டி.ஆர்.பாலுவுக்கும் – தி.மு.க. கூட்டணிக்கும் போடுகிற ஓட்டு அவர்களுக்குப் போடுகிற ஓட்டல்ல –
இந்திய ஜனநாயகத்தையே காப்பாற்றக் கூடிய ஓட்டு!
கொரட்டூர், ஏப்.12 டி.ஆர்.பாலுவுக்கும், தி.மு.க. கூட்டணிக் கும் போடுகிற ஓட்டு அவருக்கு போடுகிற ஓட்டல்ல – இந்திய ஜன நாயகத்தையே காப்பாற்றக் கூடிய ஓட்டு என்று திருப்பெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர்.பாலு அவர்களை ஆதரித்து தமிழர் தலைவர்ஆசிரியர்
கி. வீரமணி எழுச்சி உரையாற்றினார்.
நேற்று (11-4-2024) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திருப்பெரும்புதூர் தொகுதியில் சுற்றுப் பயணம் செய்து இந்தியா கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து பரப்புரை செய்தார்.
18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி தென்காசியில் தொடங்கி, ஏப்ரல் 17 ஆம் தேதி தஞ்சையில் தனது சூறாவளிச் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார். சுற்றுப்பயணத்தின் 10 ஆம் நாளில் சென்னை திருப்பெரும்புதூர் தொகுதி வேட்பாளரும், தி.மு.க.வின் பொருளாளருமான டி.ஆர்.பாலு அவர் களை ஆதரித்து உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியானது ஆவடி மாவட்ட திராவிடர் கழகம், அம்பத்தூர் பகுதிக் கழகத்தின் சார்பில் கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில், நேற்று (11.04.2024) மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற்றது. ஆவடி மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில், திருவள்ளூர் மாவட்ட தொழிலாளரணித் தலைவர் ஏழுமலை அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
திருப்பெரும்புதூரில் தமிழர் தலைவர்!
வேட்பாளர் டி.ஆர்.பாலு அவர்கள் பேசத் தொடங் கும் முன் ஆசிரியருக்கு பட்டு ஆடை அணிவித்தார். யாரும் எதிர்பாராத வண்ணம் ஆசிரியர் தனக்கு அணிவித்த அதே ஆடையை சட்டென்று எடுத்து வேட்பாளருக்கு அணிவித்தார். திடீர் சிரிப்பு எழுந்து கொண்டிருக்கும் போதே, வேட்பாளர் அதே வேகத் துடன் தனக்கு ஆசிரியர் அணிவித்த ஆடையை மீண்டும் ஆசிரியருக்கே அணிவிக்க கூட்டத்தில், சிரிப்பலைகளால் நிரம்பிவிட்டது. வேட்பாளர் பேசி முடித்ததும் ஆசிரியர் பேசினார். அவர் தனதுரையில், ‘‘நான் மிகவும் உற்சாக இருக்கிறேன்.
நமது வேட்பாளர் டி.ஆர்.பாலு அவர்கள், மகளிர் எல்லாம் புன்சிரிப்போடு இருக்கின்றனர் என்று சொன்னாரல்லவா? ஏன்? சொல் வதைச் செய்வோம்! செய்வதையே சொல்வோம்! சொல்லாததையும் செய்வோம்! என்று நடந்து கொண் டிருக்கின்ற திராவிட மாடல் ஆட்சி இது! அதனால்தான் இந்தியாவையும் தாண்டி பல நாடுகளில் இந்தியாவில் ஒரு மாநிலமாக இருக்கக்கூடிய தமிழ்நாடு அரசின் திட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன” என்று எடுத்த எடுப்பிலேயே நம்பிக்கையை விதைத்து, “தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வடநாட்டிலும் பா.ஜ.க. அரசை அகற்றத் தயாராகிவிட்டார்கள்” என்று மேலும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் கூட்டினார். ”இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு 7 ஆவது முறையாக வந்து, கேரண்ட் டீ… என்கிறார். இதற்கு முன்னால் கொடுத்த கேரண்ட் டீ.. என்னாயிற்று?” என்று கேள்வி கேட்டார்.
பா.ஜ.க.வுக்கும், மனிதநேயத்திற்கும்
சம்பந்தம் இல்லை!
தொடர்ந்து ‘‘பிரதமர் மோடி, சொன்ன எதையும் நிறைவேற்றவில்லை என்பதோடு, நாம் கேட்ட வெள்ள நிவாரண நிதியில் கூட ஒன்றிய அரசு நம்மை நம்ப வைத்து கழுத்தறுத்திருக்கிறது” என்று சுர்ரென்று உறைக்கும்படி எடுத்துரைத்தார். மேலும் ”நாரி சக்தி என்று பெண்களை போற்றுவதாக கூறும் பிரதமர், அத்வானியின் வீட்டிற்குச் சென்று ‘பாரத ரத்னா’ விருது வழங்கும் நிகழ்வில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களை நிற்க வைத்துவிட்டு மோடி அமர்ந்திருந்தது ஏன்? இதுதான் மகளிரை மதிக்கும் மாண்பா? குடியரசுத் தலைவருக்கு அளிக்கும் ‘புரொட்டக்கோலை’ தூக்கி எறிந்துவிட்டு, இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருக்கக் கூடியவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் என்ற ஒரே காரணத்தால்தானே இந்த அவமதிப்பு?” என்று கூறிவிட்டு, ராஜாஜி மரணம் அடைந்து, சுடுகாட்டில் இறுதி நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தபோது நடந்த ஒரு நிகழ்வை எடுத்துக்காட்டினார் தமிழர் தலைவர் ஆசிரியர்.
”ராஜாஜி மரணமடைந்து சடங்குகள் நடை பெற்று கொண்டிருந்தபோது பெரியார், கலைஞர், காமராஜர் ஆகியோர் தரையில் அமர்ந்திருக்கின்றனர். அப்போது குடியரசுத் தலைவர் வி.வி.கிரி வருகிறார். அதைப்பார்த்த பெரியார் தனது தோழர்களை அழைத்து, “அவர் குடியரசுத் தலைவர்; அவர் நிற்கக்கூடாது. ஆகவே எனது சக்கர நாற்காலியைக் கொண்டு வந்து அதில் அமரவையுங்கள்” என்று சொல்லி, அதன் படியே வி.வி.கிரி சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டார்” என்ற அரிய வரலாற்றுச் சம்பவத்தைக் குறிப்பிட்டதும், திரவுபதி முர்முவை நிற்க வைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று பளிச்சென்று மக்களுக்கு புரிந்துவிட்டது. மேலும், “பா.ஜ.க.வுக்கும், மனித நேயத்திற்கும் சம்பந்தம் கிடையாது” என்று அழுத்திச் சொல்லி புரிதலில் கொஞ்சம் நஞ்சம் இருந்த அய்யத்தையும் போக்கினார்.
ஜனநாயகத்தைக் காக்க வாக்களியுங்கள்!
ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிதியை தராமல் ஓரவஞ்சனை செய்திருப்பதைச் சுட்டிக்காட்டியும், மழை பெருவெள்ளத்தால் தேசிய பேரிடரிலிருந்து நிவாரண நிதி வராத நிலையிலும் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல் படுத்தி வருவதைச் சுட்டிக்காட்டி, “அதனால்தான் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்பதை நினைவுபடுத்தினார். மகளிர் உரிமைத் தொகை பற்றி ஒன்றிய அமைச்சர் வரையிலும் ‘பிச்சை’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதைக் குறிப்பிட்டு, ”பிச்சையெடுப்பது அவர்களின் பாரம்பரிய உரிமை” என்று இடித்துரைத்தார். அதனால்தான் அதற்கு நமது முதலமைச்சர் ’உரிமைத் தொகை’ என்று பெயரிட்டார் என்றும் “வெறும் பணத்தை மட்டும் முதல்வர் கொடுக்க வில்லை.
மகளிரின் சுயமரியாதையையும் சேர்த்துக் கொடுக்கிறார்! அதற்காகத் தான் சுயமரியாதை இயக் கம் இயங்கிக்கொண்டிருக்கிறது” என்று திராவிடர் இயக்கத்தின் ஆளுமையையும், ஆழத்தையும் புரியவைத்தார்.
தொடர்ந்து ‘‘இமாலய ஊழல் நடைபெற்றிருக்கிறது; சொன்ன வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை; வேலைவாய்ப்பு எதையும் உருவாக்கவில்லை; லட்சக் கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை; பொய்த் தொழிற்சாலைகள், ஊழல்வாதிகளை தப்பிக்க வைக்க சுத்திகரிப்புத் தொழிற்சாலைகள் நடத்துகிறார்கள். ஆகவே இதையெல்லாம் மாற்ற வேண்டுமானால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்கள் தி.மு.க. சார்பில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். நீங்கள் டி.ஆர்.பாலுவுக்கு போடும் ஓட்டு அவருக்கு அல்ல; இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக ஓட்டு போடுங்கள். மறவாதீர் உதயசூரியன் சின்னம்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
முன்னிலை ஏற்று உரையாற்றியோர்!
முன்னதாக திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், தலைமைக்கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் ஆகியோர் முன்னிலை ஏற்று இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தனர்.
அம்பத்தூர் வடக்குப் பகுதி தி.மு.க. செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், தி.மு.க. அம்பத்தூர் தொகுதிப்பொறுப்பாளர் செல்வராஜ், 7 ஆவது மண்டலக்குழுத் தலைவர் பி.கே.மூர்த்தி, அம்பத்தூர் கிழக்குப் பகுதி தி.மு.க. செயலாளர் நாகராஜன், சி.பி.அய்.(எம்) பொறுப்பாளர் லெனின் சுந்தர், சி.பி.அய். பொறுப்பாளர் கருணாநிதி, ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர் இஸ்மாயில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் அப்துல் காதர், மக்கள் நீதி மய்யம் மாவட்ட துணைச் செயலாளர் தனபாலன், காங்கிரஸ் கட்சி தொகுதிப் பொறுப்பாளர் ரோமியோ ஆகியோர் முன்னிலை ஏற்றுச் சிறப்பித்தனர்.
கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வெளி யுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, மாவட்டக் காப் பாளர் பா.தென்னரசு, செயலாளர் க. இளவரசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் கார்த்தி கேயன், மாவட்ட துணைத் தலைவர்கள் ரகுபதி, வை.கலையரசன், துணைச் செயலாளர்கள் உடுமலை வடிவேல், பூவை தமிழ்ச்செல்வன், ஆவடி நகரத் தலைவர் கோ.முருகன், செயலாளர் தமிழ்மணி, மாவட்ட இளைஞரணித் தலைவர் சோபன் பாபு, முகப்பேர் முரளி, செல்வி, நா.பார்த்திபன், வ.ம.வேலவன், மணிமாறன், அம்பத்தூர் பகுதிச் செயலாளர் சரவணன், அம்பத்தூர் பகுதித் தலைவர் பூ.ராமலிங்கம், ஆ.வெ.நடராஜன், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பூவை செல்வி, பெரியார் மாணாக்கன், தொண்டறம், நாகம்மையார் நகர் ரவீந்திரன், பெரியார் பெருந்தொண்டர் முத்துக்கிருஷ்ணன், ராணி ரகுபதி, மதுரவாயல் பகுதித் தலைவர் வேல்சாமி, த.மரகதமணி, வேல்முருகன், எல்லம்மாள், சிவ.ரவிச்சந்திரன், சக்கர வர்த்தி, கலைமணி, பகலவன், கண்மணி, சிந்து, கீதாராம துரை, வஜ்ரவேலு, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் ஜெயராமன், சுந்தரராஜன், பாடி சரவணன், அறிவுமணி, வழக்குரைஞர் பன்னீர்செல்வம், சங்கர், கார்ல் மார்க்ஸ், செம்மொழி, ஜெயந்தி, சிவக்குமார், அன்புமணி, நாகநாதன், சேத்பட் நாகராஜ், தங்கமணி, தனலட்சுமி, கலைச்செல்வி, தாம்பரம் ஜெயராமன், தாம்பரம் மாவட்டத் தலைவர் பா.முத்தையன், செயலாளர் நாத்திகன், வடசென்னை மாவட்டத் தலைவர் தளபதி பாண்டியன், செயலாளர் அன்புச்செல்வன், காப்பாளர் கி.இராமலிங்கம் ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித் தனர். இறுதியாக ஆவடி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கண்ணன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
செந்தில் பாலாஜிக்கு இழைக்கப்பட்ட அநீதி!
ஊழலில் மெகா ஊழல் என்று சொல்லும் போது, சுமார் 7,000 கோடி தேர்தல் பத்திரத்தை பா.ஜ.க.வினர் வாங்கியிருக்கிறார்கள். 75 விழுக்காடு அவர்களுக்குச் சென்றிருக்கிறது. நாங்கள் சொல்லவில்லை. ‘ஹிண்டு’ ஆங்கில ஏடு எழுதியிருக்கிறது. ’ஃபண்டோரா பாக்ஸ்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.
‘‘தோண்டத் தோண்ட உள்ளிருந்து என்ன வரும் என்று சொல்லமுடியாது என்பது அதன் பொருள். நட்டத்தில் மூழ்கிய 33 கம்பெனிகளிடம் தேர்தல் பத்திரங்கள் அடித்துப் பிடுங்கப்பட்டு இருக்கிறது. இரண்டு விதமான கம்பெனிகள் இருக்கின்றன. ஒன்று போலி, ஷெல் கம்பெனிகள் என்று சொல்லக்கூடியது. மற்றொன்று மணி லாண்டரிங். இப்போது செந்தில் பாலாஜி மாதிரி உள்ளவர்கள் மீது எப்போதோ வந்த வழக்கைப் போட்டு, அந்த வழக்கிலிருந்து அவர் வெளியே வரக்கூடாது என்பதற்காக மணி லாண்டரிங் பிரிவைச் சேர்த்துக்கொண்டு சிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களே! தேர்தல் பத்திரம் வாங்கிய 33 நிறுவனங்களிடமிருந்து நன்கொடை வாங்கியதில் மணி லாண்டரிங் நேரடியாக வருகிறது. இதில் வரி ஏய்ப்பும் இருக்கிறது. பண மோசடி என்று சொல்லக்கூடிய மணி லாண்டரிங்கும் இருக்கிறது. அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது?” என்று ‘இந்து’ ஏடு தலையங்கம் கூறுகிறது.
இதைப்பற்றியெல்லாம் நாம் பேசிவிடக் கூடாது என்று தான் மோடி இப்போது கச்சத்தீவைப் பற்றிப் பேசுகிறார். அருணாச்சல பிரதேசத்தில் 2000 சதுர கி.மீ. சீனா ஊடுருவி அங்கிருக்கும் கிராமங்களுக்கு சீன மொழியில் பெயரே சூட்டிவிட்டார்கள். நாங்கள் பெரியாரின் தொண்டர்கள், அண்ணாவின் தம்பிகள் இந்த திசை திருப்பல்களுக்கெல்லாம் பலியாக மாட்டோம். இரண்டுக்கும் பதில்கள் எங்கே?
(தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி,
கொரட்டூர் பொதுக்கூட்டத்தில் – 11.04.2024)