– பேராசிரியர்மு.நாகநாதன்
எம்.ஏ.,எம்.எல்.,பிஎச்.டி.,டி.லிட்
ஊடகங்களை அச்சுறுத்தி உண்மைச் செய்திகளைத் தடுப்பது மட்டும்தான் பிரதமர் நரேந்திரர் செய்த மாபெரும் சாதனையாகும். 2014ஆம் ஆண்டு தொடக் கத்திலிருந்தே பெரும் முதலாளிகளுக்குச் சலுகை களையும், ஏழை, நடுத்தர மக்களின் மீது வரித்தாக்கு தல்களையும் தொடர்ந்து நடத்தி வந்தார் என்பதைப் பல ஆய்வாளர்கள் தொடர்ந்து தங்களின் கட்டுரைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
பொருளாதார வீழ்ச்சியை மறைப்பதற்காகவும், பாஜக ஆட்சியில் வெடித்துக் கிளம்பும் இமாலய ஊழல் களைத் திசை திருப்புவதற்காகவும், திட்டமிட்டு எதிர்க் கட்சித் தலைவர்கள் மீது புலனாய்வுத் துறை, அமலாக் கத் துறை வழியாக வழக்குகளைப் போடுவதும், எதிர்க் கட்சித் தலைவர்களைக் கைது செய்வதும் நரேந்திரர் கடைப்பிடிக்கும் நெறியற்ற நரித்தந்திர ஆட்சியின் ஜன நாயகப் படுகொலைகளை மக்கள் உணரத் தொடங்கி விட்டனர்.
குறிப்பாக, டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரி வாலை, நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளி யான பிறகு, இரவில் கைது செய்தது நரேந்திரரின் பாசிசப் போக்கை உலகிற்கே எடுத்துக்காட்டியுள்ளது.
அய்க்கிய நாடுகள் மன்றம் கவலைத் தெரிவிக்கும் அளவிற்கு நரேந்திரர் ஆட்சியின் மக்கள் விரோத அடாத செயல்கள் வெளிப்பட்டு வருகின்றன.
தொடர் வீழ்ச்சி
இந்தியப் பொருளாதாரம் 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. இதற்கு முதன்மையான காரணம், பெரு முதலாளிகளின் நலனுக்காகவே ஒன்றிய அரசின் அனைத்துத் துறைக ளும் செயல்படத் தொடங்கின.
பொருளாதாரப் பாடங்களில் சந்தைப் பொருளாதார விதிகளைப் பற்றி விளக்கும் போது முன்னுரிமை (Monopoly) நிறுவனங்கள் சந்தையில் நுழையுமானால் அந்நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி, கொள்ளை இலாபத்தைப் பெற்றுப் பல நிறுவனங்களை வீழ்த்தி விரட்டிவிடும் என்று சுட்டப்படுகிறது. ஆனால், ஓர் ஒன்றிய அரசே சில தனியார் நிறுவனங்களுக்கு எல்லா விதச் சலுகைகளை அளித்து முன்னுரிமை முதலாளித் துவத்தை நரேந்திரர் பேணி பாதுகாப்பது போல எந்த முதலாளித்துவ நாடுகளில் கூட இது வரை, இன்று வரை செய்யவில்லை.
அதுவும் பொதுத் துறை வளர்ச்சியைச் சீர்குலைத்து, பொதுத் துறையின் பங்குகளைக் குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் போக்கு இந்தியாவைத் தவிர வேற எந்த ஜனநாயக நாட்டிலும் காண முடியாது.
இவ்வித, சட்ட விரோத சில முதலாளிகளுக்கு ஆதரவான நிலையைஓன்றிய அரசு மேற்கொண்ட போது, அதைச் சில பொருளாதார ஆய்வாளர்கள் தங் களின் கட்டுரைகள் வாயிலாக வெளிப்படுத்தினர்.
குறிப்பாக ஆய்வாளர் அமித் போஸ்லே (Amit Basole), பெரும் பணக்காரர்களின் வளர்ச்சியைப் பற்றியும், ஏழை-பணக்காரர்களுக்கு இடையே ஏற்றத் தாழ்வு பெருகி வருவதையும் தனது ஆய்வுக்கட்டுரையில்(Economic and Political Weekly (EPW, 4th Oct.2014)) எச்சரித்து இருந்தார்.
இது நரேந்திரர் ஆட்சியின் தொடக்க ஆண்டாகும்.
அக்கட்டுரையில்
“அய்ந்தாண்டுத் திட்டக்காலத்தில் கடைப்பிடிக்கப் பட்ட கட்டுப்பாடுகளையுடைய பொருளாதாரக் கொள் கையின் காரணமாகப் (1950-1970) பெருமளவில் மக்களி டையே காணப்பட்ட வருமான ஏற்றத்தாழ்வு குறைந் திருந்தது.
பெரும் பணக்காரர்கள் (1விழுக்காடு),
மிகப்பெரும் பணக்காரர்கள் (0.1விழுக்காடு),
உச்சநிலை பெரும் பணக்காரர்கள் (0.01விழுக்காடு) ஆகியோரின் உண்மையான வருமானம்(Real Income) இக்காலக்கட்டத்தில் குறைந்திருந்தது. ஆனால், இந்தியர்களின் சராசரி வருமானம் இன்றைய நிலை யோடு ஒப்பிடுகையில் உயர்ந்து காணப்பட்டது. 1980-1990 வரை ஏறக்குறைய இந்நிலையே நீடித்தது.
1990க்குப் பிறகு, 40 இலட்சம் பெரும் பணக்காரர்கள் (1 விழுக்காடு), 4 இலட்சம் மிகப் பெரும் பணக்காரர்கள் (0.1), உச்சநிலை 40000 பெரும் பணக்காரர்களின் (0.01) வருமானம் பெருமளவிற்கு உயர்ந்தது. மக்களிடையே வருமான, சொத்து ஏற்றத்தாழ்வு பெருகியது என்று ஆய்வாளர் போஸ்லே குறிப்பிட்டார்.
மக்கள் விரோதப் போக்கு
இதேபோன்று, மும்பையிலிருந்து வெளி வரும் அரசியல் பொருளாதார வார இதழின் (EPW) ஆய்வு மய்யத்தைச் சார்ந்த ஜே.டென்னிஸ் ராஜ்குமார் – ஆர்.கிருஷ்ணசாமி ஆகியோர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் (Dec.2015), ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கினைச் சுட்டிக் காட்டினர்.
நரேந்திரர் அரசு அமைந்த பிறகு 2015-2016 முதல் ஆறு மாதங்களில் மறைமுக வரிகளின் பங்கு பெருகி யுள்ளது என்பதைப் புள்ளிவிவரங்களோடு மெய்ப் பித்துள்ளனர். மறைமுக வரியை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்துத் தரப்பினரும் செலுத்துகின்றனர். மறைமுக வரிகளின் சுமையால் வருமானம் மற்றும் சொத்து ஏற்றத்தாழ்வுகள் பெருகி வருகின்றன என்பதையும் இந்த ஆய்வாளர்கள் சுட்டினர். 0.01 விழுக்காடு அளவில் உள்ள உச்சநிலை பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவாகத்தான் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை வெளிப்படுத்தினர்.
இதே ஏட்டில் (ஏப்ரல் 18, 2015), கல்வி, பொதுச்சுகாதாரத் துறைகளுக்கான பொது நிதி ஒதுக்கீட்டை நரேந்திரர் அரசு குறைத்துள்ளது என்பதைத் தனது தலையங்கத்தில் குறிப்பிட்டு தனது கடும் கண்டனத்தையும் இந்த வார ஏடு தெரிவித்துள்ளது.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் மாநிலங் களுக்கு ஒன்றிய அரசு 2015-2016இல் அளித்து வந்த தொகையில் ஒரே ஆண்டில் 9,000 கோடி ரூபாயைக் குறைத்தது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை ரூ.16,316 கோடியிலிருந்து ரூ.8,000 கோடியாகக் குறைத்தது. ஆனால், நரேந்திர ருக்கு நெருங்கிய நண்பரான அம்பானி குழுமம், கோதாவரி படுகையில் ஒன்றிய அரசிற்குச் சொந்தமான எண்ணெய் எரிவாயு நிறுவனத்திற்கு (ONGC) ஒதுக்கப்பட்ட பகுதியில் ரூ.30ஆயிரம் கோடி மதிப்பு எரிவாயுவைத் திருடியதை நீதிமன்றமும், அமெரிக்க நாட்டின் தீர்ப்பாயமும் உறுதி செய்த பின்பு ஏன் இந்த நிறுவனத்தின் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நட வடிக்கை இன்று வரை எடுக்கப்படவில்லை என்பதை யும் நரேந்திரர் அரசின் பெருமுதலாளிகள் சார்பு நிலையையும் விளக்கி (EPW டிசம்பர் 5, 2015), இந்திய எரிவாயு பெரும் கொள்ளை (Great Indian Gas Robbery by Paranjoy and Guha Takurta) என்ற தலைப்பில் பரோன்ஜோய் குகா தக்குர்தா கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.
பரோன்ஜோய் குகா தக்குர்தா 2017இல் அரசியல் பொருளாதார (EPW) ஏட்டின் ஆசிரியராக இருந்த போது ஜனவரி மாதம், “அதானி குழுமம் 1000 கோடி வரி ஏய்ப்பு செய்ததா?” என்ற கட்டுரையை வெளியிட்டார். பின்பு ஜூன் மாதம், நான்கு பத்திரிகையாளர் களுடன் இணைந்து “அதானி குழுமத்திற்கு மோடி அரசின் ரூ.500 கோடி பரிசு மழை” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டார்.
பொய் வழக்குகள்
இந்தக் கட்டுரையை வயர் (Wire) என்ற ஏடு மீண்டும் வெளியிட்டது. இதற்காக அதானி குழுமம் டிசம்பர் 2017இல் இரு வழக்குகளை குஜராத் கீழமை நீதிமன்றங்களில் தொடர்ந்தது. ஒன்றிய அரசின் அழுத் தம் காரணமாக குகா தக்குர்தா அரசியல் பொருளா தார ஏட்டின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார். பல நோய்களால் பாதிக்கப்பட்ட ஆய்வாளர் குகாவிற்கு உயர் நீதிமன்றத்தில் 2021இல் தான் கைது செய்யப் படாமல் இருப்பதற்காகப் பிணை வழங்கப்பட்டது.
மேற்கூறிய நிகழ்வுகள் ஒன்றிய அரசின் ஊழல் களையும், அத்துமீறல்களையும் ஏடுகள் எழுதினால் எத்தகைய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதற் காகத்தான் இதுபோன்ற பொய்யான வழக்குகள் நரேந்திரரின் ஆட்சியில் பதிவுச் செய்யப்பட்டன. மேலும் பெருமுதலாளிகள் நடத்திய ஊடகங்களில் உண்மையை வெளிப்படுத்தி ஏடுகளின் ஆசிரியர் களையும் அச்சுறுத்தினர். வேலை நீக்கம் செய்யப் பட்டனர். எனவே நரேந்திரர் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகச் செய்த தில்லுமுல்லுகளை ஊடகங்கள் மூடி மறைக்கும் போக்கு நீடிக்கத் தொடங்கியது.
நரேந்திரரின் பத்தாண்டு ஆட்சியில் தேசிய வங்கிகளில் பெரு முதலாளிகள் வாங்கிய கடன்கள் ரூ.10 இலட்சம் கோடி அளவிற்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. பெரும் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் நிறுவன வரி வழியாக வரும் வருவாய் ஒன்றிய அரசிற்கு 2012ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்தச் சூழலில், 2019ஆம் ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிறுவன வரி விழுக்காட்டைப் புதி தாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 22 விழுக் காட்டிலிருந்து 15 விழுக்காடாகவும் குறைத்தார். பெரு முதலாளிகள் அதிக இலாபம் பெறுவதற்கு வழிவகுத் தார். ஒன்றிய அரசிற்கு வரும் ஒட்டுமொத்த வருமானத்திலிருந்து வரும் வரி வருவாய் இதன் காரணமாக 10 விழுக்காடு அளவிற்கு 2023-2024இல் குறைந்துள்ளது. பல இலட்சம் கோடி வரிச் சலுகைகளை அளித்த பிறகும் புதிய முதலீடுகளைத் தொழில் துறை பெற வில்லை. அதே நேரத்தில், ஒன்றிய அரசிற்கு வருமான வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த அரசு, வங்கி ஊழியர்கள், மற்ற தனியார்த் துறை ஊழியர்கள் ஆகியோரின் எண்ணிக்கை 2013-2014 முதல் 2022-2023 வரை 3.6 கோடியிலிருந்து 7.5 கோடி அளவு உயர்ந்து உள்ளது.
இந்தியாவின் நடுத்தர வருமானப் பிரிவினரும், ஏழை எளியோரும் தாங்கள் பெறுகின்ற வருவாயில் வங்கி, ஆயுள் காப்பீட்டுக்கழகம் போன்ற பல நிதி அமைப்புகளில் தங்களின் குடும்பச் சேமிப்பை வைத்திருந்தனர்.
பொருளாதார தாக்குதல்
2015-2016ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 விழுக்காடு குடும்பச் சேமிப்பு இருந்தது. 2021இல் குடும்பச் சேமிப்பு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 விழுக்காடாகச் சரிந்தது. 2023ஆம் ஆண்டு குடும்பச் சேமிப்பு 5 விழுக் காடாக வீழ்ந்தது. இந்த இரண்டாண்டுக் காலத்தில் பணத்தொகையில் மதிப்பிட்டால், 2021இல் குடும்பச் சேமிப்பு ரூ. 34 இலட்சம் கோடியாக இருந்தது. 2023இல் ரூ.17 இலட்சம் கோடியாகச் சரிந்துள்ளது. இதற்குக் காரணம் என்னவென்றால், 2021-2022, 2022-2023 ஆண்டுகளில் ஏழை, நடுத்தர குடும்பப் பிரிவினரின் கடன் சுமை கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரூ.36 இலட்சம் கோடியிலிருந்து (2021-2022) ரூ.47 இலட்சம் கோடியாக ஜூலை 2023இல் உயர்ந்துள்ளது.
மேற்கூறிய பிரிவினர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி களிலிருந்து பெற்ற கடன்களைவிட வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களிடமிருந்து (Non-Banking Financial Institutions) அதிக வட்டிக்குக் கடன் வாங்கி யுள்ளனர். இந்த நிதி நிறுவனங்களிடமிருந்து 2021-2022 நிதியாண்டில் 21 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கடன்களைப் பெற்றனர். ஆனால், ஒரு ஆண்டில் இந்தக்கடன் 2.4 இலட்சம் கோடி ரூபாயாக 2022-2023இல் உயர்ந்துள்ளது. இதைத் தவிர விலைவாசி உயர்வு, இந்தியப் பணமதிப்பிழப்பு, பணவீக்கம் இவற்றைக் கணக்கிட்டால் ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் கொடுமையான பொருளாதாரத் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேற்குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏழை நடுத்தர வருமானப் பிரிவினரின் சேமிப்பு குறைந்து அவர்களின் கடன் பெருகி வருகிறது.சேமிப்பு குறைவதால் மூலதனப் பெருக்கம் ஏற்படவில்லை. இது தற்போதும், எதிர்காலத் திலும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.அண்டை நாடான இலங்கையே இதற்குத் சான்று பகிர்கின்றது. வேளாண் துறைக்கு நாட்டிற்குத் தேவையான உணவு உற்பத்தி செய்வதால் பொருளாதார நூல்களில் இத் துறையை நாட்டின் முதன்மை துறை (Primary Sector )என்று சுட்டப்படுகிறது.
இதற்கு அடுத்த நிலையில் தொழில் துறை நாட்டின் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பை அளிப்பதற்கும் அடித்தளமாக உள்ளது.
நரேந்திரர் ஆட்சியின் செயலற்றத் தன்மையால் முதலாளிகளின் ஆதரவு நிலைப்பாட்டால், இந்தியத் தொழில் துறையின் முதன்மையான எட்டு உற்பத்தித் துறைகளாகக் (Core Sector) கருதப்படுகிற நிலக்கரி, எஃகு, சிமென்ட், இயற்கை எரிவாயு, மின்உற்பத்தி, கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள், உரம் துறை களில் உற்பத்திச் சரிவு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
கடந்த பத்தாண்டுகளாக மேற்கூறிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தத் துறைகளில் பிரதமர் நரேந்திரர் எவ்வித கவனத்தையும் செலுத்தவில்லை. எரிபொருள் தேவைதான் இந்தியாவினுடைய அடிப் படைத் தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. கச்சா எண் ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் வழியாக பெட்ரோலியப் பொருட்களான பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவை உருவாக்கப்படுகின்றன.
இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளாக பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பொருட்களின் விலைகள் படிப்படியாக உயர்த்தப்பட்டன. 2014இல் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 71 ரூபாயும், டீசல் விலை 59 ரூபாயும் இருந்தது. சமையல் எரிவாயு விலை 418 ரூபாயாக இருந்தது. 2024 பிப்ரவரி வரை பெட்ரோல் 102 ரூபாயாகத் தொடர்ந்தது. தேர்தல் பயத்தால் ஒன்றிய அரசு 2 ரூபாய் பெட்ரோல் விலையைக் குறைத்தது. சமையல் எரிவாயு 918 ரூபாயிலிருந்து 818 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. ஆனால் சிறிய உணவு விடுதிகள், சாலைகளில் இயங்கும் தேநீர் விடுதிகள் போன்ற வணிக அமைப்புகள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு உருளையின் விலை 1800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யா கொடுக்கும் குறைந்த விலை கச்சா எண்ணெய்யால் தான் சுத்தி கரிப்பு செய்யப்பட்ட மேற்குறிப்பிட்ட பெட்ரோலின் விலைகள் நிர்ணயிக்கப்பட்டன.
தற்போது ரஷ்யா கச்சா எண்ணெய்யின் விலையில் 15 விழுக்காடு தள்ளுபடி (Discount Rate) செய்து அளித்து வந்தது. ஆனால் தள்ளுபடி விலை சலுகை யைத் தற்போது குறைத்துவிட்டது.
மதவாத அரசியல்
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்க்கு 15 அமெரிக்கா டாலர் தள்ளுபடி விலையில் அளித்த ரஷ்யா 2024 ஆண்டு முதல் தள்ளுபடி விலையை ஒரு பீப்பாய்க்கு 13 டாலர் என்ற அளவில் குறைத்து, பீப்பாய்க்கு 2 டாலர் அளவுக்குக் குறைத்து உள்ளது. மேலும், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்களின் உற்பத்தியைக் குறைப்பதாக அறிவித்துள்ளன. கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்தால், பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயரும் என்று பல வல்லுநர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். இத்தகைய அச்சுறுத்தும் சூழல்கள் உலகளவில் தொடர்வதால் இந்தியப் பொருளாதாரம் மேலும் தேக்க நிலைக்குச் செல்லும் பெரும் அபாயம் உள்ளது.
ஒன்றிய அரசு இத்தகைய அறைகூவல் மிக்க விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஏற்படப் போகும் பொருளாதாரப் பாதிப்புகளைப் பற்றிச் சிறிதும் அக்கறை கொள்ளாமல், நாட்டை சீரழிக்கும் மதவாத அரசியலை முன்னிலைப்படுத்துகிறது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில ஆளுநர்களைப் பயன்படுத்தி, மாநில அரசுகள் தங்களின் மக்கள் பணிகளை நிறைவேற்ற பல தடைகளை ஒன்றிய அரசு ஏற்படுத்தி வருகிறது.
உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற அரசியல் இழிச்செயல் நடக்கவில்லை.