கடந்த பத்தாண்டுகளாக இந்திய ஒன்றியத்தை ஆண்ட பா.ச.க. அரசு, குடியாட்சியைச் சிதைத்து முடியாட்சியை விட மோசமான நடைமுறைகளை நாட்டில் நடத்தி வருகிறது. “எல்லோர்க்கும் எல்லாம்” – என்ற தத்துவத்தைச் வதைத்து, பணம் படைத்த முதன்மை முதலாளிகளுக்கே உரிய ஆட்சி முறைகளை இந்தியாவில் புகுத்தி உள்ளது.
இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையைப் பாழ்படுத்தி ஒரே கட்சி, ஒரே மொழி, ஒரே வழி என்ற தனித்த தன்னலக் கொள்கை வழியான சர்வாதிகாரத்தைப் புகுத்த வழிவகுத்துள்ளது. மாநில உரிமைகளைப் பறித்து வருகிறது. பல்வேறு வகையான ஊழல் முறைகேடுகளில், ஈடுபாடு கொண்டு அதனை உணர்ந்து திருந்தாமல், மற்ற கட்சிகள் மீது, உண்மையற்ற குற்றச் சாட்டுகளைக் கூறிச் சிறையிலடைத்துக் கொடுமை செய்கிறது.
மேலும் பற்பல கட்சிகளிலுள்ளவர்கள் ஆட்சி அமைக்கும் நிலைவந்த போதில் மாற்றுக் கட்சிகாரர் களைத் தங்கள் பக்கம் இழுத்து, சனநாயகப் படுகொலைகள் செய்வதே தங்களின் நோக்கமாக்கி வருகிறது. மேலும், ஊழல்புரிந்தவர்களைத் தங்க ளோடு இணைத்துக் கொண்டு, பா.ச.க.வில் சேர்ந்தால் அவர்கள் மீது ஊழல்கள் இல்லாமல் செய்து வருகிறது. பா.ச.கவில் சேர்ந்தால் அவர்கள் புனிதர் ஆகிவிடுகிறார்கள்.
ஆனால் மற்ற கட்சியினர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி சிறையில் தள்ளுகிறது. செங்கோலைப் புதிதாகக் கட்டிய நாடாளுமன்றத்தில் வைத்து – கொடுங்கோல் ஆட்சிக்கு இலக்கணமாக, சனநாயகத்தின் மாட்சிக்கும் புறம்பாக இன்றைய பா.ச.க.ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் மாற்றம் காணாவிட்டால் இந்திய மக்கள் அடிமையாவர். இந்தியாவின் குடி ஆட்சிக் கட்டுக்கோப்பே சீர்குலைந்;து நாசமாகும்.
மொத்தத்தில் இந்திய ஒன்றியம் சமநீதி இல்லாத நிலைக்குத் தள்ளப்படும். இந்தப் பத்தாண்டுகளும் அல்லற்பட்டு ஆற்றாத நிலைமையை மாற்ற காங்கிரசு உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் ஒன்றாகிய இந்தியக் கூட்டணியை உருவாக்கி இப்போது மாற்றம் காணும் நிலைமை உருவாகி வருகிறது. இந்த உத் வேகத்திற்கு வடிவம் கொடுத்தவர் நம் முதலமைச்சர்.
இந்திய விவசாயப் பெருங்குடிமக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களின் குறைகளைத் தீர்க்காமல் வயிற்றுக்கு உணவு தரும் உழவர் பெருங்குடிமக்களை, வயிற்றிலடிக்குமாறு மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. -மணிப்பூர் மாநிலத்தின் இருஇனக் குழு மக்கள் மோதலைக் கண்டு கொள்ளாமல் ஒன்றிய அரசு பொறுப்பற்று மோசமாக நடந்து வருகிறது.
படுகேவலமான பாலினக் குற்றச்சாட்டுகளுக்கு நாணாமல் தீர்வுகாணாமல், பெண்ணுரிமைகள் மறுக்கப்படுகிறது.
இதற்கெல்லாம் கரணியமாக இருப்பவர் இந்தப் பத்து ஆண்டுகளாக இந்திய ஒன்றியத்தை ஆண்டு வரும் பாரதப்பிரதமர் நரேந்திரமோடி அவர்களே! மதவாதத்தைத் தங்கள் சார்புக்கொள்கையாக வைத்து, மதச்சார்பின்மைக்கு வேட்டு வைக்கும் நிலையை உருவாக்கி வருகிறார் மோடி. கடவுள் பக்தியின் பெயரால் கொடியவர்களின் கூடாராமாக பா.ச.க. உள்ளது.
இந்தப் பத்து ஆண்டுகளாகத் தமிழ் நாட்டுக்குக் குறிப்பிடத்தக்க எந்த நல்ல செயல் திட்டங்களையும் பா.ச.க.அரசு கொணரவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் இந்திமொழி ஆதிக்கத்தைப் புகுத்துவதிலும், மாநில உரிமைகளை மறுப்பதிலும், பறிப்பதிலும் தமிழ் நாட்டிற்கு பெருந்துரோகம் செய்து வருகிறார் மோடி. ஒரு மனச்சான்றில்லா ஆளுநர் வழி, தமிழ்நாட்டிற்கு மீட்சி தந்த நம் தளபதியாரின் உன்னத ஆட்சிக்கு ஊறு தந்து கெடுதல் செய்கிறார்கள்.
எனவே தான் நம் வீரத்தளபதி முதலமைச்சர் இந்தியக் கூட்டணியை உருவாக்கி சனநாயகத்தைக் காப்பாற்ற, உன்னத ஆட்சி மாற்றத்திற்கு பெருந் துணையாக உள்ளார். இந்தத் தேர்தல் களத்தில் பொய்யான வாக்குறுதிகளைக் கூறித் தமிழ் நாட்டையே ஒதுக்கித் தள்ளிவிட்டு புதிய கல்விக் கொள்கையால் தமிழ்நாட்டில் உயர்ந்த கல்விக் கொள்கைக்கு ஊறு விளைவிக்கும் பா.ச.க. அரசின், பாதகத்தைப் புறந்தள்ளித் தமிழ்நாட்டை காக்க முனைந்து செயலாக்கம் காண்கிறார் நம் முதலமைச்சர்.
தமிழ்நாடு வெள்ளத்தால் தவித்த போது, மக்களெல்லாம், துன்பத்தில் துடித்தபோது, அதில் கிஞ்சிற்றும் பங்கு கொண்டு, உதவாத மோடி, அவர்கள் இப்போது தேர்தலுக்காக மட்டும் வருகிறார். இவர்களால் தமிழ் மக்கள் முகத்தில் எப்படி விழிக்க முடிகிறது.
நம் தமிழ்நாட்டு முதலமைச்சர் கிஞ்சிற்றும் இரக்கமில்லாமல் நடக்கும் பா.ச.க. மோடி அரசு கண்டு வியக்கும் வண்ணம், இந்திய மாநிலங்களிலெல்லாம் பார்த்துப் பின்பற்றக் கூடிய திராவிட மாதிரி அரசை வியக்கத்தக்க வகையில் ஒளிமயமாக்கி வருகிறார்.
இன்று ஒன்றிய அரசு செய்துள்ள, எண்ணற்ற கொடுமைகளை எல்லாம், கிஞ்சிற்றும் அஞ்சாவாறு, மக்களிடத்திலே வீர, விவேகமிக்க வகையிலே எடுத்துக்கூறி உரையாற்றி வருகிறார். முதலமைச்சரின் உரை கேட்டு மக்கள் எழுச்சி பெறுகிறார்கள். நம் மாமுதலமைச்சர் வழி இமை மூடாமல் அல்லும் பகலும், உச்சமான முறையில் கழகத் தோழர்கள் உழைத்து வருகிறார்கள்.
இந்திய விடுதலைக்குப் போராடிய, சிறைசென்ற நேருபேரன் இராகுல் காந்தி இந்தியா முழுவதும் நடந்து, மக்கள் மனத்தில் புதிய உத்வேகத்தாக்கத்தை உருவாக்கி உள்ளார்.
இந்தியாவில் மக்களாட்சியை வீழ்த்தி, சர்வாதிகார ஆட்சியைக் கொண்டுவரும், முனைப்பில் உள்ள பா.ச.க. ஆட்சியை அகற்றி புத்தெழுச்சியான மக்களாட்சியை உறுதியாக இந்தியக் கூட்டணி அமைக்கும். இதற்கான எழுச்சியை நம் முதன்மை முதலமைச்சர் உருவாக்கி மறுமலர்ச்சியாக நாற் பதுக்கும் நாற்பது தமிழ்நாட்டில் வென்று “நாற்பதும் நமதே நாடும் நமதே” என்ற நம் முதன்மை முதலமைச்சர் அஞ்சுகம் முத்துவேல் கருணாநிதி இஸ்டாலி;ன் அவர்களின் அறை கூவல் வெல்லும், வருங்கால இந்தியக் கூட்டணி ஆட்சி இதனைச சொல்லும்! வெல்க முதலமைச்சரின் அறைகூவல் வெற்றி முழக்கே!
நன்றி! ‘தமிழ்ப்பணி’ – தலையங்கம்