‘டெக்கான் கிரானிக்கில்’ (12.04.2024) ஆங்கில நாளேட்டிற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வழங்கிய நேர்காணலின் கட்டுரை வடிவம்
நேர்காணலாளர்: ஜி. பாபு ஜெயக்குமார்
தேர்தல் பிரச்சாரத்தில் காலம் காலமாக நடைபெற்று வரும் பொதுக்கூட்ட மேடைகளில் பேசுவதற்கும், வீடு வீடாகச் சென்று மாந்தப் பரிவுடன் மக்களைச் சந்திப்பதற்கும் டிஜிட்டல் வழிப் பிரச்சாரம் இணையாக முடியாது; டிஜிட்டல் வழியிலான பிரச்சாரத்தில் சமூக ஊடகங்களின் நம்பகத் தன்மை கறைபடிந்த மேகங்களாக நிலவிடுகையில் நேரடி யான மக்கள் தொடர்பிற்கு ஈடாக எதுவுமில்லை – இந்தக் கூற்றுக்கு உரியவர் விடுதலை பெற்ற நாட்டில் 1952-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தொடங்கி, 72 ஆண்டு களாக நடைபெற்று வருகின்ற தேர்தல்களைப் பார்த்தவரும் பிரச்சாரம் செய்து வருபவரும், தனது பிரச்சாரத்தின் மூலம் ஒவ்வொரு தேர்தலிலும் நாட்டில் நிலவிவரும் நடப்பு உண்மை நிலையினை வெளிப்படுத்திடுப வருமான திரா விடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ஆவார்.
10 வயதுச் சிறுவனாக 1943 -ஆம் ஆண்டில் பொது மேடைகளில் ஏறி, மேஜை மீது நின்றுக் கொண்டு உரையாற்றிடத் தொடங்கி, தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களால் நிறுவப்பட்ட – தேர்தலில் எப்பொழுதும் போட்டியிடாத அதேநேரத்தில் தனது அரசியல் நிலைப் பாட்டை (யார் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும், யார் வரக்கூடாது) ஒவ்வொரு தேர்தலிலும் வெளிப்படுத்திடும் – திராவிடர் கழகத்தில் இணைந்து அதன் கொள்கைப் பிரச்சாரத்தை பல களங்களில் மேற்கொண்டு வருபவர்தான் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
1952 – ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் 21 வயதினை எட்டாத நிலையிலும், தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளத் தொடங்கி இன்று 91 வயது தொடரும் நிலையிலும் நட்சத்திரப் பேச்சாற்றிடும் – தலைவராக நாடு முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அரசியல் கூட்டணிக்கு ஆதரவு திரட்டியும், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
1999இல் நடைபெற்ற தேர்தலில், தி.மு.க.வானது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டபொழுது ஜெயலலிதா தலைமையிலான எதிர் அ.தி.மு.க. அணிக்கு ஆதரவு அளித்தார். 1972இல் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்ட நிலையில் தி.மு.க.வை திராவிடர் கழகம் ஆதரித்தது. 1967இல் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு முந்தைய காலங்களில் திராவிடர் கழகம் தி.மு.க. எதிர்ப்பு நிலையிலேயே இருந்தது. ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் பெரியாருடன் தி.மு.க.வானது இணக்கமான நிலையினைக் கண்டது. கடந்த காலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார அனுபவங்களை மூத்த தேர்தல் பிரச்சாரத் தலைவர் பகிர்ந்து கொண்டார்.
1971இல் நடைபெற்ற தேர்தலில் திராவிடர் கழகத்தின் ஆதரவு நிலையினை திராவிட முன்னேற்றக் கழகத்தினரே அய்யப்பாடுடன் கருதிய காலமும் நிலவியது; அந்த நேரத்தில் சேலத்தில் நடைபெற்ற சில நிகழ்வுகளை தி.மு.க.விற்கு எதிரானவர்கள் உண்மைக்கு மாறாகப் ஊதிப் பெரிதாக்கிட முனைந்தார்கள். தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு திராவிடர் கழகம் சேலம் நகரத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டையும் – அதனை ஒட்டி பொது ஊர் வலத்தையும் நடத்தியது. நகரத்தின் தெருக்களில் பெரியாரின் தலைமையில் ஊர்வலம் சென்று கொண்டு இருந்தது. பெரியார் ஊர்வலத்தின் முதல் நிலையில் வாகனத்தில் செல்ல – தி.க.தொண்டர்கள் அவரைத் தொடர்ந்து மூட நம்பிக்கை ஒழிப்பை வலியுறுத்திடும் சில படங்கள், உருவ பொம்மைகள் நிறைந்த ஊர்திகளுடன் நடந்து சென்றனர்.
ஊர்வலப் பாதையின் ஒருபுறத்தில் ஜனசங்க (இன்றைய பா.ஜ.க.வின் முந்தைய அரசியல் வடிவம்) ஊழியர்கள் கருப்புக்கொடிக் காட்டி ஒரு இடத்தில் நின்று கொண்டு இருந்தனர். ஊர்வலம் அந்த இடத்தை நெருங்கிய நிலையில், ஜனசங்க ஊழியர் ஒருவர் பெரியார் மீது செருப்பை வீசி எறிந்தார். அந்தச் செருப்பு பெரியார் மீது படாமல், அடுத்து வந்த தி.க. தொண்டர்கள் மீது விழுந்தது. எறியப்பட்ட செருப்பை தி.க. தொண்டர் கையில் எடுத்துக்கொண்டு ஊர்தியில் இருந்த இராமன் படத்தில் அடிக்கத் தொடங்கினார். இந்த நிகழ்வு குறித்து அடுத்த நாள் எந்த ஏட்டிலும் செய்தி வெளிவரவில்லை. (அந்த அளவிற்கு நடைபெற்ற நிகழ்விற்கு முக்கியம் அளிக்கப்படவில்லை). ஆனால், ‘சில’ தலைவர்கள் செருப்பால் அடித்த நிகழ்வை ஊதிப் பெரிதாக்கினர்; ‘நடைபெற்ற நிகழ்வால்’ கிடைக்கக்கூடிய வாக்குகள் கிடைக் காமல் போய்விடுமோ எனும் அச்சத்தை தி.மு.க.வினரிடம் உருவாக்கினர்.
ஆனாலும், திராவிடர் கழகம் தேர்தல் பிரச்சாரத்தை தொடர்ந்து செய்தது. தி.மு.க. தலைவர் கலைஞர்
மு.கருணாநிதி அவர்கள் பிரச்சாரம் தொடர வேண்டும் என விரும்பினார். தேர்தலில் தி.மு.க. மிகப் பெரிய வெற்றி பெற்றது. தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 243 இடங்களில் 184 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி கண்டது. அந்த 1971 தேர் தலில் – முன்னர் பெரியார் ஆதரித்து முதலமைச்சராக வந்த கு.காமராசர் அவர்களும், 1967 தேர்தலில் தி.மு.க.விற்கு ஆத ரவு அளித்து அந்தக் கூட்டணியில் அங்கம் வகித்த சி.ராஜ கோபாலாச்சாரியர் அவர்களும் இணைந்து தி.மு.க.வை எதிர்த்தனர். ஆசிரியர் கி.வீரமணி 1971 – தேர்தல் பற்றி தொடர்ந்து சொல்கிறார்:
“தி.மு.க.வை எதிர்த்த காங்கிரஸ் கட்சியினர் தாம் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் (வாக்கு எண்ணிக்கைக்கு முன்னர்) ராஜாஜி வீட்டில் சந்தித்தனர். வெற்றி பெற்று அமைச்சரவை அமைத்து விடுவோம் என்ற நம்பிக்கையில் ஆர்.வெங்கட்ராமன் அவர்களை முதலமைச் சராக்கிடவும் முடிவு செய்தனர். ஆனால் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது; தி.மு.க. மாபெரும் வெற்றியைப் பெற்றது. பெரியார் பங்கேற்றிட தி.மு.க. அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.”
1952இல் நடைபெற்ற தேர்தலில் நினைவில் நிற்கும் வேடிக்கையான சில செய்திகளையும் ஆசிரியர் கி.வீரமணி பகிர்ந்து கொண்டார். அந்த சமயம், வாக்குச் சீட்டில் சின்னம் பயன்படுத்தப்படாமல், வாக்குப் பெட்டியில் மட்டும் சின்னம் ஒட்டப்பட்டிருக்கும் (ஒவ்வொரு வேட்பாளருக்கும் / கட்சிக்கும் அவரது சின்னத்துடன் வாக்குப்பெட்டி வைக்கப் பட்டிருக்கும்).
ஒவ்வொரு வாக்குப் பெட்டியும் ஒவ்வொரு வண் ணத்துடன் ஒரு வேட்பாளருக்கு கட்சிக்கு ஒரு வண்ணம் என அனைத்து வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருக்கும். தேர்தல் பிரச்சாரத்தில் ‘மஞ்சள் பெட்டியில் வாக்களியுங்கள்’ அல்லது ‘பச்சைப் பெட்டியில் வாக்களியுங்கள்’ என பிரச்சாரம் செய்வார்கள்.
அந்தத் தேர்தலுக்கு பின்னர் ‘சின்னம்’ அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ‘மாட்டுப் பெட்டியில் வாக்களியுங்கள்’ (வாக்கு கேட்கும் வேட்பாளர்களுக்கு கட்சிக்கு மாட்டுச் சின்னம்
ஒதுக்கப்பட்டிருக்கும்) என்பதாகப் பிரச்சாரம் நடைபெற்றது.
அந்தப் பிரச்சாரத்தில் தந்தை பெரியாரும், ஆசிரியர் கி. வீரமணி உள்ளிட்ட தி.க.வினரும் ‘மாட்டுப் பெட்டியில் மண்ணைப் போடுங்க’ – (மாட்டுச் சின்னம் காங்கிரசு கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது) “காங்கிரசுக் (அந்நாளைய) கட்சியைத் தோற்கடியுங்கள்” என்ற பொருளில் முழங்கி வந்தனர்.
வாக்களிப்பது முடிந்து வாக்கு எண்ணிக்கையின் பொழுது வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு வாக்குச் சீட்டுக் கள் மேஜை மீது கொட்டப்பட்ட நிலையில் – வாக்குச் சீட்டு டன் மண்ணும் மேஜை மீது விழுந்தது. காங்கிரசு கட்சிக்கான வாக்குப் பெட்டியில்தான் இப்படி நடந்தது. கட்சி தோற்கடிக் கப்பட வேண்டும் என்பது புரியாமல், தலைவர்கள் சொன்ன படியே நிஜமாக; வாக்குப் பெட்டியில் இப்படி மண்ணைக் கொட்டியதெல்லாம் கடந்த காலத் தேர்தல்களில் நடந்தன.
சின்னத்துடன் கூடிய வாக்குச் சீட்டில் முத்திரையிட்டு பெட்டியில் போட்டு வாக்களித்திடும் காலத்திலிருந்து இன்று மின்னணு வாக்கு இயந்திரத்தில் பொத்தானை அழுத்தி வாக்களிக்கும் நிலைக்கு வந்துள்ளோம். அனைத்து வகையான வாக்களிக்கும் முறைகளையும், அவைகளுக் கிடையிலுள்ள வேறுபாடுகளையும் ஆசிரியர் கி.வீரமணி தெளிவாக எடுத்துரைத்தார். கடந்த தேர்தல் காலத்திலிருந்து நடப்பு நிலையில் உள்ள மாற்றத்தைப் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித் தார்.
“இன்றைக்கு ஏராளமான பெண்கள் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வந்து பிரச்சார உரையினைக் கேட்கிறார்கள். கூட்டம் முடியும் வரை இருந்து கவனிக்கிறார்கள். இவ் வாறான பெண்கள் பங்கேற்பு, அரசியலில் அவர்கள் காட்டும் ஆதரவையும் விசுவாச நிலையினையும் பறை சாற்றுகிறது. பணம் கொடுத்து அழைத்து வரப்படும் கூட்டத்தினர், பாதியிலேயே கலைந்து சென்று விடுவார்கள். ஆனால், இறுதிவரை கூட்டத்தில் இருந்து பெண்கள் கவனிப்பது அவர்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட் டுள்ளதின் விளைவாகவே கருதப்பட வேண்டும் என பதிலளித்தார்.
நேர்காணலின் பொழுது அண்மைக்காலமாக உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடு பற்றி பாராட்டிப் பேசினார். “அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலராக, ஜன நாயகத்தைக் கட்டிக் காப்பாற்றிடும் காவலராக அது விளங்குவதை சில வழக்குகளில் அது அளித்திடும் தீர்ப்பு களிலிருந்தே அறிய முடிகிறது.” மேலும் ஒரு கருத்தையும் வெளிப்படுத்தினார். 2014 தேர்தலின் பொழுது காணப்பட்ட ‘நரேந்திர மோடி அலை’ என்பது இப்பொழுது இல்லவே இல்லை எனக்கூறி நேர்காணலை நிறைவு செய்தார். (நேர்காணல்தான் நிறைவுபெற்றது; ஆசிரியரின் தேர்தல் பிரச்சாரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது).
தமிழில் : வீ. குமரேசன்