அனைவரும் ‘விடுதலை’ நாளிதழைப் படிக்கவேண்டும்!

viduthalai
2 Min Read

ஆசிரியர் அய்யா இங்கே வந்தவுடன், என்னைப் பார்த்து “என்ன கறுத்துப் போய்விட்டீர்கள்?” என்று கேட்டார். நான், ‘‘‘விடுதலை’யைப் படித்து படித்து கருத்தைப் பெற்றவனாகப் போய்விட்டேன்” என்று சொன்னேன். இது தமிழனின் நிறம் தான். மாநகரச் செயலாளர் சொல்லும்போது என்னை சினிமாக்காரர் போல் இருந்ததாகச் சொன்னார். இதை பெரியார் கேட்டால் கோபப்படுவார். நான் ஒரு மக்கள் நல தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். இந்தக் கூட்டத்தில் இருந்து வெளியே செல்கிறவர்கள் இன்றிலிருந்து ‘விடுதலை’யைப் படிக்க வேண்டும் என்று ஒரு முடிவை எடுங்கள். பழைய காலத்து பத்திரிகை. ஆகவே, படிக்க முடியாது என்று எண்ணாதீர்கள். எளிமையாக படிக்கும் விதத்தில் இருக்கும். ஆசிரியர் பேசினால் பேசிக் கொண்டே இருப்பார். கருத்துகள் கொட்டிக் கொண்டே இருக்கும். ‘விடுதலை’யை படிக்க வேண்டும் என்று நான் சொன்னதற்கு காரணம், ஆயிரம் விளக்கங்கள் சொல்லி புரிய வைக்க வேண்டிய,National Education Policy என்பதைNo Education Policy என்று சொல்லி, பளிச்சென்றும் ஆழமாகவும் புரிய வைத்தவர் ஆசிரியர் அவர்கள். ‘விடுதலை’யில் வரும் துணுக்குகள், செய்திகள் எவ்வளவு ஆழமானது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். “நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களை குடியரசுத் தலைவராக ஆக்கி யிருக்கிறோம்” என்பதற்கு, “அவர்களை தாழ்த்தப் பட்டவர்கள் ஆக்கியதே நீங்கள் தானே?” என்று பதில் கொடுத்திருப்பார்கள். இது மிகவும் எளிமையாகத்தான் இருக்கின்றது. ஆனால், ஆழமாக சிந்திக்க வைக்கின்றது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நாங்கள் செய்திருக்கிறோம் என்று ஒருவரை மட்டும்தான் காட்டுவார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாக நாம் இட ஒதுக்கீட்டின் மூலம் செய்ததை மறைத்து விடுவார்கள். இதையெல்லாம் தன்னுடைய அறிக்கைகள் மூலமும், உரையின் மூலமும் மறுப்பு சொல்லிக்கொண்டு இருப்பவர்தான் ஆசிரியர் அவர்கள். அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே நமக்குப் பெருமையான ஒன்று. 70 வயது, 80 வயதில் உழைத்தது போதுமென்று அலுவலகத்தில் இருந்து கொண்டே பணியாற்றலாம் என்றில்லாமல், தனது 91 ஆவது வயதில், மக்கள் இந்த நாடாளுமன்றத் தேர்தலை சாதாரணமாக எண்ணி விடக்கூடாது என்பதற்காக, ஆசிரியர் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்து கொண்டு வருகிறார். இதைப் பார்க்கும்போது, நாம் செய்கின்ற பணி இன்னமும் போதவில்லையோ என்ற அச்சமும், எச்சரிக்கையும் தருவதாக இருக்கின்றது. ஆகவே அனைவரும் ‘விடுதலை’யை படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திருச்சி தொகுதியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
– 14.04.2024

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *