பெரியார் பிறந்த நாள் விடுதலை மலர், டாக்டர் சோம.இளங்கோவன் எழுதிய நூலை தமிழர் தலைவர் வெளியிட்டார் சென்னை, செப்.17 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி, உறுதி”மொழி ஏற்கப்பட்டது.
உலகத் தலைவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 145ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.9.2023) சமூகநீதி நாளாக உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது.
இன்று காலை 10 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு கழகத் தோழர் – தோழியர்கள் பெருந் திரளாக ஊர்வலமாக சென்று மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
தமிழர் தலைவர் தலைமையில் உறுதிமொழி
பின்னர் பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டும், அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதை சுடரொளிகள் நினைவு தூண் ஆகிய இடங்களில் மகளிரணி சார்பில் மலர் வளையம் வைக்கப்பட்டு தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் – மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி – தந்தை பெரியார் பிறந்தநாள் உறுதி ஏற்கப்பட்டது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியைக் கூற, அவரைத் தொடர்ந்து அனைத்து தோழர்களும் உறுதிமொழி ஏற்றார்கள்.
உறுதிமொழி வருமாறு: “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அன்பு நெறியையும் – “யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்! சுயமரியாதை ஆளுமைத் திறனும், பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்! சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!
மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!
சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர அறிவு ஆசான் தந்தைபெரியார் அவர்களது 145ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழாவில் பெரியார் உலகமயமாகிறார். உலகம் பெரியார் மயமாகிறது என்கிற இலக்கோடு, மகிழ்ச்சியோடு நம்முடைய எதிர்ப்புகள் ஆயிரமாயிரம், தடைகள் பல்லாயிரம் என்றாலும், எங்களை யாரும் அசைக்கவோ, மறுக்கவோ முடியாது. இந்த கொள்கை ஆயிரங்காலத்துப்பயிராக வளர பெரியார் வழி நின்று புதியதோர் உலகத்தை சமைக்க மேலும் எங்களை அர்ப்பணிப்போம்அர்ப்பணிப்போம், வென்று காட்டுவோம் வென்று காட்டுவோம். வாழ்க பெரியார்
வருக அவர் விரும்பிய புதிய உலகம்” இவ்வாறு அளைவரும் உறுதியேற்றனர்.
ஓவியப்பட கண்காட்சி
பெரியார் சமத்துவம்- சமூக நீதி ஓவியப்படக் கண் காட்சியை கழக வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி திறந்து வைத்தார். போராட்ட வாழ்க்கையில் சில களங்கள், சில கணங்கள்… எனும் தலைப்பில் ஓவியப்பட கண்காட்சி வெகு நேர்த்தியாக பல்வண்ணத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
ஜாதி ஒழிப்புக்கான அரசமைப்புச்சட்ட எரிப்புப் போராட்டம், வகுப்புவாரி இடஒதுக்கீட்டுக்கான அரசமைப்புச் சட்டத் திருத்தத்துக்கான தந்தைபெரியார் கண்ட களம், குலக்கல்வி எதிர்ப்பு போராட்டம், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைகோரும் போராட்டக் களம், பெண்ணுரிமை சிந்தனைகள், நீடாமங்கலம் தீண்டாமை கொடுமை எதிர்ப்புக் களங்கள் (குடிஅரசு 6.2.1938), பெயர்ப்பலகையில் ஜாதி இழிவு ஒழிப்புப்போராட்டம், உணவு விடுதிகளில் சமத்துவம் கோரும் போராட்டக்களம், ஜாதிக் கிணறு ஒழிப்பு, ஜாதிப்பட்டம் ஒழிப்பு, சேரன்மாதேவி குருகுலத்தில் ஜாதிஇழிவு எதிர்ப்புப் போராட்டம், ஜாதியை ஒழிக்க மனுவைப்பொசுக்கும் போராட்டம், காங்கிரசில் சேரும் முன்பே 1917இல் ஈரோட்டில் இழிவுபடுத்துகின்ற ஜாதி தெருப் பெயர் மாற்றிய ஆணை, தெருவில் நடக்கும் உரிமைக்கான வைக்கம் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டக்களங்களைக் கண்ட தந்தை பெரியாரின் சமத்துவம்- சமூக நீதி ஓவியப்படக் கண்காட்சியை பார்வையாளர்கள் பெருமகிழ்வுடன் பலரும் கண்டு சுய படம், குழுப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
கருத்தரங்கம்
பெண் ஏன் அடிமையானாள்? மகளிர் கருத்தரங்கம் கழகத் துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி தலைமையில் நடைபெற்றது. தாம்பரம் மாவட்ட மகளிரணி தலைவர் இறைவி வரவேற்றார்.
கழகப்பிரச்சாரச்செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி, புதிய குரல் ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் ஓவியா, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர வேண்மாள் நன்னன், எழுத்தாளர் முனைவர் கோமதி ஆகியோர் கருத்தரங்க உரையாற்றினார்கள். கருத்தரங்கைத் தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வழக்குரைஞர் அ.அருள்மொழி பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். கருத்தரங்கத்தில உரையாற்றியவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
வடசென்னை மாவட்ட திராவிட மகளிர் பாசறை தலைவர் த.மரகதமணி இணைப்புரை வழங்கினார். வடசென்னை மாவட்ட மகளிரணித் தலைவர் க.சுமதி நன்றி கூறினார்.
மலர் வெளியீடு
தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரினை தமிழர் தலைவர் வெளியிட பேராசிரியர் வீ.அரசு பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து ஏராளமான தோழர்கள் தமிழர் தலைவரிடம் இருந்து மலரினைப் பெற்றுக் கொண்டனர்.
புத்தக வெளியீடு
பெரியார் பன்னாட்டமைப்பு- அமெரிக்கா இயக்குநர் சிகாகோ மருத்துவர் சோம.இளங்கோவன் எழுதிய அமெரிக்காவில் 50 ஆண்டுகள் புத்தகத்தை தமிழர் தலைவர் வெளியிட கழகத்துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பெற்றுக்கொண்டார். தந்தைபெரியார் பிறந்த நாள் விழவின்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்ற ‘சிறந்த சமூக ஊடகத்துக்கான விருதை’ இந்த ஆண்டு ‘அறன் செய்’ ஊடகத்துக்கு தமிழர் தலைவர் வழங்கி சிறப்பு செய்தார். அறன்செய் யூடியூப் ஹசிப், தேவா, மகிழ்நன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து, தந்தைபெரியார் உருவச்சிலை, இயக்க வெளியீடுகளை வழங்கி பாராட்டி சிறப்பு செய்தார்.
கழக அமைப்புகள் சார்பில் மலர் வளையம்
தந்தை பெரியார் நினைவிடத்தில் திராவிடர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிடமகளிர் பாசறை, திராவிட மாணவர் கழகம், திராவிட தொழிலாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம், பெரியார் மணியம்மை மருத்துவமனை, திராவிடன் நிதி நிறுவனம், சுயமரியாதை திருமண நிலையம், பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., பயிற்சி மய்யம், யூனியன் பாங்க் ஆப் இந்தியா – பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கம், தமிழ்நாடு, புதுமை இலக்கிய தென்றல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் தலைமையில் தோழர்கள் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி இன்று அவரது நினைவிடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் மற்றும் வேம்புலி எம்.எஸ். மூர்த்தி தலைமையில் தோழர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். புரட்சிகர இளைஞர் அமைப்புகள் சார்பிலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமையில் தோழர்கள் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் மரியாதை செலுத்தினர்.
விஜய் மக்கள் இயக்கம்
திரைக்கலைஞர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் எஸ்.கே.எம். குமார் தலைமையில் தோழர்கள் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பங்கேற்றோர்
இந்நிகழ்வில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், மேனாள் தி.மு.க. அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், பொருளாளர் வீ. குமரேசன், கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, துணைப் பொதுச் செயலாளர்கள் ச. இன்பக்கனி, பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில வழக்குரைஞரணி தலைவர் த. வீரசேகரன், வெளியுறவு துறை செயலாளர் கோ. கருணாநிதி, மாநில மகளிர் பாசறை பெரியார் வழக்குரைஞர் பா. மணியம்மை, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாநில ப.க. தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ. வெங்கசேன், தலைமைக் கழக அமைப்பாளர்கள் வி. பன்னீர்செல்வம், தே.செ. கோபால், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்ட தலைவர் ப. முத்தையன், செயலாளர் கோ. நாத்திகன், வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, நெய்வேலி வெ. ஞானசேகரன், பேராசிரியர் வி. டெய்சி மணியம்மை மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.