11.4.2024 மாலை திரும்பெரும்புதூர் தொகுதியைச் சேர்ந்த கொரட்டூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மகளிருக்காக, திராவிட மாடல் அரசின் தலைவர் – சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி அவர்கள் நாளும் குவித்துவரும் சாதனைகள் குறித்துப் பேசும்போது – “தாயுமானவர்” என்ற சொல் பதத்தை கருத்தழகோடு பதிவு செய்தார்.
மகளிருக்காக தி.மு.க. ஆட்சி செய்து வரும் சாதனைகள் குறித்து அடுக்கடுக்காக எடுத்துரைத்த நிலையில் இந்த சொல் அவரிடமிருந்து தானாக வெளிவந்து விழுந்தது.
அவர் கூறியதற்கான காரணங்களும், காரியங்களும் நீண்ட பட்டியலுக்கு உரியவை. 1921 திராவிட இயக்க நீதிக் கட்சி ஆட்சியில்தான் பெண்களுக்கு வாக்குரிமை இந்தியாவிலேயே சென்னை மாநிலத்தில் கொண்டுவரப்பட்டது. மகளிருக்குச் சொத்துரிமை முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது (1989).
புதுமைப் பெண் திட்டம்
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று பின்னர் உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மாதந்தோறும் 2.73 லட்சம் மாணவிகள் பயனடைகின்றனர். இந்த முயற்சியின் விளைவாக நடப்புக் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்று, கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
தற்போது இந்தத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் தரப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் அறிவித்த காரணத்தால் சுமார் 3.5 லட்சம் மாணவிகள் பலனடைவார்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
1.60 கோடி பேர் விண்ணப்பம் செய்தனர். 1.16 கோடி பேர் தற்போது பலன் பெற்று வருகின்றனர். தகுதி இருந்தும் விடுபட்டவர்களுக்கு தேர்தல் முடிந்த பிறகு கலைஞர் 101ஆவது பிறந்த நாள் அன்று வழங்கப்படும்.
1929ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நிறைவேற்றப்பட்ட முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செயலாக்கமாக மலர்ந்து மணம் வீசுகிறது.
மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை
சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறிய தமிழ்நாட்டின் வியக்கத்தகு வளர்ச்சி.
மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை குறித்து சிஏஜி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டின் சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் ஆகிய 6 நகரங்களில் உள்ள 3 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இத்திட்டம் மூலம் பெண்கள் பேருந்து சேவைகளைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த திட்டத்தால் பயன்பெறும் பெண்கள் மாதம் தங்கள் வருமானத்தில் 800 ரூபாய் பிடித்தம் செய்ய முடிவதாகவும், இந்த சேமிப்பை கல்வி, சுகாதாரம் வீட்டுத் தேவைகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இது பெண்களுக்கான பொருளாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை வழங்குவதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
இது சமூகத்திற்கான மற்றும் நாட்டிற்கான நீண்ட காலப் பலன்களை அளிப்பதோடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பையும் உறுதிப்படுத்துவதாக கூறப் படுகிறது. அதிகமான பெண்கள் பொதுப் போக்குவரத்தை அணுகுவதும், பொது இடங்களில் பெண்களின் நடமாட்டம், பாலின சமத்துவத்தில் சம நிலைப்பாடு ஆகியவற்றை இத்திட்டம் உறுதிசெய்வதும் ஆய்வின் முக்கிய முடிவுகளாக தெரிய வந்துள்ளன.
பெண்கள் அதிகளவில் வெளியில் வருவது, அவர்களுக்கான வாய்ப்புகள் கிடைப்பதில் உள்ள தடைகளை உடைக்க உதவுவதாக பல்வேறு அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இதர மாநிலங்களோடு தமிழ்நாடு
இந்தியாவின் இதர மாநிலங்களில் 10இல் 8 ஆண்கள் வெளியில் பணிபுரியும் நிலையில், 10இல் 2 பெண்கள் மட்டுமே வெளியில் பணிபுரிவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் 10:4 பெண்கள் வேலைக்குச் சென்றுவரும் நிலையில் கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் மூலம் 10:6 என்ற விகிதத்தில் பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இதனால் பெண்கள் குடும்பப் பொருளாதார வளர்ச்சியில் தங்களுடைய பங்கை அளித்து பொருளாதார நிலையில் உயரும் வாய்ப்புகள் தமிழ்நாட்டில் உருவாகி உள்ளன.
2024 தி.மு.க. தேர்தல் அறிக்கையில்…
மகளிர் நலன்
1. சிறுகுறு தொழில்களில் பெண்களை ஊக்குவித்து அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், தற்போது உள்ள 30% மூலதன மானியம் பெண்களுக்கு 35%ஆக உயர்த்தி வழங்கப்படும்.
2. இந்திய அளவில் விவசாயத்தில் அதிகரித்து வரும் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவில் பெண் விவசாயிகளுக்கு டிராக்டர்கள் மற்றும் பிற விவசாய இயந்திரங்களை இயக்குவதற்கான பயிற்சி, மண் ஆரோக்கியம் குறித்த பயிற்சி, செயல்விளக்கம், விதை உற்பத்தி, விதை தொழில்நுட்பம் ஆகியவை குறித்துத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்.
3. சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் இந்தியாவை முன்னேற்றிக் கொண்டு சென்றிட பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை கொடுப்பது அவசியமாகும். அதன் அடிப்படையில் இது சம்பந்தமான சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திட ஒன்றிய அரசை தி.மு.க. வலியுறுத்தும்.
4. மாவட்ட அளவில், பெண்கள் மட்டுமே நிருவகிக்கும் கொள்முதல் மற்றும் விற்பனை சந்தைகளை அமைத்து, தனிப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
5. பல்வேறு உலக நாடுகள், பெண் தொழிலாளர் களுக்குத் தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் மகப்பேறு காலத்தில் பொருளாதார உதவிகளை வழங்கிவருவது போல், தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1989ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்திய டாக்டர் முத்துலட்சமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் இந்திய அளவில் நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டத்தால் பாகுபாட்டைத் தவிர்த்து பாலின உரிமைகள் பணியிடங்களில் உறுதி செய்யப்படும்.
6. வீட்டுப் பணியாளர் நலன்களைக் காத்திடும் வகையில் ஒருங்கிணைந்த தேசியச் சட்டம் ஒன்று உருவாக்கப்படும். இதன் மூலம் அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் மற்றும் உரிமைகள் நிலைநாட்டப்படும்.
7. வீட்டுப் பணியாளர்கள் நியமனங்களை முறைப்படுத்துதல், அவர்களுடைய சமூகப் பாதுகாப்பு, அவர்களின் குறைகளைக் களைதல் முதலியவற்றுக்கான முத்தரப்புக் குழு ஒன்று அமைக்கப்படும்.
8. இந்திய அளவில் சுய உதவிக் குழுவில் உள்ள மகளிர்களுக்கு வட்டி இல்லா வாகனக் கடன் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.
“தாயுமானவர்” என்று தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் முதல் அமைச்சரைக் கூறியது. என்னே பொருத்தம்! ஆகா என்னே பொருத்தம்!!