“கல்விக் குறைவால், அறிவு சீரழிந்தது;
அறிவுக் குறைவால், நல்லொழுக்கம் அழுகியது;
நல்லொழுக்கக் குறைவால், முன்னேற்றம் நின்று போனது;
முன்னேற்றம் நின்றுபோனதால், செல்வம் மறைந்தது;
செல்வக்குறைவினால், சூத்திரர்கள் அழிந்தனர்;
கல்லாமையிலிருந்தே அனைத்துத் துயரங்களும்
ஊற்றெடுக்கின்றன”
– ஜோதி ராவ் பூலே
“Without education, wisdom was lost;
without wisdom, morals were lost;
without morals, development was lost;
without development, wealth was lost;
without wealth, the Shudras were ruined;
so much has happened through lack of education.”
– Jyotirao Phule
இந்தியாவில் கல்வி கற்க வாய்ப்பு இருந்தாலும் சமூகத்தில் படிக்க முடியாது. அப்படியிருந்த சூழலை மாற்றியமைக்க பல ஒப்பற்ற தலைவர்கள் போராடினார்கள். அதில் முதன்மையான தலைவராக ஜோதிராவ் பூலே அவர்களைச் சொல்லலாம். ஏப்ரல் 11 அவரின் பிறந்த நாள்.
ஏதோ ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒரு நபரிடம் “உங் களை யார் படிக்க வைத்தது” என்று கேட்டால், “என் பெற்றோர்” என்று பதில் வரும் அதைப் பின்னோக்கி! பின் னோக்கி! கேட்டுக் கொண்டே போனால் அந்தந்த குடும்பத் திற்குக் கிடைத்த வாய்ப்பைப் பொறுத்து ஒரு புள்ளிக்கு மேல் பதில் இல்லாமல் நின்று விடும். ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு இங்கு நிலவி வந்த கல்வி முறை, வேதக்கல்வி, திண்ணைக்கல்வி முறைகள் என்று ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சமூகத்தினருக்கு மட்டுமே வழங்கி வந்தது.
ஜோதி ராவ் பூலே 1827ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் நாள் கோவிந்த்ராவ், சிம்பாய் இணையருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். ‘சுடர் ஒளி’ என்ற பொருளில் ஜோதி என இவருக்குப் பெயர் சூட்டப்பட்டது. அந்த சுடர் ஒளிதான் ஒடுக்குமுறை என்னும் இருளினை எதிர்த்து, மாந்தர் உள்ளத்தில் மண்டிக் கிடக்கும் அறியாமை இருளை நீக்கி, அறிவு வெளிச்சத்தைப் பாய்ச்சும்
கல்வியை அனைத்து மக்களுக்கும் பொதுவாக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் பரப்பியது.
இந்திய சமூகத்தில் குரு சிஷ்யன் முறை என்னும் குலக் கல்வி முறையே கல்வியாக இருந்தது. தச்சனின் மகன் தச்சனாக இருக்க வேண்டும் என அக்காலத்தின் நடை முறையைப் போலவே, தோட்டக்காரனின் மகனான ஜோதி ராவ் பூலே பள்ளிப் படிப்பை முடித்தவுடன் தோட்டக் காரனாகவே வருவான் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜோதி ராவ் பூலே மற்றவர்களின் வழியைப் பின்பற்றுபவரல்ல; அவரே ஒரு வழிகாட்டியானார்.மக்களின் நல்வாழ்வும், அவர் களுக்கு ஊழியம் புரியவேண்டுமென்ற உணர்வும் அவரது சிந்தனையில் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
கல்வி கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண் டிருந்தார். தேர்வுகளில் அதிகம் மதிப்பெண்கள் பெற்றார்; தன் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நன்மதிப்பையும், பாராட்டையும் பெற்றார். ஸ்காட்டிஸ் பிரிட்டிஷ் மிஷன் நடத்தி வந்த பள்ளியிலும், புத்வர் அரசுப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தார். ஜோதி ராவ் பூலே இளமையில் சிவாஜி, ஜார்ஜ் வாசிங்டன் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தார். அவர்களின் துணிச்சல், நாட்டுப் பற்று, உயர்ந்த குறிக்கோள் இவரது மனதில் பதிந்தது. தாய் நாட்டின் விடுதலைக்கு அவர்களைப் போலவே ஈடுபடத் தூண்டியது. மேலும், தாமஸ் பெயினின் படைப்பான ‘மனித உரிமைகள்’- என்ற புத்தகம் ஜோதி ராவ் பூலேயின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அறியாமையில் உழன்று கிடந்த சக குடிமக்களை முன்னேற்றத் துடித்தார். காலம் கடந்துபோன மூட நம்பிக்கைகளுக்கு, அடிமைகளாக இருந்து வந்த அவர்களை எழுச்சிக் கொள்ளத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
அவர் போராட்டத்தை தொடங்கிய காலகட்டம் என்பது பெண் கல்வி என்பது நெருப்பாற்றில் நீந்துவது போல. ஆதிக்க சமூகத்துக்கு மட்டுமே கல்வி என்றாலும் அதிலும் ஆண்களுக்கு மட்டுமே அந்த உரிமை. பெண்களுக்கு கிடையாது என்ற நிலை. ஆனால் அக்கல்வி முறையும் மூட நம்பிக்கையும் பிற்போக்குத் தனங்களையும் உயர்த்திப் பிடிக்கும் கல்வி முறையாகவே இருந்தது. பெண் கல்வியைப் பொறுத்த வரையில் 2000 ஆண்டு வரலாறு என்று எடுத்துப் பேசினால் மிகையாகத் தெரிந்தால், 18ஆம் நூற்றாண்டை எடுத்துக் கொண்டாலே அது பெண் பிள்ளை நரபலிகள், உடன்கட்டை ஏறுதல், இளம் வயதில் விதவை என்ற நிலையே இருந்தது.
1832ஆம் ஆண்டு ஆங்கில கல்வி முறை வந்தது. அதிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு 400 பேர் கொண்ட கிராமத்தில் 18 ஆண்கள் கல்வி கற்றனர் என்று புள்ளி விவரம் சொன்னது. அதிலும் ஒருவர்கூட பெண்கள் கிடையாது. இந்து குலக்கல்வியின் தாக்கமும் , இஸ்லாமிய மதராசக்களின் தாக்கமும் ஆங்கில கல்வி முறை வந்த பின்னரும் பெண் களை இரும்புச் சங்கிலி போட்டு வீட்டில் அடைத்தது. ஆனால் அந்த அடிமை சங்கிலியை தனது மனைவிக்குக் கல்வி போதித்து – உடைத்தெறிந்தார் ஜோதிராவ் பூலே. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை ஆனார் `சாவித்திரிபாய் பூலே”.
தான் பெற்ற கல்வியின் பயன் அது எதற்குப் பயன்படுகிறது என்பதைப் பொறுத்துத் தான் இருக்கிறது. அதை இந்த இணையர் உணர்ந்து பள்ளிக்கூடங்களைத் தொடங்கினர். ஆனால், இந்த சமூகம் அவர் ஆசிரியை பணியை நிம்மதி யாகச் செய்துவிட அனுமதிக்கவில்லை. அவர் காலைப் பொழுதில் பள்ளிக்கு நடந்து வருகையில் சாணியை, அழுகிய முட்டையை, மனித மலத்தைக் கரைத்து ஊற்றியது. அதற்காக ஒரு மாற்றுச் சேலையை எப்போதும் வைத்திருந்தார். பள்ளி வந்தவுடன் அதை மாற்றி தனது பணியைத் தினமும் தொடர்ந்து கொண்டு இருந்தார்.இந்த எல்லா சூழ்நிலைகளிலும் உற்ற துணையாக நின்றவர் மகாத்மா பூலே.
நெருப்பாற்றைச் சற்றே நீந்திக் கடந்தவர்கள் 200 பள்ளிகளைத் திறந்தனர். `balhatya pratibandhak எனக் கைவிடப்பட்ட பெண்களுக்காக இல்லம் ஒன்றையும் நடத் தினார். பெண் சிசுக்கொலைக்கு எதிராக இல்லம் தொடங்கி அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார்கள் .1882ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பெண் விடுதலை பற்றிய தவறான கருத்து களைக் கொண்ட ஆய்வுக் கட்டுரையான, `ஸ்திரீ புருஷ் துலானா’ என்பதை எதிர்த்துக் குரல் கொடுத்த ஒரே தலைவர் ஜோதி ராவ் பூலே ஆவார்.
ஆதிக்க ஜாதி ஆண்களால் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்காகவும், இளம் வயதில் வயதானவர்களுக்கு மணமுடிக்கப்பட்ட கணவனை இழந்த பெண்களுக்காகவும் தனியாக பள்ளியைத் தொடங்கினார். ஏட்டுக்கல்வியை தாண்டி கைவினைப் பொருட்கள், ஓவியம், தையல் என்று பன்முகத் திறமைகளை கற்றுத்தந்தார். இதைப் பொறுத்து கொள்ள முடியாமல் பல பொய் வழக்குகள் அவர் மேல் தொடரப்பட்டது. அதை தன் மனைவி சாவித்திரி பாய் பூலேயோடு இணைந்து வென்றெடுத்தார்.
“எல்லோரும் சமம்” என்ற அண்ணல் அம்பேத்கருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து காட்டினார். ஒரு பெண்ணாக இன்று பொறியாளராகவோ , மருத்துவராகவோ, ஏதோ ஒரு துறை யில் படித்து முன்னுக்கு வந்த பெண்ணாக நீங்கள் இருக் கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் ஜோதிராவ் பூலே . பஞ்மர்களுக்கும் கீழானவள் பெண் என்னும் நிலை இருந்த காலகட்டத்தில் அதற்கு எதிராக போராடி கல்வி பயின்று, பள்ளி தொடங்கி, தனது வாழ்நாளயே அர்ப்பணித்த ஜோதிராவ் பூலே – இருளை விலக்கி அறிவாயுதம் ஏந்த வைத்த பேரொளி!