தென்சென்னையில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக 2024, மார்ச் 9 செவ்வாய் கிழமை மாலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பரப் புரைக் கூட்டத்தில் உரையாற்றினார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் ஆசிரியர் வீரமணி அவர்கள் 91ஆவது வயதில் அடியெடுத்து வைத்தார். தமிழ் நாட்டுப் பொதுத் தேர்தல்களில் பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டு வருபவர்களுள் அவரே அனைவரைக்காட்டிலும் மூத்த, முதுபெரும் தலைவர் என்று ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’ நாளிதழ் பாராட்டைத் தெரிவித்துள்ளது. அப்போது சென்றிருந்த ‘தி டைம்ஸ் ஆஃப் இண்டியா’ ஆங்கில நாளேட்டின் செய்தியாளர், பரப்புரையினைக் கண்டு, கேட்டு வெளியிட்ட செய்தி:
“வரவிருக்கும் பொதுத் தேர்தல் ஜன நாயகத்தைக் காக்க நமக்குக் கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு! நான் இதுவரை 17 பொதுத் தேர்தல்களைப் பார்த்துள்ளேன். ஆனால் ஏப்ரல் 19ஆம் நாளன்று நடை பெறவுள்ள பொதுத்தேர்தல் மிகப் பெரிய சவால் என்றே கூறுவேன். காரணம்? இந்தத் தேர்தல்தான் ஜனநாயகம் நாட்டில் நீடித்து நிலைப்பதை உறுதி செய்யப் போகிறது. அரசமைப்புச் சட்டம் காப்பாற்றப் படுவதையும் இந்தத் தேர்தல்தான் உறுதிப்படுத்திட உள்ளது.”
“நாட்டின் ஜனநாயகம் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளது. இந்தியா அணியினர் (I.N.D.I.A.bloc) ஜனநாயகத்தைக் காப்பாற்ற தீவிரமாகப் போராடி வருகின்றனர். தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை யும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களையும் கண்டு அச்சமடைந் துள்ளார் பிரதமர் மோடி”.
“மணிப்பூரில் பழங்குடியினர் துன்புறுத் தப்பட்டபோது அதைத் தடுக்க மோடி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பழங்குடி வகுப்பைச் சார்ந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களை அவர் தொடர்ந்து அவமானப்படுத்தி வந்துள்ளார்.”
உரையாற்றிய தருணத்தில் ஆசிரியர் அவர்கள் நாளேட்டில் வெளிவந்த ஒரு ஒளிப்படத்தை மக்களுக்குக் காண்பித்தார். நமது நாட்டின் மிக உயர்ந்த “பாரத ரத்னா” விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் மேனாள் துணைப் பிரதமரும் மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி அவர்களுக்கு நேரில் சென்று வழங்கிய படம் அது. அத்வானிக்குப் பக்கத்திலேயே மோடி அமர்ந்திருக்கும் படம் அது. குடியரசுத் தலைவர் நின்ற படியே இருக்க பிரதமர் அமர்ந்த நிலையில் அந்தப் படத்தில் இருப்பதைக் காண முடிந்தது, (குடியரசுத் தலைவர் என்ற நாட்டின்
முதல் உயர்ந்த பதவிக்கு மோடி அளித்த மரியாதை இது)
இதைப்பற்றி ஆசிரியர் அவர்கள் இவ்வாறு கூறினார்:
“இதற்கு நேர்மாறாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். இராஜாஜி மறைந்தபொழுது அவரது உடல் அடக் கத்தின் போது குடியரசுத் தலைவர் வி.வி.கிரி மரியாதை செலுத்திட வந்திருந்தார். தரையில் அமர்ந்திருந்த தந்தை பெரியார், நின்று கொண்டிருந்த குடியரசுத் தலைவரைத் தனது சக்கர நாற்காலியில் அமரச் செய்தார். பெரியாரும், முதல மைச்சர் கலைஞர் உள்பட மற்ற தலை வர்கள் அனைவரும் தரையில் அமர்ந் திருந்தனர். நாட்டின் முதல் குடிமகன் என்ற மதிப்புக்குரியவர் குடியரசுத் தலைவர். அவர் நிற்கக்கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் பெரியார் கருதியிருந்தது குறிப்பிடத்தக்கது” என்றார் ஆசிரியர்.
(அன்று திராவிடர் இயக்கத் தலைவர்கள் பொது வாழ்க்கையில் காட்டிய மரியாதை இன்று பிரதமர் மோடி யால் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது)
நன்றி: ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’, 10.04.2024