காஞ்சி, திருவள்ளூர். ஏப், 11. உத்தரவாதம் கொடுத்த ஒன்றையேனும் மோடி நிறைவேற்றியதுண்டா? என தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி காஞ்சிபுரம், திருவள்ளூரில் சுற்றுப்பயணம் செய்தபோது இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார்.
அவர் தனது உரையில் ஒரு புதிய பார்வையை முன்வைத்தார். அதாவது, “இந்தியா முழுமைக்குமாக பா.ஜ.க. வுக்கு பிரதமர் மோடி மட்டும் தான் பிரச்சாரம் செய்கிறார்” என்று கூறி ஒரு பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டு, ”ஏனென்றால், மோடியைத் தவிர வேறு யாரும் இப்படி பொய் பேச முடியாது. மற்றவர்கள் இன்னும் அதில் பட்டம் பெறவில்லை” என்று முடித்ததும் மக்கள் பளிச்சென்று சிரித்துவிட்டனர். திராவிடர் இயக்க வரலாற்றுப் போக்கில் ஒரு முக்கியமான தகவலைப் பரிமாறினார். அதாவது, “நான் 80 ஆண்டுகளாக பேசிக் கொண்டிருக்கிறேன். அப்போ தெல்லாம் நாங்கள் பேசும் போது, பெரியோர்களே! தாய் மார்களே! என்று தான் தொடங்குவோம். ஆனால் தாய்மார்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனாலும் அப்படித்தான் பேசுவோம்” என்று ஒரு சிறு இடைவெளி விட்டார். பெண்கள், ஆண்கள் இருவரும் வியப்புடன் புன்னகைத்தனர். “ஆனால் இப்போது ஆண்களுக்கு நிகராக பெண்கள் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள்” என்று முடித்து, ஒற்றை வாக்கியத்தில் ஆண், பெண் பேதத்தை போக்குவதில் திராவிடர் இயக்கம் செய்த அளப்பரிய சாதனைகளை நினைவூட்டி விட்டார்.
மோடியின் உத்திரவாதத்திற்கு உத்திரவாதம் ஏது?
தொடர்ந்து பேசிய அவர், மோடி இப்போது கொடுத்து வரும் உத்தரவாத விளம்பரங்களை நினைவூட்டி, “ஏற்கனவே கொடுத்த 15 லட்சம் வந்து விட்டதா? வரவில்லை என்பதைவிட மக்கள் சிறுகச் சிறுக சேகரித்து வைத்திருந்ததை பிரதமர் மோடி சொன்னார் என்பதற்காக வங்கிக் கணக்கைத் தொடங்கி அபராதம் என்ற பெயரில் ஏழை எளிய மக்களின் 21,000 கோடியை வசூலித்து மோசடி செய்துள்ளார் என்பதை அம்பலப்படுத்தினார். இதைக் கேட்ட மக்களுக்கு ’திக்’கென்று ஆகிவிட்டது. அடுத்து, ”ஊழலை ஒழிப்பேன் என்று உத்தரவாதம் கொடுத்தாரே! நிறைவேற்றினாரா? இல்லையே… அதற்குப்பதிலாக பா.ஜ.க. ஆட்சியில் மகா ஊழல்! மெகா ஊழல்! அதையும் தாண்டி இமாலய ஊழல் என்று தான் பெருகியிருக்கிறது. அந்த உத்திரவாதமும் நிறைவேற்றப்பட வில்லையே” என்று கூறியதோடு, தொடர்ந்து மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்கள் மாண்பு, தொழில் வளர்ச்சி, பணமதிப்பு என்று ஒவ்வொன்றிலும் மோடி கொடுத்த உத்தர வாதத்தை நினைவுபடுத்தி, எதையுமே அவர் நிறைவேற்ற வில்லையே. பிறகு எப்படி புதிதாக உத்திரவாதம் கொடுக் கிறார்? அதற்கு அவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? என்று கேள்விகளை அடுக்கினார். தொடர்ந்து, இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களான இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு போன்ற அய்ந்தும் பின்பற்றப்படவில்லை. ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்றது. அதனால் தான் ஜன நாயகமா? எதேச்சதிகாரமா? என்று கேட்கிறோம்” என்று இந்தியா கூட்டணி ஏன் மோடியை; பா.ஜ.க.வை எதிர்க்கிறது? ஏன் பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்பவேண்டும்? என்பதற்கான காரணங்களை பட்டியலிட்டார். இதற்கு மாறான திராவிட மாடல் அரசான தமிழ்நாடு; உலகமே மெச்சக் கூடிய நம்முடைய முதலமைச்சர் எப்படிப்பட்ட திட்டங்களை, சட்டங்களை கொண்டு வந்து மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியுள்ளார் என்பதை உணர வைத்து, “ஆகவே தி.மு.க. வேட்பாளர் செல்வம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை இலட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுகோள் விடுத்து தமது உரையை நிறைவு செய்தார். இறுதியாக மாவட்டச் செயலாளர் இளையவேல் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
ஒன்பதாம் நாளாக தி.மு.க. தலைமையிலான ’இந்தியா’ கூட்டணியில் காஞ்சிபுரம், திருவள்ளூர் தொகுதிகளின் தி.மு.க. சார்பில் போட்டியிடும் க.செல்வம், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சசிகாந்த் செந்தில் ஆகியோரை ஆதரித்து திராவிடர் கழகத்தின் சார்பில் காஞ்சிபுரம், திருவள்ளூரில் 10.4.2024 புதன்கிழமை அன்று இரண்டு மாபெரும் பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதல் கூட்டம் காஞ்சிபுரத்தில் வணிகர் கடைவீதியில் மாலை 5.30 க்குத் தொடங்கி, இரவு 8 மணி வரையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முரளி தலைமையேற்றார். தலைமைக் கழக அமைப்பாளர் எல்லப்பன் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் முனைவர் கதிரவன், தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர், தி.மு.க. மாணவரணிச் செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., மேயர் மகாலட்சுமி யுவராஜ், தி.மு.க. மாநகரச் செயலாளர் தமிழ்ச்செல்வன், வி.சி.க. மாவட்டச் செயலாளர் மதி ஆதவன், சி.பி.அய். மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன், முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர் அல்லாபக்ஷ், காங்கிரஸ் மாநகரத் தலைவர் நாதன், மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர் கண்ணன், திராவிடர் கழக மாநகரத் தலைவர் சிதம்பரநாதன் மற்றும் இந்தியக் கூட்டணி கட்சிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் முன்னிலையேற்று சிறப்பித்தனர்.
காஞ்சிபுரத்தில் தமிழர் தலைவர்!
திராவிடர் கழகம் சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் சு.லோகநாதன், செய்யாறு மாவட்டத் தலைவர் அ. இளங்கோவன், நகர கழகத் தலைவர் தி. காமராஜ், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் செங்கை சுந்தரம், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தையன், மாநகரச் செயலாளர் வேலாயுதம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அருண்குமார், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் நாத்திகன், அரக்கோணம் ஜீவன் தாஸ், வட மணப்பாக்கம் வீ.வெங்கட்ராமன் மற்றும் செய்யாறு, தாம்பரம், ராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் ஆகி யோர் முன்னிலை ஏற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நான்கு புத்த கங்கள் அறிமுகம், விற்பனை, ஆசிரியருக்கு இந்தியா கூட்டணிக் கட்சிப் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்தனர். முன்னதாக கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி தொடக்க உரை ஆற்றினார். இறுதியாக ஆசிரியர் உரையாற்றினார்.
திருவள்ளூரில் தமிழர் தலைவர்!
பின்னர் ஆசிரியர் அங்கிருந்த தோழர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு திருவள்ளூர் நோக்கிச் சென்றார். அங்கு திராவிடர் கழகம் சார்பில் ரயில் நிலையம் அருகில் இரவு 7 மணியிலிருந்து 10 மணி வரை, இந்தியா கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ் சசிகாந்த் செந்தில் அவர்களை ஆதரித்து பரப்புரை செய்வதற்காக மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மணி தலைமை ஏற்றிருந்தார். மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார். தி.மு.க. திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் சந்திரன் எம்.எல்.ஏ., தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சி.பி.அய். மாவட்டச் செயலாளர் கஜேந்திரன், சி.பி.அய்.(எம்) மாவட்டச் செயலாளர் கோபால், வி.சி.க. பொறுப்பாளர் நீலவானத்து நிலவன், நகர்மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் ஆகியோர் முன்னிலையேற்று சிறப்பித்தனர்.
திராவிடர் கழகத்தின் சார்பில் தலைமைக்கழக அமைப் பாளர்கள் வி. பன்னீர்செல்வம், தே.செ.கோபால், பு.எல்லப்பன், குடந்தை க.குருசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்தணி ரமேஷ், மோகன சேது, ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் லோகநாதன், மாநில மகளிர் அணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, ஆவடி மாவட்டக் காப்பாளர் பா.தென்னரசு, மாவட்டச் செயலாளர் க.இளவரசன் ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தார்கள். ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். ஆசிரியர் சரியாக 9 மணிக்கு திருவள்ளூர் வருகை தந்தார். இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஆசிரியருக்கு ஆரவாரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. புத்தகங்கள் அறிமுகம், விற்பனைக்குப் பிறகு, தி.மு.க. எம்.எல்.ஏ., ராஜேந்திரன் முன்னிலை ஏற்று உரையாற்றினார். இறுதியாக ஆசிரியர் உரையாற்றினார். இறுதியாக மாவட்டத் துணைத் தலைவர் ஸ்டாலின் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இரவு 10 மணிக்குப் பிறகு ஆசிரியர் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்.