குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ளது அஞ்சார் எனும் ஒரு சிறிய நகரம். அதில் வசித்து வந்த ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் தேர்தல் பத்திர ஊழலில் சிக்கி ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று The Quint செய்தி நிறுவனம் அதிர்ச்சியூட்டும் செய்தியை வெளியிட்டிருக்கிறது. எப்படி என்று பார்ப்போம்…
வெல்ஸ்பன் எக்ஸ்ப்ளோரேஷன் லிமிடெட் (AWEL) – அதானி குழுமத்திற்கும் வெல்ஸ்பன் குழுமத்துக்கும் இடையே 65:35 பங்குகளைக் கொண்ட ஒரு கூட்டு முயற்சி (JV) நிறுவனமாக 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இந்த வெல்ஸ்பன் நிறுவனம், குஜராத் அஞ்சாரில் உள்ள ஹரேஷ் சவாகராவின் குடும்பத்திற்கு சொந்த மான விவசாய நிலத்தில் சுமார் 43,000 சதுர மீட்டர் நிலத்தை அரசு மூலம் இந்த திட்டத்திற்காக கையகப் படுத்தியுள்ளது. இதற்காக சட்டப்படி அவர்களுக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டு, பின் வழங்கப்பட்ட இழப்பீடு ரூ.16,61,21,877க்கு (பதினாறு கோடியே அறுபத்தி ஒரு லட்சத்து இருபத்தியோராயிரத்து எண்ணூற்று எழுபத்தேழு).
இந்த பணத்தை அந்தக் குடும்பத்தில் உள்ள ஏழு பேர் டெபாசிட் செய்யும் போது, அந்த நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர் மகேந்திரசிங் சோதா, இவ்வளவு பெரிய தொகை, உங்களுக்கு வருமான வரித்துறையில் சிக்கலை ஏற்படுத்தும் என்று பயமுறுத்தி விட்டிருக்கிறார். அதோடு விடவில்லை.
பின்னர் அவர் தேர்தல் பத்திரத் திட்டத்தை இவர்களுக்கு அறிமுகப்படுத்தி, இதில் பணம் போட்டால், சில ஆண்டுகளில் அவர்களின் முதலீட்டைவிட 1.5 மடங்கு அதிகமாகும் என்று ஆசை காட்டியிருக்கிறார். பாவம் படிப்பறிவில்லாதவர்கள், இந்தத் திட்டம் பற்றிய புரிதல் ஏதும் இல்லாமல் இதில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர்.
கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த வெல்ஸ்பன் ஊழியர் மகேந்திரசிங் சோதாவும், பாஜக அஞ்சார் நகரத் தலைவர் ஹேமந்த் ரஜினிகாந்த் ஷாவும், வெல்ஸ்பனின் விருந்தினர் மாளிகையில் சவாகரா மற்றும் அவரது மகன் ஹரேஷுடன் நான்கு சந்திப்புகளை நடத்தியுள்ளனர்.
பின்னர் 11 அக்டோபர் 2023 அன்று, இந்த ஆறு நபர்கள் பெயரில் ரூ.11 கோடியே 14 ஆயிரம் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டிருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள SBI தரவுகளின் படி, இவற்றில், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் பாரதிய ஜனதா கட்சி (BJP) மூலம் 16 அக்டோபர் 2023 அன்றும், ரூ. 1 கோடியே 14 ஆயிரம் மதிப்புள்ளவை சிவசேனாவால் 18-ஆம் தேதியும் பணமாக்கப்பட்டிருக்கிறது.
இப்போது நாடே தேர்தல் பத்திர ஊழலை பற்றி பேசும்போதுதான் இந்த படிப்பறிவில்லாத கிராமத்து விவசாயிகளுக்கு அவர்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட எட்டுப் பேர் மீது அஞ்சார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த விடயம் இதோடு முடிந்துவிடவில்லை. The Quint நிறுவனம் – கிணறு தோண்ட மற்றொரு பூதம் கிளம்பியிருக்கிறது.
இந்த நிலத்தின் மதிப்பு 76 கோடி ரூபாயாம். அதை கொடுப்பதற்கு வெல்ஸ்பன் நிறுவனம் மறுத்து விட்டதாம். நில உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் வருவதால் அவர்கள் அதை கொடுத்திருந்தால் ரூ.30.4 கோடி அரசாங்கத்திற்கும் ரூ.45.6 கோடி அந்த குடும்பத்திற்கும் கிடைத்திருக்குமாம்.
ஆனால் மெகுல் தேசாய் என்ற உதவி ஆட்சியர் (அவருக்கு அதிகாரம் இல்லையாம்) இதில் தலையிட்டு அந்த நில உரிமையாளர்களிடம் பேசி சமரசம் செய்து 16 கோடிக்கு ஒப்புக்கொள்ளுமாறு செய்திருக்கிறார். என்ன அக்கிரமம்!
ஆக 76 கோடி ரூபாய் நிலத்தை 16 கோடிக்கு அரசு துணையுடன் ஆட்டைய போட்டு அதிலும் 11 கோடியை பாஜக + சிவசேனா தேர்தல் பத்திரத்தின் மூலம் அபகரித்து விட்டனர்.
சம்பந்தப்பட்ட நபர்களை The Quint தொடர்பு கொண்ட போது எல்லோரும் சொல்லும் அதே பதில், இதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
இது வழிப்பறி கொள்ளை இல்லையா?
இவர்களுக்கு நாட்டை ஆள என்ன தகுதி இருக்கிறது?