திராவிட இயக்கத்தையும், தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களையும் இழிவாகப் பேசுகிறார் அண்ணாமலை

2 Min Read

இதற்குப் பிறகும் பி.ஜே.பி.யுடன் அ.தி.மு.க. கூட்டணி உறவு கொண்டால் அதைவிட அரசியல் விபத்து வேறு இருக்க முடியாது!

தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

ஆசிரியர் அறிக்கை, திராவிடர் கழகம்

திராவிட இயக்கத்தையும், திராவிட இயக்கத் தலைவர்களையும் இழிவுபடுத்திப் பேசிவரும் அண்ணாமலை தலைமை வகிக்கும் பி.ஜே.பி.யுடன் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி என்ற பெயரில் உறவு கொண்டால், அதைவிட அரசியல் விபத்து அ.தி.மு.க. வுக்கு வேறு ஒன்று இருக்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.  

அவரது அறிக்கை வருமாறு:

பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி இல்லை என்பது போன்ற செய்திகள் நேற்று (18.9.2023) தொலைக்காட்சி ஊடகங்களில் முதலிடம் பிடித்துள்ளன.

திராவிட இயக்கத்தையும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவையும் கொச்சைப்படுத்திப் பேசும் அண்ணாமலை!

பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலை அவர்கள் திட்டமிட்டே திராவிடர் இயக்கத்தையும், ஆட்சியையும், அதன் தலைவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் அ.தி.மு.க. தலைவர்களையும் வம்பிழுப்பது போன்று – தனக்குத் தெரியாத பழைய செய்திகளை – யாரோ அரைகுறைகள் எடுத்துத் தந்த ஆதாரமற்ற தகவல்களை ‘பாத யாத்திரை’யில் பேசி, ஊடக விளம்பரம் தேடிட முயற்சிக்கிறார்.

விளம்பர வெளிச்சத்துக்காகப் பேசுகிறார்

விளம்பர வெளிச்சம் கிடைக்கும் என்பதற்காக இந்த விபரீத வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

அதற்கான பதில்களை அ.தி.மு.க. மேனாள் அமைச்சர் கள் தருவதோடு, பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என் றும் தெரிவித்துள்ளனர்.  இது தற்காலிகமா? நிரந்தரமா? மீண்டும் ‘‘சுவற்றுக்கீரையை வழிச்சிப் போடு” என்று கேட்கும் நிலை ஏற்படுமா? என்பதே கேள்வி.  இந்த நிலையில் உறுதியாக இருக்கவேண்டும். அகில இந்திய பி.ஜே.பி. இதுகுறித்து எவ்வித மூச்சும் விடவில்லை.  ‘‘குட்டி பகை ஆடு உறவு” என்பதுபோன்ற நிலையை இனியும் அ.தி.மு.க. எடுக்கலாமா? என்ற கேள்வி எங்கும் பரவலாக உள்ளது!

அ.தி.மு.க.வினருக்கு ஒரு வேண்டுகோள்!

அ.தி.மு.க. சகோதரர்களுக்கு ஒரு முக்கிய வேண்டு கோள்: ‘‘சுயமரியாதை என்பது தவணை முறையில் வருவதல்ல; அது நிரந்தரமாக அமைதல் வேண்டும்.”

தமிழ்நாட்டு அரசியலில் பங்காளியையும், பகையாளி யையும் சரியாக அடையாளம் கண்டு, அதற்கேற்ப அரசியல் களம் அமைவதே முக்கியம். பங்காளி உறவு வேறு; பகையாளி நோக்கம் வேறு.

நம் இன எதிரிகள் முதலில் அரசியல் ரீதியாக இக்கட்சி, அடுத்து அக்கட்சி என்று திட்டமிட்டு செயல்படுகின்றனர். பதவி ஆட்சி பலம், பண பலம், புஜ பலம், பத்திரிகை பலம் என்று எல்லா வகை பலத்தையும் பிரயோகிக்க தங்களது அதிகார பலத்தின்மூலம் ஆயத்த நிலையில் உள்ளனர்.

இதற்குப் பிறகும் பி.ஜே.பி.யுடன் 

அ.தி.மு.க. கூட்டணி உறவு கொண்டால் – அது மிகப்பெரிய அரசியல் விபத்தே!

இந்நிலையில், அ.தி.மு.க. என்ற அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி பா.ஜ.க.வுடன் உறவை உறுதி செய்தால், அதைவிட மிகப்பெரிய அரசியல் விபத்து வேறு இருக்க முடியாது!

காலே இல்லாத காவிகள் காலூன்றிட எண்ணுவதே கூட்டுப் பலத்தைக் கணக்கிட்டுதானே! ஆட்டுக்கு மாலை போடும் பூசாரிக்கு, அதன்மீதுள்ள மதிப்பா – கவலையா காரணம்?

சிந்தியுங்கள்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை
19.9.2023

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *