீங்கள் அங்கே சென்று, வழிந்தோடிய கண்ணீரை இரண்டு ஆறுதல் வார்த்தை களால் துடைத்ததுண்டா? ‘‘அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்” என்பதை மக்கள் மறக்கவில்லை – இது வடகிழக்கு!
‘‘தி.மு.க. எதையுமே செய்யவில்லையாம்’’ – மோடி!
இன்று நெல்லைக்குச் சென்று பேசினாரே பிரதமர் மோடி, ‘‘தி.மு.க. எதையுமே செய்யவில்லை” என்கிறார்.
மழை, புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதிகளை மக்களை சந்தித்து ஆறுதல் கூறக்கூடிய மனம் இருந்ததா உங்களுக்கு. நிவாரண நிதி கொடுக்க வில்லை என்பது இன்னொரு பக்கம் இருக்கட்டும்.
கனிமொழி உள்ளிட்ட ‘திராவிட மாடல்’ ஆட்சியின் அமைச்சர்கள்தானே பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட ஒரு அமைச்சரையே காணவில்லை என்கிற அளவிற்கு செய்தி வந்ததே, இந்தச் செய்தியெல்லாம் தெரியாமல் தி.மு.க எதையுமே செய்யவில்லை என்று சொல்கிறாரே, பிரதமர் மோடி.
பெட்ரோலிய கச்சாப் பொருளின் விலை குறைந்தாலும், இவர்கள் விலையை குறைப்பது இல்லை!
பன்னாட்டு சந்தையில் பெட்ரோலிய கச்சாப் பொருள் ஒரு பீப்பா 111 டாலராக இருந்தபொழுது பெட்ரோலிய பொருள்களின் விலையை ஏற்றினீர்கள். அதற்குப் பிறகு 77 டாலராக கச்சாப் பொருளின் விலை குறைந்தபொழுது, நீங்கள் பெட்ரோலிய பொருள்களின் விலையைக் குறைத்திருக்கிறீர்களா?
அந்தப் பணம் எல்லாம் எங்கே சென்றது? பிஎம்.கேர் என்று சொல்லக்கூடிய கணக்கிற்குத்தான் சென்றது.
நட்டத்தில் இயங்கிய 33 நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகளை பா.ஜ.க. பெற்றிருக்கிறது. நன்கொடை கொடுக்காத நிறுவனங்களை தங்கள் கையில் வைத் திருக்கும் திரிசூலங்களை வைத்து மிரட்டி நன்கொடை களைப் பெறுவது.
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின்
தந்திர முறை!
இந்த ஊழல்களையெல்லாம் எதிர்க்கட்சிகள் எடுத் துச் சொல்லக்கூடும் என்பதற்காகத்தான், எப்பொழுதும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. வினர் ஒரு தந்திர முறையைக் கையாள்வார்கள்.
அது என்னவென்றால், திசை திருப்பல் வேலை களைச் செய்வது. பெட்டியைத் திருடிக் கொண்டு ஓடுகிறவனைத் துரத்திக் கொண்டு ஓடுகிறவர்களே, அவர்கள் ஆள்களே இரண்டு பேர், அந்தப் பக்கம் ஓடினான் என்று திசை திருப்பி விடுவார்கள்.
அதற்காகத்தான் கச்சத்தீவு பிரச்சினையைக் கிளப் பினார்கள். கச்சத்தீவின்மேல் பிரதமர் மோடிக்கு ஒன்றும் கரிசனம் கிடையாது. ஆனால், கச்சத்தீவைப்பற்றி பேசினால், அதற்கும் நாங்கள் பதில் சொல்வோம். நாங்கள் என்ன சாதாரண ஆட்களா?
பெரியார் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்ப்பவர்கள் நாங்கள்!
ஏனென்றால், பெரியார் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்ப்பவர்கள் நாங்கள். எல்லாவற்றையும் பார்க்கக் கூடிய கண்ணாடி அது.
கச்சத்தீவு கண்டன நாள் என்ற போராட்டத்தை கலைஞர் அவர்கள் ஆரம்பித்து, அந்தக் கண்டன நாள் கூட்டத்தில் பங்கேற்றவன் நான், இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்.
எனவேதான் நண்பர்களே, மீனவர்கள் ஒவ்வொரு நாளும் கொடுமைக்கு ஆளாகிறார்கள். வாழ்வாதாரப் பறிப்பு, பொருட்கள் பறிக்கப்பட்டு, தாக்கப்படுகிறார்கள்.
இலங்கைப் பொருளாதாரமே இந்தியா கொடுத்த நிதியால்தான் மீண்டெழுந்தது. அப்பொழுது நீங்கள் எதைச் சொன்னாலும் இலங்கை கேட்டிருக்குமே? அப்பொழுது நீங்கள் கச்சத்தீவை திரும்பக் கேட்டிருக் கலாமே? ஏன் அதை செய்யவில்லை, நீங்கள்?
எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன்
அண்ணா முதலமைச்சராக இருந்தபொழுது, காங்கிரஸ் கட்சி – எதிர்க்கட்சித் தலைவராக கருத்திருமன் இருந்தார். கடந்த ஆட்சிக் காலத்தில் இப்படியெல்லாம் நடந்தது என்று சொன்னபொழுது, கருத்திருமன் சொன்னார், ‘‘அதனால்தான் நாங்கள்தான் பதவி இழந்து உட்கார்ந்திருக்கிறோம். நீங்கள் ஆளும் இடத்தில், நாங்கள் எதிர்க்கட்சி இடத்தில்” என்று சொன்னார்.
பொய்க்கால் குதிரைமேல் அமர்ந்துகொண்டு…
ஆகவே, நீங்கள் என்ன சொல்லியிருக்கவேண்டும்; ‘‘கடந்த 10 ஆண்டுகாலத்தில், அவர்களால் கொடுக்கப் பட்ட கச்சத்தீவை நான் மீட்டேன்” என்று சொல்லி யிருக்கலாமே!
பொய்க்கால் குதிரைமேல் அமர்ந்துகொண்டு, ‘‘நான் குதிரை ஓட்டுகிறேன், குதிரை ஓட்டுகிறேன்” என்று சொல்வதற்கும், நம் நாட்டு மோடியினுடைய பேச்சிற்கும் என்ன வித்தியாசம்? என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான அணி – இந்தியா கூட்டணி!
ஆகவேதான், ‘‘சொன்னதைச் செய்வது; செய் வதையே சொல்வது” என்பதற்கான அணிதான் இந்தியா கூட்டணி.
ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான அணி இது!
‘‘அனைவருக்கும் அனைத்தும்” என்று சொல்லக் கூடிய அணி இது!
பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி திட்டத்தை அறிவித்து, நம்முடைய தாய்மார்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க வைத்தார் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
காலைச் சிற்றுண்டி திட்டத்தால், மாணவர்களின் பசியும் தீருகிறது; ஜாதி ஒழிகிறது; மதமும் ஒழிகிறது. சமத்துவம் மேலோங்கி நிற்கிறது.
இந்தியா முழுவதும் ‘திராவிட மாடல்’ ஆட்சி
வரப் போகிறது
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான ஆட்சி – இதுவரை தமிழ்நாடு மட்டும் கொடுத்த ஆட்சி – இதுவரை தென் னாடு மட்டும் கொடுத்த ஆட்சி – இந்தியா முழுவதும் வரப் போகிறது.
அதற்குரிய நாள்தான் வருகிற 19 ஆம் தேதி.
‘கை’ சின்னத்திற்கு
வாக்களியுங்கள்!
அன்றைக்கு நீங்கள் வாக்குச் சாவடிக்குச் செல்லுங்கள் வாக்காளப் பெருமக்களே, வாக்குப் பெட்டி இயந்திரத்தில், வரிசை எண் 2 இல் வழக்குரைஞர் சுதா பெயர் இருக்கும்; அதற்கு நேரே கை சின்னமும் இருக்கும். அதற்கு நேரே இருக்கின்ற பொத்தானை அழுத்துங்கள் தாய்மார்களே, சகோதரிகளே, பெரியோர்களே! அழுத்திவிட்டு, உடனே கையை எடுத்துவிடாதீர்கள். பச்சை விளக்கு எரிகிறதா என்று பாருங்கள். அங்கே விளக்கு எரிந்தால், உங்கள் வீட்டில் விளக்கு எரியும்; நாட்டில் விளக்கு எரியும். இருட்டு விலகி வெளிச்சம் பரவும்!
வெற்றி நமதே!
வெற்றி விழாவில் சந்திப்போம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகுகிறது – வடமாநிலங்களிலும் பி.ஜே.பி.,க்கு நெருக்கடி!
குஜராத்தில் 26 இடம்,
உத்தரப்பிரதேசத்தில் 80 இடம்
பீகாரில் 40 இடம்
இந்த மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் பாதி இடங்களில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறுவதே சந்தேகம்தான். வடநாட்டிலேயே இப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கிறது.
இந்தியா கூட்டணிக்கு ஆதரவு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது!
எப்படி நாம் கூட்டம் தொடங்கும்பொழுது, கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால், நான் உரையை முடிக்கும்பொழுது, நாற்காலிகளைக் கொண்டு வந்து போடுகிறார்கள். இப்படி இந்தக் கூட்டத்திற்குக் கூட்டம் பெருகுவதுபோன்று, இந்தியா கூட்டணிக்கு ஆதரவு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது.
சில பத்திரிகைகாரர்களுக்கு நீங்கள் எல்லாம் ஏமாற்றம் கொடுத்திருக்கிறீர்கள். காலியான நாற்காலி களின் படத்தைப் போட்டு, ‘‘வீரமணி பேசிய கூட்டத்தில் கூட்டமே இல்லை” என்று செய்தி போடுவதற்கு. அதற்கு நேரெதிராக சாலையையே அடைத்து அமர்ந் திருக்கிறீர்கள்.
நான் இன்னும் பேசிக்கொண்டே இருந்தால், கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கும். அதுபோன்று தான், ஏப்ரல் 19 இல் தொடங்கி, ஜூன் ஒன்றாம் தேதி வரையில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகிக் கொண்டே வரக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.
மேனாள் தேர்தல் ஆணையத் தலைவர் எஸ்.ஒய்.குரோஷி
இதை நான் மட்டும் சொல்லவில்லை நண்பர்களே! எஸ்.ஒய்.குரோஷி என்கிற ஓய்வு பெற்ற மேனாள் தேர்தல் ஆணையத் தலைவர். அவர் ‘எக்ஸ்’ தளத்தில், ‘‘ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் பா.ஜ.க. 400 இடங்கள் என்று சொன்னார்கள். ஆனால், அதற்குப் பிறகு 300 ஆகி, 200 ஆகி இன்னும் குறைந்துகொண்டே வரும்” என்று பதிவிட்டு இருக்கிறார். அந்தச் செய்தி குறித்து ‘விடுதலை’யில் அறிக்கையும் வெளியிட்டு இருக் கிறோம்.
400 இடம், 450 இடம் என்று முன்பு சொன்னார்கள்; அது இப்பொழுது வராது என்று நன்றாகத் தெரிந்து விட்டது. அப்படி இருந்தும், இப்பொழுதும் பா.ஜ.க. 450 இடங்களைப் பெறும் என்று சொன்னால், அவர்கள் ‘420′ நபர்கள்தான். ‘420′ என்றால், ஏமாற்றுப் பேர்வழி என்பதாகும்.
வட மாநிலங்களிலும் மக்கள் தயாராக இருக்கிறார் கள். பீகாரில் சண்டை வரும் என்று நினைத்தார்கள். அங்கே நிதிஷ்குமார் தனிமரமாகிவிட்டார்.
பீகாரில், அகிலேஷ் யாதவ் கட்சியான சமாஜ்வாடி கட்சியும், காங்கிரசும் கூட்டணி.
அகில இந்தியா முழுவதும் தொடர்கிறது!
மேற்கு வங்காளத்திலும், கேராளவிலும் உள்ளவர் கள் இந்தியா கூட்டணியோடு சேர்ந்தார்களா? என்று கேட்கிறார்கள்.
மேற்கு வங்காளத்திலும், கேரளாவிலும் பா.ஜ.க. ஓரிடத்தில்கூட வெற்றி பெறாது என்று செய்திகள் வருகின்றன.
‘‘யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக் கூடாது” என்று நம்முடைய முதலமைச்சர் சொன்ன தத்துவம், அகில இந்தியா முழுவதும் தொடர்கிறது.
ஆகவே, நிச்சயமாக நீங்கள் ஜூன் 4 ஆம் தேதிக் குப் பிறகு, ஒரு புதிய மாற்றத்தைக் காணலாம்; காணு வோம்.
இல்லையானால், இதுதான் நாட்டிற்குக் கடைசித் தேர்தலாக இருக்கும் என்ற உணர்வை எல்லோரும் பெற்றிருக்கின்றார்கள். ஓய்வு பெற்ற அதிகாரிகள் சொல்கிறார்கள். நீதிபதிகளுக்குப் பாதுகாப்பு இல்லை.
ஆகவே, எல்லாவற்றிற்கும் பதில் சொல்லக்கூடிய ஆக்கப்பூர்வமான செய்திகள் இருக்கின்றன.
மயிலாடுதுறை தொகுதியில் நடைபெற்ற
தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் – 15.04.2024