ஜார்க்கண்ட் மேனாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு எதிரான சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், டிவி, பிரிட்ஜ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கிய ரசீதுகளை சான்றாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது என்றால், அமலாக்கத்துறை மேல்தட்டு ஆணவப் போக்கில் நடைபோடுகிறது என்று தானே பொருள்?
ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் 2024 ஜனவரி 31ஆம் தேதி கைது செய்தது. 8.86 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ராஞ்சி நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட 4 பேர் மீது அமலாக்கத்துறை அண்மையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில், சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு சான்றாக சில ஆவ ணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. அதில், சர்ச்சைக்குரிய 8.86 ஏக்கர் நிலத்தை பராமரித்து வந்த சந்தோஷ் என்பவர் வாங்கிய ஸ்மார்ட் டிவி, பிரிட்ஜுக்கான ரசீதுகள் இணைக்கப்பட்டுள்ளன.
அந்த நிலத்தின் உரிமையாளர் ராஜ்குமார்பகென் என்பது உண்மையல்ல; அவர் ஹேமந்த் சோரனின் பினாமி என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது. தொலைக்காட்சி, பிரிட்ஜ் வாங்கியது சட்ட விரோத பணபரிமாற்றத்தின் கீழ் வருமா, என்ற புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஒன்றிய அமைச்சர் ஒருவர் சத்தீஷ்கர் மாநிலத்தில் பேசும் போது “பழங்குடிமக்கள் தொலைக்காட்சி, பிரிட்ஜ் மற்றும் இதர நவீன மின்சாதனப் பொருட்களை வாங்கிவிடுகின்றனர். இதனால் அவர்கள் அதிக நேரம் வீட்டிலேயே இருந்து விடுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் தங்கள் மூதாதையர் தொடர்ந்து செய்துவந்த தொழில்களைச் செய்ய மறந்து விட்டனர்” என்று குலத் தொழில் மனப்பான்மையில் கூறியிருந்தார்.
அதே போல் ஆஜ் தக் தொலைக்காட்சி தலைமைச் செய்தியாளர் சுதிர் சவுத்ரி நேரடியாகவே ஹேமந்த் சோரன் பெயரைக் குறிப்பிட்டு “அவர் பழங்குடி தலைவர்; ஆனால் வசதியான வீடு உள்ளது, கார் வைத் துள்ளார். பழங்குடியின மக்கள் என்றால் காடுகளில் வசித்து அதன் வளங்களைப் பாதுகாக்கவேண்டும்.
ஆனால் அரசியலுக்கு வந்து பேராசையின் காரணமாக ஊழல் செய்து மாட்டிக்கொள்கின்றனர்” என்று பேசியிருந்தார். இந்த இரண்டு நபர்களின் பேச்சு குறித்தும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் மீது இன்றுவரை நடவடிக்கை இல்லை. இந்த நிலையில் தொலைக்காட்சி, மின் விசிறி. பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களைக் கூட அமலாக்கத்துறை ஊழலுக்கு சான்றாக காட்டியுள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசன் எவ்வழி – குடிகள் அவ்வழி என்று ஒரு பழமொழி உண்டு. அதே போல ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடிய கட்சியின் சித்தாந்தம் என்பது வருணாசிரம ஜாதியத்தைச் சார்ந்ததுதானே!
அதனால்தான் பழங்குடியினர் என்றால் இப்படித் தான் வாழ வேண்டும்; குடிசைக்குள்தான் முடங்கிக் கிடக்க வேண்டும்; அவர்களுக்குக் கல் வீடோ, மச்சு வீடோ கூடாது; மின் வசதிகளைப்பற்றி அவர்கள் நினைக்கவே கூடாது என்கிற குரூர மனப்பான்மை இந்த 2024லும் குடிபுகுந்திருக்கிறது என்றால் இதைவிட வெட்கக்கேடு ஒன்று இருக்க முடியுமா?
பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரை குடியரசுத் தலைவராக ஆக்கியிருக்கிறோம் என்று சொல்லி, பிரதமர் நாற்காலியில் அட்டகாசமாக அமர்ந்திருப்பதும் – குடியரசுத் தலைவர் நின்று கொண்டிருப்பதும் இந்த அர்த்தமுள்ள (?) ஹிந்துத்துவா ஆட்சியில் தானே நடந்தது! ஒடுக்கப்பட்ட மக்களே விழிப்புணர்வு கொள்வீர்!
ஒன்றிய மதவாத பிஜேபி ஆட்சியை வரும் தேர்தலில் வீழ்த்துவீர்! வீழ்த்தவில்லை என்றால் வீழ்ந்துபடுவோம் – என்பதை மறவாதீர்! மறவாதீர்!!