வருகின்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ‘அரசியல் சாசனமே மாறும்’ என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகல பிரபாகர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசிய காட்சிப்பதிவு ஒன்றை எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
அந்தக் காட்சிப் பதிவில் “வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடைபெறாது. மேலும், பாஜக ஆட்சியில் அமர்ந்தால் இந்தியாவின் வரைபடம் மாறும். மணிப்பூர், லடாக் பிரச்சினை போல நாடெங்கும் நடைபெறும். இந்தியா தேர்தலையே மறந்துவிட வேண்டியது தான்.
‘இனி பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்’ என்பது போன்ற வெறுப்புப் பேச்சுகளை மோடியே செங்கோட்டையில் இருந்து பேசுவார். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குக்கி மற்றும் மெய்டீஸ் இன மக்களுக்கு இடையிலான மோதல்களால் மணிப்பூரில் ஏற்பட்ட அமைதியின்மை இந்தியா முழுவதும் வழக்கமானதாக மாறிவிடும்” என்று பேசியுள்ளார்.
பாஜக அரசில் அங்கம் வகிக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரே, இப்படி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.