கேள்வி 1 : பிடிபட்ட கணக்கில் இல்லாத பணம் 4 கோடி ரூபாய்க்குச் சொந்தமான நபர் என்று கூறப்படும் நயினார் நாகேந்திரனிடம் இதுவரை விசாரணை நடத்தவில்லையே ஏன்?
– வ.செண்பகராமன், வேலூர்
பதில் 1 : ஊழலை ஒழிக்கும் உத்தமர் பிரதமர் மோடி அவருக்கு ஓட்டு கேட்க வரவிருக்கிறார்! அக்கட்சியின் தமிழ்நாட்டு அதிகப் பிரசிங்கி அண்ணாமலை செய்தியாளர் கேள்விக்கு கூறிய பதில், “நயினார் நாகேந்திரன்தான் அவர் பணம் இல்லை என்று அறிவித்துவிட்டாரே!” என்று வெட்கமில்லாமல், நாக்கூசாமல் பதில் கூறி, தங்களது கியாரண்டீகள் எவ்வளவு சொத்தையானவை என்பதைக் காட்டியுள்ளாரே! இதனை உலகிற்கே கூறி தங்கள் இரட்டை வேடம், இரட்டை நாக்குகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றனர்!
—
கேள்வி 2 : இனி குஜராத்தில் மதம் மாற வேண்டுமானால் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் வேண்டுமாம். இது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதுதானே?
– தே.வேலு, சிதம்பரம்
பதில் 2 : அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதி கூறும் மூன்றாம் பாக கூறுகளின்படி,
1. அடிப்படை உரிமைகளுக்கு (Fundamental Rights) முற்றிலும் முரணானது!
2. Hindu lawவில் உள்ள ‘இந்து மதம்’ என்ற வரையறைக்கும் கூட முரணானது!
—
கேள்வி 3 : 2015ஆம் ஆண்டு இந்தியாவின் 111 கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களை பங்களாதேசுக்கு தூக்கிக்கொடுத்த மோடி கச்சத்தீவு பற்றி பேசுவது நியாயமா?
– மா.காந்தி, ஒசூர்
பதில் 3 : மில்லியன் டாலர் கேள்வி. கச்சத்தீவு பற்றிய மோடியின் திடீர் கரிசனம் தேர்தல் பத்திர ஊழலைப் போன்ற மலையை விழுங்க முயற்சிப்பதைப் பற்றிப் பேசாமல் இதற்கே பதில் கூறிட மேடைப் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், எதிர்க்கட்சிகளைத் திசைதிருப்பும் ஒரு புது வகை உத்தியே தவிர வேறில்லை!
—
கேள்வி 4 : பா.ஜ.க.வினர் ஓட்டுக்கு ரூ.10,000 வரை கொடுப்பதாக தகவல்கள் வருகிறதே?
– வே.காளிமுத்து, திண்டிவனம்
பதில் 4 : அதானிகளும், அம்பானிகளும் போன்ற பெரு முதலாளிகள் இருக்க பா.ஜ.க.வுக்குப் பஞ்சமா? பயமா? – கவலையில்லை. இதற்கு முன் பண மதிப்பிழப்பை – உழைப்பு இழப்பை கண்கூடாக உலகம் அறியும்.
—
கேள்வி 5 : தமிழ்நாட்டில் ராமநவமி ஊர்வலத்திற்கு அனுமதி வேண்டும் என்று கேரள அமைப்பு ஒன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறித்து?
– ச.சுப்பிரமணி, கன்னியாகுமரி
பதில் 5 : தேர்தல் நேரத்தில் மதக் கலவரம் நடத்தவோ அல்லது மறுத்தால் அதை வைத்து இராமனுக்கு எதிரிகள் என்ற பிரச்சாரம் செய்ய ஒரு சாக்கு ஏற்படுத்திப் பயன்படுத்த புதிய நோக்கத்தோடு இப்படி வீண் வம்பு செய்கின்றனர்.
—
கேள்வி 6 : 2 முறை ஒன்றிய அமைச்சராக இருந்த ராமதாஸ் அத்வாலேவை பெயரளவிற்குக் கூட தேர்தல் பரப்புரைக்கு பாஜக அழைக்க வில்லையே?
– க.ஏகலைவன், வியாசர்பாடி
பதில் 6 : அவர் மட்டும் நாக்பூர் பக்கமே. பி.ஜே.பி. மோடி படத்தைக்கூடப் போடாமல் ஒளிந்து ஒளிந்து பிரச்சாரம் செய்யும் அவலம்! ‘ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு’ கொண்டாடும் காலத்தில் இந்நிலை என்பதையும் கவனத்தில் கொள்ளத் தவறாதீர்கள்!
—
கேள்வி 7 : “அயோத்தி கோவில் திறப்பு விழாவிற்கு காங்கிரஸ் வரவில்லை, செங்கோல் வழங்கப்பட்ட நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழா நிகழ்விற்கு திமுக வரவில்லை” என்று பேசி வாக்கு சேகரிக்கும் பிரதமர் மீது தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பான நடவடிக்கை பாயவில்லையே ஏன்?
– கி.முகிலன், திருத்தணி
பதில் 7 : “மதப் பிரச்சாரம் செய்தால் – மோடி வெற்றி பெற்றாலும் அது செல்லாது” என்று வழக்கு மன்றம் கூறும் வாய்ப்பு உண்டு. நீதிமன்றம் கூறும் நிலை நாளை ஏற்படுவதைக் கூட யாரும் தடுத்துவிட முடியாது!
—
கேள்வி 8 : “நான் தெற்கே சென்றால் பலர் பயப்படுவார்கள்” என்று உத்தரப்பிரதேச சாமியார் முதலமைச்சர் கூறியுள்ளாரே, பலர் என்றால் யாரைக் குறிப்பிடுகிறார்?
– தி.சாக்கியமுனி, காஞ்சி
பதில் 8 : “அஞ்சுவது அஞ்சல் அறிவர் தொழில்”. நோய்க் கிருமிகளைக் கண்டு அஞ்சினால் தங்களை நோயிலிருந்து காப்பாற்ற முடியும். பகுத்தறிவு பூமியாம் தெற்குக்கு எப்போதும் விழிப்புணர்வு உண்டு என்பது அறிவார்ந்த சொல்தானே! இல்லையா?
—
கேள்வி 9 : முதல் சுற்றுத் தேர்தலுக்கான பரப்புரையில் பாஜக பெரிய தலைவர்கள் சரியாக செயல்படவில்லை என்று மோடி – அமித்ஷாவிற்கு உளவுத்துறை அறிக்கை அனுப்பி உள்ளதாமே?
– மா.வெங்கடேசன், புதுக்கோட்டை
பதில் 9 : “தோல்வி முகம் தெரியத் துவங்கி விட்டது!” என்ற மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷியின் ‘ட்வீட்டே’ அதற்குச் சான்று!
“400 இடங்கள் கிடைக்கும் என்று சொல்லுபவர்களுக்கு, ஜூன் முதல் வாரத்தில் கிடைக்கப் போகும் இடங்கள் 200-க்கும் கீழேதான்.” என்று அனுபவ அரசியல் அறிவுடன் கூறியுள்ளதையும் இணைத்து நோக்குங்கள்.
—
கேள்வி 10 : ஒன்றிய அரசின் கீழ் வரும் என்.சி.ஆர்.டி. 3 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகத்தில் தேசிய கீதத்தையே தவறாக அச்சிட்டுள்ளனரே?
– ப.மாணிக்கம், வேளச்சேரி
பதில் 10 : தேசிய கீதத்தை வங்க மொழியில் ரவீந்திரநாத் தாகூர் எழுதியதைப் போல ஹிந்தியில் ஒரு நாட்டுப் பண் கொண்டு வரும் திட்டம் உள்ளது!
‘திராவிடம்’ அந்த ஜன, கண, மன பாட்டில் உள்ளதே அவர்களுக்கு எரிச்சல். எனவேதான் இப்படி பல அலட்சியத் தவறுகள் – திட்டமிட்டோ, திட்டமிடாதவையோ!